டாம் ப்ராடியும், ஜிம் க்ரேயும் அவர்களது வாராந்திர SiriusXM ரேடியோ நிகழ்ச்சிக்காக சமீபத்தில் சத்குருவை அழைத்தனர். டாமின் விளையாட்டு மற்றும் வாழ்க்கையின் வெற்றிக்கான சூத்திரம், விளையாட்டைக் கடந்த அவரது அடிப்படையான இலக்கு பற்றிய சுவாரஸ்யங்களுடன், புதுமை மாறாத எந்தக் கண்ணோட்டங்களை சத்குரு முன்வைக்கிறார் என்று காண்போம்.
டாம் ப்ராடி: சத்குருவை என் நண்பராக அடைவதில் நான் பெருமையடைகிறேன். என் தற்போதைய வாழ்க்கையின் விதம் குறித்து சற்று உரையாடலாம். நான் சிறிது வயது கூடிவிட்டேன், ஆனால் இன்னமும் அப்பழுக்கற்ற தீவிரத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன். என் உடலுடன் நான் மிகவும் பற்றுகொண்டிருக்கிறேன், அது எப்படி உணர்கிறது, குறிப்பிட்ட எனது தொழில் முன்னேற்றத்துக்காக அதை எப்படி தயார்ப்படுத்த வேண்டும், மற்றும் அந்த விஷயங்களை நான் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன். ஆனால் உங்களைப் பற்றி நான் ஆச்சரியப்படுவது என்னவென்றால், சத்குரு, உங்கள் வாழ்வில் உணர்ச்சியின் சமநிலை மற்றும் உங்களுக்கு எப்படி இத்தனை பிரமிக்கத்தக்க கண்ணோட்டங்கள் இருக்கின்றன என்பதுதான். உண்மையிலேயே சில கடினமான விஷயங்களைப் பேசக்கூடிய பெருமைக்குரியவராக உங்களை நான் கருதுகிறேன்.
சத்குரு: நான் பேசுவதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான் – வாழ்வு – வேறு எதுவும் இல்லை. (சிரிக்கிறார்)
டாம் ப்ராடி: முற்றிலும் சரியானது. 99 சதவிகித மக்கள் ஒரு திசையில் செல்கின்றனர், ஆனால் மற்றொரு திசை குறித்து எப்பொழுதும் ஒரு வியப்பை ஏற்படுத்தும் கண்ணோட்டம் உங்களுக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. கடந்த ஒன்றரை வருடங்களில் உலகெங்கும் எவ்வளவோ நிகழ்ந்துள்ள நிலையில், அந்த சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான சரியான அணுகுமுறையை நீங்கள் கண்டுள்ளதாகத் தோன்றுகிறது. உங்களிடத்தில் அற்புதமான கருணைக் குணமும், ஆச்சரியத்துக்குரிய உறுதியும் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.
சத்குரு: நன்றி, ஜிம் மற்றும் டாம்
ஜிம் க்ரே: சத்குரு, வாழ்க்கை மற்றும் விளையாட்டின் விளைவுகள் மற்றும் நமது இலக்குகளை அடையமுடியாமல் இருப்பது என்று எவ்வளவோ விஷயங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக உள்ளன. ஆகவே, நாம் உடலளவில் களைப்படைந்து, மனதளவில் ஏமாற்றம் அடையும்பொழுது, அதனை எப்படி கையாள்வது?
சத்குரு: நீங்கள் முக்கியமாக, “எப்பொழுது விலகுவது?” என்று கேட்கிறீர்கள். எப்பொழுது விலகுவது என்பதை அப்போதைய சூழ்நிலைகளே உங்களுக்கு கூறுகிறது. இன்றைக்கு, நாம் இலக்குகளுக்கு அதிகமாக பொறுப்பேற்கிறோம். மிகவும் முக்கியமாக இருப்பது செயல்முறை. நீங்கள் தற்போது செய்துகொண்டிருக்கும் செயல்முறைக்கு பக்தியுடன் இருப்பது மிகவும் முக்கியமானது.
நீங்கள் செயல்முறைக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் இருந்தால், உங்கள் உச்சபட்ச திறனுக்கு நீங்கள் செயல்படுவீர்கள். எதிராளி எப்படி விளையாடுவார் என்று உங்களால் தீர்மானிக்க முடியாது; யாரோ ஒருவர் நம்மைவிட மேலானவரா அல்லது குறைவானவரா என்று உங்களால் தீர்மானிக்க முடியாது. நீங்கள் உங்களது உச்ச நிலையில் இருப்பதை மட்டும்தான் உங்களால் உறுதிப்படுத்த முடியும். இது நிகழவேண்டும் என்றால், நீங்கள் செயல்முறைக்கு அர்ப்பணிப்பாக இருக்கவேண்டும், இலக்குக்கு அல்ல
டாம் ப்ராடி: எனது 22 வருடங்களைத் திரும்பிப் பார்த்தால், வெற்றியானது, என் விளையாட்டுப் பயணம் மற்றும் இலக்கை நிறைவேற்ற முயற்சிக்கும் செயலின் ஒரு விளைவாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்
ஒரு கால்பந்தாட்டக் குழுவுக்கு மட்டுமல்லாமல், ஒரு குடும்பத்தை அல்லது ஒரு நிறுவனத்தை அல்லது வெற்றிகரமான ஒரு வர்த்தகத்தை உருவாக்குவதற்கும், நமது செயல்முறையை மெருகேற்றி, ஒரு சிறந்த செயல்முறையை உருவாக்குவதுதான் முக்கியமானது. ஆர்வம், கற்றல், பணிவு, ஒழுக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் பொறுப்பேற்பது, மற்றவர் குறித்த அக்கறை போன்றவை மக்களிடையே வளர்ச்சியையும், ஆற்றலையும் அதிகரிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
சிறப்பாக செயல்படாத குழுக்களில், மக்கள் அவரவர்களைப் பற்றி மட்டுமே அக்கறையாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். விளையாட்டிலும், குடும்பங்களிலும் அல்லது வியாபாரத்திலும் மற்றவர் குறித்தும், நமது நோக்கம் என்ன என்பதிலும் நீங்கள் அக்கறைகொண்டால் நீங்கள் ஒரு சிறந்த சக அணியினராக உருவாகிறீர்கள் என்றே நான் உணர்கிறேன். நீங்கள் அப்படி இல்லையென்றால், உண்மையில் நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்வது என்றால், நீங்கள் ஒரு மோசமான சக அணியினராக இருக்கிறீர்கள்.
இந்த விளையாட்டிலும், தொழிலிலும் என் கனவுகளை சாதித்துள்ளேன்; கால்பந்தாட்டத்தைக் கடந்து எனக்கு மற்ற கனவுகள் உள்ளன. உங்கள் ஆற்றலை அதிகபட்சமாக்க வேண்டுமென்றால், உங்கள் உடலில் கவனம் செலுத்துவதற்கு நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மற்றும் உணர்ச்சியளவில் நீங்கள் உங்களை மிக வலிமையாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். வலிமை என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில், அதன் பொருள் என்ன என்பதை நான் அறிந்துள்ளேன்.
சத்குரு: நமக்கு மகத்தான ஆடுதிறன், மற்ற திறமைகள், அதி புத்திசாலித்தனம் என்று அனைத்தும் இருக்கக்கூடும், ஆனால் நமக்கு தேவையான சமநிலை இல்லையென்றால், மேற்கூறிய மற்ற எல்லா விஷயங்களும் நமக்கு எதிராக செயல்படும். நீங்கள் உங்களுக்குள் சமநிலையுடன் இருந்தால், உங்களது உடல்ரீதியான, மனரீதியான, உணர்ச்சியளவிலான எல்லாத் திறமைகளும் முழுமையான வெளிப்பாடு காணும். சமநிலை இல்லையென்றால், நமக்கு நாமேயும், சுற்றியிருக்கும் ஒவ்வொருவருக்கும் தொந்தரவு ஏற்படுத்திக்கொள்கிறோம். இந்த நிலையில் மனிதரின் அளவற்ற படைப்பாற்றல், திறமை, தகுதி அனைத்தும் வீணாகப்போகிறது.
ஜிம் க்ரே: உள்தன்மையில் சமநிலை என்றால் என்ன, சத்குரு?
சத்குரு: உங்கள் எண்ணங்களும், உணர்ச்சிகளும் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் தீர்மானிக்கும்பொழுது மட்டுமே உள்தன்மையில் சமநிலை நிகழும். யாராவது ஒருவர் உங்களிடம் அழகான விஷயங்களைக் கூறலாம் அல்லது உங்களைத் தூற்றலாம், ஆனால் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை அது தீர்மானிக்குமா? உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் இருக்கும்பொழுதுகூட, உங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை 100% ஒருபோதும் தீர்மானம் செய்யமுடியாது.
டாம் ப்ராடி: நான் தீர்மானிப்பதில்லை. 51% ஒருவருக்கு இருப்பது நல்லது என்பதால், நான் எல்லா முடிவுகளையும் எடுப்பதற்கு அவளை அனுமதிக்கிறேன்.
சத்குரு: நம்மைச் சுற்றி இருப்பது ஒருபோதும் நாம் விரும்பியவாறு 100% நிகழ்வதில்லை, ஆனால் நமக்குள் இருப்பது – நமது எண்ணம், உணர்ச்சி, நமது உடல் மற்றும் சக்திநிலை – நாம் விரும்பும் விதத்தில் நிகழவேண்டும். வெளிச்சூழ்நிலைகள் தான் உள்சூழ்நிலைகளை உருவாக்கும் என்று மக்கள் எப்போதும் நினைக்கின்றனர். அது அப்படி அல்ல, எல்லா மனித அனுபவங்களும் நமக்குள் இருந்துதான் உருவாகின்றன. அமைதியாக இருப்பது, ஆனந்தமாக, அன்பாக மற்றும் பரவசமாக இருப்பது போன்ற எல்லா அனுபவங்களும் மனிதருக்குள் இருக்கின்றன. நாம் அனுபவிக்கும் உணர்வுக்கு நாம் பொறுப்பேற்றால், அப்போது நாம் விரும்புவது நமக்குள் நிகழ்கிறது.
டாம் ப்ராடி: நான் எனது முன்னேற்றத்தைத் திரும்பிப் பார்க்கும்பொழுது, என் வயதில் தற்போது நான் இருக்கும் இடத்தை வேறு ஒருவரும் அடையவில்லை. இதை என்னால் செய்யமுடிந்ததற்கான ஒரே காரணம், நான் விஷயங்களை மிகவும் வித்தியாசமாக செய்வதுதான் என்று நான் எண்ணுகிறேன். நான் சிறுவனாக இருந்தபொழுது என் முன்னோடிகள் அனைவரையும் நான் பார்த்தபோது, அவர்களது வாழ்வின் பின்னாட்களில் எப்படி இருந்தனர் என்பதை நான் கண்டேன், அவர்களது உடல்கள் மோசமான நிலையில் இருந்தன, ஏனெனில் நாங்கள் மிகவும் உடல்ரீதியான விஷயங்களையே செய்கிறோம்.
மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், அவர்களது உடல் அதன் அதிகபட்ச ஆற்றலில் செயல்படுவதற்கும் உண்மையிலேயே பயிற்சி செய்ய விரும்புகின்றனர் என்பது என் நம்பிக்கை. ஆனால் அவர்கள் சரியான விஷயங்களைச் செய்வதில்லை. எனது உடலை எப்படி கவனித்துக்கொள்வது என்று எனது இளமையில் கொடுக்கப்பட்ட பல தொழில்நுட்பங்கள் தவறாக இருந்தன. அதிகாரத்தில் இருப்பவர்கள், மருத்துவர்கள் என்று அனைவரும் தவறான அறிவுரை வழங்குகின்றனர். அதற்கு நான் செவிசாய்த்திருந்தால், எனக்கு 44 வயதாகவும் மற்றும் தொடர்ந்து விளையாடவும் அது என்னை அனுமதித்து இருக்காது.
சத்குரு: மக்கள் அறிவுரை வழங்கும்போது, அது அவர்களுக்கு பலனளித்திருக்கிறதா என்று எப்போதும் நீங்கள் பார்க்கவேண்டும்.
டாம் ப்ராடி: பல நேரங்களில் நாம் ஒரே விதமாகத்தான் நடந்துகொள்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். உங்களைப் போன்ற யாரையாவது நான் பார்க்கும்போது, நீங்கள் ஒரே மாதிரி நடந்துகொள்வது கிடையாது – உங்களைப் பற்றி உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு இருக்கிறது. அது மரங்கள் நடுவதாக இருந்தாலும், மண் காப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தாலும், ஒரு பெரிய நோக்கத்துடன் நீங்கள் இருப்பதையும், அதைச் சாதிப்பதற்கு முயற்சி செய்வதிலிருந்து உங்களை எதுவும் தடுப்பதில்லை.
எனக்கென்று ஒரு தனிப்பட்ட இலட்சியம் உள்ளது. அதாவது, மக்கள் அவர்களது வாழ்வில் செய்ய விரும்பும் எதிலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் அளவுக்கு, அவர்களின் உடலை எப்படி வைத்துக்கொள்வது என்று கற்றுக்கொடுத்து, அறிவுறுத்துவது. ஏனெனில் நான் அதைச் செய்யாமற்போனால், அது மறைந்துபோகும் என்று நான் உணர்கிறேன்.
அதனால்தான் உங்களிடமிருந்து நான் இவ்வளவு ஊக்கம் பெறுகிறேன் என்று நினைக்கிறேன். நீங்கள் பெரிய கூட்டங்களில் பேசினாலும் அல்லது சாதாரணமாக தினசரி உரையாடும் மக்களிடம் பேசினாலும் மகத்தான விதத்தில் தொடர்புகொள்கிறீர்கள். நீங்கள் பிரமிக்கத்தக்க நபராகவே இருக்கிறீர்கள்.
டாம் ப்ராடி: சத்குரு, ஒரு கடைசி கேள்வி உள்ளது. இது உண்மையிலேயே எனக்கு முக்கியமானது. ஒரு ஞானியாகவும், ஒரு தொலைநோக்காளராகவும், இந்த வருடம் கோப்பையை எனது குழு வெற்றிபெறும் என்று நீங்கள் பார்க்கிறீர்களா?
சத்குரு: (சிரித்தபடி) இவரைப் பாருங்கள்…..
டாம் ப்ராடி: வேடிக்கைக்காக….
சத்குரு: வாழ்வில் நான் பல விஷயங்கள் செய்கிறேன், ஆனால் நான் ஒரு மேட்ச் ஃபிக்ஸர் அல்ல. (சிரிப்பு) உங்கள் விளையாட்டைக் கவனிக்க நான் அங்கே இருப்பேன். என் வாழ்த்துகள்... ஆனால் நான் மேட்ச்சை முடிவு செய்யமாட்டேன், அது நன்றாக இருக்காது.
டாம் ப்ராடி: நல்லது, உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை அங்கே நாங்கள் எதிர்பார்த்திருப்போம்.
சத்குரு: அந்த நாளில், நான் அங்கே இருக்கவிருப்பதால், நீங்கள் இயன்ற அளவுக்கு சிறப்பாக ஆடவேண்டும்.
டாம் ப்ராடி: நான் அதைச் செய்வேன். உங்களை ஏமாற்றமாட்டேன்.