மனித அமைப்பின் சக்தி வெளிப்பாடுகளாக இருக்கும் பஞ்ச வாயுக்கள் பற்றி நமக்கு இந்தப் பகுதியில் விளக்குகிறார் சத்குரு, உங்கள் உடலில் உதான வாயு அற்புதமான வகையில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்
சத்குரு: பிராணனின் ஐந்து வெளிப்பாடுகளான பஞ்ச வாயுக்களில் நாம் ஏற்கனவே பிராணா, சமான மற்றும் அபான வாயுக்கள் பற்றி பார்த்துள்ளோம். இப்போது நாம் உதான வாயு பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த அம்சம் உங்கள் உடலே இலேசாக இருப்பது போன்ற ஒரு தன்மையை கொண்டுவரக் கூடியது. இலேசாக உணரும் தன்மை எவ்வாறு நிகழ்கிறது? உதானா என்பது உடல் எடையைப் பொறுத்தது அல்ல. உதானா உருவாக்கும் இலேசான தன்மை என்பது, உங்கள் அனுபவத்தில் உடல் இலேசாக, மிதப்பது போல இருக்குமாறு செய்கிறது. நீங்கள் இதை கவனித்திருக்கிறீர்களா? சில நாட்களில் காலையில் எழும்போதே உடல் இலேசாக, தானாகவே எல்லா இடங்களுக்கும் செல்லும் வகையில் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். மற்றொரு நாள் அதை ஏதோ ஒரு தண்டனை போல நீங்கள் சுமந்து கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
உங்கள் எடை பற்றிய உணர்வைக் குறைக்கும் ஒரு அம்சத்தை, பஞ்ச வாயுக்களில் உதான வாயு ஏற்படுத்துகிறது. உங்கள் அனுபவத்தில், புவியீர்ப்பு விசைக்கு நீங்கள் குறைவாக உட்படுவீர்கள். உடலில் உள்ள அணுக்கள் மின்சாரத்தை கடத்துகிறது. எந்த அளவுக்கு உங்கள் உடலில் மின் ஓட்டம் நடக்கிறது என்பது நீங்கள் வாழ்வை எவ்வாறு உணருகிறீர்கள், உங்கள் புரிதல் எந்த நிலையில் உள்ளது மற்றும் உங்களின் நரம்பு மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது என்பனவற்றை தீர்மானிக்கிறது.
உதான வாயுவை நீங்கள் செயல்படுத்தினால், ஒரு அணுவில் இருந்து மற்றொரு அணுவுக்கு கடத்தப்படுவதற்கு முன்னர் அந்த அணுவுக்குள்ளேயே மின்னூட்டம் அதிகரிக்கிறது. அணுக்களில் இவ்வாறு சக்தியான மின்னோட்டம் அதிகரிப்பதால், அந்த அணுவைச் சுற்றியுள்ள கொழுப்பு படலம் கரைய துவங்குகிறது. இதன் காரணத்தினால் உடல் இலேசாகவும், அதிக உணர்திறனோடும் இருக்கும் - உடல் மின்னூட்டம் பெறுகிறது. அணுக்களில் மின்னூட்டம் இருப்பதால் நீங்கள் மிதப்பதைப் போல உணர்வீர்கள். மேலும் உணவு உண்ண வேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்கு வெகுவாக குறைந்துவிடும். இதனால் நீங்கள் குறிப்பிட்ட அளவு உடல் எடையை இழக்கக்கூடும். அணுக்களைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைவதாலும் இவ்வாறு ஏற்படலாம் - ஆனால் அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும்.
யோக மரபில் உதான வாயுவை மட்டுமே முழுவதுமாக கவனத்தில் கொள்ளும் பல பள்ளிகள் உள்ளன. அவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு குறிப்பிட்ட நிலையிலான தேர்ச்சி தேவைப்படுகிறது. உதான வாயுவின் மீது முழு ஆளுமை கொண்ட ஒருவரால் பறக்கக்கூட முடியும் என்று கூறப்படுகிறது. "பாயும் புலி பதுங்கும் நாகம்" போன்ற தற்காப்பு கலைகளை அடிப்படையாக கொண்ட மொழிமாற்று திரைப்படங்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும். அந்தப் படங்களில் அவர்கள் பறந்து செல்வதை சற்றே மிகைப்படுத்தி கூறியுள்ளார்கள். ஆனால் அத்தகைய தற்காப்புக் கலை பள்ளிகள் உதான வாயுவைதான் செயல்படுத்துகின்றன.
பல தற்காப்புக்கலை வல்லுநர்கள் மற்றும் பாலே நடனக் கலைஞர்கள் இயற்பியல் விதிகள் பொய்யோ என கருதும் வண்ணம் வெகு உயரத்திற்கு தாவியெழுவார்கள். புவியீர்ப்பு விசை, உடல் எடை மற்றும் தசை வலிமை ஆகியவற்றை கருத்தில் கொண்டால், இது நம்ப முடியாததாக தோன்றும். அதற்கு காரணம், நீங்கள் உதான வாயுவை செயல்படுத்தினால், புவியீர்ப்பு சக்தியின் தாக்கத்திற்கு நீங்கள் குறைவாகவே ஆட்படுவீர்கள். உடலின் ஒவ்வொரு அணுவும் குறிப்பிட்ட மின்னூட்டத்தை உருவாக்குவதால் உங்கள் உடல் மிதக்க ஆரம்பிக்கும். ஆனால் எதையும் அளவுக்கதிகமாக செய்தால் உடல் அமைப்பு பாதிப்படையும்.
பிராணனின் மூன்று அம்சங்களான - பிராணா, அபானா மற்றும் வியானாவை சமநிலையோடு கையாள வேண்டியது மிக முக்கியம். அதனாலேயே சக்தி சலன கிரியா பயிற்சி மிக முக்கியமானதாகிறது. ஏதாவது புத்தகம் படித்தோ அல்லது இணையதளத்தில் பொறுப்பற்று பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்தோ நீங்கள் உதானாவை செயல்படுத்த கற்றுக்கொண்டால், உங்களுக்கு நீங்களே தீங்கு இழைக்கக்கூடும். சில காலத்திற்கு நீங்கள் சிறப்பாக உணுர்வீர்கள், பின்னர் சரிந்துவிடுவீர்கள். இதுபோன்ற பயிற்சிகள் சரியான முறையில் கற்றுக்கொள்ளப்பட வேண்டியதோடு, சமநிலையோடும் பயிற்சி செய்யப்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் உயிரின் அடிப்படை சக்திகளோடு விளையாடுகிறீர்கள்.
உதான வாயு நீங்கள் உடலளவில் அபாரமான உற்சாக உணர்வு பெற உங்கள் அமைப்பில் குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வரும். உங்கள் உடல் உங்களுக்கு முன்னால் எழ வேண்டும், எப்போதும் உங்களுக்கு முன்னால் துடிப்போடு பாய்ந்து செல்ல வேண்டும்; இதிலேயே வாழ்வில் ஒரு உற்சாகம் இருக்கும். ஏதோவொரு காரணத்திற்காக ஒருவரின் உதானா மேலெழும்பி இருந்தால், உயிர்களை உங்களிடம் இயல்பாகவே ஈர்க்கும் விதத்தில் உங்கள் உடலளவில் ஒரு உற்சாகம் பொங்கும்.
உதான வாயு உங்களின் கருத்துப் பரிமாற்ற திறனை உயர்த்தவும் உதவுகிறது. நீங்கள் உதானாவை சரியான வகையில் செயல்படுத்தினால் ஒலிகளை உச்சரிக்கும் திறன் வெகுவாக மேம்படும். உங்கள் குரல் வேறு வகையான அதிர்வோடு இருக்கும். வெளியே அவ்வாறு வராது போனாலும், உங்களுக்குள் அது அந்த வகையில் தான் எதிரொலிக்கும். அது உங்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தும். இந்த அடிப்படையிலேயே, மந்திரங்கள், குறிப்பாக பீஜ மந்திரங்கள் உருவாக்கப்பட்டன. நீங்கள் அந்த ஒலியை அது எழுப்பப்பட்ட விதத்திலேயே ஞாபகம் வைப்பதால் மிக மெதுவாக உங்கள் உடல் அமைப்புக்குள் அது எதிரொலிக்கத் துவங்கும்.
உங்கள் உடல் நுண்துளைகளோடோ அல்லது ஒளி ஊடுருவும் விதத்தில் இருப்பது போல உதான வாயு உங்களை உணரச்செய்யும். இதை வேறு வகையில் கூறுவதென்றால், உங்கள் அனுபவத்தில் உடலைப் பற்றிய உணர்வை அது குறைத்துவிடும். புவியீர்ப்பு சக்தி என்பது இல்லாமல் இருந்தால், உடல் பற்றிய உங்களின் உணர்வு வெகு குறைவாகவே இருக்கும். உங்களின் உடல் பற்றிய உணர்வு குறைவாக இருக்கும் பட்சத்தில் உங்களை பற்றிய மற்ற அம்சங்கள் இயல்பாகவே வலுவாக வெளிப்படும்.
உடல் உபயோகமற்ற எடையாக அப்படியே இருந்தால், அது வேறெதையும் அனுமதிக்காது. உங்கள் உடல் பற்றிய உணர்வு வலுவாக இருக்கும் போது, நீங்கள் செய்ய விரும்புவதெல்லாம் உண்பது, உறங்குவது, வெளியேற்றுவது மட்டுமே. அது உடலின் தவிர்க்க இயலாத கட்டாயங்களில் அடங்கும். நீங்கள் முழு உயிர்ப்போடும் உற்சாகத்தோடும் இருந்தால் மட்டுமே உங்களுக்குள் மற்றவை வெடித்தெழும் - வாழ்வின் நுட்பமான விஷயங்களையும் சேர்த்துதான்.
இந்த படைப்பு முழுமையுமே அதிர்வு தான். கேட்க வேண்டிய மதிப்புமிக்க அனைத்தையும் கேட்கும் திறன் கொண்டிருப்பது ரிதம்பர பிரக்யா என்று அழைக்கப்படுகிறது. உங்கள் உடல் இப்போது அனுமதிக்காத கூர்மையான கவனம் அதற்கு தேவை. அதற்கு பதிலாக, உங்கள் கணுக்கால், உங்கள் இடுப்பு அல்லது முதுகு பகுதி ஆகியவற்றில் கவனம் செலுத்தும்படி உடல் எதிர்பார்க்கலாம்.
வாழ்வுக்கு உங்களின் கவனம் தேவை. இறப்புக்கு எவரின் உதவியும் தேவையில்லை - அது சிறப்பான திறன் வாய்ந்தது - அது முழுமையாக நிகழும். வாழ்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்தி, நம்மால் இயன்ற அளவு எல்லா சாத்தியங்களையும் திறந்து, எத்தனை அனுபவங்களை உருவாக்க முடியுமோ அத்தனையும் உருவாக்கி, முடிந்த அளவு ஆழ்ந்த தன்மையோடு நாம் வாழ முடியும். நம் இருப்பின் தீவிரத்தை பல்வேறு வழிகளில் மேம்படுத்த முடியும்.
இந்த வாழ்வு ஒருபோதும் போகப் போவதில்லை என்று நீங்கள் ஒருபோதும் எண்ணக்கூடாது, ஆனால் நீங்கள் அவ்வாறு உணர வேண்டும். அதன் பின்னர் நீங்கள் வாழ்வைக் குறித்து உற்சாகமடைவீர்கள்; உங்களால் இயன்ற அனைத்தையும் செயல்படுத்துவீர்கள். நம்மால் எதை செய்ய இயலாதோ, அது பற்றி கவலை இல்லை. ஆனால் நம்மால் இயன்ற அனைத்தும் நம் வாழ்வில் நிச்சயமாக நிகழ வேண்டும். நம்மால் தொடக்கூடிய, உணரக்கூடிய அனைத்தும் நிகழவேண்டும். இந்த வாழ்வில் மிக ஆழமான அனுபவம் நிகழ வேண்டும்.
இதனாலேயே இந்த மனிதகுலத்திற்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக நான் சொர்க்கங்களை எல்லாம் தகர்க்கிறேன். வாழ்க்கை வேறெங்கோ சிறப்பாக நிகழும் என்று கருதுவது குற்றம். இங்குதான் வாழ்க்கை சிறப்பாக நிகழ வேண்டும்; அதன் ஆழ்ந்த தன்மையில், தூய்மையோடு, மிக அற்புதமான வழியில் நிகழவேண்டும்.
இத்தகைய மகத்தான படைப்பு, பல்லாயிரக்கணக்கான உயிர் வடிவங்கள், மிக நுட்பமாகவும் மிக அற்புதமாகவும் நிகழும்போது, இவற்றை படைத்தவர் இங்கே நடனமாடாமல் வேறெங்கே இருக்கப் போகிறார்? அந்த இடம் இதுவே! உங்கள் பிரச்சனை யாதெனில், நீங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில் இருக்கிறீர்கள், ஆனால் அதை நீங்களே சிக்கலாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
இதை நீங்கள் சிக்கலாக்கிக் கொள்ளாமல் இருக்க விரும்பினால், அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, நீங்கள் உங்கள் உதான வாயுவை உயர்த்துவது தான். அதன் பின்னர் நீங்கள் மிதப்பது போல உணருவீர்கள் - உடல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக வராது. நீங்கள் தூங்கினாலோ, உண்டாலோ, அதையோ, இதையோ, எதை செய்தாலும் அது ஒரு பொருட்டாகாது - உடல்ரீதியான நிர்பந்தங்கள் உங்கள் வாழ்க்கையை ஆட்சி செலுத்தாது. அவ்வாறு நிகழும் போது, வாழ்வின் மற்ற பல அறியப்படாத பரிமாணங்கள் உங்களுக்கு வாழும் உண்மையாகிவிடும்.
வாழ்க்கை மற்றும் உயிரின் மூலத்துக்கு நீங்கள் கவனம் கொடுக்க விரும்புகிறீர்கள் எனில், நீங்கள் கவனிக்க கற்றுக்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகிறது. இது உங்களின் கேட்கும் செவித்திறனை பொறுத்தது மட்டுமல்ல - உங்கள் முழு உடலும் கவனித்து உணர வேண்டும். ஏனெனில் இந்த படைப்பு முழுமையிலும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒலியின் வெளிப்பாடு இருக்கிறது. நீங்கள் கவனித்திருக்க வேண்டும். உங்கள் உடலோடோ அல்லது வேறு உடலோடோ அல்லது எதன் மேலோ அதீதமாக நீங்கள் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தால், உங்களால் கவனிக்க இயலாது. உங்கள் அடையாளம் (அகங்காரம்) அனைத்தையும் நீங்கள் எவ்வாறு விளங்கிக்கொள்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது.
நீங்கள் நிச்சயமாக கவனிக்க வேண்டும். நீங்கள் எதனோடாவது மிக அதிகமாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தால் உங்களால் கவனிக்க இயலாது. உங்கள் சொந்த உடலோடு, உங்களை சுற்றியுள்ள சிறுசிறு விஷயங்கள், உங்களை சுற்றியுள்ள மக்கள் மற்றும் எல்லா வகையான கருத்துகளோடும் தத்துவங்களோடும் உங்களை அதிகமாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தால், இந்த படைப்பில் எதை இழக்கிறீர்கள் என்பதே உங்களுக்கு தெரியாது. நீங்கள் கவனிக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் வெறுமனே ஒரு மண் புற்று போல இங்கே அமர்ந்திருக்க வேண்டும் - பின்னர் வாழ்க்கை தெள்ளத்தெளிவாக விளங்கும்.