பேட்டியாளர்: முதன்முறையாக இருசக்கர வாகனத்தில் இமாலய பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள், உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?
எல்லைகள் பின்வாங்கின
சந்தீப்: இரு சக்கர வாகனத்தில் மட்டுமல்ல, இமயமலைப் பகுதிகளுக்குள் நான் சென்றதும் இதுவே முதல்முறை. இது எனக்கு முற்றிலும் புதியதொரு அனுபவமாக இருந்தது. புதிதாக இருந்தது இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல. அவ்வப்போது ஏதோ ஒரு நண்பரின் பின் அமர்ந்தபடி, நான் மட்டும் தனியாக என இருசக்கர வாகனத்தில் சிறு பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வித்தியாசமான ஒரு நிலப்பகுதியில், இவ்வளவு தொலைதூரப் பயணம் என்பது இதுவரை நான் மேற்கொள்ளாத ஒன்று.
காவேரி கூக்குரல் துவங்கியபோது, மக்களின் ஆதரவை திரட்டும் பிரம்மாண்ட பேரணியின் பல பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கைப் பயணியாக இணைய எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதுடன், அப்போதிலிருந்து பைக்கில் பயணம் செய்வதை விரும்பவும் தொடங்கினேன். பேரணியின் போது வழிநெடுகவும் பைக் ஓட்டியவர்கள் என்னிடம், "வண்டி ஓட்டுவதற்கு நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று கூறியவாறு இருந்தனர். ஆகவே, காவேரி கூக்குரல் இயக்கம் முடிந்ததும், ஒரு நண்பரின் பைக்கைப் பெற்றுக்கொண்டு, சென்னை நகருக்குள் ஓட்டத் துவங்கினேன். இந்த வருட துவக்கத்தில், சாகச பைக் ஓட்டுமளவுக்கு முன்னேறினேன்.
அதற்கு முன்னதாக, நான் சத்குருவிடம், "இமாலய பைக் பயணத்தில் நானும் பங்கேற்கட்டுமா? அப்படிப்பட்ட ஒரு நிலப்பகுதியை என்னால் சமாளிக்க முடியுமா?" என்று கேட்டிருந்தேன். அவர், நான் போதுமான அளவுக்கு நன்றாகவே வண்டி ஓட்டுவதாக உறுதிப்படுத்தியதுடன், இமாலய மலைத்தொடரின் சாலைகளில் வண்டி ஓட்ட அசாதாரண திறமைகள் தேவையில்லை என்றும் கூறினார்.
எனது முதல் பைக் பெனெல்லி லியோன்சினோ 500, பைக் ஓட்டிய முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு அது ஒரு அற்புதமான பைக். சத்குரு அதை வேடிக்கையாக, "மோட்டார் பொருத்திய சைக்கிள்" என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது, ஏனென்றால் அது பார்க்க பெரிய சைக்கிள் போலவே இருக்கும். இது மிகவும் வேகமானது மற்றும் சவாரி செய்ய எளிதானதும்கூட. ஆரம்பத்தில் வண்டியுடன் நல்ல பழக்கம் ஏற்படவும், எளிதாகக் கற்றுக்கொள்ளவும் அது எனக்கு உதவியது.