கலந்துரையாடல்

உங்கள் வாழ்க்கை, உங்கள் மேடை - உங்கள் கர்மாவை உங்களுக்காக எப்படி வேலை செய்ய வைப்பது?

பாரிஸ் ஹில்டன் சத்குருவுடன் உரையாடுகிறார்

ஊடக ஆளுமை, பாரிஸ் ஹில்டனோடு அவரது "This is Paris”  வளையொலி நிகழ்ச்சியில் பேசுகையில்,  நாம் எவ்வாறு கர்ம பந்தத்தை உடைத்தெறிந்து ஆனந்தத்தை தேர்ந்தெடுக்க முடியும் என்ற உண்மையை வெளிப்படுத்தினார் சத்குரு. இந்த உரையாடலில், நம் எல்லா முயற்சிகளிலும் சிறந்த பலனை அடைவதற்கு நம் உயிர் சக்திகளை குவிக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.

[சத்குரு "ஜனனம் சுகதம்" உச்சாடனம் செய்கிறார்]

சத்குரு: நமஸ்காரம்! நண்பகல் வணக்கம், பாரிஸ்.

பாரிஸ்: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு மிகவும் நன்றி. உங்களை இந்த நிகழ்வில் விருந்தினராக கொண்டிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனவே மக்களே, இன்று நாம் ஒரு சிறப்பான விருந்தினரை கொண்டிருக்கிறோம். அவரின் பெயர் சத்குரு. உலகெங்கிலுமுள்ள ஆன்மிக குருக்களில் மிகவும் முக்கியமானவர் இவர். உங்களை இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? மிகச்சரியாக அது எதற்காக என்று கூறுங்கள்?

சத்குரு: ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் எந்த ஒரு ஆட்டத்தில் விளையாடுவதற்கு முன்பும், ஒரு கால்பந்தாட்ட வீரரை காட்டிலும், அல்லது கோல்ஃப் விளையாடுபவரை காட்டிலும் மிக வித்தியாசமான முறையில் தன்னுடலை தயார் செய்து கொள்வார். நம்முடைய உடலை வெவ்வேறு காரியங்களுக்காக வெவ்வேறு வழிகளில் தயார் செய்யவேண்டும். அதுபோலவே வெவ்வேறு வகையான செயல்களை புரிவதற்காக நம்முடைய மனதையும் நாம் பயிற்றுவிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வெவ்வேறு விதமான செயல்களை புரிவதற்கு உங்கள் சக்திநிலை ஒரு குறிப்பிட்ட வகையில் இருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்புகிறீர்கள்.

வெற்றிக்காக உங்கள் உயிர் சக்தியை செலுத்துங்கள்

வெவ்வேறு செயல்களை புரிய உங்களுக்கு தேவைப்படும் சக்தியானது, மந்தமான நிலையிலோ அல்லது கட்டமைக்கப்பட்ட விதத்திலோ இருக்கலாம். அது உங்கள் நினைவு பதிவுகள், கர்ம பதிவுகள், நடத்தை மற்றும் குணம் சார்ந்தது. ஆனால் யோகத்தில் ஒரு பரிமாணம் உள்ளது. அதன்படி நீங்கள் உங்கள் உயிர்சக்தியை எங்கு விரும்புகிறீர்களோ அங்கு செலுத்த முடியும். உதாரணத்திற்கு நான் என் கரங்களை கொண்டு ஏதோ ஒரு பயனுள்ள செயலை செய்ய விரும்புகிறேன். இப்போது என் சக்தியை என் கரங்களில் செலுத்தும் போது என்னுடைய தொடுதல் அபாரமான சக்தி வாய்ந்ததாக மாறிவிடும். அதனால் அதில் நல்வாழ்வு ஏற்படும். அதைப்போலவே என் சக்தியை என் கண்களுக்கு செலுத்தினால் என் பார்வை வேறு நிலையிலான ஊடுருவும் தன்மையை பெறும். இது நான் என் கண்களில் எவ்வளவு ஒரு உயிர்சக்தியை செலுத்துகிறேன் என்பதை பொருத்தது. என் உயிர் சக்தியை என் தொண்டை பகுதியில் நான் ஒருமுகப்படுத்தினால், என்னுடைய பேச்சு மிக சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் - கருத்து மற்றும் ஒலி இரண்டு நிலையிலும்.

நம்முடைய வாழ்வில் நம்மால் செய்ய இயலாததை நாம் செய்யவில்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நம்மால் செய்ய இயன்றதையே நாம் செய்யவில்லை என்றால், நாம் ஒரு பெருந்துன்பம்.

பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் எண்ணங்கள், உணர்ச்சிகள், உடல் மற்றும் சக்தியே மிகப்பெரிய தடைகளாக விளங்குகின்றன. விழிப்புணர்வோடு நம் சக்தியை செலுத்த நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் நாம் வெவ்வேறு செயல்களை புரியும்போது சிறந்த விளைவுகள் ஏற்படும். நம்முடைய வாழ்வில் நம்மால் செய்ய இயலாததை நாம் செய்யவில்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நம்மால் செய்ய இயன்றதையே நாம் செய்யவில்லை என்றால் நாம் ஒரு பெருந்துன்பம். நீங்கள் விரும்பியதை நடத்துவதற்காக உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக, மேலும் சக்திநிலையில், நீங்கள் முழுமையான அதிகாரம் கொண்டிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

விரிவடையும் ஏக்கம்

பாரிஸ்: உங்களை குரு என்றும் மறைஞானி என்று கூறுகிறார்கள். என் நிகழ்ச்சியை கேட்பவர்களுக்கு இதை விவரித்து கூறமுடியுமா?

சத்குரு: மறைஞானி என்றால் என்னைப்பற்றி அனைவரும் குழம்பி போயிருக்கிறார்கள் என்று அர்த்தம். [இருவரும் சிரிக்கின்றனர்]. என்னைப் பற்றி என்ன சொல்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. எனவே என்னை மறைஞானி என்று அழைக்கின்றனர்.

பாரிஸ்: உங்களுக்கு அது பிடித்திருக்கிறதா?

சத்குரு: துரதிர்ஷ்டவசமாக மக்கள் உயிர் என்பதை வரையறுக்க முயற்சி செய்கிறார்கள். உயிருக்கு எல்லையை வகுக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம். ஆனால் உண்மையில், நீங்கள் யாராக இருந்தாலும், இப்போதைய நிலையிலிருந்து சிறிது முன்னேற்றமடைய விரும்புகிறீர்கள். மனிதர்களுக்குள் எல்லைகளை விரும்பாத ஏதோ ஒன்று உள்ளது. எல்லை இருப்பது உங்களுக்குத் தெரியாத வரை நீங்கள் நன்றாக இருப்பீர்கள். ஆனால் எல்லை இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்த தருணத்தில் இருந்து, அதை நீங்கள் நகர்த்தவோ அல்லது உடைக்கவோ விரும்புவீர்கள், அது எவ்வளவு பரந்ததாக இருந்தாலும் சரி. உங்கள் வரம்பை நீங்கள் உணர்ந்த தருணம் முதல் அதை உடைக்கவே விரும்புவீர்கள். உங்களுக்கு உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று எப்போதும் எல்லையற்றுப்போகும் ஏக்கத்துடன் இருக்கிறது.  

யோகா என்பதற்கு அர்த்தம் விழிப்புணர்வோடு உங்கள் தனித்தன்மையின் எல்லைகளைக் கடந்து செல்வதுதான்.

சிலர் கோவிலுக்கு செல்கிறார்கள், சிலர் மது கடைக்கு செல்கிறார்கள்; சிலர் போதை மருந்து எடுத்துக் கொள்கிறார்கள், மற்றவர்கள் பிரார்த்திக்கிறார்கள், தியானம் செய்கிறார்கள் அல்லது ஏதோ ஒன்றை கைப்பற்றுகிறார்கள். இவையே மனிதர்கள் தாங்கள் தற்போது இருக்கும் நிலையை விட சற்று அதிகமாக விரிவடைய முயற்சிக்கும் வழிகள்.

இன்னும் சற்று அதிகமாக விரிவடைய வேண்டும் என்ற இந்த ஏக்கத்தை நாம் அடிப்படையாக நான்கு வகைகளாக பிரிக்கமுடியும். இந்த ஏக்கம் அடிப்படையான உடல்ரீதியான வெளிப்பாடாக இருந்தால், அதை நாம் பாலியல் என்று கூறுகிறோம். மனரீதியான வெளிப்பாடாக இருந்தால், அதை குறிக்கோள் என்று கூறுகிறோம். அது உணர்வுரீதியான வெளிப்பாடாக இருந்தால், அதை அன்பு என்று கூறுகிறோம். அது விழிப்புணர்வின் வெளிப்பாடாக இருந்தால் அதையே நாம் யோகா என்று கூறுகிறோம். யோகா என்பதற்கு அர்த்தம் விழிப்புணர்வோடு உங்கள் தனித்தன்மையின் எல்லைகளை கடந்து செல்வதுதான். அதை நீங்கள் செய்யாதவரை, உங்கள் வாழ்வில் என்ன அடைந்திருந்தாலும் நீங்கள் ஒருபோதும் நிறைவாக உணரமாட்டீர்கள்.

கடந்தகால நினைவுகளே உங்கள் கர்மா

பாரிஸ்: நீங்கள் கர்மாவைப் பற்றி குறிப்பிட்டுள்ளதை நான் விரும்புகிறேன். ஏனெனில் உண்மையில் அதை நான் நம்புகிறேன். மேலும் நீங்கள் இந்த உலகிற்கு எதை வழங்குகிறீர்களோ - நன்மையோ தீமையோ - அது மறுபடி உங்களுக்கே வந்து சேரும் என்றும் நான் நம்புகிறேன். அது பற்றி உங்கள் எண்ணம் என்ன?

சத்குரு: கர்மாவை தண்டனை மற்றும் வெகுமதி அளிக்கும் அமைப்பாக பார்க்கத் தேவையில்லை. உதாரணத்திற்கு, உங்கள் மனதில் தற்போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை உருவாக்கக்கூடும். அந்த எண்ணத்தின் எச்சம் உங்களுக்குள் நிலைத்திருந்து உங்களுக்குள் வேலை செய்யும். நீங்கள் அது பற்றி விழிப்புணர்வே இல்லாமல் கூட இருக்கலாம். நீங்கள் பிறந்த தருணத்திலிருந்து இந்த தருணம் வரை நீங்கள் செய்த எல்லா செயல்களும், எண்ணம், உணர்வு, நீங்கள் அறிய நேர்ந்தது என அனைத்தும் உங்கள் மேல் ஒரு தாக்கத்தை உருவாக்கும். அதுவே உங்களின் கர்மா.

இந்தப் புத்தகத்தில் (Karma: A Yogi’s Guide to Crafting Your Destiny) ஒவ்வொரு படியாக எடுக்க வேண்டிய செயல்முறையைப் பற்றி நாம் குறிப்பிட்டுள்ளோம். அதைக் கொண்டு உங்களின் கர்மா என்ற மேடை மீது உங்களால் ஏறி நிற்க முடியும்.

உங்கள் ஞாபகப் பதிவுகளில் சுமார் 99% விழிப்புணர்வோடு நிகழ்வதில்லை. ஆனால் உங்கள் உடல் உங்கள் மூதாதையர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வாறு இருந்தார்கள் என்பதை நினைவில் வைத்துள்ளது. பலதரப்பட்ட நிலைகளில் ஞாபகப் பதிவுகள் உள்ளன - பரிணாம ஞாபகம், மரபணு ஞாபகம் மற்றும் கர்ம ஞாபகம். இந்த எல்லா ஞாபகங்களின் கலவைதான் உங்கள் கர்மா. கர்ம பந்தத்தாலும், குவிந்துள்ள காரணத்தினாலும் குறிப்பிட்ட வாசனையை உங்களுக்குள் உருவாக்கும் ஞாபகங்கள்,  அதன் போக்கில் விழிப்புணர்வு இல்லாமல் வெளிப்படுகிறது.

இந்தப் புத்தகத்தில் (Karma: A Yogi’s Guide to Crafting Your Destiny) நாம் ஒவ்வொரு படியாக எடுக்க வேண்டிய செயல்முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளோம். அதைக் கொண்டு உங்களின் கர்மா என்ற மேடை மீது உங்களால் ஏறி நிற்க முடியும். உங்கள் வாழ்க்கை மிக செழிப்பாக இருப்பதற்கான காரணம் நீங்கள் பெற்றுள்ள அளவுகடந்த அனுபவங்கள் தான். ஆனால் நீங்கள் உங்கள் கர்ம மேடையை ஒரு புதைக் குழியாக மாற்றிக்கொள்ளக் கூடாது. நீங்கள் கொண்டுள்ள கர்மப் பதிவுகளின் மீது தேவையான அளவு புறப்பரப்பு விசையை நீங்கள் உருவாக்கினால் அதன் மேல் உங்களால் ஏறி நிற்க முடியும், உங்கள் வாழ்வின் செழிப்பையும் அனுபவிக்க முடியும். மேலும் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை தற்போது செய்ய முடியும்.

கடந்தகாலம் ஒரு சோபாவைப் போன்றது: அதில் அமருங்கள், மூழ்கிவிடாதீர்கள்

கடந்தகாலத்தை மாற்ற முடியாது; நிகழ்காலத்தை அனுபவிக்க மட்டுமே முடியும், எதிர்காலம் என்பது நாம் உருவாக்க வேண்டியது. நீங்கள் உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நினைக்காமல் மறந்துவிட்டால், நீங்கள் செய்த அதே அறிவற்ற தவறுகளை மறுபடியும் செய்யக்கூடும். நம் கடந்த காலத்தை ஞாபகம் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. ஒரு மனிதருக்கு நினைவுகள் மிகத் தெளிவாக உள்ளதால்தான் நம் வாழ்க்கை வளமாக உள்ளது. கடந்த காலம் ஒரு சோபாவைப் போன்றதாக, அதன் மேல் உங்களால் உட்காரக் கூடியதாக இருக்கவேண்டும். ஆனால் அதன் மெதுமெதுப்பான தன்மைக்குள் நீங்கள் மூழ்கிப் போய்விடக் கூடாது. அந்த தலையணைகளில் நீங்கள் மூழ்கிப் போனால் அது உங்களை மூச்சடைக்க செய்துவிடும்.

கடந்தகாலத்தை மாற்ற முடியாது; நிகழ்காலத்தை அனுபவிக்க மட்டுமே முடியும், எதிர்காலம் என்பது நாம் உருவாக்க வேண்டியது.

காலம் செல்லச்செல்ல, மக்கள் தங்கள் துயரங்களில் எவ்வாறு நிலைத்துள்ளார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இதன் காரணத்தினால் தான் கர்மாவைப் பற்றிய இந்த புத்தகம் மிக முக்கியமானதாகிறது - மக்கள் எவ்வாறு தங்கள் துயரங்களில் நிலைத்துள்ளார்கள், எவ்வாறு தங்கள் கடந்தகால அனுபவங்கள் நிகழ்காலத்தை கறைபடுத்த அனுமதிக்கிறார்கள், எவ்வாறு தங்கள் எதிர்காலத்துக்கு கடினமான தடைகளை உருவாக்குகிறார்கள் என்பதைப் பற்றிய இயக்கவியலை இந்த புத்தகம் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

பெரும்பாலான மக்களுக்கு, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திறன்களை எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை. தற்போது அவர்களுக்கு இருப்பதைவிட பாதியளவு மூளை மட்டுமே இருந்தால், அவர்கள் அமைதியாகவும் நன்றாகவும் இருப்பார்கள். துரதிருஷ்டவசமாக, மனித புத்திசாலித்தனம் பலருக்கு சாபமாக அமைந்துவிட்டது. ஏனெனில் அதை எவ்வாறு கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தினால் தங்களையே காயப்படுத்தி்க் கொள்கிறார்கள்.

ஆனந்தமாக இருப்பதை தேர்ந்தெடுங்கள்

பாரிஸ்: நீங்கள் யார் என்பதை உங்களது கடந்தகாலம் வரையறுக்க அனுமதிக்கக் கூடாது என்ற இந்த செய்தியை நான் மிக விரும்புகிறேன்.

சத்குரு: தற்போது நம்முடைய பிரச்சனை யாதெனில் நாம் மனரீதியான உண்மைகளை இருப்பின் உண்மை என தவறாக புரிந்து கொண்டுள்ளோம். மக்கள் இன்னும் நேற்று என்ன நடந்தது, அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதைப் பற்றி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அர்த்தம், நீங்கள் உங்கள் நினைவுகளால்தான் துன்பப்படுகிறீர்கள், உங்கள் வாழ்க்கையினால் அல்ல. நாளை என்ன நடக்கக்கூடும் என்பதை எண்ணி நீங்கள் துன்பமடைந்தால், நீங்கள் உங்கள் கற்பனைத் திறனால் துன்பப்படுகிறீர்கள் என்றே அர்த்தம், உங்கள் எதிர்காலத்தினால் அல்ல. யாராலும் எதிர்காலத்தை பற்றி துன்பப்படஇயலாது. ஏனெனில் அப்படி ஒன்று இல்லவே இல்லை. யாராலும் கடந்தகாலத்தை எண்ணியும் துன்பப்பட இயலாது. ஏனெனில் அதுவும் இப்போது  இல்லை. நீங்கள் உங்களிடம் உள்ள மிக அற்புதமான இரண்டு திறன்களினால் துன்பப்படுகிறீர்கள் - தெளிவான நினைவு மற்றும் அற்புதமான கற்பனைத்திறன் - இவை இரண்டும் தான் உங்களை ஒரு மனிதனாக உருவாக்கியுள்ளது.

நாளை என்ன நடக்கக்கூடும் என்பதை எண்ணி நீங்கள் துன்பமடைந்தால், நீங்கள் உங்கள் கற்பனைத் திறனால் துன்பப்படுகிறீர்கள் என்றே அர்த்தம், உங்கள் எதிர்காலத்தினால் அல்ல.

பாரிஸ்: எனவே, மக்கள் தங்கள் வாழ்வில் மேலும் மகிழ்ச்சியை எவ்வாறு கொண்டு வருவது?

சத்குரு: ஒரு நாளில் வெறும் 20 அல்லது 30 நிமிடங்கள் இந்த உயிரைக் குறித்து முதலீடு செய்ய நீங்கள் சித்தமாக இருந்தால் நாம் உங்களுக்கு மிக எளிமையான பயிற்சி ஒன்றை கற்றுத்தர முடியும். அது உங்களை மிக ஆனந்தமாக வைத்திருக்க உதவும். இந்த உயிரை அந்த முப்பது நிமிடங்கள் நீங்கள் பேணிவளர்த்தால், கூடவே இந்த மனிதன், உடல், குடும்பம், பணம் மற்றும் வேலை ஆகியவற்றைப் பற்றி எண்ணுவதை நிறுத்தினால், உங்கள் ரசாயனம் ஆனந்தமாக மாறும். உங்கள் ரசாயனம் பேரானந்தமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் மிக இலகுவாக மாறிவிடுவீர்கள்.

பாரிஸ்: உங்கள் ஞானம் மற்றும் உங்களுடைய இந்த இருப்புக்கு மிக்க நன்றி. என் நிகழ்ச்சியைக் கேட்பவர்கள் கண்டிப்பாக இதை மிகவும் விரும்புவார்கள். நீங்கள் மிக அருமையானவர்.

சத்குரு: நன்றி. நமஸ்காரம்.