வாழ்வியல் கேள்விகள்

நடைமுறை நிஜம், உண்மை, ஞானம் இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வுசி தெம்பெக்வயோ அவர்கள் செல்வாக்குள்ள சொற்பொழிவாளர், வர்த்தக தலைவர் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். சமீபத்தில் இவர் சத்குருவுடன் ஒரு ஆழமான உரையாடலில் பங்கேற்றார். அப்போது, பண்டைய ஞானம், நடைமுறை நிஜத்திற்கும் உண்மைக்குமான வித்தியாசம், இந்த உலகம் உண்மைக்கு தயாராக உள்ளதா, போன்றவைப் பற்றி வுசி தெம்பெக்வயோ கேள்விகள் எழுப்ப, அதற்கு சத்குரு வழங்கிய பதில்களின் தொகுப்பை இந்தப் பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

வுசி தெம்பெக்வயோ: இன்று நாம் இயங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலைக்குள் வித்தியாசமான ஒரு வழியில் செயல்களை செய்யும் முறைகளை ஆப்பிரிக்கர்களாகிய நாங்கள், எங்களை இழந்துவிடாமல் கொண்டு வந்துள்ளோம் என்று நான் நம்புகிறேன். எதனால் என்றால், புதியனவற்றை கண்டுபிடிக்கையில், பழையவனவற்றில் எந்த பகுதி நம்பகத்தன்மையானதாக இருப்பதாக உணர்கிறீர்கள், எந்த பகுதியை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் மற்றும் நீங்கள் எதை இழக்கவும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை முடிவெடுப்பதே மிக கடினமான பகுதி என நான் நினைக்கிறேன்.

சத்குரு: நீங்கள் கடந்த காலத்தையே பிடித்துக் கொண்டிருக்கக்கூடாது, ஏனென்றால் நேற்று எது ஞானமாக தெரிந்ததோ, அது இன்று முட்டாள்தனமானதாக இருக்கலாம். இப்போது இப்படி ஆகிவிட்டது: நான் எங்கு சென்றாலும், மக்கள், “சத்குரு பழமையான ஞானத்தைக் கொண்டு வருவார்" என்கிறார்கள். ஆனால் நாம், “இது தற்காலத்திற்கான ஞானம்" என்கிறோம். ஏனென்றால், ஞானம் வேலை செய்ய வேண்டும்.

பண்டைய ஞானம் என்பதன் அர்த்தம், அது வரலாற்று பதிவுகளாக தொகுக்கப்பட்டு காப்பகப்படுத்த வேண்டிய ஒன்று, நடைமுறையில் கைக்கொள்ளப்பட வேண்டியதல்ல. முன்னோர்கள் அவர்கள் காலத்திற்கு தகுந்தவற்றை கண்டிருந்திருக்கலாம். அவற்றில் சில நம் காலத்திற்கும் ஏற்புடையதாக இருக்கலாம், ஏனென்றால் அடிப்படையில் நாம் அனைவரும் இன்னும் மனிதர்களாகத்தான் இருக்கிறோம்; வேறு ஏதோ ஒன்றாக நாம் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. சூழ்நிலைகள் மட்டும் தான் மாறியுள்ளது. நாம் சுயமாக உணர்ந்திருப்பவைகளைக் கொண்டு, சூழ்நிலைக்கு பொருந்துமாறு செயல்படுவதே ஞானம். உணர்தல் என்பது சிறந்ததாகவும், நிச்சயமான உண்மையாகவும் இருக்கலாம், ஆனால் ஞானம் இன்றைய நடைமுறை நிஜங்களையும் உச்சபட்சமான உண்மையையும் ஒருங்கிணைக்கிறது.

நாம் சுயமாக உணர்ந்திருப்பவைகளை கொண்டு, சூழ்நிலைக்கு பொருந்துமாறு செயல்படுவதே ஞானம்.

இவை இரண்டையும் நீங்கள் ஒருங்கிணைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு குகைக்குள் அமர்ந்து கொண்டு, பேரானந்தமாக மக்களை ஆசிர்வதித்துக்கொண்டு இருக்கலாம். நீங்கள் இந்த உலகில் செயலில் ஈடுபட வேண்டும் என்றால், அறுதியான உண்மையுடன் இன்றைய நடைமுறை நிஜத்தையும் பொருந்திப் போகுமாறு ஒருங்கிணைக்க வேண்டும்; இல்லையென்றால் இந்த உலகில் நீங்கள் செயல்பட முடியாது.

வுசி தெம்பெக்வயோ: சத்குரு, உண்மை என்பது அறுதியான ஒன்றாக எப்போதாவது இருக்க முடியுமா?

சத்குரு: உண்மை எப்பொழுதும் அறுதியானது. நடைமுறை நிஜங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

வுசி தெம்பெக்வயோ: இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

சத்குரு: நடைமுறை நிஜத்திற்கும் உண்மைக்கும் என்ன வித்தியாசம் என்றால், இன்று நீங்கள் விரும்பும் எந்த வண்ணத்தை வேண்டுமானாலும் உங்கள் வீட்டிற்கு பூசிக்கொள்ளலாம், ஆனால் அஸ்திவாரம் அப்படியேதான் இருக்கும்.

வுசி தெம்பெக்வயோ: அறுதியான உண்மை பற்றிய இந்த கருத்து சுவாரஸ்யமாக உள்ளது. இன்று இந்த உலகம் உண்மைக்கு, அந்த உண்மை எதுவாக இருந்தாலும், அதற்கு தயாராக உள்ளதா என்று எனக்கு கேள்வி உள்ளது. ஒவ்வொரு மனிதரும் அவர்களுடைய சொந்த உண்மையைப் பற்றி எந்தளவு நன்கு உணர்ந்துள்ளார்கள் என்று தெரியவில்லை, மேலும் அந்த உண்மையை பெற்றுக்கொள்வதற்கு எந்த அளவு அவர்கள் தயாராக உள்ளார்கள் என்றும் தெரியவில்லை. பழங்கால சொற்றொடர் ஒன்று இப்படி சொல்கிறது: “உண்மையை வெறுப்பதை விடவும், அந்த உண்மையைப் பேசும் தைரியம் உள்ளவரைத்தான் மக்கள் இன்னும் அதிகமாக வெறுக்கிறார்கள்”

சத்குரு: நீங்கள் எனக்கு சொல்கிறீர்களா? இது எல்லாவற்றையும் நான் பார்த்துவிட்டேன். [இருவரும் சிரிக்கிறார்கள்]

இந்த உலகம் எப்பொழுதுமே உண்மைக்கு தயாராக இருக்காது, ஏனென்றால், “உலகம்” என்று அழைக்கும் வார்த்தையிலேயே உண்மை இல்லை. தனி ஒருவரது அனுபவம் மட்டுமே உண்மையானது. நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள்; “உலகம்” என்பது வெறும் வார்த்தை மட்டும் தான். நீங்கள் உங்கள் குழந்தைகளை உலகம் என்று அழைப்பதில்லை - அவர்களுடைய பெயர்களைச் சொல்லி அழைக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் இந்த தனி உயிர்களுக்கு உங்களுடைய நேரத்தையும் கவனத்தையும் கொடுக்கிறீர்கள்.

உண்மை எப்பொழுதும் அறுதியானது. நடைமுறை நிஜங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த நேரமோ அல்லது ஆர்வமோ நமக்கு இல்லாமல் நாம் "உலகம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். எனவே அவர்கள் ஒரு உலகம் மட்டும் தான். உலகம் என்பது நமது மனதில் உருவாக்கியுள்ள ஒரு மன பிம்பம் மட்டுமே. உண்மையில், தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மக்கள் மக்களாக இருப்பதற்கு காரணம், அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களினால் தான், அதோடு தனி ஒருவரின் அனுபவங்கள் உண்மையாகாது. தனி ஒருவரின் அனுபவங்கள், நாம் வாழும் காலகட்டத்தின் சமூக மற்றும் உளவியல் நிதர்சனங்களால் ஏற்படுகிறது. ஒரு தனிநபர் உண்மையை உணர முடியும், ஆனால் ஒரு மனிதனாக, தனிப்பட்ட ஒருவர் உண்மை அல்ல. இந்த உலகத்திற்கு உண்மையை உணரும் திறன் இல்லை.

வுசி தெம்பெக்வயோ: அப்படியானால், எது உண்மை?

சத்குரு: ஏதோ ஒன்றை அறுதியானது என்று நான் சொல்லும்போது, அதை நீங்கள் விவரிக்க இயலாது என்பதே அதன் அர்த்தம். எது ஒன்றிற்கு ஸ்தூல எல்லைகள் உள்ளதோ அதை மட்டும் தான் நீங்கள் விவரிக்க முடியும் - ஸ்தூல எல்லைகளற்ற ஒன்றை நீங்கள் விவரிக்க முடியாது. உண்மை என்பது நீங்கள் விவரிக்கவோ அல்லது தத்துவார்த்தம் செய்யக்கூடிய ஒன்றோ இல்லை, அது நீங்கள் அனுபவத்தில் உணரக்கூடிய ஒன்று.

உங்கள் பார்வையை மறைப்பவற்றை விலக்கினால், காட்சி உங்களுக்கு புலனாகும்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்தினைப் பற்றியும் முடிவுகளை உருவாக்குவதற்கு பதில், எது உங்களை முடிவுகளை எடுக்கவைக்கிறது, எது உங்களுக்குள் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் தோற்றுவிக்கிறது, எதனை நீங்கள் விரும்புகிறீர்கள் மற்றும் வெறுக்கிறீர்கள் என்பவற்றை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், எப்படி பலவிதங்களில் குழப்பத்திற்கான பட்டகங்களை (Prism) உங்கள் மனதில் உருவாக்கி வைத்துள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நான் ஒரு பட்டகம் வழியாக உங்களைப் பார்த்தேன் என்றால், நீங்கள் மிகவும் வேடிக்கையானவராகவும் உருக்குலைந்தவராகவும் தெரிவீர்கள். நான் ஒரு பட்டகம் வழியாகப் பார்த்து, வுசி ஒரு வேடிக்கையான தோற்றம் கொண்டவர் என்ற முடிவுக்கு வந்தால், அது என்னுடைய பிரச்சனை, உங்களுடையது அல்ல.

இதுபோல பல பட்டக பெருக்கல்களை மனதின் பார்வையில் குறுக்கிடும்படி நாம் உருவாக்கி வைத்துள்ளோம், அவைதான் எல்லாவற்றையும் குழப்பமாக்குகிறது, இதோடு நாம் உண்மையை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசிக்கிறோம். உங்களது உணர்தலுக்கான புலன் உறுப்புகளுக்கு முதலில் நீங்கள் தெளிவு கொண்டுவர வேண்டும். நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள், முகர்கிறீர்கள், சுவைக்கிறீர்கள், தொடுகிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள், இவற்றில் நீங்கள் முதலில் தெளிவு பெறவேண்டும். உண்மை என்பது நீங்கள் முயற்சித்து காண வேண்டிய ஒன்றல்ல- உங்கள் பார்வையை மறைப்பவற்றை நீங்கள் விலக்கினால், காட்சி உங்களுக்கு புலனாகும்.