மலடாகிக்கொண்டிருக்கும் மண்ணுக்கும், குறைவான நோய் எதிர்ப்பு சக்திக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் சத்குரு, மண்ணுக்கு புத்துயிரூட்டுவதற்கு இப்போது நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்காலப் பெருந்தொற்றுகள் எப்படி மேலும் அதிகமான அழிவுகளை உருவாக்கக்கூடும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.
சத்குரு: மற்ற மருத்துவப் பிரச்சனைகளைத் தவிர, பெருந்தொற்று ஏன் இவ்வளவு பெரும்பாதிப்பை நமக்கு ஏற்படுத்துகிறது என்பதற்கு, மண்ணிலிருக்கும் ஊட்டச்சத்து மிகவும் குறைவாக இருப்பது ஒரு அடிப்படையான காரணமாக இருக்கிறது. அமெரிக்காவின் மண்வளக் குறைபாடு, அவர்கள் விளைவிக்கும் எல்லா காய்கள், கனிகள் மற்றுமுள்ள ஒவ்வொரு உணவிலும் 21% வைட்டமின் ஏ சத்துக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூடுதலாக 30% வைட்டமின் சி குறைவு, 37% இரும்புச்சத்துக் குறைவு மற்றும் 27% சுண்ணாம்புச்சத்துக் குறைவும் காணப்படுகிறது.
இன்றைக்கு, மக்கள் சாலட்களைச் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று எண்ணுகின்றனர். ஆனால் சாலடில் வழக்கமாக நீங்கள் சேர்க்கும் கீரைகள், தக்காளிகள் மற்றுமுள்ள அனைத்திலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்ததைவிட 90% குறைவான ஊட்டச்சத்துக்களே இன்றைக்கு இருக்கின்றன. அதிகமான ஊட்டச்சத்துக்கள் இல்லாத நீர்த்தொகுதிகளையே நீங்கள் பெருமளவு உண்கிறீர்கள். நமக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து இருந்திருந்தால், அதன் விளைவாக நமக்கு இருந்திருக்கக்கூடிய மேலான நோயெதிர்ப்புத் திறன் காரணமாக, இந்த வைரஸ்சை எதிர்க்கும் நமது திறன் வித்தியாசமாக இருந்திருக்கும். உலகத்தில் 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவ்வளவு அதிகமான மக்கள் இறந்திருக்கத் தேவையில்லை.
உலகமெங்கும் உணவில் குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மக்கள் ஏதோவொன்றைச் சாப்பிட்டு, அது அவர்களுக்கு ஊட்டமளிக்கும் உணவு என்று எண்ணிக்கொண்டிருப்பது துயரமானது, ஆனால் உண்மையில் அவர்களது வயிற்றை நிரப்புவதைத் தவிர அதிகமாக வேறெதையும் அது செய்வதில்லை. பெருந்தொற்றைப் பற்றி நாம் ஏன் குறிப்பாக கவனம் கொள்ள வேண்டும் என்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலை இறுதிக்கட்டமாக இல்லாமல் இருக்கக்கூடும் என்று சில முன்னணி வைரஸ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கொரோனா வைரஸின் இயல்பே எப்படிப்பட்டது என்றால், அதன் அடிப்படையான மூலக்கூறின் கட்டமைப்பில் ஒரு சிறிய மாற்றத்துடன் மிகமிகக் கடுமையான வைரஸ்கள் எளிதில் வளர்ச்சியடைய முடியும். ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு விஞ்ஞானியும் அதற்காகத்தான் அஞ்சுகின்றனர். ஒவ்வொரு குடிமகனும்கூட அதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்திலும், மண்ணுக்கு ஒரு முக்கியத்துவமான பங்கு இருக்கிறது.
நீங்கள் போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாத உணவை உட்கொண்டால், சுவாசத் தொற்றுகளால் எளிதில் பாதிப்படைவீர்கள் என்பது நன்றாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அது மிகவும் அபாயகரமான நிலை, ஏனெனில் தற்போது 90% அமெரிக்க மக்கள் வைட்டமின் இ பற்றாக்குறையுடனும், 43% மக்கள் வைட்டமின் ஏ பற்றாக்குறையுடனும் இருக்கின்றனர். வைட்டமின் ஏ போதுமான அளவுக்கு இல்லாதபோது, சளிப்படலம் அதன் வலிமையை இழக்கிறது, மற்றும் அதுவே அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் எந்த ஒரு சுவாசத் தொற்றுக்கும் ஏதுவாக இருக்கிறது.
இது முக்கியமானது ஏனென்றால் கோவிட்-19 அடிப்படையில் ஒரு சுவாசப்பாதைத் தொற்றாகவும், பிறகு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுப்பதாகவும் இருக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் உற்பத்திக்கு மிகவும் அத்தியாவசியமான வைட்டமின் சி குறைபாடு 39% அமெரிக்கவாசிகளுக்கு இருக்கிறது. அதிகமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் இது சரிசெய்யப்படுவது கிடையாது. உண்ணும் உணவில் வைட்டமின் சி இருக்கவேண்டும். 1930 களில் ஒரு ஆரஞ்சுப்பழத்தைச் சாப்பிடுவதால் கிடைத்த அதே ஊட்டச்சத்தைப் பெறுவதற்கு, நீங்கள் இன்றைக்கு எட்டு ஆரஞ்சுகளைச் சாப்பிட வேண்டியிருக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு ஆரஞ்சுகள் என்பது எளிதானதல்ல.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு பார்த்தால், நமது மண்ணின் நிலைமை ஒவ்வொருவருக்கும் அழிவை உண்டாக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அடுத்த 25ல் இருந்து 40 வருடங்களில், அதை சரிசெய்வதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்குப் பிறகு மண்ணை மீட்டெடுப்பதற்கு 150ல் இருந்து 200 வருடங்கள் வரை தேவைப்படலாம். இப்போது நாம் கொள்கைகளை மாற்றியமைத்து, அடுத்த 10ல் இருந்து 15 வருடங்களில் செயல்படத் தொடங்கினால், சுமாராக 25 வருட காலத்தில் இந்த சூழ்நிலையை நம்மால் மாற்றமுடியும். இந்த பூமியில் நமக்கு நாமேயும், எதிர்காலத் தலைமுறைகளுக்கும் நாம் கடமைப்பட்டவர்களாக இருக்கும் அடிப்படையான ஒரு பொறுப்பு இது என்றே நான் உணர்கிறேன்.