கிரியா யோகா, ஒருவரின் சக்திநிலையை மாற்றியமைப்பதற்கான பாதை. இந்தப்பாதை தனித்துவமாகவும் நம்பத்தகுந்ததாகவும் இருப்பதற்கான காரணம் மற்றும் பயிற்சி மேற்கொள்பவரின் மனதில் அது எவ்வாறு மாற்றம் செய்கிறது என்பது குறித்து விளக்குகிறார் சத்குரு.
சத்குரு: கிரியா என்பது தனித்துவமான செயல்முறை. ஏனெனில் அது உங்களை எதையோ நம்ப வேண்டும் என்றோ, கடவுள் மேல் கவனம் கொள்ள வேண்டும் என்றோ, உங்களை புனிதமாக்கிக் கொள்ள வேண்டும் என்றோ அல்லது உங்கள் அண்டை வீட்டாரை அன்பு செய்ய வேண்டும் என்றோ சொல்லாது. வெறுமனே நீங்கள் உங்கள் சாதனாவை செய்து, உங்கள் உள்நிலை சக்தியை மாற்றியமைக்கிறீர்கள். ஒரு நாள் நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை பார்க்கிறீர்கள், உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. 'அன்பு' என்ற வார்த்தையைகூட நீங்கள் நினைத்து பார்க்காத போதிலும், அது வெறுமே முயற்சியின்றி நிகழ்கிறது.
கிரியா யோகா வாழ்க்கையை அதன் தன்மையிலேயே பார்க்கிறது. வேத நூல்கள் கூறியபடியோ அல்லது புனிதர்கள் கூறியபடியோ அது பார்ப்பதில்லை. சொர்க்கம் எவ்வாறு வாழ்க்கையை வகுக்கிறதோ அவ்வாறும் அது பார்க்காது. ஆனால் பூமி எவ்வாறு வகுக்கிறதோ அவ்வாறு தான் பார்க்கும். ஏனெனில் நீங்கள் பூமியிலிருந்து வந்தவர்தான். நீங்கள் இந்த பூமியோடு வேலை செய்யக் கற்றுக் கொள்ளாமல், சொர்க்கத்தைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தால், நீங்கள் வெறுமனே பிரம்மையை தான் உருவாக்குகிறீர்கள்; அதோடு, கனவுக்கும் கெட்ட கனவுக்கும் இடையே இருப்பதும் நூலிழையளவு வித்தியாசம்தான்.
உங்கள் மனம் ஐந்து வெவ்வேறு நிலைகளில் இருக்கலாம். அது ஜடநிலையில், அதாவது செயல்படுத்தபடாமலேயே இருக்கலாம். அதற்கு நீங்கள் சக்தியூட்டினால் அது செயல்படத் துவங்கும், ஆனால் சிதறி இருக்கும். அதற்கு நீங்கள் இன்னும் சக்தியூட்டும்போது சிதறிப் போகாது, ஆனால் முன்னும் பின்னும் ஊசலாடியபடியே இருக்கும். மேலும் நீங்கள் அதற்கு சக்தியூட்டினால், அது ஒற்றை புள்ளியில் குவிய முடியும். அதற்கு மேலும் நீங்கள் சக்தியூட்டினால், அது விழிப்புணர்வை அடையும். உங்கள் மனம் விழிப்புணர்வு அடையும் போது, அது அற்புதமானது, பொருள் தன்மை கடந்த அறிதலுக்கான பாலமாக அது அமையும்.
செயலற்று ஜடநிலையில் இருக்கும் மனதை கொண்ட மக்கள் நன்றாக உண்டு, நன்றாக உறங்கி, நல்ல செரிமான சக்தியோடு இருப்பார்கள். எண்ண ஓட்டம் நிறைந்த மக்களுக்கு உணவை செரிமானம் செய்வதோ, நன்றாக உறங்குவதோ இயலாத ஒன்று. அறிவுப்பூர்வமானவர்கள் என்று கூறிக் கொள்பவர்களை விட, எளிமையான மனதுடையவர்கள் உடல்ரீதியான செயல்பாடுகளில் சிறப்பாக செயல்புரிவார்கள். உடல்ரீதியாக எல்லாவற்றிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், செயலற்றதாக இருக்கும் மனம், மனிதன் என்பதற்கான சாத்தியத்தை விட, விலங்கின் தன்மைக்கு நெருக்கமாக இருக்கும்.
எளிமையான மனதோடு இருப்பதில் குறிப்பிட்ட ஒரு அமைதி கிடைக்கிறது. ஏனெனில் குழப்பத்தை உருவாக்க உங்களுக்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை. அறிவார்ந்த மனங்கள் நிலையில்லாமல், குழப்பமானதாகவும், சிதறியும் கிடக்கும். எளிய மனம் உடையவர்கள் எப்போதும் ஒழுங்குமுறையோடு இருப்பார்கள்.
மனம் செயலற்று ஜடமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் சற்றே சக்திநிலையை அதிகரிக்கும் போது செயல்படத் துவங்கினாலும், அது சிதறிய நிலையில் இருக்கக்கூடும். கிரியா பயிற்சி செய்ய துவங்கும் சிலர் முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக குழப்பத்தோடு இருப்பார்கள். அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லை. ஏனெனில், அவர்கள் யோகா செய்ய துவங்கும் முன்பே நன்றாக உண்டு, உறங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் மனம் எல்லா வகையான விஷயங்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டு இருக்கிறது. முன்பு அவர்கள் அந்த விஷயங்களினால் சலனமடையவில்லை. ஏனெனில் அப்போது மனம் ஜடமாக இருந்தது.
மிக சிதறிய மனம் கொண்டவர்களாக இருந்தவர்கள், அந்தளவு சிதறிப்போகாத ஒரு மனநிலைக்கு வருகிறார்கள். ஆனால் அது ஒருநாள் அவ்விதமாகவும் மற்றொரு நாள் இவ்விதமாகவுமே இன்னும் இருக்கிறது. ஒவ்வொரு தருணமும் வெவ்வேறு இடங்களில் சிதறிக் கிடந்த மனதை விட இது மிகப்பெரிய முன்னேற்றம். ஏற்கனவே முன்னும் பின்னுமாக அலைந்துகொண்டே இருக்கும் மனதைக் கொண்ட மக்கள், கிரியா பயிற்சி செய்ய, மெதுவாக அவர்களது மனம் ஒரு புள்ளியை நோக்கி நிலை பெறத் துவங்குகிறது, அது மிகவும் சிறப்பானது. ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவெனில், மனம் ஒரு விழிப்புணர்வான செயல்முறையாக மாறவேண்டும். அது விழிப்புணர்வான செயல்முறையாக மாறும் பட்சத்தில், இந்த படைத்தலிலேயே மிக அற்புதமான ஒரு விஷயமாக அது இருக்கும்.
கிரியா யோகா தனித்துவமானது. ஏனெனில் அது உங்களிடமிருந்து புனிதத்தையோ தெய்வீகத் தன்மையையோ எதிர்பார்ப்பதில்லை. அது உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை; உங்களிடமிருந்து மனிதத் தன்மையை கூட அது எதிர்பார்ப்பதில்லை. அதற்கு தேவையானதெல்லாம் வெறுமனே உங்கள் சாதனா பற்றிய அர்ப்பணிப்பு மட்டும் உங்களிடம் இருந்தால் போதும். உங்கள் கிரியாவை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அது நிச்சயமாக வேலை செய்யும். அதற்கான காரணம், நீங்கள் இப்போது என்னவாக இருக்கிறீர்களோ, அதை உருவாக்கும் அடிப்படை சக்தி நிலையில் அதன் வேலை நடக்கிறது. மண்ணை மனித உடலாக மாற்றிய அந்த சக்தியைத்தான் நீங்கள் மேலும் செம்மைப்படுத்துகிறீர்கள். அந்த மெருகேற்றல் நடைபெறும்போது, ஒருவர் மாற்றம் அடையாமலே இருப்பதற்கு வழியே இல்லை.
பழைய முட்டாள்தனம் ஒன்றை மக்கள் தங்களின் தலையில் சுமக்கிறார்கள்: "நான் ஆறு மாத காலமாக ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்து வருகிறேன், ஆனால் இன்னும் கெட்ட எண்ணங்கள் வந்த வண்ணமே இருக்கின்றன." அவைகள் கெட்ட எண்ணங்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது? யாரோ ஒருவர் இது புனிதமானது, இது புனிதமற்றது என்று உங்கள் தலையில் திணித்திருக்கிறார்கள். உங்கள் மனம் வாழ்வு பற்றிய சில குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டு இருக்கிறது. வேலை, செல்வம், தங்கம், ஆண், பெண், குழந்தைகள், சமூகம், புகழ் அல்லது ஏதோவொரு முட்டாள்தனமான விஷயத்தை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தாலும், உங்கள் மனம் எண்ணிக்கொண்டு இருப்பதெல்லாம் வாழ்க்கையைப் பற்றிதான். சொர்க்கம் மற்றும் நரகம் - இந்த இரண்டுமே கூட வாழ்வு பற்றிய மிகைப்படுத்தப்பட்ட வடிவங்கள் தான்.
உங்கள் மனம் வாழ்வைத் தவிர வேறு எதைப் பற்றியும் எண்ணுவதில்லை, எனவே அது தவறானதாக இருக்க முடியாது. ஆனால் இப்போது நடப்பதெல்லாம், மனம் இப்போது எதை சிறப்பான ஒன்றாக கருதுகிறதோ, அதைப் பற்றி தான் அது எண்ணிக் கொண்டு இருக்கிறது. ஒருவர் தம் வாழ்வில் மிகச் சிறந்த ஒன்றாக செல்வ வளத்தை எண்ணினால், அவர் எல்லா நேரமும் பணத்தைப் பற்றி மட்டும்தான் சிந்தித்துக் கொண்டிருப்பார். இதுவரையிலான வாழ்வில் ஒருவர் மிக சுகமான ஒன்றாக காமத்தை அறிந்திருந்தால், அவர்கள் அதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். வேறு யாரோ ஒருவருக்கு, தம் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய அனுபவமாக மது அருந்துவதோ, போதைப்பொருள் எடுத்துக்கொள்வதோ இருந்தால், அவர்கள் அவற்றைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
தங்களுக்கு எந்த ஒரு அம்சம் சுகத்தையோ அல்லது இனிமையையோ வழங்க முடிவதாக இருக்கிறதோ, வாழ்வின் அந்த அம்சத்தைப் பற்றியே மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது சரியா தவறா என்ற கேள்வியே இல்லை. இனிமையானவராக மாறவேண்டும் என்ற இலக்கு உங்களிடம் இருப்பது முற்றிலும் சரியானது. நீங்கள் தியானத்தை தேடினாலும் சரி, கடவுள், போதை அல்லது காமம் என்று எதைத் தேடினாலும் சரி, நீங்கள் மீண்டும் அதனிடம் செல்வதற்கான காரணம், அது உங்களுக்கு ஏதோ ஒரு இனிமையை நினைவுபடுத்துகிறது. கிரியா யோகா உங்கள் மனதின் இந்த யதார்த்தத்தை விட்டுவிடச் சொல்வதில்லை. மனம் இதுவரை அறிந்திருக்கும் எல்லா விஷயங்களையும் அழித்துவிடவும் அது எதிர்பார்ப்பதில்லை.
மனதுக்கு பல்வேறு அம்சங்கள் உள்ளன. தர்க்க அறிவு மற்றும் எண்ணங்கள் என்பது மனதில் வெறும் சிறு பகுதிகள் மட்டுமே. தர்க்க அறிவானது, ஞாபகங்களின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. எனவே நீங்கள் இனிமையை தேடும்போது, அது கடந்த காலத்தில் நீங்கள் அனுபவித்த இனிமையான விஷயங்களை உங்கள் நினைவுகளில் இருந்து தேடி எடுத்து, "இதை செய்யலாம்," என்று கூறும். மனதினால் உங்களுக்கு புதிய ஒரு சாத்தியத்தை வழங்க முடியாது. உங்கள் மனம் விழிப்புணர்வாக மாறினால், லட்சக்கணக்கான வெவ்வேறு சாத்தியங்களை அது வெளிக்கொணரும் - உங்கள் நினைவுகளில் இல்லாத, ஆனால் அதே சமயம் இந்த உயிர் தற்போது எவ்வாறு இருக்கிறது என்ற அடிப்படையில் இருந்து உருவாகும் சாத்தியம் அது.
மிகப்பெரிய போதை உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்துவிட்டால்; தெய்வீகம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், உங்கள் புத்திசாலித்தனம் இயல்பாகவே மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்ளும். முக்கியமாக செய்ய வேண்டியது யாதெனில், சக்திநிலையை அதிகப்படுத்தி மனம் விழிப்புணர்வு நிலையை அடையும்படி செய்வதுதான் - உங்களால் துரத்தியடிக்க முடியாத ஒன்றோடு போராடுவது அல்ல. புத்திசாலித்தனம் மற்றும் திறனில் உச்சநிலையை அடைவது அனுபவத்தினால் இயல்பாகவே ஏற்படும், வாழ்க்கையை உங்கள் புத்திசாலித்தனத்தை வைத்து கூறுபோடுவதினால் அது நிகழ்வதில்லை.
கிரியா ஏன் குறிப்பிடத்தக்கதாகிறது என்றால், உங்கள் மனம் இயல்பாக செய்ய முடியாத எந்த ஒன்றையும் அது செய்யச் சொல்வதில்லை. புத்திசாலித்தனம் மற்றும் திறனில் உச்சநிலையை அடைவது அனுபவத்தினால் இயல்பாகவே ஏற்படும், வாழ்க்கையை உங்கள் புத்திசாலித்தனத்தை வைத்து கூறுபோடுவதினால் அது நிகழ்வதில்லை. வெறும் 20 நிமிடங்கள் செய்யும் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா தன்னிடத்தில் எல்லா சாத்தியங்களையும் கொண்டுள்ளது.