கலாச்சாரம்

ஹோலி: கிருஷ்ணருடன் ராசலீலையில் கலந்துகொள்ள சிவன் பெண் வேடமிட்டபோது

சத்குரு விவரித்த இந்தக் கதையுடன் ஹோலியின் மகிழ்ச்சிக் குதூகலத்தில் மூழ்கிவிடுங்கள். கொண்டாட்டம், நடனம் மற்றும் பொங்கி வழியும் உற்சாகமானது, உச்சகட்ட தியானத்தைக் கொண்டுவர முடியும் என்பதை எப்படி சிவனே காண விரும்பினார் என்று இங்கு படித்து அறியுங்கள்.

கிருஷ்ணர் அரச குடும்பத்தில் பிறந்தாலும், மாடு மேய்ப்பவர் வீட்டில் வளர்ந்தார். அவரது வளர்ப்புத் தந்தையான நந்தகோபர் மாடு மேய்ப்பவர்களில் தலைவராய் இருந்தபோதிலும், அவர் இன்னமும் மாடு மேய்ப்பவராகவே இருந்தார். யசோதா அவரைப் பெற்ற தாய் அல்ல, ஆனால் அவளுக்கு அது தெரியாது. கிருஷ்ணர் ஒரு தெய்வீக அவதாரமாக பார்க்கப்படுகிறார், ஏனெனில் அவர் பிறக்கப்போவதைப் பற்றி பல தீர்க்க தரிசனங்கள் இருந்தன.

சில யோகிகள், குறிப்பாக கிருஷ்ண த்வைபாயனர், பின்னாட்களில் வியாச முனிவர் என்று அறியப்பட்ட ஒரு மாமுனிவர், அந்த ஒரு குறிப்பிட்ட நாளில் பிறக்கப்போகும் இந்த தெய்வீகக் குழந்தையைத் தேடிக்கொண்டிருந்தார். யோகிகள் நீண்ட காலமாக காத்திருந்த இந்த மகத்தான உயிராக, கிருஷ்ணரை அவர் அடையாளம் கண்டார். அவருடைய வாழ்க்கை, அவர் வாழ்ந்த விதம் மற்றும் பிற்காலத்தில் அவர் என்ன வெளிப்படுத்தினார் என்பதைப் பற்றிய இந்த எல்லா தீர்க்கதரிசனங்களின் காரணமாகவும், கிருஷ்ணர் பொதுவாக "விடுதலை அளிப்பவர்" என்று குறிப்பிடப்பட்டார். அவர் மக்களை அவர்களின் துயரங்கள், வலிகள் மற்றும் தடைகளிலிருந்து விடுதலை செய்பவராக நம்பப்பட்டார்.

ஒரு கட்டத்தில், கோகுலம் மற்றும் பர்சானாவில் இருந்த சமூகங்கள், பசுமையான மற்றும் செழுமையான இடமான பிருந்தாவனத்திற்கு இடம்பெயர்ந்தன. பல வழிகளில், இந்தப் புதிய குடியேற்றங்கள் பழைய மரபுகளைக் கைவிட்டு, மிகவும் உற்சாகமாக இருந்தன. ஏனெனில் அவர்களது பழைய பாரம்பரிய வீடுகளிலிருந்து அவர்கள் வேரோடு எடுக்கப்பட்டு, வளமானதும், அழகானதுமான புதிய இடத்தைக் கண்டனர். குறிப்பாக இள வயதுடையோர் மற்றும் குழந்தைகள் முன்பு எப்போதும் இருந்ததை விட அதிக சுதந்திரத்தை அனுபவித்தனர். பல விஷயங்கள் வித்தியாசமாக இருந்தன.

சமூகத்தில் ஒரு புதிய உற்சாகமான மற்றும் சுதந்திரமான உணர்வு இருந்தது. குழுவில் இருந்த மற்றவர்களை விட சற்று மூத்தவளாகிய ராதே, எப்போதும் சுதந்திர மனப்பான்மையுடன் இருந்தாள், மேலும் அவள் சமூகத்தில் ஒருவிதமான சுதந்திரத்தை சம்பாதித்திருந்தாள். அவள் சிறுமிகளை வழிநடத்தினாள் மற்றும் சிறுவர்களை கிருஷ்ணர் வழிநடத்தினார். மேலும், ஒரு ஒட்டுமொத்தமான ஆனந்தக்கலப்பு நிகழ்ந்தது. கிருஷ்ணனுக்கு வயது 7; ராதேவுக்கு வயது 12; அவர்களுடன் அந்த வயதையொத்த குழந்தைகளின் மொத்தக் குழுவும் இருந்தது.

ஹோலி பண்டிகை நேரத்தில், அனைத்தும் பூரண மலர்ச்சியில் இருந்தபொழுது, ஒரு முழு நிலவு மாலையில், இந்த சிறுவர் சிறுமிகள் யமுனை நதிக்கரையில் கூடினர். இந்தப் புதிய இடத்தால், பழைய மரபுகள் உடைந்து, முதன்முறையாக, ஒரே நேரத்தில் இந்த சிறுவர்களும் சிறுமிகளும் நதியில் நீராடச் சென்றனர். ஆரம்பத்தில் அவர்கள் விளையாடத் தொடங்கி, தண்ணீர் தெளித்தும், மணலை அள்ளி வீசிக்கொண்டும், ஒருவரையொருவர் பார்த்து வார்த்தைகளை வீசியும் களித்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து, அவர்கள் நடனமாடத் தொடங்கினர். அவர்கள் மிகவும் உற்சாகமும், ஆனந்தமுமான நிலையில் இருந்ததால் நடனமாடி, நடனமாடி, முடிவில்லாமல் நடனமாடினர். புரிதலற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக மெல்ல அங்கிருந்து விலகிவிட்டனர். அவர்களுள் பலரும் விலகுவதை கிருஷ்ணன் கண்டபொழுது, தன் இடுப்பில் இருந்த புல்லாங்குழலை வெளியே எடுத்து, தன் மயக்கும் நாதத்தைத் தொடங்கினான். அது அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது; அனைவரும் எழுந்து நின்று, அவரைச் சுற்றிலும் குழுமினர், மீண்டும் ஒருமுறை அசைந்து அசைந்து ஆடினர். இப்படியே கிட்டத்தட்ட பாதி இரவு கடந்தது.

இது ராசலீலையின் முதல் நிகழ்வாக இருந்தது. இதில் ஆடிய எளிமையான, ஆனந்தமான மக்கள் ஆழ்ந்த தியானநிலைக்கு உயர்ந்தனர். இந்த ராசலீலை தொடங்கியபோது, ​​சிவன் மலைகளின் மீது தியானத்தில் இருந்தார். கிருஷ்ணர் எப்போதுமே சிவ பக்தராக இருந்தவர். மகாதேவனின் கோவிலுக்கு, காலையும் மாலையும் செல்லாமல் கிருஷ்ணருக்கு ஒருநாள் கூட கடந்ததில்லை; அது எப்போதும் அவரது வாழ்நாள் முழுவதும், இயன்ற இடத்தில் எல்லாம் நிகழ்ந்தது.

சிவன் தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் தியானத்தின் மூலம் எதை அடைந்தாரோ, இவர்கள் நடனத்திலேயே அதை அடைகிறார்கள் என்பதை உணர்ந்தார். தன் பக்தனான இந்தச் சிறுவன், ஒரு மூங்கில் கம்பை வாசித்து, நடனமாடி மக்களை ஆழ்நிலைகளுக்குள் அழைத்து செல்வதைக் கண்டு அவர் மகிழ்ந்தார். அவர் ராசலீலையைக் காண விரும்பினார். அவர் எழுந்திருந்து, யமுனைக் கரையை நோக்கி நடந்தார்.

யமுனையைக் கடந்துசென்று, என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரும்பினார். ஆனால் நதி தெய்வமான பிருந்தாதேவி எழுந்து நின்று, “நீங்கள் அங்கே போக முடியாது” என்றாள். சிவன், “என்ன? என்னால் போக முடியாதா?" அவள், “இல்லை, இது கிருஷ்ணரின் ரசம். எந்த ஆணுக்கும் அனுமதியில்லை. உங்களுக்கு அங்கு செல்ல வேண்டுமானால், ஒரு பெண்ணாகத்தான் நீங்கள் செல்ல வேண்டும்” என்றார்.

சிவன் ஆண்மையின் உச்சமாகக் கருதப்படுபவர். படைப்பாற்றலின் குறியாகிய லிங்க வடிவம் போன்ற விஷயங்கள், அவரை ஆண்மையின் மொத்த வடிவமாகக் குறிக்கிறது. அதனால், சிவன் பெண்ணாக மாற வேண்டும் என்பது ஒரு விசித்திரமான வேண்டுகோளாக இருந்தது. ஆனாலும், ராசலீலை முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. அங்கு அவர் செல்ல விரும்பினார். ஆனால் நதி தெய்வம் எழுந்து, “குறைந்தபட்சம் நீங்கள் ஒரு பெண்ணாக உடை அணிவதற்கு சம்மதித்தால், நான் உங்களைச் செல்ல அனுமதி தருகிறேன், இல்லையெனில் அனுமதி இல்லை" என்றார். சிவன் சுற்றுமுற்றும் பார்த்தார்; யாரும் பார்க்கவில்லை. “சரி, கோபியரின் ஆடையைக் கொடு” என்றார். பிருந்தாதேவி அவருக்காக ஒரு கோபிகையின் ஆடையைத் தருவித்துக் கொடுத்தார். அதை அணிந்து கொண்டு அவர் ஆற்றைக் கடந்து சென்றார். சிவன் அத்தகையதொரு விளையாட்டுத் தன்மையில் இருந்தார்.

எனவே ராசலீலையில் இருக்க வேண்டுமானால் சிவன் கூட பெண்ணாக மாறவேண்டும்.

காதல், பேரின்பம் மற்றும் ஆழ்ந்த தியானநிலை ஆகியவற்றில் இந்த நடனம் தொடர்ந்தது...