ஆரோக்கியம் & யோகா

உங்கள் உடல், மனம் மற்றும் தூக்கத்தின் மீது சந்திரன் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய 8 விஷயங்கள்

உயிரியல், உளவியல் மற்றும் யோகா ஒன்றிணையும் இடம் இது

சமீபத்திய ஆராய்ச்சிகள் சந்திரனின் சுழற்சிகள் மனிதரின் தூக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர். ஹொராசியோடி லா இக்லெசியா, இதன் விளைவுகளைப் பற்றியும், இதனை குறித்த யோக கண்ணோட்டத்தைப் பற்றியும் சத்குருவிடம் உரையாடினார். டாக்டர். ஹொராசியோ டி லா இக்லெசியா வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். இந்த உரையாடலுக்கு டாக்டர். டேவிட் வாகோ நடுநிலைமை வகித்தார். அவர் வண்டெர்பீல்ட் பல்கலைக்கழகத்தின் (Vanderbilt University) உளவியல்துறையில் பேராசிரியராகவும், ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் பெண்கள் மருத்துவமனை மற்றும்
ப்ரிகாம்மில் (Brigham) ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.

டாக்டர். ஹொராசியோ
டாக்டர். டேவிட்வாகோ

சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் என்ன?

டாக்டர். டேவிட்வாகோ: டாக்டர். ஹொராசியோ சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார். அதில் பல்வேறுபட்ட சூழலில் சந்திரனின் சுழற்சியோடு மனித தூக்கம் ஒத்திசைவோடு இருப்பதைக் குறித்து குறிப்பிட்டுள்ளார். அது குறித்து மேலும் அதிக தகவல்களை நீங்கள் கொடுக்க முடியுமா?

டாக்டர். ஹொராசியோ: தூக்க ஆய்வகங்களில் இருந்து சில ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் அவர்கள் மூளை மின் அலைப்பதிவி (electro encephalo graphic) மூலம் சந்திரனின் சுழற்சியினால் தூக்கத்தில் ஏற்படும் தாக்கத்தை பதிவிட்டுள்ளனர். "இது உண்மையான விளைவு அல்ல" என்று கூறிய மற்ற ஆராய்ச்சிகளும் வெளிவந்தன. எங்களுடைய ஆராய்ச்சியில் சந்திரனின் பல்வேறு பிறை நிலைகள் தனிமனித அளவில் தூக்கத்தை மாற்றியமைக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடினோம். உண்மையில் அது மாற்றியமைக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

இது புவியீர்ப்பு சக்தியைப் பற்றியதா?

டாக்டர். டேவிட்வாகோ: இது இரண்டு பொருட்களின் நிறை சார்ந்ததா? அதனால் மனித உடலியலில் மாறுதல் ஏற்படுகிறதா?

டாக்டர். ஹொராசியோ: ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில், கடலலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதை நாம் காண்கிறோம். அதற்கு காரணம் சூரியன், சந்திரன் மற்றும் பூமி அந்த நாட்களில் ஒரே அச்சில் அணிசேர்ந்து இருப்பதுதான். சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு சக்தி அந்நாட்களில் இணைவதால் அதிகமாக மேலெழும்பும் கடலலைகளை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் ஈர்ப்புசக்தியில் உள்ள இந்த மாற்றத்தை மனிதர்கள் உணரக்கூடும் என்று இதுவரை எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை. அதேசமயம், எங்கள் ஆராய்ச்சியில் நாங்கள் அறிந்ததைப் போல, நீங்கள் நிலவின் ஒளியை உணரக்கூட முடியாத சியாட்டில் போன்ற பெருநகரங்களில், சந்திரனின் சுழற்சிக்கு ஏற்ப உங்கள் தன்மை மாறுவது எதனால் நடக்கிறது என்பதை வேறு எந்த வகையிலும் எங்களால் விவரிக்க முடியவில்லை

சந்திரன் உண்மையில் நம் தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?

டாக்டர். ஹொராசியோ: இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பௌர்ணமி தினத்துக்கு முந்தைய இரவுகளில் தூக்கம் தாமதமாக துவங்குவதோடு மட்டுமல்லாமல், தூக்கத்தின் அளவும் குறைகிறது. மிகக்குறைவான தூக்க அளவு பௌர்ணமிக்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்னதாக நிகழ்கிறது. அந்த நாட்களில் தான் நிலவொளியானது நாளின் முடிவிலும், அந்திவேளையிலும் முன்னிரவுக் காலத்திலும் இருக்கிறது. மேலும், நிலவொளியை பயன்படுத்துவதைப் பற்றி குறிப்பிட்டால், நம் முன்னோர்கள் வேட்டைக்காரர்களாக இருந்தபோது, பகலில் செய்யும் செயல்களை இன்னும் அதிக நேரத்துக்கு தொடர நிலவொளி அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நள்ளிரவில் நிலவொளியின் தாக்கத்தால் தூக்கத்தில் இருந்து விழித்தெழுவதைக் காட்டிலும் இது உகந்ததாக இருந்தது.

மிகக்குறைவான தூக்கஅளவு பௌர்ணமிக்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்னதாக நிகழ்கிறது - டாக்டர். ஹொராசியோ டி லா இக்லெசியா

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அதிகாலை மூன்று மணிக்கு நிலவொளி வருவதாக இருந்தால், நீங்கள் ஏற்கனவே ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதனால் நீங்கள் அதனால் விழிப்படையமாட்டீர்கள். ஆனால், நீங்கள் முன்னிரவு எட்டு மணிக்கு தூங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், அப்போது மிக வெளிச்சமான இந்த நிலவொளி ஏற்பட்டால், நீங்கள் விழித்திருந்து செய்யும் செயல்களை தொடர்ந்து செய்ய முற்படக்கூடும். மேலும் இன்று செயற்கை வெளிச்சத்தினால் சரியாக இதேதான் நமக்கு நிகழ்கிறது - நாம் மாலையில் நம் வேலைகளை தொடர்ந்து செய்ய இதை பயன்படுத்திக் கொள்கிறோம்.

நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், தூங்குவதில் நம் மூதாதையருக்கு சந்திரன் ஏற்படுத்திய விளைவை இந்த செயற்கை வெளிச்சம் ஒருவகையில் நமக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால், ஈர்ப்பு சக்தி குறித்து நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தால், இதுவரை எங்களிடம் உள்ள ஒரே விளக்கம் என்னவென்றால், அநேகமாக ஈர்ப்பு சக்தியைக் குறித்த உங்கள் உணர்திறன் முன்னிரவு வேளைகளில் உள்ள வெளிச்சத்தின் தாக்கத்தை நீங்கள் இன்னும் நன்றாக உணரும்படி செய்யக்கூடும், அல்லது அது உங்களை விழிப்பாக வைத்திருக்கக்கூடும்.

டாக்டர். டேவிட் வாகோ: ஆனால் அது குறித்த தரவுகள் தெளிவாகவில்லை, அல்லவா?

டாக்டர். ஹொராசியோ: இல்லை. இதுவகையான ஈர்ப்பு சக்தியின் மாற்றங்களுக்கு மனிதர்கள் பதிலளிக்கிறார்கள் என்ற உடலியல் சார்ந்த தரவுகள் இதுவரை இல்லை.

சூரிய உதயத்தின் போது ஆதியோகி முன்பு சூரிய நமஸ்காரம் பயிற்சி

யோகா எவ்வாறு சூரியன் மற்றும் சந்திரனோடு செயல்படுகிறது?

டாக்டர். டேவிட் வாகோ: சத்குரு, யோக கண்ணோட்டத்திலிருந்து இதுபற்றி நீங்கள் சில விளக்கங்களை அளிக்கக்கூடும். நம்முடைய உடலியலில் சந்திரன் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி தெளிவான வரலாற்று விவரங்கள் உள்ளன. ஆனால் நவீன விஞ்ஞானத்தில், குறிப்பாக இரண்டு பெரும் பொருட்கள் சேர்ந்து நம் உடல் மற்றும் மனதின் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைப் பற்றிய ஆதாரங்கள் ஏதுமில்லை.

சத்குரு: யோக கண்ணோட்டத்திலிருந்து இதை நீங்கள் பார்த்தால், யோகாவின் மிக முக்கியமான ஒரு அங்கம் ஹடயோகா என்று அழைக்கப்படுகிறது, '' என்றால் சூரியன் '' என்றால் சந்திரன். ஹட என்றால் இந்த இரண்டு சக்திகளுக்கு இடையே ஒரு சமநிலையை கொண்டு வருவது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி இவை மூன்றும் இந்த பூமியில் உயிரை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளன. ஆண் சமூகம் இது பற்றி குழம்பக்கூடும். ஆனால் பெண் சமூகம் எப்போதும் நிலவின் சுழற்சிக்கு ஒத்திசைவோடு தான் இருந்திருக்கின்றனர். மேலும் அதுவே நாம் இப்போது பிறந்திருப்பதற்கான அடிப்படை காரணம்.

"ஹ என்றால் சூரியன் ட என்றால் சந்திரன். ஹட என்றால் இந்த இரண்டு சக்திகளுக்கு இடையே ஒரு சமநிலையை கொண்டு வருவது." - சத்குரு

நம் மீது சந்திரன் ஈர்ப்பு விசையால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நாம் பார்ப்பதில்லை. சூரியனை சுற்றி வரும் பூமியின் சுற்று வட்டப்பாதையில் பூமியை பிடித்து வைத்திருப்பதற்கு தேவையான ஒரு அடிப்படை பொருளாகவே சந்திரனை நாம் பார்க்கிறோம். இன்று நவீன விஞ்ஞானம் ஒரு துணைக் கோளாக சந்திரன் ஒவ்வொரு வருடமும் பூமியை விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. சந்திரன் ஒரு குறிப்பிட்ட புள்ளியை கடந்து சென்றுவிட்டால், பூமியில் உள்ள உயிர்களின் மீதுள்ள அதன் தாக்கம் குறைய துவங்கும். மனித இனப்பெருக்க சுழற்சிகள் இயல்பான நிலையிலிருந்து தவறிப் போகும். பின்னர் மனிதர்கள் மிக மெதுவாக அழிந்து போவார்கள். ஆனால் எல்லாவற்றையும்விட, சந்திரன் அகன்றுவிட்டால், இது பல நூறு கோடி வருடங்களுக்குப் பின்னால் நிகழவிருக்கும் ஒன்று - பூமி தன்னுடைய சுற்றுவட்டப் பாதையில் நிலைத்திருக்க இயலாமல் சுக்குநூறாக உடைந்துவிடும். இவ்வாறுதான் யோக அமைப்பு இதை காண்கிறது.

பக்தர்கள் பைரவி சாதனாவை நிறைவு செய்யும் விதமாக தங்கள் அர்ப்பணிப்புகளை வழங்குவதற்காக ஜனவரி மாத பௌர்ணமி நாளான தை பூசத் திருநாளில் லிங்கபைரவிக்கு வருகை தருகிறார்கள்.

இந்த கலாச்சாரத்தில் சந்திரனின் பங்கு என்ன?

இந்தியா பெரும்பாலும் இந்து நாட்காட்டியை தான் உபயோகிக்கிறது. நாட்டின் சில பகுதிகளில் பெண் வழிமரபு இருக்கும் இடங்களில், சந்திர நாட்காட்டியை உபயோகிக்கிறார்கள். எங்கெல்லாம் ஆண் வழிமரபு இருக்கிறதோ, அங்கே சந்திர-சூரிய நாட்காட்டியை உபயோகிக்கிறார்கள். சந்திரன் மற்றும் சூரிய சுழற்சிகளின் கலவையாக அந்த நாட்காட்டி இருக்கிறது. நாங்கள் நாட்காட்டியை வெறும் எண் சார்ந்த பதிவுகளாக பார்ப்பதில்லை. ஆனால் நாம் நமக்குள் எவ்வாறு உணர்கிறோம் என்ற வகையில், நம் உடல் வெவ்வேறு காலநிலைகளில் எவ்வாறு ஈடு கொடுக்கிறது என்ற வகையில் அதை பார்க்கிறோம்.

"பூமியின் சக்தி, அதன் சுற்றுவட்டம், அதன் வடமுகம் குறிக்கும் திசை மற்றும் சூரியனோடு அதற்கு இருக்கும் நெருக்கம் ஆகியவற்றை நாங்கள் மிகச்சிறந்த வகையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வெவ்வேறு பாரம்பரியங்கள், பழக்கங்கள் மற்றும் சடங்குகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன." சத்குரு

அதன்படியே, பூமியின் சக்தி, அதன் சுற்றுவட்டம், அதன் வடமுகம் குறிக்கும் திசை மற்றும் சூரியனோடு அதற்கு இருக்கும் நெருக்கம் ஆகியவற்றை நாங்கள் மிகச்சிறந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வெவ்வேறு பாரம்பரியங்கள், பழக்கங்கள் மற்றும் சடங்குகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு தான் நீங்கள் செய்யும் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சூரிய சுழற்சி ஒரு காலத்தில் 4356 நாட்கள் என்று கணக்கிடப்பட்டது. மேலும் அந்த சுழற்சி பல்வேறு வகையான மக்களுக்கு பல்வேறுவிதமாக பிரிக்கப்பட்டன. யோகியர், சந்நியாசிகள், கிரகஸ்தர்கள் மற்றும் உலக நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்துகொள்ளும் பிற மனிதர்கள் என ஒவ்வொருவருக்கும் இது வேறு விதமாக உள்ளது. ஏனெனில் அவர்களின் உடல் வெவ்வேறு வகையில் பொருந்தியுள்ளது. மேலும் அவர்கள் வெவ்வேறு வகையில் செயல்படவும் வேண்டும். சந்திரனின் வெவ்வேறு பிறைநிலைகள் மற்றும் பூமியின் இருப்பு சூரியனுடன் சம்மந்தப்படும் நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த நாட்காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

யோகப் பயிற்சிகள் சந்திரனின் பிறைநிலைகளுடன் தொடர்புடையனவா?

எனவே தினசரி அடிப்படையில் சந்திரன் எப்படிப்பட்ட தாக்கத்தை கொண்டுள்ளது? அது வெறும் நிலவொளி மட்டுமல்ல - இன்று மக்கள் அறிவியல் சார்ந்த வகையில் மின்னேற்றம், மின்காந்த தாக்கம் மற்றும் பிற அம்சங்களைப் பற்றி பேசி வருகிறார்கள். நான் அதிலெல்லாம் நிபுணன் அல்ல. ஆனால் யோக அமைப்பின்படி, பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களுக்கு  நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த நாட்களில் வெவ்வேறு விதமான பயிற்சிகளை நாம் மேற்கொள்கிறோம்.

பொதுவாக சந்நியாசிகள் அமாவாசை நாட்களில் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். குடும்ப வாழ்க்கை முறையில் இருப்பவர்கள் பௌர்ணமி நாட்களில் தங்கள் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஏனெனில் அதன் தாக்கம் முற்றிலும் வித்தியாசமானது. ஒரு காலத்தில் நாம் பல்வேறு கருவிகளை உருவாக்கி இருந்தோம் - உதாரணத்திற்கு, உங்கள் முதுகுத்தண்டை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பௌர்ணமி இரவில் சந்திரனை நோக்கி திறந்த நிலையில் இருக்கும்படி ஒரு பயிற்சி உள்ளது. மூன்று பௌர்ணமி இரவுகளில் அவ்வாறு செய்தால், அது உங்கள் அமைப்பை நோயிலிருந்து ஆரோக்கியத்திற்கு முற்றிலுமாக மறு சீரமைப்பு செய்துவிடும்.

சந்திரன் எவ்வாறு நம் உணர்திறன் மற்றும் நரம்பியல் அமைப்பில் தாக்கத்தை உருவாக்குகிறது?

மறைஞான உலகில், புரிந்துணர்வும் சந்திரனும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. முதல் யோகியான ஆதியோகி பிறைநிலவை தன் தலையில் அணிகலனாக அணிந்துள்ளார். இது அவர் ஞானத்தில் உச்சநிலையை அடைந்துள்ளார் என்பதை குறிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியில் கூறினால், இதை குறிப்பிட்ட நிலையிலான நரம்பியல் சார்ந்த தூண்டுதல் என்று கூறலாம். உயிர் உருவான பரிணாம செயல்முறையை எடுத்துக்கொண்டால், நாம்  இந்த பூமியில் மிக வலிமையான உயிரினம் இல்லை. ஆனால் நமக்கு மிகச்சிக்கலான, மேம்பட்ட நரம்பியல் அமைப்பு உள்ளது. அந்த காரணத்தினால் தான் நாம் அனைத்து உயிரிலும் முதன்மையானவராக இருக்கிறோம்.

நரம்பியல் சார்ந்த இந்த வளர்ச்சி தான் நாம் யார் என்பதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சம். மேலும் நம் நரம்பியல் அமைப்பு எவ்வளவு தூண்டுதலோடு இருக்கிறது, எவ்வளவு செயல்பாட்டில் இருக்கிறது, எவ்வளவு சமநிலையில் இருக்கிறது என்பது சந்திரனின் பிறைநிலைகளோடு நேரடி தொடர்பில் உள்ளது. மக்கள் தங்கள் மனரீதியான ஏற்ற இறக்கங்களை இதன் உதவி கொண்டு கையாள பல வழிகள் உள்ளன. பல மனிதர்கள் தங்களுக்குள் ஆர்ப்பரிக்கும் அலை போன்ற நிலைக்கு செல்கிறார்கள். ஏனெனில் பெருங்கடல்கள் எல்லாமே பொங்கி எழுகின்றன. நம் உடலில் சுமார் 60 சதவிகிதம் நீர் இருக்கிறது. எனவே நம் உடலமைப்பில் ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது.

பக்தியின் ஒரு உணர்வு

சந்திரன் மனச் சமநிலையற்ற நிலையை உருவாக்குகிறதா?

சத்குரு: சில ஆராய்ச்சிகளின்படி பௌர்ணமி நாட்களில் மனிதர்கள் சமநிலையற்றவராக ஆகும் போக்கு இருப்பதாக, அல்லது மனப்பதட்டம் மற்றும் மனச்சோர்வு உடையவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடுவதாக கூறப்பட்டுள்ளது. சந்திரன் மனநோயை உருவாக்குவதில்லை; அது வெறுமனே உங்கள் சக்தியை ஒரு குறிப்பிட்ட வகையில் உந்தித் தள்ளுகிறது. உங்கள் தன்மை மகிழ்ச்சியானதாக இருந்தால், நீங்கள் மேலும் மகிழ்ச்சியானவராக மாறுவீர்கள். உங்கள் தன்மை அன்பானதாக இருந்தால், நீங்கள் மேலும் அன்பானவராக மாறுவீர்கள். நீங்கள் தியான நிலையில் இருந்தால், நீங்கள் இன்னும் தியான நிலைக்கு செல்வீர்கள். உங்களுக்கு ஒரு மனநோய் இருந்தால், அதுவும் அதிகரிக்கும். உங்கள் தன்மை எதுவாக இருந்தாலும், பௌர்ணமி முழுநிலவின் காரணத்தினால் அது அதிகரிக்கிறது.