நிகழ்ச்சி குறித்து பங்கேற்பாளர்கள் என்ன கூறுகின்றனர்
களரியின் முதல் பகுதிக்காக, அடிப்படைகளில் கவனம் செலுத்துவது என்ற முடிவுடன், களரியைப் பயிற்சி செய்யும் எல்லா தரப்பினரும் பயன்பெறும் வகையில், ஒரு சமமான பயிற்சியை குழுவினர் வடிவமைத்தனர். பொதுமக்களுக்கு நிகழ்ச்சியை வழங்குவதற்கு முன்பாக, ஈஷா தன்னார்வலர்களுக்கு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவர்களுள் 40 தன்னார்வலர்கள், பங்கேற்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க முன்வந்துள்ளனர். தங்களது நேரத்தை மக்களுக்கு வழங்க முன்வந்துள்ள அவர்களது உறுதி இந்த பயிற்சியை அனைவருக்கும் வழங்குவதை சாத்தியமாக்கியுள்ளது.
முன்னோட்ட பங்கேற்பாளர்களுள் ஒருவரான ஸ்ராவந்த் வல்லுரு, கடந்த 11 வருடங்களாக யோகப்பயிற்சி செய்து வருகிறார். களரிப் பயிற்சி சவாலாக இருக்கப்போகிறது என்பதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியவர் மேலும் தொடர்ந்து, “என் உடல் எந்த விதத்திலும் பலமான தாக்கத்துக்கோ அல்லது அழுத்தத்துக்கோ உள்ளானதாக நான் உணரவில்லை, ஆனால் நிச்சயமாக என் உடலின் ஒவ்வொரு தசையும் பயன்படுத்தப்பட்டது. இதற்காக இதுவரை நான் வழக்கமாக பயன்படுத்தியிராத ஒரு முறையில் என் உடலைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அது என் உடலின் எல்லைகளை விரிவடையச் செய்தது. நான் சுவாசிக்கும் விதமே மாறியதையும் நான் கவனித்தேன்” என்கிறார்.
ஸ்ராவந்த் ஓரளவு போதுமான உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்ந்தாலும், களரி பயிற்றுனர்களின் உடல்கள் முற்றிலும் வித்தியாசமான நிலையில் இருப்பதையும் கவனித்துள்ளார். “தசைகள் மட்டுமல்ல, அவர்களின் உடல் அமைப்பே வேறு தளத்தில் இருக்கிறது. இந்த அளவுக்கான உடல் தகுதியை வெளிப்படுத்தக்கூடிய இந்த விதமான பயிற்சியை அவர்கள் உங்களுக்கு வழங்கினால், நிச்சயமாக நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று கூறுகிறார் ஸ்ராவந்த்.
மற்றொரு முன்னோட்ட பங்கேற்பாளரான அஷ்வினி சத்தி, தோள்பட்டை வலியினால் அவரது தீவிரமான யோகப் பயிற்சிகளில் சிலவற்றை நிறுத்தி வைத்திருந்ததாகவும், இருந்தாலும் களரிப் பயிற்சி செய்வது அவருக்குமே சாத்தியமாக இருந்தது என்றும் கூறுகிறார். “செயல்முறை விளக்கக் காணொளிகளை கண்டபொழுது, சில விஷயங்களை அவர்களைத் தவிர சாதாரண மக்களால் செய்யவே முடியாது என்பதுபோல தோன்றியது. சில நிலைகளுக்கு பயிற்சி தேவை, ஆனால் சில நிலைகள் எளிதில் நிகழ்ந்தன. உங்கள் உடலை அப்படி ஒரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதுகூட உங்களுக்கு தெரியாது, ஆனால் முயற்சி செய்தால், அது நடக்கிறது” என பேசுகையிலேயே உற்சாகம் ததும்புகிறது. இப்பொழுது ஒரு களரி விசிறியாகவே மாறிவிட்டிருக்கும் அஷ்வினி, மற்ற களரிப்பயட்டு தொடர்கள் வெளிவரும்பொழுது, அவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புவதாக பகிர்ந்து கொண்டார்.
ஐந்து மாதகால தளர்வில்லா முன்னேற்பாட்டிற்குப் பிறகு, செப்.3 அன்று, முதலாவது களரிப்பயட்டு நிகழ்ச்சி ஆன்லைனில் அரங்கேறியது. இப்பொழுது 9 நாட்களில், 9 அமர்வுகளை கொண்ட ஒரு பயிற்சி முறையாக வழங்கப்படுகிறது. "பங்கேற்பாளர்கள் உண்மையிலேயே பொறுப்பும், முனைப்பும் காட்டுவதுதான் இந்த நிகழ்ச்சியின் மிகுந்த நிறைவை தரும் அம்சம். வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் இருப்பதால், நள்ளிரவுக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலும் லாக்-இன் செய்து பலர் இணைந்து பயிற்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துகின்றனர்” என்று பகிர்ந்தார் லோகேஷ்.
இது ஒரு ஆரம்பம் மட்டுமே
இந்தியாவிலிருந்து ஒரு ஆழமான, புராதன போர்க்கலை உலகளாவிய தாக்கத்தினை உருவாக்கி வருகிறது, ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. தங்கள் முயற்சிகளும், சத்குருவின் தொலைநோக்குப் பார்வையும், மலர்ச்சி அடைவதைக் கண்டு குழுவினர் அளவற்ற ஆனந்தம் கொள்கின்றனர். "'களரிப்பயட்டு குறித்து விழிப்புணர்வு ஊட்டுவது’ என்ற எளிமையான ஒரு கருத்திலிருந்து ஆரம்பித்ததுதான், இப்போது உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்வை மாற்றவல்ல ஒரு விஷயத்தை செயல்படுத்தும் பெருமிதமான பணியில் இங்கே நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,” என்கிறார் லோகேஷ்.
பங்கேற்பாளர்களின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டினால் உந்தப்பட்ட குழுவினர், களரியின் பலனை அள்ளிப்பருக போதிய நேர அவகாசம் இல்லாமல், ஒரு துளியேனும் ருசித்திட விழையும் மக்களுக்கும் கற்றுக் கொடுக்கக்கூடியவாறு, 10 – 15 நிமிடங்கள் மட்டும் கொண்ட மிகச் சிறிய பயிற்சித் தொகுதிகளை உருவாக்கும் முயற்சியில் இப்பொழுது ஈடுபட்டுள்ளனர்.
“புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டம் துவங்கியபொழுது, குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் நாங்கள் அதில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம், ஆனால் நீண்ட காலத்துக்கு இதில் ஈடுபட தேவையிருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். நவம்பர் 2021 ல் நான் சம்ஸ்கிருதியிடம் இருந்து விடைபெறத் திட்டமிட்டிருந்தேன், ஆனால் இப்போது, பின்வாங்குதல் இல்லை,” என்று முடிக்கிறார்.