கேள்வி: சத்குரு, மக்கள் பலரும் உங்கள் புகைப்படத்தை தங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் வைத்திருக்கிறார்கள். இதன் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன?
சத்குரு: எப்போது விழிப்புணர்வு பரிணமித்து குறிப்பிட்ட தடைகளைக் கடக்கிறதோ அப்போது, அந்த விழிப்புணர்வைத் தாங்கும் உடலும் வெகுவாக பரிணமிக்கிறது. நான் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தில் இருந்த சமயம், மிக குறுகிய காலத்தில் எனது உடலும் பல மாற்றங்களை சந்தித்தது. இது சாதாரணமாக சாத்தியம் இல்லாத ஒன்று. உங்கள் தர்க்கரீதியான மனதைக்கொண்டு என்னைப் பார்த்தால், என்னை ஒரு மூர்க்கமான மனிதனாக பார்ப்பீர்கள். உங்கள் மனம் எந்தளவு தர்க்கரீதியானதாக இருக்கிறதோ, அந்தளவுக்கு நான் மூர்க்கமாக தெரிவேன். ஆனால் உங்கள் தர்க்க மனதை ஒதுக்கி வைத்துவிட்டு என்னைப் பார்த்தால், மிக மென்மையும், அக்கறையும் உள்ள மனிதனாக என்னை உணர்வீர்கள்.
தியானலிங்கத்தில் உள்ள பதஞ்சலி மற்றும் வனஸ்ரீ - தெய்வீக ரூபத்தின் இரு உதாரணங்கள்
உடல் என்பது ஒரு ரூபம். ஒவ்வொரு ரூபமும் ஒரு குறிப்பிட்ட அதிர்வை வெளிப்படுத்துகிறது. உடல் தனக்குள் கொண்டிருக்கும் விழிப்புணர்வு தவிர, உடலே ஒரு குறிப்பிட்ட ரூபம் ஆகிறது. இந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டே தெய்வீக சிலை ரூபங்கள் வடிவமைக்கப்படுகிறது. உதாரணமாக, பதஞ்சலி ஒரு தெய்வீக சிலை வடிவம். வனஸ்ரீ ஒரு தெய்வீக சிலை வடிவம். தியானலிங்கம் தெய்வீக சிலை இல்லை. நாம் தியானலிங்கத்தைப் பற்றி பலவும் பேசியிருக்கிறோம், ஆனால் இந்த இரு அற்புதமான அம்சங்களைப் பற்றி மிகக்குறைவாகவே வெளிப்படுத்தி இருக்கிறோம். இவை தியானலிங்கத்தைப் போல பன்முக தன்மையுடனோ, துடிதுடிப்புடனோ, நிரந்தரமானவையோ அல்ல, ஆனால் தங்கள் அளவில் தனித்துவமான தன்மைகளை கொண்டிருக்கின்றன.
நாம் ஒரு குறியீடு போல அவர்களை அமைத்திருக்கிறோம், ஆனால் அவர்கள் அவர்களது சொந்த வழியில் உயிரோட்டமாக இருக்கிறார்கள். வடிவத்தையும் ரூபத்தையும் பொறுத்தவரையில், அவை துல்லியமாக இல்லை. ஆனால் அவை குறிப்பிட்ட அளவு உயிரோட்டமாக இருக்கும் தெய்வீக சிலைகள். மக்களின் வாழ்வின் மீது அவர்களின் தாக்கம் இருக்கிறது. இப்போது அவைகள் சக்தியோடு இருந்தாலும், இன்னும் வேறு ஒரு குறிப்பிட்ட விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தால் அவை இன்னமும் சக்திவாய்ந்தவையாக திகழும்.
ஒரு சம்யமா நிகழ்ச்சியின்போது சத்குருவுடன் பங்கேற்பாளர்கள்
மனித உடல் கொண்டுள்ள அளப்பரிய சாத்தியம்
இதே விதமாக, பொருள்தன்மையான இந்த உடலை தெய்வீக வடிவமாக்க முடியும், ஏனெனில் உடலில் சக்கரங்கள் எப்படி அமைந்துள்ளதோ அப்படிப்பட்ட மனிதர்தான் நீங்கள். உங்களது திறமைகள், குறைகள், போராட்டங்கள் என எல்லாமும் இந்த 114 சக்கரங்களின் மாறுபட்ட விகிதாச்சாரம், பரிணாமம் மற்றும் தீவிரத்தைப் பொறுத்தே அமைகிறது. இந்த சக்கரங்களின் அமைப்பு நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நிர்ணயிக்கிறது. உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள எந்தவொரு சாதனாவாக இருந்தாலும், அது இந்த 114 சக்கரங்களையும் ஒருங்கிணைப்பதை நோக்கியே இருக்கிறது. நாம் பொதுவாக ஏழு சக்கரங்களைப் பற்றி பேசினாலும், இந்த ஏழு சக்கரங்கள் மட்டுமே எல்லாமும் ஆவதில்லை. மற்ற சக்கரங்களின் தாக்கமும் உங்களது அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படுகின்றன.
ரூபங்களால் பல வழிகளிலும் உங்கள் விழிப்புணர்வின் மீது தங்களை பதித்துக்கொள்ள முடியும். உங்கள் மனவெளியில் மட்டுமின்றி, உங்கள் சக்திகளின் மீதும் அவை தங்களை பதித்துக் கொள்கின்றன.
எனவே நான் எப்படிப்பட்ட உயிர் என்பதை தவிரவும், எனது உடல் பல வழிகளிலும் மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகிறது. கிரியா பயிற்சிகள் மற்றும் சக்தியைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்ட ஒருவரால் இந்த உடல் எந்த விதத்தில் வித்தியாசப்படுகிறது என்பதை அறியமுடியும். இந்த ரூபத்திற்கே ஒரு குறிப்பிட்ட தாக்கம் உள்ளது. இதன் ஒரு அம்சமாக, பார்வை பலன் உண்டு. ஏதோ ஒன்றை பார்ப்பதால் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட தாக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் அது பலவற்றையும் உங்களுக்கு நினைவூட்டுகிறது.
ரூபங்களால் பல வழிகளிலும் உங்கள் விழிப்புணர்வின் மீது தங்களை பதித்துக்கொள்ள முடியும். உங்கள் மனவெளியில் மட்டுமின்றி, உங்கள் சக்திகளின் மீதும் அவை தங்களை பதித்துக் கொள்கின்றன. சம்யமா வகுப்பில் பங்கேற்கும் மக்கள் நீண்ட நேர தியானத்தில் ஈடுபட்ட பிறகு தங்கள் கண்களைத் திறந்து என்னைப் பார்க்கும்போது, எனது ரூபம் மிக எளிதாக அவர்களது அமைப்பிற்குள் பதிந்து விடுகிறது. இது நிகழ்ந்த பிறகு, ஒரு புகைப்படம் அந்த மனிதருக்கு மிகப்பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
அப்படியில்லை என்றாலும் கூட, புகைப்படமானது ஒரு சிறு தெய்வம் போலவே செயல்படுகிறது. இது வெறுமே உங்கள் நம்பிக்கை அல்ல. ஒரு புகைப்படத்திற்கு பதிலாக நாம் வேறு ஒரு ரூபத்தை வடிவமைத்து உங்களுக்கு வழங்கினால், அது இன்னும் நல்ல பலன் தரும். ஆனால் ஒரு புகைப்படமே போதுமானது, அதில் பார்வை பலன் மற்றும் மனோரீதியான தாக்கம் உள்ளது.
அதோடு, நாம் வழங்கும் புகைப்படங்கள் உங்களது வழக்கமான உணர்வோடு அவற்றுடன் ஈடுபடுத்திக்கொள்ள முடியாதவாறே உள்ளன. அவை ஒரு மனிதருக்குள் பிடிப்பற்ற தன்மையை உருவாக்குகிறது. அவை உங்கள் தீவிரத்தை மேம்படுத்தும் அதேநேரத்தில், நீங்கள் அங்கேயே தேங்கி நின்று விடவும் அனுமதிப்பதில்லை. இயல்பாக நான் இருக்கும் புகைப்படங்கள் மூலம் என்னை ஒரு சாதாரண மனிதனாக மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து செல்லக்கூடாது என்பதற்காகவே ஒரு ரூபமாக, பல விதங்களிலும் புனிதமாக இருக்கும் புகைப்படங்களை வழங்குகிறோம்.