வளங்குன்றா கலாச்சாரம்
ஷில்பா ரெட்டி: நான் பல வருடங்களாக ஈஷா யோக மையத்துக்கு வந்து கொண்டிருக்கிறேன். இங்குள்ள அனைத்தும் வளங்குன்றாததாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையிலும் இருக்கிறது. இந்த கலாச்சாரம் எவ்வாறு உருவானது?
ஆனந்த்: சத்குருவின் தொலைநோக்கு பார்வையே, நாம் அனைவரும் இவ்வாறு வாழ வேண்டும் என்பதுதான். எது முற்றிலும் தேவையானதாக இருக்கிறதோ, அதை மட்டுமே உபயோகிக்க வேண்டும் - பொருள் சார்ந்த விஷயங்களில் மட்டுமல்ல, எதைப் பார்க்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதிலும் கூட இப்படி இருக்கவேண்டும் என்பது அவரின் நோக்கமாக இருக்கிறது. நீங்கள் என்ன பேசுகிறீர்களோ, அதை குறைத்துக்கொள்ள முடிந்தால் இன்னும் அதிக ஆற்றலோடு இருப்பீர்கள் என்று அவர் எப்போதுமே கூறுவார். அதேவிதமாக, யோக மையத்தில் நாங்கள் எதை உபயோகிப்பதாக இருந்தாலும், உடை, உணவு அல்லது மற்ற எந்த பொருட்களாக இருந்தாலும் சரி - நாங்கள் அசௌகர்யமாக உணரும்படி வைக்கப்படவில்லை. ஆனால் அதேசமயம், எது முற்றிலும் தேவையானதாக இருக்கிறதோ, அதை மட்டுமே நாங்கள் உபயோகிக்கிறோம்.
இது ஒரு தண்டனையோ அல்லது ஒரு தார்மீக கடமையோ அல்ல, ஆனால் நாம் எப்படி உபயோகிக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய நிலையான விழிப்புணர்வை நமக்கு தருகிறது. ஏனெனில் நாம் என்ன செய்தாலும் இந்த பூமியில் அதன் தாக்கம் விழுகிறது. இது ஒரு போதனை அல்ல. நீங்கள் எந்த ஒரு சத்சங்கத்திலும் வளங்குன்றா வாழ்வைப் பற்றி சத்குரு குறிப்பிட்டு பேசுவதை காண முடியாது. ஆரம்பத்தில் இருந்தே ஈஷா யோக மையத்தில் பேசப்படாமலே வளர்த்தெடுக்கப்பட்டுள்ள கலாச்சாரம் இது. இங்குள்ள சூழல் எத்தகையதெனில், புதிதாக வருபவர்களும், எது தேவையோ அதை மட்டுமே செய்யக்கூடிய, உபயோகிக்கக்கூடிய நிலைக்கு இயல்பாகவே நகர்கிறார்கள்.
கழிவுகள் இல்லா வாழ்க்கை முறையை நோக்கி
ஷில்பா ரெட்டி: உங்கள் கழிவுகளை எவ்வாறு பிரித்தெடுக்கிறீர்கள்?
ஆனந்த்: நாங்கள் கழிவுகளை மறுசுழற்சி செய்யக் கூடியவை, மறுசுழற்சி செய்யமுடியாதவை என்ற வகையில் பார்க்கிறோம். மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை உபயோகிக்க முடியுமா என்று வடிவமைப்புக் குழு ஆராயும். மேலும் அழகியல் துறையும் கழிக்கப்பட்ட பொருட்களை உபயோகிக்கின்றன. இங்குள்ள பல மரச்சாமான்கள் மற்றும் அலங்காரப் பொருட்களில் கழித்துவிடப்பட்ட பொருட்களை பெருமளவு உபயோகப்படுத்தி இருப்பதை நீங்கள் கவனிக்க முடியும். ஒரு சணல் கயிறோ அல்லது மரக் கழிவாக இருந்தாலும்கூட அந்த இடத்தின் அழகை கூட்டும் விதத்தில் அவை உபயோகிக்கப்படுகின்றன. இது கழிவுகளை குறைப்பது பற்றி மட்டும் அல்ல, ஒவ்வொரு சிறு பொருளையும் அழகிய முறையில் உபயோகிப்பது என்பதும் நோக்கமாக இருக்கிறது.
மறுசுழற்சி செய்ய முடியாத மக்கக்கூடிய கழிவுகள் பெருமளவு சமையல்கட்டில் இருந்தும், நமது குளியலறை மற்றும் கழிப்பறையில் இருந்தும் வருகின்றன. சமையல்கட்டில் இருந்து வரும் கழிவுகள் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத கழிவுகளாக இருக்கின்றன. சமைத்த பிறகு வீணாவதை எப்படி குறைப்பது என்பதற்காக ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு உணவு வழங்க தேவையிருக்கிறது என்பதையும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். உணவுக் கழிவுகளைத் தவிர குளியலறை மற்றும் கழிவறையில் இருந்து வெளியேறும் நீர் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவாக இருக்கிறது.
குளியலறையில் இருந்து வெளியேறும் நீரை சுத்திகரிக்க மிக நுட்பமான சுத்திகரிப்பு அமைப்பு தேவையில்லை. ஏனெனில் அதில் திடக்கழிவுகள் ஏதும் இல்லை. பழுப்பு நீர் சுத்திகரிப்பு அமைப்பின் வழியாக கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை நமது விவசாய நிலங்களில் நாம் உபயோகிக்கிறோம். கழிவறை கழிவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த சுத்திகரிப்பு நிலையத்தின் வழியாக நாங்கள் சுத்திகரிக்கின்றோம். நுண்ணுயிரிகள் மற்றும் பிறவற்றின் உதவியோடு கழிவறை கழிவுகள் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் விவசாய செயல்பாடுகளுக்கு உபயோகம் ஆகிறது.
ஷில்பா ரெட்டி: இது மிகவும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது! உண்மையில் ஏதும் வீணாக போகவில்லை.
ஆனந்த்: ஆமாம். உதாரணத்திற்கு, சேவாதார் எனப்படும் பணியாட்கள் அவ்வப்போது ஏற்படும் தேவைக்கேற்ப ஈஷா யோக மையத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வேலைக்கு வருகின்றனர். உபயோகித்த பழைய உடைகளை எங்களின் பராமரிப்பு குழு முறையாக சேகரித்து, அவற்றை துவைத்து, தேய்த்து பின்னர் அந்த பணியாட்களுக்கு கொடுக்கின்றனர். பொதுவாக புதிய உடைகளை வாங்கும் வசதி அவர்களுக்கு இல்லை.
இயற்கையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
ஷில்பா ரெட்டி: யோக மையத்தில் நீங்கள் இயற்கை சக்தியை உபயோகிக்கிறீர்களா?
ஆனந்த்: ஆரம்பத்தில் நாங்கள் மின்சார வாரியம் வழங்கும் மின்சாரத்தை தான் நம்பியிருந்தோம். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் மின்சாரத்தில் ஐம்பது - அறுபது சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறப்படுகிறது. பெரும்பாலான கூரைகளின் மேல் நாம் சூரிய தகடுகளை பொறுத்தியுள்ளோம். மின்சாரத்திற்கு மாற்றாகவும், தண்ணீர் கொதிகலனுக்கும் சூரிய ஆற்றலை நாம் உபயோகிக்கிறோம். மற்றுமொரு அம்சம் யாதெனில், யோக மையத்தில் நாம் பிரகாசமான ஒளி விளக்குகளை உபயோகிப்பதை ஊக்கப்படுத்துவதில்லை. ஏனெனில் சத்குரு இருளில் பார்க்கும் வண்ணம் நமது கண்களை பழக்கப்படுத்த முயற்சிக்குமாறு கூறியுள்ளார்.
இங்கு பல இடங்களில் நாம் விழிப்புணர்வோடு தெரு விளக்குகள் அல்லது பிரகாசமான ஒளிவிளக்குகளை தவிர்த்துள்ளோம். இது மின்சாரத்தை குறித்தோ வளங்குன்றா வாழ்வைக் குறித்தோ அல்ல - இது விழிப்புணர்வோடு வாழ்வதைக் குறித்தது என்பதால் இயல்பாகவே மின் நுகர்வைக் குறைப்பதிலும் பிரதிபலிக்கிறது. அதே சமயம் மக்களின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்வதில்லை. எங்கெங்கு கட்டாயமாக தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் நல்ல வெளிச்சம் இருக்குமாறு விளக்குகளை பொருத்தியுள்ளோம்.
மேலும், ஒருவர் தன் மனித உடலமைப்பை எவ்வாறு வைத்திருக்க வேண்டுமென்றால், வேலை சூழல்களில் குளிரூட்டிகளை உபயோகிப்பதற்கு பதிலாக குளிரையோ வெயிலையோ தாங்கிக்கொள்ளும் விதத்தில் உங்கள் உடலை தயாராக வைக்க முடியும் என்று சத்குரு குறிப்பிடுவார். எல்லா வகையிலும் அவர் யோக கலாச்சாரத்தில் கூறப்படும் இயற்கையாக விழிப்புணர்வோடு வாழ்வதன் மூலம் வளங்குன்றா வாழ்வை அடைய முடியும் என்பதை நோக்கிதான் செல்கிறார்.
ராகி
விழிப்புணர்வான உணவு தேர்வுகள்
ஷில்பா ரெட்டி: உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து கூறுங்கள்.
ஆனந்த்: இந்த நாட்டில் பலவகையான சிறு தானியங்கள் பாரம்பரியமாக வளர்க்கப்படுகின்றன. நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்கள் அவற்றில் நிறைந்துள்ளன. ஆனால் கடந்த ஐம்பது - அறுபது வருடங்களில் அவை ஏழைகளின் உணவு என்ற ஒரு தவறான கருத்து பரவியுள்ளது. மக்கள் ஊட்டச்சத்து இல்லாத வெள்ளை அரிசியை உண்பதையே விரும்புகிறார்கள். அதில் வெறும் மாவுச்சத்து தான் இருக்கிறது. இந்த மனநிலையை மாற்ற முடிந்தால், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் ஒரு கலாச்சாரமாக என்ன உட்கொண்டோமோ, அந்த உணவு பழக்கத்தை மீண்டும் கொண்டு வந்தால், அது நீரிழிவுநோயை தடுத்து போதுமான ஊட்டச்சத்தையும் வழங்கும்.
மற்றுமொரு அம்சம் யாதெனில், அரிசியை விளைவிக்க தேவைப்படும் நீரளவில் 10 முதல் 12 சதவிகிதம் மட்டுமே சிறு தானியங்களுக்கு தேவைப்படும். கோதுமை மற்றும் அரிசியை விளைவிப்பதிலேயே நம் நிலத்தடி நீரை நாம் தீர்த்துவிட தேவையில்லை என்பதே இதன் பொருள். சத்குரு கூறுவதைப் போல, நம் உணவில் குறைந்தபட்சம் 30 சதவிகிதம் சிறு தானியங்களுக்கு மாறினால், விவசாயத்திலும் அதற்கு தகுந்த வகையில் அரிசி மற்றும் கோதுமையில் இருந்து சிறு தானியங்களுக்கு மாற்றம் ஏற்படும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமையும்.
நாம் என்ன உடுத்துகிறோம் என்ற கவனம்
நாம் விழிப்புணர்வோடு இயற்கையாக கிடைக்கும், இரசாயனங்கள் அல்லாத பொருட்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும் என்று சத்குரு கூறுவார். இன்று மூங்கில், பருத்தி, சணல் மற்றும் பிற இயற்கையான இழைகளில் இருந்து உருவாக்கப்படும் ஆடைகள் கிடைக்கின்றன. செயற்கையான பாலி இழை நூல்களில் இருந்து உருவாக்கப்படும் ஆடைகளை குறைத்துக்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன. இயற்கை நார்களை விளைவிக்க நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு உபயோகிக்கப்பட வேண்டும். இந்த ஆடைகள் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான பெரும் சாத்தியம் உள்ளது. இன்று பெரும்பாலான ஆடைகள் பாலியஸ்டர் மற்றும் பிற செயற்கை கலவைகள் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. பூமியின் நலன் குறித்தும் நம் நலன் குறித்தும் அக்கறை வைத்து செயற்கை இழை ஆடைகளை நாம் கைவிட வேண்டும்.
விழிப்புணர்வான உலகை உருவாக்குவது
உங்கள் உணவில் முப்பது முதல் முப்பத்தைந்து சதவிகிதம் பழங்களை நாம் கொண்டு வந்தால், இன்னுமொரு முப்பது முதல் முப்பத்து ஐந்து சதவிகிதம் சிறு தானியங்கள் பாரம்பரிய தானியங்கள், அதோடு, இயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கும் நாம் மாறினால், இந்த பூமி மற்றும் மனிதரின் வளங்குன்றா நல்வாழ்வை நாம் அடையமுடியும். இந்த நோக்கத்தில்தான் விழிப்புணர்வான உலகை உருவாக்குவது குறித்து சத்குரு பேசி வருகிறார். இது சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்தையும் இணைப்பது குறித்தது. மேலும் சட்டங்களாகவோ தார்மீக கடமையாகவோ அல்லாமல், எல்லாவற்றையும் எவ்வாறு அரவணைத்து கொண்டு செல்வது என்பதை குறித்தது. நம் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதே இதற்கான வழி. இந்த காரணத்தினால் தான் சத்குரு நம்மை தேர்ந்தெடுக்க சொல்கிறார், ஏனெனில் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நம்மிடம்உள்ளது.