ஈஷா வித்யாவின் பொருட்டு தேசிய நெடுஞ்சாலைகளை ஓடிக் கடந்து வந்த ஒரு மும்பை பல் மருத்துவரின் உற்சாகம்

இந்த சிறப்புக் கட்டுரையில், ஆதித்ய சாஹு என்ற பெயர் கொண்ட மும்பையை சேர்ந்த பல் மருத்துவர், ஈஷாவுடன் அவரது பயணத்தைக் கூறுகையில், ஈஷா வித்யாவுக்காக நிதி திரட்டும் நோக்கில் மும்பையிலிருந்து கோயம்புத்தூர் வரை 1260 கிலோமீட்டர் ஓடி வந்த தனது சமீபத்திய முயற்சியை அழகுறப் பகிர்கிறார். ஈஷா வித்யா, கிராமப்புற இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் ஒரு முன்னெடுப்பாகவும், கல்வி கற்கும் வசதியற்ற குழந்தைகள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்தவும் உதவி செய்கிறது.

மருத்துவர் ஆதித்ய சாஹுவின் துள்ளலும், அமைதியான தோற்றமும், அவர் 1260 கிலோமீட்டர்களை 27 நாட்களில் கடந்ததைப் பறைசாற்றுவதாக இல்லை. சுமார் பத்து ஆண்டுகளாக ஈஷா வித்யாவுக்கு நிதி திரட்டுவதற்காக அவர் ஓடிக்கொண்டுள்ளார். அவர் மிகவும் மென்மையாகப் பேசினாலும், ஆதித்யா இயற்கையின் பிரத்யட்சமான ஆற்றலின் வடிவாக இருக்கிறார். வளரிளம்பருவத்தின் ஆரம்பத்தில் அவரை பலவீனப்படுத்திய மன அழுத்தத்திலிருந்து மீண்ட பிறகு, பல் மருத்துவத்தில் பட்டப்படிப்பு முடித்து, மும்பைக்கு அவர் குடியேறினார். துவக்கத்தில், ஓடுவது அவருக்கு பிரம்மாண்டமான ஏதோ ஒன்றின் பகுதியாக இருக்கும் ஒரு உணர்வை வழங்கியது

ஆதித்யா பகிர்ந்துகொள்கிறார், “நான் ஓடத் துவங்கினேன், ஏனெனில் அது பிரபஞ்சத்துடன் தொடர்பில் இருப்பதாக என்னை உணரச் செய்ததுடன், என் கேள்விகளுக்கும் அது பதில்கள் அளித்தது.” இந்தத் தொடர்பு அவரது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிக ஆழமானதாக மாறிவிட்டது. சுற்றிலுமுள்ள மக்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது மற்றும் வறுமைக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை அளிப்பது என்று அவரது பட்டியல் நீண்டது. 2011ல் இன்னர் இஞ்ஜினியரிங் முடித்தபிறகு, “நான் ஏன் ஓடுவதுடன், நிதியும் திரட்டக்கூடாது? என் ஓட்டத்துக்கு அது ஒரு நோக்கத்தை வழங்குகிறது. நான் மும்பை மாரத்தானுடன் என் நோக்கத்தை செயலாக்கத் தொடங்கினேன். மேலும் 2015ல், நான் ஸ்டோக் கங்க்ரி மலை ஏறி, லடாக்கில் 72 கிலோமீட்டர் ஓட்டத்தை நிறைவு செய்தேன்”, என்று கூறி நம்மை வியக்க வைக்கிறார்.

இவற்றுள் மிக சமீபத்திய முயற்சியாக, ஆதித்யா ஒரு புதிய சவாலை ஏற்று, மும்பையிலிருந்து கோயம்புத்தூர் வரை ஒரு நீண்ட ஓட்டத்தை மேற்கொண்டார்.

தேவி அழைக்கும்போது

2021ல், ஆதித்யா தான் புதிதாகத் திறந்த பல் மருத்துவமனைப் பணிகளில் மும்முரமாகிவிட்டார். முன்னதாக, அயர்ன் மேன் ட்ரையத்லான்களை இரண்டு முறை ஏற்கனவே நிறைவு செய்திருந்த ஒருவருக்கு தகுதியான இலக்காக இருந்த, எவரெஸ்ட் சிகரத்தை அடையும் திட்டம் இருந்தது. மேற்கூறிய ட்ரையத்லானில், பங்கேற்பாளர்கள் 3.86 கிலோமீட்டர் நீச்சல், 180.35 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஒரு மாரத்தானை ஒரே நாளில் முடிக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக, தற்போதைய பெருந்தொற்று எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டையாகிவிட, மலையேறுவதற்காக நேபாளம் செல்லும் சாத்தியம் இல்லாமற்போனது. உண்மையில், சாதாரணமான ஓட்டத்தைக்கூட பயணக் கட்டுப்பாடுகள் கடினமாக்கிவிட்டது.

ஆதித்யா விளக்குகிறார், “லாக்டௌன் பல செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தியது, மற்றும் நான் ஒரு புதிய மருத்துவமனை துவங்கியதால், அதில் மும்முரமாக இருந்தேன். மற்றொரு விஷயம் என் யோகப் பயிற்சிகள் முறையாக நிகழாமல் இருந்தது. ஆனால் எந்த விளையாட்டு வீரருக்கும் இது சாதாரணமானதுதான் – ஆகவே இது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நான் அறிந்திருந்தேன். அக்டோபர் மாதத்தில், எனது ஆற்றல் புத்துணர்வுடன் மீண்டது.”

இமயத்தின் சிகரங்கள் கைக்கெட்டாமல் இருந்தாலும், அடிவானில் ஒரு புதிய சிகரம் எழும்பிக்கொண்டிருந்தது. “அக்டோபரில், நான் ஆசிரமத்துக்கு ஒரு நாள் பயணமாக வந்தேன். அதை தேவியின் அழைப்பாகவே நான் உணர்ந்தேன். நான் லிங்கபைரவி சன்னிதிக்கு சென்றேன், அதற்குப் பிறகு, நான் மும்பை சென்றபோது, நிதி திரட்டுவதற்காக மும்பையிலிருந்து கோவை வரை நடந்து செல்லும் இந்த என்ணத்துடன்தான் கண் விழித்தேன்.” பீறிட்டுக் கிளம்பிய சக்தி மற்றும் பயணத்தின் திசையுடன், ஆதித்யா சவாலுக்காக தயாராகத் தொடங்கினார்.

எந்த சவாலையும் நிகழ்த்துவது

ஆதித்யா இந்த ஓட்டத்தை மேற்கொள்வதற்கு பரிச்சயமற்ற இடங்களில் உள்ள சாலைகளில் தன்னந்தனியாக ஓடவேண்டியிருக்கும் என்பது அவரை சுற்றியிருந்தவர்களை சிறிது பதட்டத்துக்கு உள்ளாக்கியது. இந்தப் பயணத்தில் ஆதித்யா உறுதியுடனும், முழுமனதுடனும் இருந்தார். “நான் உடலளவில் இதற்கான தயாரிப்பில் இல்லை, ஆனால் சக்தியளவில் நான் உண்மையாகவே நல்ல நிலையில் இருந்தேன். ஏனென்றால் நான் அச்சமில்லாதவன் மற்றும் எந்த சூழலையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது எனக்கு தெரியும். என்னால் எந்த இடத்திலும் தங்கமுடியும், ஏதோ ஒன்றை சாப்பிட்டுக்கொள்ள முடியும். ஆகவே இதைச் செய்வதற்கு நான் என்னைத்தான் சார்ந்திருந்தேன்.”

அத்துணை பெரும் சவாலை ஏற்கும்போது, சில விஷயங்களை மாற்றுவது எதிர்பார்க்கக்கூடியதே. ஆதித்யா ஒரு பெரிய முதுகுச்சுமையுடன் அவரது பயணத்தைத் துவக்கினார், ஆனால் கூடுதலான எடைகொண்ட சுமை சில உடல் பிரச்சனைகளை உண்டாக்கியது. “என்னால் அதிகமாக ஓடமுடியவில்லை. மும்பையில், என் முழங்கால் நரம்புகள் பழுதடைந்தன. ஆகவே நான் சுமையைக் குறைக்க முடிவு செய்தேன். முழு தூரத்தையும் ஓடிக் கடக்கும் என் முந்தைய திட்டமானது, அதிக நடை மற்றும் ஜாகிங் என்று மாற்றமடைந்தது.”

ஒரு வாரத்துக்குள், ஆதித்யாவுக்கு வயிற்றில் தொற்றுக்கிருமியும், காய்ச்சலும் ஏற்பட்டு, அடுத்த நாளே ஆரம்பித்த இடத்துக்கு 40 கிலோமீட்டர் ஓடி வரவேண்டியிருந்தது. “அதுவரை நான் ஒரே நாளில் பலவற்றையும் செய்ததில்லை. நான் மாரத்தான் அல்லது இரும்பு மனிதன் போன்று ஒற்றை நிகழ்வுகளைச் செய்துள்ளேன். ஆனால் மனித உடல் உண்மையிலேயே சூழலுக்கேற்ப நன்றாக வளைந்துகொடுக்கிறது.”

ஓட்டத்தின் பாதையில் நட்பின் கரங்கள்

அவரது ஓட்டம் சவால்களும், வலிகளும் மட்டும் நிறைந்ததாக இல்லை. ஆதித்யாவின் பரந்த அணுகுமுறையும், இதமான பேச்சும், தோற்றமும், செல்லும் பாதையெங்கும் பல இலேசான கணங்களை ஈர்த்துள்ளன.

“பிரபஞ்சமே என் நண்பனாக நான் உணர்கிறேன், அப்படித்தான் வழிதோறும் நான் சில நல்ல உள்ளங்களைச் சந்தித்தேன்.” வயலில் தெம்மாங்கு பாடிக்கொண்டிருந்த விவசாயிகளில் இருந்து, தயாள குணமுள்ள லாரி ஓட்டுனர்கள் மற்றும் அவரது முயற்சியைக் கேள்விப்பட்டு இலவச தேனீர் வழங்கிய சாலையோரக் கடை ஊழியர் வரை, எதிர்பாராத குதூகலமான சந்திப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. “மகாராஷ்டிராவில் எங்கோ ஒரு இடத்தில், உணவகங்களுக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வீதிகளில் சிலர் அமர்ந்திருந்தனர்.  ஆனால் அவர்களுள் ஒருவர் ரோபோட் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அவர் தனது வேலையில் உண்மையான விருப்பத்துடன் இருந்ததைக் காணமுடிந்தது. அது எனக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தியதில், அவருடன் நான் புகைப்படங்கள் எடுத்து, அளவளாவி மகிழ்ந்தேன்.”

மீண்டும் கல்லூரிக்கு

ஆதித்யா தனது ஓட்டத்தின்போது, ஒரு நாளில் ஏறக்குறைய 40 கிலோமீட்டர் கடப்பதில் உறுதியாக இருந்து, அவ்வப்போது 50 கிலோமீட்டரைத் தொட்டதில், ஒரு நாளைக்கு எட்டிலிருந்து ஒன்பது மணி நேரங்கள் ஓடினார். பயணம் நீண்டுகொண்டே செல்லச் செல்ல, ஒரு நாளில் கடக்கும் தூரம் கிட்டத்தட்ட 30 கிலோமீட்டராகக் குறைந்தது. பதினைந்து நாள் தொடர் ஓட்டத்துக்குப் பிறகு, அவர் ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டார். ஆதித்யா பெல்காமில் பல் மருத்துவம் பயின்ற கல்லூரியில் இதமானதொரு வரவேற்பைப் பெற்றார். அவரது முயற்சிகள்

ஈஷா வித்யா மாணவர்களுக்கு ஆதரவு அளித்ததாக மட்டுமல்லாமல், அவரது பழைய கல்லூரியில் இருந்தவர்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும் இருந்தது! “கல்லூரி நிர்வாகம் என்னைக் கௌரவிக்க விரும்பியதால், நான் ஒரு நாள் இடைவெளி எடுத்துக்கொண்டேன். அவர்களும்கூட ஈஷா வித்யா குழந்தைகளுக்காக நிதி திரட்டுகின்றனர். அவர்கள் என்னைக் குறித்து மிகவும் பெருமிதம் அடைகின்றனர்,” என்று ஆதித்யா கூறுகிறார்.

உள்நிலையின் உச்சங்களை எட்டியது

27 நாட்களுக்குப் பிறகு, ஆதித்யா வெற்றிகரமாக ஈஷா மையத்தை வந்தடைந்து, தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டார்.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொடுவது இந்தக் கட்டத்தில் சாத்தியமில்லாமல் இருந்தபோதும், “உள்தன்மையின் இமயம்” என்று அவர் அழைக்கும், ஒரு வித்தியாசமான சிகரத்தை ஆதித்யாவால் அடையமுடிந்தது.

“உள்ளிருக்கும் இமயம் என்பது, உங்களைப் பற்றி நீங்களே அதிகம் அறிந்துகொள்வது. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உங்கள் உடல் எப்படி வளைந்துகொடுக்கிறது, ஒவ்வொரு நாளும் வித்தியாசமான இடங்களில் மற்றும் வெவ்வேறு சூழல்களில் மனதளவில் உங்களால் எப்படி ஒத்திசைவாக இருக்கமுடிகிறது என்று புரிந்துகொள்வதை இது உள்ளடக்கியுள்ளது. தினசரி அளவில், பல்வேறு பரிமாணங்களும் வித்தியாசமான வழியில் எனக்கு வெளிப்பட்டவாறு இருந்தது. உங்கள் வலிமை, உங்களால் எவ்வளவு தூரம் செல்லமுடியும், மற்றும் உங்கள் வரையறையை எவ்வளவு நீட்டிக்க முடியும் என்பது உங்களுக்கு புரிகிறது. உண்மையில் அது என் கண்களைத் திறந்துவிட்டது – என்னைப் பற்றியே நான் அதிகம் அறிந்துகொண்டேன்,” என்று ஆதித்யா தன்னுள்ளே உச்சம் தொட்டதை விவரித்தார்.

ஈஷா வித்யா குழந்தைகளுக்கு பல வழிகளில் ஆதரவளிக்க முடியும். மேலும் அறிந்துகொள்வதற்கு: ishavidhya.org