குரு என்பவர் உண்மையில் யார்
சத்குரு: குரு என்பது ஒரு போதனை குறித்தோ, தத்துவம் குறித்தோ, சித்தாந்தம் குறித்தோ அல்ல - அருள் என்பதே குரு. உங்கள் வாழ்வில் வேறு எது - அறிவு, ஆற்றல், திறமை, வளமை அல்லது உறவுகள் - இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் அருள் என்னும் உராய்வு நீக்கி இல்லையென்றால், நீங்கள் சேர்த்திருக்கும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு எதிராக செயல்படும்.
பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் பெருமுயற்சி செய்து போராடி அடைந்த ஒன்றினால் தான் பொதுவாக துன்புறுகிறார்கள் - உதாரணத்திற்கு அவர்களின் வியாபாரம், வேலை, செல்வம் மற்றும் குடும்பம். இதற்கான காரணம், நீங்கள் வாழ்வின் எல்லா பாகங்களையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்துள்ளீர்கள், ஆனால் அவை உங்களின் நன்மைக்காக சீராக வேலை செய்ய தேவையான உராய்வு நீக்கி அங்கு இல்லை. அருள் இல்லையெனில் நீங்கள் அடைவதற்காக கடுமையாக முயற்சிக்கும் விஷயங்களும் உங்களுக்கு எதிராக மாறிவிடும்.
குரு பௌர்ணமியின் முக்கியத்துவம்
குருபௌர்ணமி என்பது வெறும் ஒரு விசேட நாள் மட்டும் அல்ல - இந்த நாளில் பூமியின் மீது என்ன நிகழ்கிறது என்பது குறித்த முக்கியத்துவமும் உள்ளது. தட்சிணாயனம் தொடங்கிய பின்னர் வரும் முதல் பௌர்ணமி குரு பௌர்ணமியாக திகழ்கிறது. இந்த நாளில் தான் ஆதியோகி ஆதிகுருவாக தன்னையே உருமாற்றி கொண்டார் -முதல் யோகி தன்னை முதல் குருவாக மாற்றி கொண்டார். உங்களுக்கு இந்த கதை தெரிந்திருக்கக்கூடும்:
ஆதியோகி எவ்வாறு முதல் குரு ஆனார்
சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன், இமாலயத்தின் மேற்பகுதிகளில் ஒரு உயிர் தோன்றியது. அவர் யார், எங்கிருந்து வந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. பிரமிக்கத்தக்க அந்த உயிரின் மூலம் பற்றி ஒருவரும் அறியவில்லை. அவரது பரவசம் சிறிது அசைவை அவரில் அனுமதித்த போது அவர் கட்டற்று நடனமாடினார். அவரின் தீவிரம் உச்சமடைந்த போது, அவர் முழுமையாக அசைவற்றவரானர். அதுவரை ஒருவரும் அறிந்திராத, யாராலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு பரிமாணத்தை அவர் உணர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை மக்கள் கண்டனர். அவரின் பரவசமும் தீவிரமும் அவரது உடற் சார்ந்த தன்மையை கடக்க அவரை அனுமதித்தது.
தனிப்பட்ட மனிதர் ஒருவர் பிரபஞ்சத்தோடு ஒன்றியிருப்பதை கண்டவர்கள் அவரை யோகி என்று அழைத்தனர் - அவரே முதல் யோகியாக இருந்தமையால், ஆதியோகி என்றார்கள். அவரின் அசைவற்ற நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்த நீடிக்க, ஆர்வத்தில் வந்து சேர்ந்தவர்களின் கூட்டம் மெல்ல கரைந்தது. அவரிடமிருந்து தங்களை பிய்த்துக்கொண்டு தனித்து செல்ல முடியாத எழுவர் மட்டும் எஞ்சினர்.
ஆதியோகி ஆழமான யோக விஞ்ஞானத்தின் முழு ஆழத்தையும் பரிமாணத்தையும் அவர்களுக்கு பரிமாறினார். முழுமை அடைவதற்கான 112 முறைகளை அவர் விவரித்தார். படைப்பின் ஆழமான பகுதிகளை அவரின் சீடர்கள் அடைய வழி வகுத்தார். இந்த அற்புதமான யோக நிலையில் இருக்கையில், படைக்கப்பட்டதும் படைக்கப்படாததுமான பல மர்மங்கள் அவரின் கட்டற்ற வார்சடை மீது இறங்கின.
பிரபஞ்சத்தின் மூலத்தை அதன் பிரம்மாண்டத்திலும் ஆழத்திலும் காணக் கிடைத்த தரிசனம் அது. பிரபஞ்சத்தின் அறிந்துகொள்ள முடியாத மர்மங்கள் புலனான காட்சி அது. சப்தரிஷிகளும் தேவி பார்வதியும் அதுவரை கண்டிராத மிக அற்புதமான தரிசனம் அது. ஆதியோகி பரவச நிலையில் வெளிப்படுவதை கண்ட தேவி பார்வதி, "நீங்கள் அடைந்திருப்பதை நானும் அடைய வேண்டும். வழி காட்டுங்கள்," என்று கேட்டார்.
ஆதியோகி அவளை தனக்குள் ஈர்த்து ஏற்றுக்கொண்டு தன்னில் ஒரு பாதியாக மாற்றினார். அதனாலேயே அவர் அர்த்தநாரி ஆனார் - பாதி பெண்மை கொண்ட ஒரு முழுமையான ஆண். பிரமிக்கத்தக்க இந்த ஒன்றினைதலின் அற்புதத்தைக் கண்ட, அவருடனே எப்போதுமிருந்த காணர்கள், "எங்களுக்கு?" என்று வினவினர். ஆதியோகி, "வெறுமனே என்னிலிருந்து பருகுங்கள்" என்றார். அது அவர்களை பேரானந்தத்தில் மூழ்கடித்தது.
சப்தரிஷிகள் புனிதமான யோக விஞ்ஞானத்தை பூமியெங்கும் உள்ள எல்லா மனித வசிப்பிடங்களுக்கும் எடுத்துச் சென்றனர். அந்த இடங்கள் நாகரிகத்தின் தொட்டிலாக மாறின.
இந்த அற்புதமான உயிர் கடந்த காலத்தின் கதை அல்ல, ஆனால் மனித இனத்தின் எதிர்காலத்துக்கானவர். மனித இனத்தை உயர்வு தாழ்வு என்ற பிரமையில் இருந்து விலக்கி, ஒருவரின் உள்நிலையில் உள்ள பேரானந்த நிலைக்கு எடுத்து செல்வதற்கானவர்.
இது நிகழ்ந்து 15,000 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மிகச்சரியான காலம் நமக்கு தெரியவில்லை. ஏனெனில் நாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இல்லை. இப்படி ஒருமுறை நிகழ்ந்தது: சங்கரன் பிள்ளைக்கு பிரித்தானிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வழிகாட்டியாக வேலை கிடைத்தது. ஒரு நாள் சுற்றுலா பயணியர் குழு ஒன்றுக்கு அருங்காட்சியகத்தை சுற்றி காண்பித்துக் கொண்டிருந்தார். டைனோசர் எலும்புக்கூடு இருந்த இடத்தை அடைந்த போது, "நீங்கள் பார்க்கும் இந்த எலும்புக்கூடு இருபது லட்சத்து நான்கு வருடங்கள், மூன்று மாதங்கள், இருபத்தொருநாட்கள் பழமையானது" என்று அறிவித்தார். ஆச்சரியமடைந்த பயணிகள், "என்ன? இதன் காலத்தை அவ்வளவு துல்லியமாக உங்களால் கூற முடியுமா?" என்று கேட்டனர். அதற்கு சங்கரன்பிள்ளை, "ஆம்! ஏனெனில் நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் இது இருபது லட்சம் வருடம் பழமையானது என்று கூறினார்கள். நான் வேலைக்கு சேர்ந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் மூன்று மாதங்கள் இருபத்து ஒரு நாட்கள் ஆகிவிட்டது" என்றார்.
சாதாரணத்தில் இருந்து மிக சாதாரணத்திற்கு
இங்கே ஈஷா யோக மையத்துக்கு நாம் வந்து 25 வருடங்களுக்கு மேலாகி விட்டன. நாம் வருவதற்கு முன்பே இந்த பிரமாண்டமான மலைகள் இங்கிருந்தன. நிச்சயமாக நாம் வருவதற்கு முன்பே ஆதியோகியும் இங்கு இருக்கிறார். நீங்கள் காண்பதற்காக ஒரு உருவை¹ மட்டுமே நாம் வடிவமைத்தோம். என்னால் பார்க்க முடிந்ததால் நான் இங்கே வந்தேன். நீங்களும் காண வேண்டும் என்று நான் நினைத்தேன் - எனவே அவர் இங்கிருக்கிறார்.
கடந்த இருபத்து ஐந்து வருடங்களில் பல மகத்தான உயிர்கள் நம்மோடு இருந்திருக்கிறார்கள். "மகத்தான உயிர்கள்" என்றால் அவர்கள் தங்கள் தலைக்கு பின்னால் ஒளிவட்டத்தோடு வந்தார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் மிகச் சாதாரணமான மனிதர்களாக காட்சியளித்தவர்கள், ஆனால் ஒவ்வொருவரும் தனிச்சிறப்புடைய மனிதர்கள். சிலர் நம்மோடு இருக்கிறார்கள், சிலர் இப்போது இவ்வுலகில் இல்லை, சிலர் வேறெங்கோ இருக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்தாலும், எங்கும் இல்லாவிட்டாலும், அவர்கள் ஒவ்வொருவரையும் இன்று நான் வணங்குகிறேன்.
"எனக்கு என்ன கிடைக்கும்?" என்பதை தவிருங்கள்
கடந்த சில ஆண்டுகளில், நான் மக்களை மூன்று ஆயுள்காலத்திற்கான வேலையை செய்ய வைத்திருக்கிறேன். அவர்கள் மேலும் உழைக்க உழைக்க, அவர்கள் இன்னும் அதிக திறமையான, அற்புதமான மனிதர்களாக மாறிவிட்டனர். இங்கும் உலகெங்கும் பல விஷயங்கள் நடந்தேறியுள்ளது. கடந்தகாலத்தின் குருமார்களை நான் வணங்குவதைப் போலவே இதை நிகழச்செய்த ஒவ்வொரு தன்னார்வத் தொண்டரையும் நான் வணங்குகிறேன். மனிதர்கள் தங்கள் மனதில் இருந்து, "எனக்கு என்ன கிடைக்கும்?" எனும் கேன்சர் போன்ற ஒரேயொரு எண்ணத்தை மட்டும் எடுத்துவிட்டால், அதுவே அற்புதமான ஒரு உலகை உருவாக்கும். ஈஷாவைக் குறித்த மிக அற்புதமான விஷயம் இது தான் - "எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற எண்ணம் இல்லாத மனிதர்களின் நடுவில் தொடர்ந்து இருக்க முடிவது. இதுவே தங்கள் வாழ்நாளின் கடைசி தினம் என்ற ரீதியில் தான் அவர்கள் அனைத்தையும் அணுகுகிறார்கள்.
மலையே கோவில்
மேலும் இங்கிருக்கும் இந்த பிரமாண்டமான மலைகள் இயற்கை சார்ந்து மட்டும் பிரமாண்டமாக இல்லை. என் குரு இந்த மலையை தன் கடைசி வசிப்பிடமாக தேர்வு செய்திருந்தார். எனவே எனக்கு இந்த மலை கல்லால் மண்ணால் ஆன ஒரு குன்று அல்ல - நான் எப்போதும் இந்த மலையை ஒரு கோவிலாகவே பார்த்திருக்கிறேன். நான் எல்லா இடங்களுக்கும் பயணித்துள்ளேன், ஆனால் என் மனதில், இதைவிட மிக அழகான ஒரு இடத்தை நான் கண்டதில்லை.
சத்குருவின் இருப்பை உணருங்கள்
நாம் குறிப்பிடத்தக்க அளவிலான சக்தியை இங்கே முதலீடு செய்துள்ளோம். நீங்கள் சிறிது விருப்பத்தோடு இங்கு வந்தால், நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்குள் ஒரு அதிர்வை உருவாக்க நம்மால் முடியும். நீங்கள் விருப்பத்தோடு வரவில்லையென்றாலும், உங்களை தேவையானபடி செதுக்க நாம் சித்தமாக உள்ளோம். நீங்கள் ஒரு கல்லைப் போல இருந்தாலும் சரி, குறிப்பிட்ட சக்தி குவிப்பு இருக்கும் வகையில் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை நாம் வகுத்துள்ளோம். குறிப்பாக நீங்கள் தீட்சை பெற்றிருந்தால். அது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, சில வகையான எண்ணம், உணர்வு அல்லது உருவம் மூலம் இந்த இடத்தோடு நீங்கள் தொடர்பில் வந்தால் அந்த குறிப்பிட்ட கால நேரம் ஒரு சக்தி வாய்ந்த இருப்பாக உங்களுக்கு வேலை செய்யும். நாம் குறிப்பிட்ட பரிமாணத்தில் சக்தியை பதித்துள்ளோம். அதன்படி, நீங்கள் எந்த நேர மண்டலத்தில் இருந்தாலும், உங்கள் உள்ளூர் நேரப்படி 6:20ல் இருந்து 6:40 மணிக்குள் அந்த சக்தியின் இருப்பை உணரக்கூடிய வகையில் நீங்கள் இருப்பீர்கள் - காலை, மாலை இரண்டு நேரங்களிலும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தங்கள் சுய மாற்றத்துக்கான கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும், அதை அவர்கள் உபயோகிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனிதரின் வாழ்வை மாற்றும் இந்த தொழில்நுட்பங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.
ஒவ்வொருவரையும் சத்குருவாக பாருங்கள்
சத்குருவின் மீது நான் அளவற்ற அன்போடு இருக்கிறேன் என்று உரிமை கோரும் ஒவ்வொருவரும், இந்த குரு பௌர்ணமியில் தொடங்கி, உங்கள் பார்வை படும் அனைத்தையும் சத்குருவாக பார்க்க, நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் - ஆண், பெண், குழந்தை, விலங்கு, மரம் மற்றும் அசைவற்ற பொருட்கள் என எதுவாக இருந்தாலும். இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையின் எஞ்சிய மற்ற விஷயங்களை - உங்களின் விதி மற்றும் முக்தி- அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.