சத்குரு எக்ஸ்க்ளூசிவ்

பிந்து: மனிதமூளையில் மறைந்திருக்கும் பரவசத்தின் மூலம்

யோகாவின் இரகசியமான ஒரு அம்சத்தை சத்குரு வெளிச்சமிட்டுக் காட்டும்போது, அதன் மற்றொரு புதிர் புலப்படுகிறது. மேலும், யோகப்பயிற்சிகள் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும் என்பதையும், பரவசத்திற்கான பாதையில் ஒரு குரு ஆற்றும் பங்கு என்ன என்பதையும் சத்குரு வெளிப்படுத்துகிறார்.

சத்குரு: மருத்துவ உடலியல் இருப்பதைப் போல, முழுமையான யோக உடலியல் ஒன்று உண்டு. மூளையில் இருக்கும் பீனியல் சுரப்பி, நவீன நரம்பியல் விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற, யோக உடலியலின் ஒரு அம்சமாக இருக்கிறது. யோகாவில், அது ஆக்ஞா என்று அடையாளம் காணப்படுகிறது. ஒருவரது மனோநிலையையும், அனுபவங்களையும் பீனியல் சுரப்பி பெரிதும் கட்டுப்படுத்தி, சமன் செய்கிறது. உங்களது பீனியல் சுரப்பி நிலையாகவும், தங்குதடையில்லாமலும் செயல்பட்டால், உங்களுக்குள் இனிமையான மனோநிலையுடன் இருப்பது ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை.

மருத்துவரீதியாக இன்னமும் அங்கீகரிக்கப்படாமல், சிறிதளவே அறியப்பட்ட மற்றொரு அம்சம் இருக்கிறது. ஆனால் யோக உடலியல் அதனை மூளையின் மற்றொரு பாகமாக கருதுகிறது. அது பிந்து என்று அழைக்கப்படுகிறது. பிந்து என்ற வார்த்தைக்கு, மேற்கொண்டு பகுக்கமுடியாத மிகச்சிறிய ஒரு புள்ளி என்பது பொருள். உங்களுடைய காதின் துளையிலிருந்து உச்சந்தலை வரைக்கும் செங்குத்தாக ஒரு கோடும், அங்கிருந்து 45 டிகிரி கோணத்தில் உங்கள் பின்னந்தலை நோக்கி ஒரு கோடும் வரைந்தால், அந்தக் கோட்டின் மையத்தில் இருக்கும் ஒரு புள்ளிதான் பிந்து எனப்படுவது.

கலாச்சாரப் பிரிவினைகளைக் கடந்திருக்கும் ஒரு உள்நிலை அறிதல்

உலகெங்கும் இருக்கும் பல கலாச்சாரங்களும் மூளையில் பிந்து இருப்பதை அங்கீகரித்துள்ளன. இந்தப் புள்ளி எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டியது என்ற ஒரு புரிதலுடனும் இருக்கின்றன. அதைப் பாதுகாப்பதற்காக, அந்தப் புள்ளியில் ஒரு கட்டுக்குடுமியை வைத்துக்கொள்வது, இந்தியாவில் இந்துக்களின் பாரம்பரிய வழக்கமாக இருந்தது. மற்ற கலாச்சாரங்களில் தங்கள் தலையை மழித்துக்கொள்ளும் வழக்கம் கொண்ட மக்கள், அந்தப் பகுதியை மறைப்பதற்காக துணியாலான சிறிய தொப்பிகளை அணிந்துகொள்கின்றனர். உலகத்தில் எங்கு சென்றாலும், மக்கள் ஆன்மீகம் என்று கருதப்படுகின்ற எந்த ஒரு குறிப்பிட்ட விதமான செயலைச் செய்யும்போதும், அவர்கள் தங்கள் பிந்துவை மறைத்துக்கொள்ள விரும்புவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

உலகின் எல்லா இடங்களிலும், யாரோ ஒருவர் அதைப்பற்றி அறிந்துகொண்டு, ஏதோ ஒரு கட்டத்தில் பேசியிருக்கிறார். எப்படியோ, இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டு, தூண்டப்பட வேண்டியது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். பிராமணர்கள் சிறுவர்களுக்கு தீட்சை வழங்கும்போது, அவர்கள் மற்ற பகுதியில் இருக்கும் கேசத்தை மழித்துவிட்டு, பிந்து இருக்கும் இடத்தில் ஒரு கட்டுக்குடுமியை விடுகின்றனர். அவன் ஒவ்வொரு முறையும் அவனது பயிற்சியை செய்வதற்கு முன்பு, கட்டுக்குடுமியைப் பிடித்து, அதைச் சுழற்றி முறுக்கி, அதை இழுத்து இறுக்கமாகக் கட்டுகிறான். ஆரம்பத்தில், அது வலி ஏற்படுத்தும், ஆனால் சிறிது காலத்துக்குப் பிறகு, அவனுடைய பயிற்சி முன்னேற்றம் அடையும்பொழுது, அது அவனுக்குள் ஆழமானதொரு பரவச உணர்வை உண்டாக்கும்.

அமிர்தமா, விஷமா?

இது ஏனென்றால், பிந்து என்பது மூளையில் ஒரு சிறு புள்ளியாக, ஒருவிதமான சுரப்பினால் சூழப்பட்டுள்ளது. மூளை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் எப்போது அதைக் கவனிப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அல்லது அது மிகமிகச் சிறியதாக இருப்பதால் அவர்கள் அதை அலட்சியம் செய்யலாம். ஆனால் உங்கள் உடலமைப்பின் மீது நீங்கள் குறிப்பிட்ட கவனம் செலுத்தினால், அது எல்லா நேரமும் அங்கு இருப்பதை நீங்கள் காண்பீர்கள். பிந்துவுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதனுடைய மற்றொரு புள்ளிக்கும் ஒரு சுரப்பு உண்டு, ஆனால் அது விஷத்தன்மை கொண்டது. வாழ்க்கையுடன் சரியில்லாத விஷயங்களை நீங்கள் செய்வதால், தவறான பக்கத்தை தட்டிவிடப்படுகிறது. அப்போது விஷமானது உடலில் பரவிவிடும். அதனால், காரணம் ஏதுமில்லாமல் நீங்கள் துன்பத்தில் இருப்பீர்கள். நிறைய பேர் அதைத் தங்களுக்கு விளைவித்துள்ளனர்.

உலகெங்கும் இதைப் பற்றி அறிந்திருந்த பல கலாச்சாரங்கள் இருக்கின்றன – சிலர் தொப்பிகள் அணிகின்றனர், சிலர் கட்டுக்குடுமி வைக்கின்றனர், மற்றும் சிலர் வேறுவிதமாக அதைப் பராமரித்துக் கொள்கின்றனர். அத்தகைய கலாச்சாரங்களில் மனரீதியான சமநிலையின்மை, பிரமிக்கத்தக்க அளவுக்கு குறைவாக இருப்பதை நீங்கள் எப்போதும் கவனிக்கமுடியும்.

ஸ்திரமில்லாத பரவசம் அழிவில் முடியக்கூடும்

பரவசத்தைக் காட்டிலும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமானது. ஸ்திரத்தன்மையை இலக்காகக் கொண்ட ஆரம்பகட்டப் பயிற்சிகளை யோக முறை வகுத்துள்ளது. ஸ்திரத்தன்மைக்கு முன்பாக பரவசம் வந்தால், நீங்கள் விபத்தை நோக்கிச் செல்கிறீர்கள் என்பதே அதன் பொருள். ஸ்திரத்தன்மை முதலிலும், பிறகு பரவசமும் வந்தால், அது அற்புதமாகவும், அழகாகவும் இருக்கிறது. பரவசத்தின் வழிமுறைகள் ஒருபோதும் எழுதப்படவோ அல்லது ஒரு போதனையாக வழங்கப்படவோ இல்லை. ஒரு குருவின் முன்னிலையில் மட்டும்தான் அத்தகைய விஷயங்கள் நிகழ்கிறது, ஏனெனில் அவைகள் மிகவும் தனிமனித சார்புடையது.

தந்த்ரா குறித்து மிகவும் பொறுப்பில்லாத விதத்தில் எழுதப்பட்ட சில புத்தகங்கள் இருக்கின்றன. சில யூகங்களின் அடிப்படையில் அதை எழுதி வைத்தவர்கள் அறியாமையில் இருந்த மக்களாகவே இருந்தனர். நீங்கள் ஒரு புத்தகம் படிப்பதாக வைத்துக்கொள்வோம், அதில் முதல் இரண்டு அத்தியாயங்கள் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான எளிய பயிற்சிகளை விவரிப்பதாகவும், கடைசி ஐந்து அத்தியாயங்கள் உங்களை பரவசநிலைக்கு எடுத்து செல்வதற்கான பயிற்சிகளைப் பற்றி பேசுவதாகவும் இருந்தால், நீங்கள் எதைச் செய்வீர்கள்? அப்படி செய்தால் நிச்சயமாக நீங்கள் தொந்தரவைத்தான் தேடிக்கொள்வீர்கள்.

வாழ்கின்ற ஒரு குருவின் முக்கியத்துவம்

மக்கள் ஸ்திரத்தன்மை இல்லாமல் பரவசத்திற்காக செல்லும்பொழுது, அவர்கள் பித்தேறிய நிலைக்கு செல்வார்கள். இன்னமும் உங்கள் புரிதலில் இல்லாத எதற்கும் ஒருபோதும் விருப்பம் கொள்ளாதீர்கள், ஏனெனில் நீங்கள் தவறான விஷயங்களை விரும்பிவிடுவீர்கள். எளிமையான உங்கள் சாதனாவை மட்டும் செய்யுங்கள். அதனால்தான் மரபுகள் நம்பகத்தன்மைப் பற்றி எப்பொழுதும் வலியுறுத்தியுள்ளன. ஏனெனில் முன்கூட்டியே எதையாவது நான் விளக்கினால், இயல்பாகவே நீங்கள் தவறான விஷயங்களைக் கற்பனை செய்துகொண்டு, அதனைத் தேடிச் செல்வீர்கள்.

அதனால்தான் வழக்கமாக ஆரம்ப நிலை வகுப்புகளில் நாம் அத்தகைய விஷயங்களைப் பேசுவதில்லை. இதை காரணஅறிவுரீதியாகப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு வாழ்வை சிறிது உறுதிப்படுத்தத் தேவைப்படுகிறது.

ஒரு மனிதர் நீதிமன்றத்துக்குள் நடந்தார். அவர் பிரதிவாதி.

நீதிபதி அவரைப் பார்த்து கேட்டார், “உங்களுக்கு வக்கீல் இருக்கிறாரா?”

பிரதிவாதி கூறினார்,” இல்லை, ஆனால் நடுவர் குழுவில் எனக்கு சில நல்ல நண்பர்கள் உண்டு!”

அதைப் போன்றதுதான், பரவசத்தை நீங்கள் தர்க்கரீதியாக செயல்படுத்த முடியாது. அதனால்தான் குரு அந்தக் கட்டத்துக்கு வந்தார், ஏனெனில் சிறிதளவேனும் ஸ்திரப்படுத்தல், மென்மையான மற்றும் வேகமான முன்னகர்வு இல்லாமல், நீங்கள் கோட்டைக் கடக்கமாட்டீர்கள்.