நடப்புகள்

சர்வதேச யோகா தினம் 2021

சவாலான இந்நேரத்தில் நல்வாழ்வின் உச்சத்தை அடைவது எப்படி என்பதைப் பற்றி சத்குரு

இந்த பெருந்தொற்று சூழல் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களைக் குறைத்திருக்கலாம், ஆனால் நம்முடைய தினசரி வாழ்க்கையில் யோகா எந்த அளவிற்கு  அதிதேவையானது என்பதை இது நன்றாகவே வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்த நாளில் உலகமெங்கிலும் உள்ள ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், முடிந்த அளவில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு யோகா பயிற்சியினை ஒரு பரிசாக அளிக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டனர்.

சமூகத்தை சென்றடையும் யோக வீரர்களும் ஈஷாங்காக்களும்

21 ஜூன் சர்வதேச யோகா தினத்தன்று ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் தன்னிலை மாற்றத்திற்கான கருவிகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டனர். இந்த பெருந்தொற்று காலத்தில் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்குரு அவர்கள் தனித்துவமாக வடிவமைத்து வழங்கியுள்ள சிம்ம கிரியா, மகராசனா மற்றும் சாஷ்டாங்கா போன்ற பயிற்சிகளை கற்றுத்தரும் வெபினார்களை பயிற்சிபெற்ற ஈஷாங்காக்கள் (ஈஷா யோகா ஆசிரியர்கள்) நடத்தினார்கள். மேலும் , யோக வீரர்களுக்கும் இவர்கள் வெபினார்கள் நடத்த பயிற்சி வழங்கியது அதிவிரைவாக பெருமளவு மக்களை சென்றடைய வழிவகுப்பதாக அமைந்தது.

தமிழகத்தில், 927 ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு 78,894 மக்களை இந்த கருவிகள் சென்றடைந்தன. முதன்முறையாக, அனைத்து ஈஷா வித்யா பள்ளிகளிலும் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் யோக வீரர்களாக பயிற்சி பெற்றனர். நிறுவன தலைவர்கள், அரசு அதிகாரிகள், சுகாதார வல்லுநர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், வங்கியாளர்கள், ஆயுத படை வீரர்களுடன் விவசாயிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒரு துளி யோகாவை தங்கள் வாழ்க்கையில் கொண்டுவர முன்வந்தனர்.

வட இந்தியாவில், ஹரியானா மாநில அரசு சிம்ம கிரியா வெபினார்களை ரெவாரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் நடத்த  முயற்சி எடுத்தது. பத்திரிக்கை செய்திகள், விளம்பரங்கள், FM ரேடியோ விளம்பரங்கள், மேலும் தொலைதூர கிராமங்களை சென்றடைய ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகள் என மாவட்ட நிர்வாகம் தீவிர பிரச்சாரத்தைச் செய்தது. இந்த முயற்சிகள் நல்ல பயனளித்தன. ஒரு லட்சம் மக்கள் இந்த வகுப்பிற்கு பதிவு செய்தனர்! இது தவிர, மொத்தம் 498 ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட, 50,826 மக்களை அது சென்றடைந்தது. 395 வகுப்புகள் மூலம் 9,115 பேரை சென்றடைய உதவிய யோக வீரர்கள், மீண்டுமொரு முறை இது உண்மையாகவே அடிப்படை மக்களுக்காக இயங்கும் இயக்கம் என நிரூபித்துக்காட்டினர்.

ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில், ஈஷா அறக்கட்டளை, 48 சமூக வலைத்தள சேனல்களில், ஒட்டு மொத்தமாக 43 மணி நேரம் அடுத்தடுத்த நேரலை நிகழ்ச்சிகள் மூலம் முதல் யோகா மாரத்தானை நடத்தியது. ஐரோப்பாவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் புகழ் பெற்ற 38 பேர் அவர்களுடைய ஆதரவினை வழங்கியதுடன் அவர்களது 63 இலட்ச சமூக வலைதள‌ ஃபாலோயர்களுக்கு ஆன்லைன் யோக வகுப்பு சென்றடையவும் உதவினர். ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு தூதரகங்கள் உபயோகா, வழிகாட்டுதலுடன் கூடிய தியானங்கள், யோக உணவு முறை போன்றவற்றைக் கொண்ட யோக வகுப்புகள் நடத்துவதற்கு ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து செயலாற்றின.  இதில் 16 நாடுகளுக்கான 12 இந்திய தூதரக பிரதிநிதிகள் கலந்துகொள்ள, 2500 மக்கள் இந்த வகுப்புகள் மூலம் பயனடைந்தனர்.

சத்குருவின் செய்தி

இதுவரையில் கண்டிராத இப்படி ஒரு நெருக்கடியான பெருந்தொற்று சூழ்நிலை காரணமாக, இதற்கு முன் வேறெப்போதும் இல்லாதபடி யோகாவிற்கான மிகப்பெரிய தேவை எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சர்வதேச யோகா தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சத்குரு விளக்குகிறார்:

சத்குரு: வெளிப்புற நல்வாழ்வினை அமைத்துக்கொள்ள எப்படி அறிவியல் தொழில்நுட்பங்கள் இருக்கிறதோ, அதேவிதமாக யோக அறிவியல் என்பது உள் நல்வாழ்விற்கான தொழில்நுட்பம். இந்த ஏழாவது சர்வதேச யோகா தினம் என்பது யோகாவினை மத சம்பந்தமானதாகவோ, நம்பிக்கை அடிப்படையானதாகவோ, தத்துவமாகவோ அல்லது சித்தாந்தமாகவோ அல்லாமல் உள் நல்வாழ்விற்கான ஒரு அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறிக்கும் ஏழாவது ஆண்டு தினம் ஆகும். இது பெருந்தொற்று காலமாக இருப்பதால், முன்னெப்போதையும் விட இந்த ஆண்டின்  சர்வதேச யோகா தினம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நமது வாழ்க்கை எப்படி தலைகீழாக மாற முடியும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இதுபோன்ற ஒரு காலகட்டத்தில், துடிப்பான மற்றும் நெகிழ்வான உடலையும், ஆனந்தமான மற்றும் கூர்மையான மனதினையும், தொய்வில்லாத உணர்வினைக்கொண்ட சக்தியினையும் உங்களுக்குள் கட்டமைக்க வேண்டியது இதுபோன்ற வெளிப்புறத் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் அத்தியாவசியமாகிறது.

எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நமது வாழ்க்கை எப்படி தலைகீழாக மாற முடியும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இது போன்ற ஒரு காலகட்டத்தில், துடிப்பான மற்றும் நெகிழ்வான உடலையும், ஆனந்தமான மற்றும் கூர்மையான மனதினையும், தொய்வில்லாத உணர்வினைக் கொண்ட சக்தியினையும் உங்களுக்குள் கட்டமைக்க வேண்டியது இது போன்ற வெளிப்புறத் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் அத்தியாவசியமாகிறது.

அதற்குள்ளாக  இந்தியாவிலும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இரண்டு அலைகளைக் கண்டுவிட்டோம். வைரஸ் பற்றி ஆராய்ந்து வரும் பிரிவினரிடமிருந்து, நாம் நினைத்தைவிட, இந்த வைரஸ் சூழல் நீண்டகாலம் நீடிக்கும் என்ற ரீதியில் அதிகாரப்பூர்வமாகவே குரல்கள் கேட்கின்றன.  வாழ்க்கையின் இந்த கடுமைகளை மிகவும் குறைந்த சிதைவுகளுடன் நாம் கடந்து செல்ல ஒரு நெகிழ்வான உடலையும், சமநிலையான மற்றும் உற்சாகமான மனதினையும் உருவாக்கிக்கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான தருணம் இது.

யோகாவின் சாராம்சம்

யோகா என்பது  உடற்பயிற்சிகளின் ஒரு எளிய  வடிவம் அல்ல. மனித உயிரினம் பல்வேறுபட்ட நுட்பமான இயக்கங்களைக் கொண்டது. யோகா என்பது மனித இருப்பின் இயக்கவியலை புரிந்துக்கொண்டு அதனை எவ்வாறு ஒரு உயர்ந்த சாத்தியத்திற்கு எடுத்துச்செல்வது என்பதைப் பற்றியது. யோகா என்பதன் அடிப்படை அர்த்தம்  “ஒன்றிணைதல்”. அப்படியென்றால் இதன் அர்த்தம், நமது இருப்பின் பிரபஞ்சத் தன்மையினை அறிவதற்காக, நம் தனித்தன்மையின் எல்லைகளை விழிப்புணர்வோடு அழித்துக்கொள்வது. படைத்தலில் ஒரு சிறு துகளாக இருந்தபோதும், முழு பிரபஞ்சத்தினையே உணரும் திறன் நமக்கு உள்ளது. இங்கு இந்த கணத்தில் இருந்தபடி, இந்த இருப்பின் முடிவற்ற நிலையான தன்மையை உணரும் வல்லமை நமக்கு இருக்கிறது.

உங்களை ஆரோக்கியமாக்கும் யோகா

இந்த உலகம் முழுவதற்கும் இந்தியா வழங்கும் சாத்தியம் இது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைய உதவும் மிகவும் பயனுள்ள கருவியாகவும் இது இருக்கிறது. மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் நாம் நோயுறும் போது உதவ முடியும், ஆனால் ஆரோக்கியம் என்பது எப்போதும் ஒரு மருத்துவரிடமிருந்தோ அல்லது ஒரு மருத்துவ வல்லுநரிடமிருந்தோ நமக்கு வராது, இது நமக்குள் இருந்து வர வேண்டிய ஒன்று. ஆரோக்கியம் என்றால் நோயில்லாமல் இருப்பது மட்டும் அன்று, ஆரோக்கியம் என்றால் நீங்கள் வாழ்வின் சிகரத்தில் இருப்பது என்று அர்த்தம்

ஆரோக்கியம் என்றால் நோயில்லாமல் இருப்பது மட்டும் அன்று, ஆரோக்கியம் என்றால் நீங்கள் வாழ்வின் சிகரத்தில் இருப்பது என்று அர்த்தம்.

ஆரோக்கியம் என்றால் உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திகளில் உங்கள் இருப்பின் உட்சபட்சத் தன்மையில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதற்கும் குறைவான ஒன்றை நாம் எப்போதும் இலக்காக வைக்கக்கூடாது. உங்களை அந்நிலைக்கு கொண்டு செல்வதற்கான வீர்யமும் அதற்கு தேவையான அறிவியலுடன் தொழில்நுட்பத்தினையும் யோகா கொண்டுள்ளது. நல்வாழ்விற்கான இக்கருவிகளை ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் செயல்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

அனைவருக்கும் யோகா

இந்த பெருந்தொற்று சூழலுக்கென்று ஒரு சிறுபயிற்சித் தொகுப்பினை, நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்திக்கொள்ளவும் மனதில் ஒரு சமநிலையினையும் உடலில் துடிப்பினையும் கொண்டுவர நாம் உருவாக்கியுள்ளோம். விருப்பப்படுபவர்களுக்கு முழு விளக்கத்துடனும் ஆழத்துடனும், ஒரு எளிய பயிற்சியை செய்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு சிறு தொகுப்பாகவும் இது கிடைக்கிறது.

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் யோகாவின் ஏதோவொரு அம்சத்தினை தங்களது வாழ்வில் கொண்டுவந்து, ஒரு முழுமையான வாழ்வினை வாழ வேண்டும் என்பது எனது விருப்பம் மற்றும் ஆசி.

இது அனைத்து இடங்களிலும் இலவசமாகக் கிடைப்பதுடன் இதன் மூலம் நீங்கள் உறுதியாக பயன் பெற்றுக் கொள்வதற்கென்று அர்ப்பணிப்புடன் தன்னார்வத் தொண்டர்கள் எந்நேரமும் உங்கள் அழைப்பிற்கு தயாராக இருக்கின்றார்கள். இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் யோகாவின் ஏதோவொரு அம்சத்தினை தங்களது வாழ்வில் கொண்டுவந்து, ஒரு முழுமையான வாழ்வினை வாழ வேண்டும் என்பது எனது விருப்பம் மற்றும் ஆசி.

வைரஸை வெல்வோம்

இந்த பெருந்தொற்றுக் காலத்தில், சூழ்நிலையால் நொறுக்கப்பட்டு போகாமல், இதிலிருந்து நாம் வெற்றிகரமாக வெளிவர வேண்டும். மனிதர்களான நம்மால் இது முடியும். இந்த வைரஸ் மனிதர் மூலமாக மட்டுமே இன்னொருவருக்கு பரவுகிறது. மனிதர்கள் சிறு அளவேனும் யோக உணர்வில் இருந்தால், அதாவது, அவர்கள் நிர்பந்தமான உயிர்களாக அல்லாமல், இன்னும் சற்று விழிப்புணர்வானவர்களாக இருந்தால், இந்த கொள்ளை நோயை அதன் வழித்தடத்திலேயே நிறுத்துவது என்பது பெருமளவு நமது கைகளில் இருக்கும். இந்த சர்வதேச யோகா தினத்தில், நம் வாழ்க்கையில் யோகாவினைக் கொண்டுவந்து வைரஸினை வெல்வோம் என்ற உறுதியை எடுப்போம்.