சத்குரு: சூரியன், தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணிக்கும் உத்தராயண காலத்தின் முதல் பௌர்ணமி தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. இது மகர சங்கராந்திக்கு பிறகு வரும் முதல் பௌர்ணமியுமாக இருக்கிறது. நாட்டின் தென்பகுதியில் இந்நாள் "தன்ய பௌர்ணமி" - அதாவது பூரணமான பௌர்ணமி என்று அறியப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள கோள் நிலையால் இந்நாள் பல வகைகளில் வருடத்தின் மிக தாராளமான பௌர்ணமியாக அறியப்படுகிறது. தன் வாழ்வை மிகச்சிறந்த வகையில் மேம்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த சமயத்தில் அதிகபட்ச பலனை அறுவடை செய்வார்கள். காலங்காலமாக மக்கள் பொருள் சார்ந்த உலகில், உணர்வு சார்ந்த உலகில் மற்றும் ஆன்மீக உலகில் தங்களின் வெற்றிக்கான ஆயுதங்களை பட்டைத்தீட்டும் நாளாக தைப்பூசத்தை பார்க்கிறார்கள்.
கந்தனின் ஆவேசமும், தன்னை அறிதலும்
புராணங்களின்படி, தைப்பூசம் அன்று தான் பார்வதி கந்தனுக்கு வேல் ஆயுதத்தை வழங்கினார். அந்த வேலாயுதம் கொண்டு, துணைக்கண்ட பகுதியில் பல போர்களை புரிந்து, மாபெரும் வீரனாக புகழ் அடைந்த கந்தன், முருகன், குமாரன், கார்த்திகேயன், சுப்ரமணியன் என்றும் அறியப்படுகிறார். அவர் தற்போதைய பாரதத்தின் எல்லைகளை எல்லாம் கடந்து சென்றதாக கூறப்படுகிறது. எல்லா அரசர்களுக்கும் பேரரசனாக அவர் விளங்கினார். ஆனால் எந்த நாட்டையும் அவர் கைப்பற்றவில்லை. போர்களை மட்டுமே அவர் புரிந்தார். ஏனெனில், எங்கு அநீதி நடந்தாலும், அதை அழிக்கும் சபதத்தை அவர் கொண்டிருந்தார்.
அந்த சிறுவன் கோபம் கொண்டிருந்தார். ஒருவர் பெரும் அருளையும், அளவற்ற திறனையும் கொண்டிருக்கும் போது கோபமடைந்தால் இத்தகைய விளைவுகள் ஏற்பட முடியும். எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறது என்று அவர் நினைத்தாரோ அங்கு அனைவரையும் அவர் கொன்றழித்தார். தன் இளமைக் காலம் முழுவதும் பெரும்பாலும் மற்றவரை அழிப்பதிலேயே அவர் கழித்தார். பாரத துணைக்கண்டம் முழுவதிலும், அதற்கு அப்பாலும் அவர் அனைவரையும் கொன்று வீழ்த்தினார். பின்னர் நீதி - அநீதி என்பது அறுதியான ஒன்றல்ல என்பதை அவர் உணர்ந்தார். பல நேரங்களில், அது ஒருவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்த கேள்வியாகவே இருக்கிறது.
கந்தன், தனது ஆவேசத்தால் நீதி வழங்கும் பெயரில் பழிவாங்குதல் தான் நடந்தேறி இருக்கிறது என்பதை தன்னுள் எங்கோ ஒரு ஆழத்தில் உணர்ந்தார். நீதியை வழங்குவதாக எண்ணிக்கொண்டு நீங்கள் ஒருவரை தண்டிக்கும் போது அவர்கள் அதை பழிவாங்குவதாக தான் எடுத்துக் கொள்வார்கள். வரலாற்றில், அறுதியான நீதி என்ற ஒன்றை மனிதர்கள் ஒருபோதும் அடைந்தது கிடையாது. பெரும்பாலானோருக்கான நன்மை அல்லது தீமை என்ற விதத்தில் மட்டுமே அது உள்ளது. பெரும்பாலானோருக்கு எது நல்வாழ்வாக இருக்கிறதோ, அது சில குறிப்பிட்ட மக்களால் அநீதி என்று கூட பார்க்கப்படலாம். குடும்பங்களுக்கு உள்ளேயே கூட, தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக யாரோ ஒருவர் எப்போதுமே எண்ணக்கூடும்.
அறுதியான நீதி என்று ஒன்று இல்லை. அடைவதற்கு சிரமமானதாக மட்டுமின்றி மாயையாக இருக்கும் ஒரு நோக்கத்திற்காக தான் போரிட்டு கொண்டிருப்பதை கந்தன் உணர்ந்தபோது தன்னுடைய ஆயுதங்களை களைந்து, இன்று குமாரபர்வதம் என்று அறியப்படும் மலை மேல் ஏறி தன் உடலை துறந்தார்.
ஒரு மனிதருக்கான உண்மையான வெற்றி எது?
இது கந்தனின் கதை. அவர் தைப்பூசம் அன்று ஆயுதம் பெற்றதால்தான் பெரும் வெற்றி பெற்றார் என்பது புராணங்களின் கூற்று. முடிவில், தன் இலக்கு சரியானது அல்ல என்ற தெளிவை அவர் பெற்றார். தன் இலக்கில் தோற்றுப்போன அவர் மற்ற இடங்களில் ஒரு தோல்வியாகவே கருதப்பட்டு இருப்பார். ஆனால் இந்த கலாச்சாரத்தில் அவர் தன்னை உணர்ந்ததை, முக்தி அடைந்ததையே பெரும் வெற்றியாக நாம் கருதுகிறோம் - அவர் என்னென்ன பொருள் சார்ந்த விஷயங்களை அடைந்தார் என்பதை அல்ல, அவர் பெற்ற போர் வெற்றிகளை அல்ல, அல்லது தன் இலக்கை அவர் பூர்த்தி செய்ததையோ அல்ல. தென்னிந்தியா முழுவதும், மக்கள் இந்த சிறுவனை அவரது தந்தையான சிவனைக் காட்டிலும் அதிகமாக வழிபடுகின்றனர்.
நம்மைப் பொறுத்தவரையில், வெற்றி என்பது கைப்பற்றுவது பற்றியல்ல. நம்மை அழித்து, முழுமையாக கரைத்துக்கொள்வதையே நாம் வெற்றியாக கருதுகிறோம். இந்த மண், பக்தியில் திளைத்த மண். பக்தியின் நோக்கம் கரைந்துவிடுவது தான். மற்றொரு பொருளைக் கொண்டு நம்மை கரைத்துக்கொள்ள நாம் முயல்கிறோம், ஆனால் அடிப்படையான நோக்கம் கரைந்து போவதுதான். யாத்திரை துவங்குவதற்கு சிறந்த நாளாக தைப்பூசம் அறியப்படுகிறது. ஏனெனில் யாத்திரை என்பது எல்லா வழிகளிலும் நம்மை ஓயச்செய்து, கரைத்துக்கொள்ளும் ஒரு செயல்முறை.
நம்மைப் பொறுத்தவரையில், வெற்றி என்பது கைப்பற்றுவது பற்றியல்ல. நம்மை அழித்து, முழுமையாக கரைத்துக்கொள்வதையே நாம் வெற்றியாக கருதுகிறோம்.
பாதயாத்திரை செல்லும் கலாச்சாரம் இன்றும் தென்னிந்தியாவில் மிக உயிர்ப்போடு உள்ளது. மக்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து பழனி மலையில், மற்றும் பல இடங்களில் உள்ள முருகனை தரிசிக்க செல்கிறார்கள். நம்முடைய உள்நிலை மேம்பாட்டிற்காக நாம் நமக்குள் புரியும் செயல்கள், இந்த காலகட்டத்தில் மிக சுலபமாக பலனளிப்பதை நாம் கண்டுள்ளோம்.
லிங்கபைரவி எவ்வாறு உங்களுக்கு ஆற்றல் அளிக்க முடியும்
மனிதகுலத்தின் வரலாற்றில், இந்த மண்ணும் கலாச்சாரமும் மிக செழிப்பாக வளர்ந்து, பன்னெடுங்காலமாக மாபெரும் வெற்றிகரமான ஒன்றாக திகழ்வது இதன் நிர்வாக திறன்களை அடிப்படையாக வைத்து அல்ல. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் மேதைமை மலர்ந்ததாலேயே மிக வெற்றிகரமான கலாச்சாரமாக திகழ்கிறது. நாம் மகத்தான மனிதர்களை உருவாக்கியுள்ளோம் - கடவுளரே கண்டு பொறாமைப்படும் அளவுக்கான மனிதர்கள். பலதரப்பட்ட மனித திறன்களை வெளிக்கொணர ஒருவருக்கு உதவும் வகையில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், இன்று நாம் லிங்கபைரவி தேவி என்று அழைக்கும் சக்தி ரூபம்.
இதுவரை எந்த ஒரு மனிதரும் அறிந்துள்ள அனைத்தையும் நீங்கள் அணுக முடிவதற்கான ஒரே சாத்தியம், உங்கள் புரிந்துகொள்ளும் திறனை சில குறிப்பிட்ட வகையில் நீங்கள் திறப்பதால் மட்டுமே உங்களுக்கு நிகழும். வாழ்க்கை பற்றிய அம்சங்கள் வெவ்வேறு மனிதர்களுக்குள் பல அம்சங்களாக முதலீடு செய்யப்பட்டுள்ளன - சின்னஞ்சிறிய அளவில் அறிந்தவைகளாக. அவை மொத்தமும் ஒரே மனிதரிடம் வரும்போது அவரை சுற்றி என்ன நிகழுமோ, அது அற்புதமானதாகவும் வியக்கத்தக்கதாகவும் அமையும். இதுவே தேவியின் ஆற்றல். இந்த ஆற்றலை நாம் அடைய, பல சிக்கலான, நுட்பமான செயல்முறைகளை உருவாக்க முடியும் என்றாலும், அதற்கு அதிகப்படியான மனக்குவிப்பு மற்றும் சக்திநிலையிலான திறன் தேவைப்படும். ஆனால் தற்போது அதை அடைவதற்கான சிறந்த வழி பரிபூரணமான பக்தி மட்டும்தான்.
பக்தி என்றால் என்ன
பக்தி என்பதன் நோக்கம் கரைந்து போவதுதான். உங்கள் உடலை கரைக்க நீங்கள் திட்டமிடவில்லை, ஆனால் தற்போது நான் என்று நீங்கள் கருதும் அனைத்தையும் - உங்களது விருப்புகள் மற்றும் வெறுப்புகள், அன்புகள் மற்றும் ஆத்திரங்கள், ஆச்சரியங்கள் மற்றும் அருவருப்புகள் ஆகியவற்றின் மூட்டையாக இருக்கும் அனைத்தையும் கரைக்க எண்ணுகிறீர்கள். நான் என்று நீங்கள் கருதும் அனைத்தையும் நீங்கள் கரைத்துவிட்டு, வாழ்க்கையை நீங்கள் எண்ணுவது போல அல்லாமல், அது எப்படி உள்ளதோ அவ்வாறே பார்க்க, உணர, அனுபவிக்க உங்களால் முடிந்தால், அப்போது நீங்கள் அருளை பெறத்தக்க வகையில் இருப்பீர்கள். இந்த அருளை நீங்கள் அடையும்போது மற்றவர்கள் உங்களை ஒரு அசாதாரண மனிதர் என்று எண்ணும் வகையில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள். ஆனால் இது அசாதாரணமான மனிதராக இருப்பதைப் பற்றியது அல்ல. மனிதராக இருப்பதே அற்புதமானது என்று உணர்வதைப் பற்றியது இது.
நான் என்று நீங்கள் கருதும் அனைத்தையும் நீங்கள் கரைத்துவிட்டு, வாழ்க்கையை நீங்கள் எண்ணுவது போல அல்லாமல், அது எப்படி உள்ளதோ அவ்வாறே பார்க்க, உணர, அனுபவிக்க உங்களால் முடிந்தால், அப்போது நீங்கள் அருளை பெறத்தக்க வகையில் இருப்பீர்கள்.
இந்த கலாச்சாரத்தில் "சூப்பர்மேன்" மனிதர் என்று யாருமில்லை. கடவுளைப் போன்ற ஒரு நிலைக்கு மனிதர்கள் உயர்வதைப் பற்றியதாகவே இது இருக்கிறது. நீங்கள் வழிபடும் மனிதர்கள் - கிருஷ்ணர், ராமர், சிவன் அல்லது முருகன் என யாராக இருந்தாலும், அனைவருமே இந்த நிலத்தில் பாதம் பதித்து நடந்தவர்கள், தங்கள் வாழ்வில் எல்லாவிதமான கடினங்களையும் வலிகளையும் சந்தித்து தான் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால் இன்று அவர்களை நீங்கள் பார்க்கும்போது, அவர்கள் கடவுள் போல் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்கள் சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்தவர்கள் அல்ல. அவர்களைப் போல ஆகவேண்டும் என்ற உத்வேகத்தை உங்களுக்கு அளிக்கும் வகையில் அவர்கள் பார்க்கப்படுவது மிக முக்கியம்.
வாழ்வுக்கும் அதற்கு அப்பாலும் எவ்வாறு திறமையோடு இருப்பது?
தேவி வித்தியாசமானவள் - அவளை இந்த குறிப்பிட்ட விதத்தில் நாம் உருவாக்கியது ஏனெனில், கடவுளை எப்படி உருவாக்குவது என்ற தொழில்நுட்பத்தை நாம் அறிந்திருக்கிறோம். வெறும் உணர்ச்சி ரீதியான கருவியாக மட்டுமல்ல, மகத்தான அளவிலான சக்தியின் வெளிப்பாடாக தேவியை நாம் உருவாக்கியுள்ளோம். தேவி ஏதோ சில சின்ன சின்ன அற்புதங்களை உங்களுக்கு நிகழ்த்துபவள் அல்ல. உங்களின் உயிரனுபவத்தை பொங்கி வழியச் செய்பவள் அவள் - எவ்வாறெனில், நீங்கள் இன்று இறக்க வேண்டியிருந்தாலும், நீங்கள் முழு சம்மதத்தோடு செல்லும் வகையில் உங்கள் வாழ்க்கை இருக்கும். நீங்கள் இறக்க விருப்பம் கொண்டிருக்கிறீர்கள் என்றில்லை. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாழும் விருப்பம் கொண்ட காரணத்தால் வாழவில்லை, உங்கள் அமைப்பை நீங்கள் சரியான வகையில் பராமரித்துள்ள காரணத்தால் வாழ்கிறீர்கள். உங்களுக்கு விருப்பமாக இருக்கிறது என்பதால் அல்ல, உங்கள் திறமையாலேயே நீங்கள் வெற்றியை அடைகிறீர்கள்.
அதற்கு ஒத்த இசைவில் தான் தேவியுள்ளாள். உங்கள் விருப்பங்கள் என்ன என்பதைப் பற்றி அவளுக்கு அக்கறை இல்லை. இந்த வாழ்வுக்கும் அதற்கு அப்பாலும் எவ்வாறு உங்களை திறமையானவராக மாற்றுவது என்றே தேவி பார்க்கிறாள். அதுவே முக்கியமானது.