விஜி

புதிரான விஜி: தங்கள் வாழ்க்கை, விஜியின் தீவிரமான பக்தி, மஹாசமாதி குறித்து சத்குரு

நினைவுப் பாதையில் பின்னோக்கிச் செல்லும் சத்குரு, விஜியுடனான முதல் சந்திப்பு மற்றும் திருமணம், அவர்கள் இணைந்து கழித்த சாகசத் தருணங்கள், நாடு முழுக்க பயணித்தும், நாடோடிகளைப்போல் வாழ்ந்துகொண்டும் இருந்த நாட்களை நினைவுகூர்கிறார். மேலும், மஹாசமாதி அடைவதை விஜி எப்படி தேர்வு செய்தார் என்பதையும் சத்குரு விவரிக்கிறார்.

சத்குருவும்‌ விஜியும் எவ்வாறு சந்தித்தனர்

சத்குரு: யோகா ஆசிரியராகப் பயிற்சி பெறுவதற்கு விஜி விரும்பினார். அவர் பெங்களூருவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். முன்பே, நான் ஒருபோதும் திருமணம் செய்யமாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் இரண்டாவது முறை நிகழ்ந்த எங்கள் சந்திப்பில், நாங்கள் அறிந்துகொண்டோம். எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை, விருப்பம் தெரிவிக்கவில்லை, வேறு எதுவுமில்லை. நாங்கள் மணம் புரிந்துகொண்டோம் – நாங்கள் இருவர் மட்டும்தான்; வேறு எவரும் இல்லை. சிவன்தான் எங்கள் திருமணத்திற்கு ஒரே சாட்சியாக இருந்தார்.

பயணத்தில் பன்னிரண்டு ஆண்டுகள்

திருமணத்திற்குப் பின், முதல் இரண்டு‌ மூன்று வருடங்கள், எங்கள் வாழ்க்கை மோட்டார் சைக்கிளிலேயே கழிந்தது. மோட்டார் சைக்கிளில் ஒரு கூடாரத்தை எடுத்துக்கொள்வோம், சாலையோரங்களில் உறங்குவோம். நாங்கள் பயணத்திலேயே இருந்தோம் – சில நேரம் நோக்கத்துடன், பெரும்பாலான நேரங்கள் எந்த நோக்கமும் இல்லாமல். இந்த சில வருடங்கள் எனக்குள் அதிகமான வித்தியாசத்தை ஏற்படுத்தியதுடன், ஒரு பெரும் அனுபவமாகவும் இருந்தது. நான் எனக்கே உரிய விநோதமான வழிகளில் அதைக் கழித்தேன் – கால் நடையாக நடந்தும், வண்டி ஓட்டியும், எங்காவது வெறுமனே அமர்ந்துகொண்டும் இருந்தேன். குறிப்பிட்ட சாதனா எதையும் நான் செய்யவில்லை. மற்றொரு இரண்டு வருடங்களை நான் தியானம் செய்வதில் கழித்தேன். விஜி வேலைக்குச் சென்று, எனக்கான உணவு, உடை என அனைத்தையும் கவனித்துக்கொண்ட நாட்கள் அவை. அதற்குப் பிறகு, நாங்கள் பல இடங்களுக்கும் செல்வதில் மும்முரமாகிவிட்டோம்.

நாங்கள் இருவரும் வாழ்வில் இணைந்த பிறகு, பன்னிரண்டு வருடங்களுக்கு, நாடோடிகளைப்போல் இடையறாமல் பயணித்துக்கொண்டே இருந்தோம். மக்கள் எங்களிடம் அற்புதமாக இருந்தார்கள். இருப்பினும், ஒரு பெண் என்ற நிலையில், அவளுக்கென்று வீடோ, சமையலோ இல்லை. ஒவ்வொரு நாளும், நாங்கள் வெவ்வேறு நகரத்தில் இருந்தோம். அவள் எனது நிழல்போல இருந்தாள். நான் செல்லுமிடம் எங்கும் அவள் வந்தாள். அவள் யோகா செய்ததே, எனக்கு யோகா முக்கியம் எனும் காரணத்தினால்தான். அவளுடைய ஆரோக்கியத்திற்காகவோ நல்வாழ்விற்காகவோ விஜி யோகா செய்யவில்லை – தனது நல்வாழ்வை அவள் பொருட்படுத்தவே இல்லை. நாள் முழுவதும் அவள் வேலை செய்து கொண்டும், யோகா வகுப்புகளை ஒருங்கிணைக்கவும் உதவினாள்.

அவளது மஹாசமாதிக்கான சூத்திரம்: உணர்ச்சி, முனைப்பு, தீவிரம்

இறுதி இலக்கை எட்டுவதற்காக ஒவ்வொரு படியாக ஏறிய நபர் அல்ல விஜி. என் மனைவியாக இருந்ததைவிட அதிகமாக என் குழந்தையைப் போலத்தான் விஜி இருந்தாள். ஒரு நாள், அவள் தன் உடலை நீக்கி, மஹாசமாதி அடைய விரும்புவதாகக் கூறியபொழுது, ”இப்போது இது தேவையா? இப்போதுதான் நமக்கு இடமென்று ஒன்று அமைந்திருக்கிறது. நீ வாழ்வதற்கென்று ஒரு வீடு இருக்கிறது, அதுமட்டுமல்ல, நமது மகளுக்கு ஏழு வயதுதான் ஆகிறது.” அதற்கு விஜி, “தற்போது எனக்குள் எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கிறது, வெளியில் இருக்கும் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் என்னிடம் அழகாக நடந்துகொள்கின்றனர். நான் இப்போதே போக விரும்புகிறேன்,” என்றாள். அவளது ஞானத்துக்கு முன் நான் தலைவணங்க வேண்டியிருந்தது.

மஹாசமாதி அடைவதற்கு அவள் தேர்வு செய்திருந்த தைப்பூச பௌர்ணமி தினம், யோகப் பாரம்பரியங்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்நாளில், பல உயிர்கள் தங்களது பூத உடல்களை விழிப்புணர்வுடன் உதறுவதற்கு தேர்வு செய்கின்றனர் அல்லது அந்த பயணத்தை நோக்கி உந்தப்படுகின்றனர். 24 வருடங்களுக்கு முன், இங்கு ஈஷா யோக மையத்தில், நாங்கள் அப்படியொரு மகத்தான நிகழ்வைக் கண்டோம். விஜிக்கு, சாதனாவோ அல்லது அது குறித்த எந்தவொரு அறிதலும் இல்லாத பட்சத்திலும், உணர்ச்சியின் எளிமையும், அவள் என்ன விரும்பினாளோ அதனை நோக்கிய அவளின் தீவிரமான முனைப்பும் அவ்வளவு இலகுவாக மஹாசமாதியை நிகழ்த்தியது. திறன் மிகுந்த யோகிகளும்கூட, சிறிதேனும் போராட்டமும், உபாயமும் கைக்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் அவளுக்கு, எளிமையிலும் எளிமையாக அது நிகழ்ந்தது.

மெய்ப்படும் அவளது கனவுகள்

அவள் இல்லாமல் போனாலும், தியானலிங்க பிரதிஷ்டை மிக அற்புதமாக நிகழ்ந்த விதத்தையும் கடந்த 24 வருடங்களில் ஈஷாவில் நிகழ்ந்துவரும் மற்ற அனைத்தையும் பார்த்து மிக்க மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்திருப்பாள். இன்றைக்கு, ஒரு பெரும் அமைப்பாக, ஈஷா உலகின் மூலைமுடுக்கெங்கிலும் பரவியுள்ளது, ஆனால் அது முக்கியமான விஷயமல்ல.

முக்கியமான விஷயம் என்னவென்றால், பூமியின் எந்த ஆன்மீக இயக்கத்தையும் ஒப்பிட்டால், வேறெங்கும் இருப்பதைக் காட்டிலும், ஈஷா தியான அன்பர்களிடம் இருந்து அளப்பரிய சக்தி வெடித்தெழுவதை நீங்கள் பார்ப்பீர்கள். நம்முடன் 10 இலட்சம் தன்னார்வலர்கள் உள்ளனர் என்பது மட்டுமல்லாமல், நாம் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளோம். ஆனால், அளவிடற்கரிய சக்தி கொண்ட மக்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் மிகப் பெரிய சாதனை.

இந்த சக்தியுடன் சிறிதளவு ஞானத்தை நீங்கள் கொண்டு வந்தால், அது மகத்தான விஷயங்களைச் செய்யக்கூடும். உங்களுக்குள் என்னால் சக்தியை ஊட்ட முடியும், ஆனால் ஞானத்தை ஊட்ட முடியாது. ஞானம் என்பது ஒருவர் தன் வாழ்வின் உணர்தல் மற்றும் தினசரி அனுபவத்திலிருந்து கிரகித்துக்‌கொள்ள வேண்டிய ஒன்று. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு செயல்முறையாக்கினால், ஞானம் நிகழும்.

ஈஷாவில் மேலும் மஹாசமாதிகளை நாம் பார்ப்போமா?

பங்கேற்பாளர்: விஜி அம்மா செய்த விதத்தில் மஹாசமாதி அடையும் சாத்தியம் எங்களுக்கு இருக்கிறதா?

சத்குரு: அதற்கு வழி இல்லை. இந்தத் தலைமுறையில் ஈஷா யோக மையம் நிச்சயமாக மிக அதிகமான மஹாசமாதிகளை காணும், ஆனால் இப்போது அல்ல. அவர்களது முழங்கால்கள் மூப்படைந்து, முதுகுகள் வளையும் வரை நாம் அவர்களைக் காத்திருக்கச் செய்கிறோம். ஏனென்றால், பௌதிக உடலுக்கு நான் ஒரு குறிப்பிட்ட மதிப்பீடு கொண்டிருக்கிறேன். இந்த சதையையும் எலும்பையும் எவ்வாறு வழிபடத்தக்க ஒன்றாக்குவது, இந்த உலகிற்கே மதிப்பானதாக இதை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான ஒட்டுமொத்த அறிவியலையும் அறிந்திருக்கும் ஒரு பாரம்பரியத்தில் இருந்து நான் வருகிறேன்.