நம் பொருள் தன்மையான உடல் மீதான வலுவான அடையாளம் மற்றும் அளவுக்கதிகமான அக்கறை ஒன்றுதான் நம் உச்சபட்சமான ஆற்றலை நாம் உணர்வதற்கான பெரிய தடை. பக்தி என்னும் செயல்முறை மூலம் நீங்கள் எவ்வாறு கடவுள் போன்றே ஆகமுடியும் என்பதை வெளிப்படுத்துகிறார் சத்குரு.
சத்குரு: தம்முடைய சொந்த நல்வாழ்வின் மீது அளவுக்கதிகமான அக்கறை கொண்டுள்ளவருக்கு எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். உங்களைப் பற்றிய இந்த அளவுகடந்த அக்கறை இருப்பதற்கான காரணம், நீங்கள் "இதுதான் நான்" என்ற ஒரு தெளிவான வரையறையை கொண்டிருப்பதால் தான்.
நீங்கள் இங்கே அமர்ந்து சுவாசிக்கும் போது, இந்த காற்று உங்கள் இருப்புக்கு மிக முக்கியமான ஒன்று என்பது உங்களுக்கு தெரிகிறது. ஆனால் உங்கள் நுரையீரலில் குறிப்பிட்ட அளவு காற்றை பூட்டி வைத்துக்கொண்டு, "இது எனது காற்று" என்று உங்களால் மூச்சை பிடித்து வைத்துக்கொள்ள முடியாது, அது தொடர்ந்து நிகழும் ஒரு பரிமாற்றம்.
இந்த கணத்தில் நான் என்று நீங்கள் நம்பும் ஒன்று, அடுத்த கணமே நீங்கள் இல்லை என்றாகிவிடுவதையும், அதேவிதமாக இந்த கணத்தில் எது நீங்கள் இல்லை என்று நினைத்தீர்களோ, அது அடுத்த கணமே நீங்களாகி விடுவதையும் சுவாச செயல்முறை உங்களுக்கு காட்டுகிறது. உங்கள் உடலின் சதை மற்றும் எலும்புக்கும் இந்த உண்மை பொருந்தும். நீங்கள் உண்ணும் ஒரு வாழைப்பழம் உங்களுக்குள் சென்றதும் மனிதனாக மாறிவிடுகிறது.
ஒரு தெய்வ ரூபத்தின் மீது - குறிப்பாக ஒரு பெண் தெய்வத்தின் மீது பக்தி கொள்வதன் மூலம் உங்களுக்குள் இது இன்னும் ஆழமான அனுபவரீதியான உண்மையாக உங்களுக்கு மாறும். நீங்கள் அல்லாத ஒன்றை உங்களின் ஒரு அங்கமாக அனுபவரீதியாக உணர இது உதவும்.
உங்கள் அகங்காரத்தை இவ்விதத்தில் பண்படுத்தி, இது - அது என்று பிரித்துப் பார்க்காமல் இருக்க நீங்கள் பழகினால், அது அளப்பரிய ஒரு திறனை உங்களுக்கு அளிக்கும். ஏனெனில் அந்த தெய்வீக வடிவம் சக்தி ரூபத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது - தேவிக்கு உங்களை போல உடல்ரீதியான பிரச்சனைகள் இல்லை. பக்தி என்பது ஒரு வகையான தந்திரம். தென்னிந்தியாவைத் தவிர மற்ற பகுதிகளில், தாந்திரீகர்கள் பெரும்பாலும் காளி, பைரவி, துர்கா மற்றும் பல பெண் தெய்வங்களை வழிபடுபவர்களாக, சக்தி உபாசகர்களாகவே இருக்கின்றனர்.
இரண்டு தனி நபர்கள் உண்மையிலேயே சக்திநிலையில் இணைந்தால், அவர்களில் மகத்தான ஆற்றல் குடி கொண்டிருக்கும். அது அரிதாகவே நிகழும். அத்தகைய சூழ்நிலைகளை என் வாழ்வில் ஓரிரு முறை மட்டுமே நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் மக்கள் சக்திநிலையில் இணைந்திருக்கும் போது, திடீரென அவர்கள் மகத்தான ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
உங்கள் பக்தியினாலோ, நீங்கள் செய்யும் பயிற்சியினாலோ அல்லது நீங்கள் செய்யும் சடங்குகளாலோ உடல் சார்ந்த எல்லைகளைப் பற்றிய உணர்வு உங்களுக்கு பெருமளவு நீங்கி, சக்தி வாய்ந்த தெய்வத்தோடு நீங்கள் சக்திநிலையில் தொடர்பு கொண்டால், நீங்கள் ஈருடல் கொண்டவராவீர்கள் - ஒன்று உங்கள் சக்திகளை உள்ளடக்கிய உங்களின் சொந்த உடல், மற்றொன்று சக்தி வாய்ந்த ரூபம். இது உங்களை ஆற்றல் மிக்கவராக மாற்றும். மேலும், உங்கள் வளர்ச்சி மற்றும் அனைவரின் நல்வாழ்வுக்காக இதை பல மகத்தான வழிகளில் உபயோகப்படுத்த முடியும்.
பிரம்மச்சாரிகளை பதினான்கு முதல் பதினைந்து நாட்கள் வரை தியானலிங்கத்தில் இருக்கச் செய்வதற்கான காரணம், அவர்கள் தியானலிங்கத்தின் முன்னிலையில் இருப்பதினாலேயே பெரும் ஆற்றலை பெறும் அளவுக்கு ஒரு உறவை வளர்த்துக் கொள்கின்றனர். அவ்வாறே லிங்கபைரவியின் முன்னிலையிலும் நிகழும் - அவர்கள் அங்கே இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். ஒரு நாள் அவர்கள் தங்களின் உடல் சார்ந்த எல்லைகளினால் கட்டுப்படாமல், இரண்டையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கும் தன்மையில் இருப்பார்கள். பின்னர் அவர்களைப் பற்றிய அனைத்தும் மாறும்.
[1] லிங்க அர்ப்பணம் எனப்படுவது - ஒரு பிரம்மச்சாரி தியானலிங்கத்தின் சுற்றுப்புறத்தை தனது பராமரிப்பில் கவனித்துக்கொள்ளும் இரண்டு வார காலம்.
விஞ்ஞானிகள் தற்போது இதை ஏற்றுக்கொள்ள துவங்கியிருக்கிறார்கள் - நீங்கள் சரியான விஷயங்களை செய்தால், மனித மரபணுக்களின் அடிப்படைகளை மாற்றியமைக்க முடியும். நீங்கள் எப்படி காட்சியளிக்கிறீர்கள், உங்கள் உடலமைப்பு மற்றும் நீங்கள் சிந்திக்கும் விதம், உணரும் விதம், வாழ்க்கை அனுபவம் என அனைத்தையும் மாற்றியமைக்க முடியும் - அதற்கு தேவையான செயல்களை நீங்கள் செய்தால். சிறுவயதில் இருந்தே செயல்புரியத் துவங்கினால், இது எளிமையானதாக இருந்தாலும், வளர்ந்த பின்னும் இது சாத்தியம் தான். ஒருவரின் முகம், கண்களின் வடிவம் மற்றும் அனைத்தும் ஒரு தீட்சையின் மூலம் மாற்றமடைந்த பலரையும் நாம் இங்கு கண்டுள்ளோம். ஏனெனில் மரபணுக்கள் என்பது நிரந்தரமான தாக்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இறந்தவர்களுக்காக நாம் செய்யும் கர்ம காரியங்கள் மற்றும் கிரியாக்கள் முக்கியமாக நம்முடைய மரபணு ஆதாரத்தில் இருந்து நம்மையே விலக்கி வைத்துக் கொள்வதற்காகதான். மரபணு ஆதாரங்களே உங்கள் உடலின் எல்லைகளை தீர்மானிக்கும், ஆனால் அது தெய்வீகமான எல்லைக்கோடு அல்ல. நீங்கள் எந்த அளவு உங்கள் மரபணு ஆதாரத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்களோ, அடிப்படையில் அந்த அளவில் தான் உங்கள் உடல் சார்ந்த எல்லைகளும் வகுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சேர்ந்து பிறந்திருக்க வேண்டியதில்லை, ஆனால் இரண்டு நபர்கள் ஒருவரோடு ஒருவர் மிக அதீதமாக அடையாளப்படுத்திக் கொள்கையில் அவர்கள் மரபணு அளவில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். இதுவே ருணானுபந்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் யோகமுறை இவ்வாறு கூறுகிறது, "எப்போதும் தனியாக அமருங்கள்; எவரையும் தொடாதீர்கள்." ஏனெனில் குறிப்பிட்ட தருணங்களில் ஒருவரை நீங்கள் தொட்டால், அது மரபணு சம்பந்தத்தை உருவாக்கிவிடும். ஆன்மீக செயல்முறையில் இதை நாம் விரும்புவதில்லை.
ஒரு பக்தர், தனது மரபணுக்கள் வரையறுத்துள்ள உடல் சார்ந்த எல்லைகளை உடைக்கும் வண்ணம், உடல் அல்லாத ஒரு ரூபத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அதனோடு ஒரு உறவை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறார். உங்கள் உடல் சார்ந்த எல்லைகளை கடந்ததும், அந்த தெய்வீக ரூபத்தினுள் பொதிந்துள்ள அத்துணை திறன்களும் உங்களுக்கு கிடைக்க துவங்குகிறது.
ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்தி, சுற்றியுள்ளவர்கள் அனைவரும் பயனடைவதற்கு தாந்திரீகத்தில் நுட்பமான வழிகள் உள்ளன. என்னுடைய கொள்ளுப்பாட்டி எறும்புகளோடு தாந்திரீகம் செய்வார். எறும்புகள் உணவு உண்டால் தனது வயிறு நிறைந்து ஊட்டம் பெற்றது போல அவர் உணருவார். இதுபோன்ற மக்களை நாம் பார்த்திருக்கிறோம்.
பக்தர்களுக்கு இந்த அனுபவம் இருக்கிறது. அவர்கள் தங்கள் தெய்வத்துக்கு பூஜை செய்து பிரசாதம் படைத்ததும் தாங்கள் ஊட்டம் பெற்றது போல உணருவார்கள். பக்தர்கள் பலர், மிகக்குறைவான உணவை உண்டாலும் ஊட்டத்தோடு இருப்பதை நீங்கள் காணலாம். அதற்கு காரணம் அவர்கள் தங்கள் தெய்வத்தின்பால் மிக ஆழமாக தங்கள் கவனத்தை பதித்துள்ளார்கள். அதனால் உடல் சார்ந்த எல்லைகள் உடைக்கப்பட்டு பல வெவ்வேறு வழிகளில் ஊட்டம் பெறுகிறார்கள்.