ஜனவரி 12, 2022-ல் நாம் தேசிய இளைஞர் தினத்தை மட்டும் கொண்டாடுவதில்லை, சுவாமி விவேகானந்தரின் 158-வது பிறந்த நாளையும் கொண்டாடுகிறோம். இந்த தினத்தைக் கொண்டாட சத்குருவின் வார்த்தைகளில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையிலிருந்து 5 அற்புதமான கதைகள் உங்களுக்காக இதோ...
ஸ்வாமி விவேகானந்தர் பற்றி அறியாதவர்களுக்காக: ராமகிருஷ்ண பரமஹம்சரின் தீவிரமான சீடரான ஸ்வாமி விவேகானந்தர், பிரகாசத்துடன் ஒளிரும் ஒரு நட்சத்திரமாக உலகம் முழுவதும் சுடர்விட்டு, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக செயல்முறையை கிடைக்கச் செய்தார்.
சத்குரு: அமெரிக்காவுக்கு சென்ற முதல் யோகி விவேகானந்தர். 1893-ஆம் வருடம் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட அவர் ஒரு ஆன்மீக அலையை உருவாக்கினார்.
தமது 18 வயதில், துடிப்பான இளைஞராக இருந்த விவேகானந்தரிடம் ஒரு நாள் ஒருவர், "ராமகிருஷ்ணர் என்ற ஒரு மறைஞானி இருக்கிறார். உன்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன. அவரிடம் எல்லாவற்றுக்கும் பதில்கள் உள்ளது. நீ கட்டாயம் அவரை சந்திக்க வேண்டும்" என்றார். எனவே அவர் அங்கு சென்றார். அவர் சிறந்த புத்திசாலியாக, எல்லாவற்றையும் பற்றி வலுவான வாதங்கள் செய்பவராக இருந்தார். அவர் ஆன்மீக தேடலில் இருந்தவர் அல்ல. ஆனால் அவரை சுற்றி நடக்கும் எல்லா முட்டாள்தனங்களையும் உடைத்தெறியும் ஒரு போராளியைப் போல இருந்தார்.
அவர் ராமகிருஷ்ணரிடம் சென்று இவ்வாறு கேட்டார், "எல்லா நேரங்களிலும் நீங்கள் கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். கடவுள் இருக்கிறார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?" அதற்கு ராமகிருஷ்ணர், "நானே அதற்கு நிரூபணம்" என்றார். விவேகானந்தர் தலைசுற்ற வைக்கும் வாதங்களை எதிர்பார்த்திருந்தார். ஆனால் ராமகிருஷ்ணரின் பதிலோ அவரை முற்றிலுமாக செயலிழக்கச் செய்தது. பின்னர் அவர், "அது எதுவாக இருந்தாலும் உங்களால் என்னை அதை உணர வைக்க முடியுமா?" என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், "அதற்கான தைரியம் உன்னிடம் உள்ளதா?" என்று வினவினார். விவேகானந்தர் அதிக தைரியமுள்ள ஒரு இளைஞனாக அறியப்பட்டிருந்தார். ஆனால் அவர் ஒரு கணம் தயங்கினார், பின்னர் "ஆம், நான் காண விரும்புகிறேன்" என்று பதிலுரைத்தார்.
ராமகிருஷ்ணர் வெறுமே தன் பாதத்தை எடுத்து அவரின் மார்பில் வைத்ததும் விவேகானந்தர் பல மணி நேரங்களுக்கு சமாதிநிலைக்கு சென்றுவிட்டார். அவர் அந்நிலையில் இருந்து வெளியே வந்தபோது அவருக்குள் இருந்த எல்லா கேள்விகளும் ஆவியாகி விட்டிருந்தது. அவர் வாழ்வில் கற்பனை கூட செய்து பார்த்திராத ஏதோ ஒன்றை அவர் கண்டார். அதற்குப் பின், ஒரேயொரு கேள்வியை கூட அவர் கேட்கவில்லை,
சத்குரு: ஒருநாள் விவேகானந்தரின் தாயார் கடுமையாக நோயுற்ற நிலையில் மரணப்படுக்கையில் இருந்தார். அவருக்கான மருந்தோ உணவோ வாங்க தன்னிடம் பணம் இல்லை என்பது திடீரென விவேகானந்தரை தாக்கியது. தன் தாயார் மிகுந்த நோயுற்று இருக்கும்போது அவரை கவனித்துக்கொள்ள முடியவில்லையே என்பதில் அவர் கடும் கோபமடைந்தார். விவேகானந்தரைப் போன்ற ஒரு மனிதர் கோபமடைந்தால் அவர் உண்மையிலேயே கோபம் கொள்வார். அவர் ராமகிருஷ்ணரிடம் சென்றார்.
அவர் ராமகிருஷ்ணரிடம், "இந்த முட்டாள்தனம் என்னை எங்கே கொண்டு செல்கிறது? நான் இன்னும் வேலையில் இருந்திருந்தால் இன்று என் தாயாரை நான் கவனித்திருக்கக்கூடும். அவருக்கு நான் உணவு, மருந்து மற்றும் வசதிகள் செய்திருக்கக்கூடும். இந்த ஆன்மீகம் என்னை எங்கே கொண்டு சென்றிருக்கிறது?" என்று கேட்டார்.
காளியின் உபாசகராக இருந்த ராமகிருஷ்ணர், தன் வீட்டில் காளி கோவில் ஒன்றை அமைத்திருந்தார். அவர், "உன் தாயாருக்கு மருந்தும் உணவும் தேவையா? உனக்கு தேவையானவற்றை நீ ஏன் அன்னையிடம் சென்று கேட்டு பெறக்கூடாது?" என்றார். இது ஒரு நல்ல யோசனையாக விவேகானந்தருக்கு தோன்றவே, அவர் ஆலயத்துக்குள் சென்றார்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து விவேகானந்தர் வெளியே வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம், "அன்னையிடம் நீ உணவு, பணம் மற்றும் உன் தாயாருக்கு தேவையானவற்றை எல்லாம் கேட்டாயா?" என்று கேட்டார்.
விவேகானந்தர், "இல்லை நான் மறந்துவிட்டேன்" என்றார்.
ராமகிருஷ்ணர் மீண்டும் கூறினார், "மறுபடியும் நீ உள்ளே செல். இந்த முறை மறக்காமல் கேட்டு விடு"
விவேகானந்தர் உள்ளே சென்றார். கிட்டத்தட்ட எட்டு மணி நேரங்கள் கழிந்த பிறகு வெளியே வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம் மறுபடியும் அதே கேள்வியை கேட்டார், "நீ அன்னையிடம் கேட்டாயா?"
விவேகானந்தர், "இல்லை நான் கேட்கமாட்டேன். கேட்க எனக்கு எந்த தேவையும் இல்லை" என்றார்.
ராமகிருஷ்ணர், "இது நல்லது. ஆலயத்தில் இன்று நீ ஏதாவது கேட்டிருந்தால், இதுவே உனக்கும் எனக்கும் இடையேயான கடைசி நாளாக இருந்திருக்கும். அதற்குப் பிறகு உன்னுடைய முகத்தைப் பார்க்கவும் நான் விரும்பியிருக்க மாட்டேன். ஏனெனில் கேட்டு வாங்கும் ஒரு முட்டாள் உயிரின் அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்வதில்லை" என்றார்.
வழிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட தன்மை. நீங்கள் வணங்கும் தன்மை கொண்டவராக, வழிபடும் தன்மை உள்ளவராக மாறினால், அது ஒரு அற்புதமான நிலை. ஆனால் ஏதோ ஒன்றை பெறும் எதிர்பார்ப்புடன் நீங்கள் வேண்டினால், அது உங்களுக்கு வேலை செய்யாது.
விவேகானந்தர் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று தன் குருவின் போதனைகளைப் பரப்ப எண்ணினார். அந்த காலகட்டத்தில், கடல் கடந்து செல்வது என்பது கிட்டத்தட்ட இன்னொரு கிரகத்துக்கு செல்வதற்கு ஒப்பானதாக இருந்தது. எனவே ராமகிருஷ்ணரின் மனைவியான சாரதாதேவியிடம் ஆசி பெற அவர் வந்தார். சாரதாதேவி அப்போது சமைத்துக் கொண்டிருந்தார். விவேகானந்தர் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று ராமகிருஷ்ணரின் போதனைகளைப் பரப்ப விரும்புவதாக கூறியபோது, அவர் வெறுமனே தலையசைத்தார். அவர் விவேகானந்தரை அவரின் பழைய பெயர் கொண்டு "நரேன்" என்று தான் அழைப்பார். சாரதாதேவி, "நரேன் அந்த கத்தியை எடுத்துக் கொடு" என்று கேட்டார்.
விவேகானந்தர் கத்தியை எடுத்து கொடுக்கும்போது, கூர்மையான பகுதியை தன் உள்ளங்கையில் பிடித்துக் கொண்டு கத்தியின் பிடியை சாரதாதேவியிடம் நீட்டினார். "நீ மேற்கத்திய நாடுகளுக்கு சென்று போதனைகளை பரப்பலாம்" என்று அனுமதி வழங்கினார் சாரதாதேவி. சாரதாதேவி ஏற்கனவே காய்கறிகளை அரிந்திருந்ததையும், அவற்றை பானையில் இட்டு சமைத்துக் கொண்டிருந்ததையும் விவேகானந்தர் கவனித்தார். காய்கறிகள் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தன. எனவே விவேகானந்தர், "எதற்காக கத்தியை எடுத்து தருமாறு கேட்டீர்கள்?" என்று கேட்டார். சாரதாதேவி, "நீ எவ்வாறு கத்தியை கொடுக்கிறாய் என்பதை நான் பார்க்க விரும்பினேன் - நீ மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல தகுதியானவனா இல்லையா என்பதை பார்ப்பதற்காக" என்று பதிலளித்தார்.
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை, "நீங்கள் கீதையை வாசிப்பதைக் காட்டிலும் கால்பந்து விளையாடும் போது தான் சொர்க்கத்துக்கு அருகாமையில் உள்ளீர்கள்" என்று கூறினார். அது உண்மைதான். ஏனெனில் முழுமையான ஈடுபாட்டோடு இல்லையென்றால் உங்களால் கால்பந்து விளையாட முடியாது. இதில் எந்தவிதமான சுயமான நோக்கமும் இல்லை, வெறும் ஈடுபாடு மட்டுமே உள்ளது. உங்களால் எது முடியும் முடியாது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் பல வருடங்களாக பயிற்சி எடுத்துள்ளீர்கள். இப்போது கேள்வி ஈடுபாட்டைப் பற்றியது மட்டும்தான், நோக்கத்தைப் பற்றி அல்ல.
வேதங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போதே, சில காலத்திற்கு பிறகு, பல விஷயங்களைப் பற்றியும் நீங்கள் எண்ணத் துவங்கக்கூடும். ஒரு கால்பந்து விளையாட்டு எந்த அளவுக்கு உங்களிடம் ஈடுபாட்டை உண்டாக்குமெனில், விளையாடும்போது, அதைத்தவிர வேறு எதையும் உங்களால் செய்ய இயலாது. அதற்கான காரணம், நீங்கள் எதிரணியினரை சமாளிக்க வேண்டும்; பந்தை உங்களிடம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்; அதோடு நீங்கள் முழு வேகத்தோடும் ஓட வேண்டும். அந்த ஒரு வேகத்தில் ஓடும்போது, பந்தை சரியாக செலுத்துவதற்கு தனிச்சிறப்பான திறன் தேவைப்படுகிறது. அதற்கு குறிப்பிட்ட அளவிலான ஈடுபாடு தேவைப்படுகிறது. அந்த நிலையில் நீங்கள் கிட்டத்தட்ட மனமற்றவராக இருக்கிறீர்கள்.
நீங்கள் முழு ஈடுபாட்டோடு ஏதோ ஒன்றை செய்யும்போது, அங்கு வெறுமனே செயல் மட்டும்தான் நடக்கிறது என்பதையும், மனம் வேறெங்கோ இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். ஒரு கால்பந்து போட்டியில், விளையாட்டு வீரர்கள் அத்தகைய ஒரு நிலையை அடிக்கடி அடைவார்கள். அதனால்தான் தீவிரமாக விளையாடப்படுகையில் உலகில் பாதி மக்கள்தொகையை கால்பந்து விளையாட்டு தன்வசம் ஈர்க்கிறது. அங்கே ஒருவிதமான கடந்து செல்லும் நிலை உருவாகிறது. அது உண்மையில் ஆன்மீக ரீதியான கடந்து செல்லும் நிலை அல்ல என்றாலும், தன்னுடைய வரம்புகளில் இருந்து ஒருவர் கடந்து செல்லும் நிலை நிச்சயமாக ஏற்படுகிறது.
ஒருமுறை, பிரபலமான ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஒருவரின் வீட்டுக்கு சுவாமி விவேகானந்தர் விருந்தினராக சென்றிருந்தார். இரவு உணவுக்குப் பிறகு, அவரின் புத்தக அறையில் அவர்கள் சந்தித்தனர். சுமார் 800 பக்கங்கள் கொண்ட ஒரு பெரிய புத்தகம் ஒன்று அங்கிருந்த மேஜை மேல் இருந்தது. அந்த மனிதர் அந்த புத்தகத்தைப் பற்றி புகழ்ந்து கூறினார் - அது எவ்வளவு அற்புதமாக உள்ளது, அதை புரிந்துகொள்வது கடினமாக இருப்பதால், புரிந்து கொள்வதற்காக தினமும் ஒன்றிரண்டு பக்கங்களாகவே வாசிக்கிறேன் என்றெல்லாம் அவர் கூறினார். விவேகானந்தர் அவரிடம், "அந்த புத்தகத்தை என்னிடம் ஒரு மணி நேரத்துக்கு கொடுங்கள். அதில் என்ன இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன்" என்றார். அந்த மனிதர் சிரித்தார், "இந்த புத்தகத்தை ஒரு மணி நேரத்தில் உங்களால் எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? அதுவும் இது ஜெர்மானிய மொழியில் உள்ளது" என்றார். விவேகானந்தர், "என்னிடம் ஒரு மணி நேரம் மட்டும் கொடுங்கள், நான் பார்க்கிறேன்" என்றார். கேலியாக அந்த மனிதர் புத்தகத்தை விவேகானந்தரிடம் கொடுத்தார்.
விவேகானந்தர் தம் இரு கைகளுக்கு இடையே மூடிய புத்தகத்தை வைத்தபடி ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, "இந்த புத்தகத்தில் பயனுள்ள வகையில் ஏதுமில்லை" என்றார். அந்த மனிதருக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது, "இது ஆணவம். நீங்கள் புத்தகத்தை திறந்துகூட பார்க்கவில்லை, ஆனால் அதைப் பற்றி கருத்து கூறுகிறீர்களே" என்று கோபமாக கேட்டார். விவேகானந்தர் அமைதியாக, "கோபப்படாதீர்கள், இந்த புத்தகத்தைப் பற்றி நீங்கள் என்ன அறிய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை கேளுங்கள், நான் உங்களுக்கு கூறுகிறேன்" என்றார்.
விவேகானந்தரை நோக்கி அந்த மனிதர் கேட்டார், "672-ம் பக்கத்தில் என்ன உள்ளது?" விவேகானந்தர் அந்த பக்கத்தில் இருந்ததை ஒரு வரி விடாமல் அப்படியே கூறினார். அந்த மனிதர் அவரைப் பார்த்து, "இங்கு என்ன நிகழ்கிறது? நீங்கள் புத்தகத்தை திறக்கக்கூட இல்லையே" என்றார். விவேகானந்தர், "அதனால்தான் நான் விவேகானந்தா" என்றார். அவரின் இயற்பெயர் நரேந்திரன். அவரது குரு அவருக்கு விவேகானந்தா என்று பெயரிட்டார். விவேகா என்றால் உணர்தல். உணர்தல் என்பது பல்வேறு பரிமாணங்களில் இருக்கமுடியும். துரதிருஷ்டவசமாக பல மனிதர்கள் இந்த விஷயங்களை ஆராயவே ஒருபோதும் முற்படுவதில்லை.