நடப்புகள்

ஈஷா இன்சைட்: 2021 வெற்றியின் மூலக்கூறு – பத்தாண்டுகளின் தாக்கம்

“ஈஷா இன்சைட்: வெற்றியின் மூலக்கூறு” பத்தாம் ஆண்டு பதிப்பை ஈஷா லீடர்ஷிப் அகாடமி, 2021 நவம்பர் 25 ல் இருந்து 28 வரை நிகழ்த்தியது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பங்கேற்ற, 2500க்கும் அதிகமான மேல்மட்ட நிர்வாகிகளின் வாழ்விலும், வர்த்தகங்களிலும் நேர்மறையான தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை, 20 நாடுகளை சேர்ந்த 126 பேர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தொழில் முனைவோர் கரங்களை பலப்படுத்துவதுடன், வர்த்தகத் தலைவர்கள்‌ தம் வாழ்க்கை மற்றும் வர்த்தகம் இரண்டையும் மேம்படுத்துவதும், இந்த 4 – நாள் ஆன்லைன் நிகழ்வின் நோக்கமாக இருந்தது. இந்த ஆண்டு, உலக அளவில் ஏற்பட்டுள்ள மாறுதலான, நூதனமான சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, “கணிப்புக்கு உட்படாத துரித மாற்றம்,” என்ற நோக்கில் ஈஷா இன்சைட்- ன் செயலூக்கம் மிகுந்த நான்கு நாட்களும் திட்டமிடப்பட்டன. முன்னோக்கிய சிந்தனைகளுடன் வெற்றிகரமான வர்த்தகத் தலைவர்களாகவும் இருந்தவர்கள், அவர்களது வாழ்வியல் அனுபவங்களில் இருந்து எழுந்த வெற்றிகள் மற்றும் சவால்களின் கதைகளைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வாக இது அமைந்திருந்தது. சமநிலையும், தெளிவு நிறைந்ததுமான ஒரு வாழ்க்கையை, தொழில்முனைவோர் உருவாக்குவதற்கு உதவும் வகையில், மாற்றத்துக்கான கருவிகளை வழங்கும் யோகா அமர்வுகளும் இதில் உள்ளடங்கி இருந்தது. ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்பாளர்களின் ஈடுபாடு, எந்த ஒரு நேரடி நிகழ்வையும் போலவே தீவிரமாக இருந்தது.

முதல் நாள் – சத்குரு துவக்குகிறார்

சத்குரு, நோக்கம் குறித்த ஒரு எழுச்சி நிரம்பிய உரையுடன் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து, நோக்கம் என்பது இலாபத்தை கடந்த ஒன்று என்பதை அடிக்கோடிட்டுப் பேசினார். மக்களைச் சென்றடைந்து, அவர்களது நல்வாழ்வுக்கு அடித்தளமிடுவதே வர்த்தகத்தின் நோக்கம் என்ற கருத்தை முன்னிறுத்தினார் சத்குரு. ஒரு வாழ்நாளில் நிறைவேற்ற இயலாத அளவுக்கு விரிந்து பரந்த வலிமையும், இணைத்துக்கொள்ளும் நோக்கமும் ஒருவருக்கு இருக்குமேயானால், திட்டங்களும், சாத்தியங்களும் வரம்பின்றி ததும்பி வழியும் என்பதை தமது உரையின் போது விவரித்தார் சத்குரு. தலைமைப் பொறுப்புடன், சந்தைப் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வை வளமாக்கும் தனித்துவமான இடம் வர்த்தகங்களுக்கு இருப்பதை சத்குரு வெளிச்சமிட்டுக் காட்டினார். ஆனால், தலைமை என்பது அனைவரையும் பற்றிப்படர்ந்து ஒன்றாக இணைத்துக்கொண்டு உத்வேகம் கொள்ளச் செய்யும்  நோக்கமுடையது என்பதையும் வலியுறுத்தினார். 21 ஆம் நூற்றாண்டில் அதிகாரபீடம் அரசியல் தலைமையிடம் இருந்து வர்த்தகத் தலைமைக்கு இடம் பெயர்வதைக் குறித்தது என்றும், ஆனால் வர்த்தகத் தலைவர்கள் இலாபத்திலிருந்து நோக்கத்தை நோக்கி நகரவேண்டும் என்றும் கூறினார்.

நோக்கம் என்ற நெருப்பினால் உந்தப்பட்ட அடுத்தடுத்த அமர்வுகளில், தங்களது துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் தலைவர்கள் அவர்களது வளமான அனுபவங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டனர். அந்த வரிசையில், இந்தியாவிலேயே மிகப் பெரிய பங்கு வர்த்தக தரகு நிறுவனமான செரோதா-வின் தலைமைச் செயலாளர் நிதின் காமத், அவரது நிறுவனத்தில் பின்பற்றப்படும் நுகர்வோர் முதன்மை அணுகுமுறை குறித்துப் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர், செரோதா தனது பணியாளர்களுக்கு நிதி இலக்குகளை  நிர்ணயிப்பதில்லை என்பதையும் வெளிப்படுத்தினார். அதற்கு மாறாக, சரியான இலக்குகளுடன், நுகர்வோரின் சரியான முடிவுகளுடன், ஒரு கனிவான நிறுவனக் கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பதனால், வர்த்தக விரிவாக்கப் பயணம் மகிழ்ச்சியானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதாக நிதின் தெரிவித்தார். முத்தாய்ப்பாக அவர், விழிப்புணர்வான வர்த்தகத் தலைவர்கள் இந்தியாவில் அதிகம் தேவைப்படுவதையும் வெளிப்படுத்தினார்.

இரண்டாம் நாள் – அமுல் நிறுவனத்தின் வெற்றி இரகசியம்

அமுல் நிர்வாக இயக்குனர், Dr.ஆர்.எஸ். சொதி அவர்கள் உணர்ச்சிமிகுந்த உரை ஒன்றை நிகழ்த்தினார். 75 வருடகாலம் சேகரித்த அவரது சுய அனுபவங்களுடன், பொது மேலாளராகவும், பின்னர் நிறுவனத் தலைவராகவும் செயல்பட்ட வரலாற்று நாயகர், ”வெண்மை புரட்சியின் தந்தை”, வர்கீஸ் குரியன் அவர்களது அறிதலையும் பகிர்ந்துகொண்டார். அமுல் நிறுவனத்தின் இணைத்துக்கொள்ளும் மூலக்கூறினை பற்றி விவாதித்ததுடன், வர்த்தகத்தில் நீடித்திருப்பதற்கான அவரது இரகசியம் – நேர்மை என்பதையும் வெளிப்படுத்தினார். “பலருக்கும் மதிப்பு மற்றும் பணத்துக்கும் மதிப்பு” என்ற மையக் கருத்துடன், நுகர்வோரும், பங்குதாரர்களும் வேறெங்கும் சென்றுவிடாத வண்ணம், அவர்களிடையே நம்பகத்தன்மையை வளர்ப்பது குறித்து Dr. சொதி உரையாற்றினார்.

மூன்றாம் நாள் –  விழிப்புணர்வான உலகை கட்டமைத்தல்

மூன்றாம் நாள் மேடையை அலங்கரித்தவர், பவன்குமார் கோயங்கா, முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் மஹிந்த்ரா&மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைமைச் செயலாளர். தொழில்நுட்பம், நேர்மை மற்றும் வர்த்தகங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான அளவற்ற வாய்ப்புகள் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கான பங்களிப்பு ஆகியவை அவரது விவாதத்தில் முக்கிய கவனம் ஈர்த்தன. வர்த்தக முன்னெடுப்புகளுக்கு அரசாங்கம் உதவி வழங்கக்கூடிய வழிகள் குறித்தும், வர்த்தகம் எப்படி வளர்ந்து, தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்பதையும் பற்றி அவர் பேசினார். ஒரே சீரான, இடையறாத கற்றல், பவனின் மற்றொரு நுட்பமான பார்வையாக இருந்தது. தனக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என்ற மாயவலைக்குள் விழாமல் இருப்பதற்கும் மற்றும் மாற்றத்துக்கும், முன்னேற்றத்துக்கும், திறந்த நிலையில் இருப்பதற்கும் அவர் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தினார்.

விழிப்புணர்வான உலகம் இயக்கத்தை அறிமுகப்படுத்தி சத்குரு மூன்றாம் நாள் நிகழ்வை நிறைவு செய்தார். மண்ணின் வளத்துக்கு கரிமச் சத்துக்களால் புத்துணர்வூட்டும் அவசியத்தையும், நாம் அந்த நோக்கில் செயல்படாவிட்டால் நேரிடவிருக்கும் சவால்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறையையும் நாம் சந்திக்கவேண்டி இருக்கும் என்பது குறித்தும் பேசினார். வருத்தம் தோய்ந்த உணர்வோ அல்லது வெற்று நம்பிக்கையையோ வெளிப்படுத்தாமல், ஒரு திடமான தெளிவு, தீவிரம் மற்றும் பரிவுடன், கோடிக்கணக்கான மக்களை நாம் சென்றடைவதற்கான அற்புதமான வாய்ப்பைக் குறித்து உரையாடினார் சத்குரு. உயிர்ப்புள்ள மண்ணை, ஒரு பாரம்பரியமான பொக்கிஷமாக எதிர்காலத் தலைமுறையினரிடம் நாம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியத்தை அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார். விழிப்புணர்வு என்பது ஞாபகப்பதிவுகள் மற்றும் வரம்புக்கு உட்பட்ட கட்டுப்பாடுகள் கடந்த, இணைத்துக்கொள்ளும் ஒரு பரிமாணமாக இருப்பதைக் குறித்து மிக ஆழமாக விவாதித்தார் சத்குரு.

நான்காம் நாள் – கிராமப்புற இந்தியாவுக்குக் கல்வி புகட்டும் இதயம் தொடும் பயணம்

நான்காவது நாள் அமர்வில், ஈஷா வித்யா பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் அது உருவாக்கும் தாக்கம் அனைவரது பார்வைக்கும் கொண்டுவரப்பட்டது. குழந்தைகளின் பெற்றோரிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதிலிருந்து, பள்ளி வளாகங்கள் கட்டுதல், உற்சாகமான வகுப்பறைகளை வடிவமைப்பது வரை தன்னார்வலர்கள் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். புதிதாக துவங்கப்படும் ஒரு நிறுவனம் போன்று, குறைவான நிதி ஆதாரங்களுடனும், எண்ணற்ற சவால்களுடனும், பள்ளிகள் மெல்லமெல்ல வளர்ந்துள்ளன. இப்பொழுது அந்தப் பள்ளிகள், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்வை மாற்றும் வல்லமையுடன், எதிர்காலத்துக்கான பிரம்மாண்டமான முதலீடாக மின்னுகின்றன. ஈஷா வித்யா பற்றிக் கேட்டும், இணைத்துக்கொள்ளும் தன்மையோடு தொலை நோக்குப் பார்வை மற்றும் செயலுறுதியின் உதாரணமாக ஈஷா வித்யா பள்ளிகள்  நிமிர்ந்து நிற்பதைக் கண்டும், பல பங்கேற்பாளர்களும் மனம் நெகிழ்ந்து கண்கள் பனித்தனர்.