ஈஷா சமையல்

‘பேக்கிங்க்’ செய்யப்படாத (சுடப்படாத) மாம்பழ பாதாம் டார்ட்லெட்

தேவையான பொருட்கள்:

(6 டார்ட்லெட்களுக்கு)

½ கப் வெண்ணெய்

½ கப் கோதுமை மாவு

½ கப் கோக்கோ பவுடர்

¾ கப் நன்றாக பொடித்த வெல்லம் (அ) பொடித்த சர்க்கரை

500 கிராம் பாதாம்

3-4 அல்ஃபோன்சோ மாம்பழங்கள்

‘டார்ட்லெட்’ அச்சு கிடைக்காவிட்டால், ‘பட்டர் பேப்பர்’ (வெண்ணெய் காகிதம்) மற்றும் ‘டின் ஃபோயில்’ (மெல்லிய தகர தகடு) உபயோகிக்கவும்.

செய்முறை:

பாதாம் தயார் செய்வது: 

1. பாதாம் பருப்பை, ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதிக்கின்ற வெந்நீரில் 1 நிமிடத்திற்கு விட்டு வைக்கவும்.

2. பிறகு, ஒரு வடிகட்டி மூலம் தண்ணீரை வடித்துவிட்டு, பாதாமை உலர்ந்த, சுத்தமான துணியால் துடைக்கவும்

3. பிறகு, பாதாம் பருப்பின் தோலை கை விரல்களின் உதவியால், மெதுவாக எடுக்கவும்.

4. தோல் எடுத்த பாதாமினை மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.


மாம்பழ கூழ் தயார் செய்வது:

1. மாம்பழங்களை வெட்டி, கொட்டையை தவிர்த்து அதன் சதைப்பற்றான பகுதியை மட்டும் ஒரு ஸ்பூனால் எடுக்கவும்.

2. அந்த மாம்பழ சதையை மிக்ஸியில் இட்டு கூழாக செய்து கொள்ளவும். அதிகப்படியான தண்ணீர் இருந்தால் ஒரு ஸ்பூனால் அகற்றிவிடவும்.


டார்ட்லெட் மாவு செய்முறை:

1. ஒரு ‘நான் ஸ்டிக்’ வாணலியை குறைந்த தீயில் ஒரு நிமிடம் வைத்து, அதில் கோதுமை மாவை சேர்த்து, ஒரு மரக் கரண்டியினால் மாவின் கலர் சிறிது பொன்னிறமாக மாறும் வரை கிளரவும். பிறகு, மாவை வாணலியிலிருந்து எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும்.

2. ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், வெல்லப் பொடி (அ) சர்க்கரை பொடியையும் சேர்த்து கையினால் நன்றாக கலக்கவும். (இல்லை, மிக்ஸியில் வேண்டுமானாலும் அடித்து எடுத்துக்கொள்ளலாம்.) வெண்ணெய் இள மஞ்சள் நிறத்துடன், பஞ்சுபோல் வரும்வரை கலக்கவும். (வெல்லம் பயன்படுத்தினால், அதை சலித்துக் கொள்ளவும்).

3. அதில் கோதுமை மாவையும், கோகோ பவுடரையும் சேர்த்து, மீண்டும் நன்றாக கலக்கவும்.

4. சிறிதளவு பொடித்த பாதாமை அலங்கரிப்பிற்காக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மாவு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

5. ஒரு ‘நான் ஸ்டிக்’ வாணலியை குறைந்த தீயில் ஒரு நிமிடம் வைத்து, மாவுக் கலவையை அதில் சேர்க்கவும். ஒரு மரக் கரண்டியினால், மாவுக் கலவையை கிளறவும். வெப்பம் எல்லா இடத்திலும் பரவி, ஒரே மாதிரி வேகும் வகையில், அதை கிளறவும். பாதாம் நன்றாக வெந்து, நல்ல வாசனை வரும் வரை தொடர்ந்து 5-7 நிமிடங்கள் வரை கிளறவும்.

6. மாவுக் கலவையை வாணலியிலிருந்து எடுத்து, 6 பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் தனித்தனி ‘டார்ட்’ அச்சில் போடவும்.

டார்ட் அச்சு உங்களிடம் இல்லையென்றால் பரவாயில்லை; ஒரு 10 அங்குல மெல்லிய தகர தகடை, 1 அங்குல மடிப்புக்களாக, நீளவாக்கில் மடிக்கவும். பின், அதன் இரண்டு முனைகளையும் ஒரு வட்ட வடிவில் சேர்த்து ஸ்டேப்ளர் அடித்து விடவும். பிறகு அதனை ஒரு மடித்த ‘பட்டர் பேப்பர்’ மேல் வைத்தால், உங்கள் ‘டார்ட்’ ரெடி.


‘டார்ட்லெட்’ தயார் செய்முறை:

1. ஒரு ‘நான் ஸ்டிக்’ வாணலியை குறைந்த தீயில் வைத்து, ‘பட்டர்’ பேப்பரை அதில் வைக்கவும். இது, ‘டார்ட்லெட்’ ன் அடிப்பகுதி கருகி விடாமல் காக்கும். ‘டார்ட்லெட்’ அச்சுக்களை வாணலியில், ‘பட்டர்’ பேப்பரின் மேல் வைக்கவும்.

2. சுமாராக 4-5 நிமிடங்கள், டார்ட்லெட் நன்றாக வெந்து, மாவு நன்றாக திடமாகிற வரையில் வேக விடவும். ஒரே வாணலியில், பல டார்ட்லெட்களை வேக வைக்கலாம்.

3. வெந்தவுடன், அச்சுக்களை வாணலியிலிருந்து எடுத்து, மெதுவாக டார்ட்லெட்டின் அடிப்பகுதியை, அச்சுக்களிலிருந்து எடுத்து விடவும். பிறகு அதன் மீது மாம்பழக் கூழை ஊற்றி, பொடித்த பாதாமைத் தூவி அலங்கரிக்கவும். அதன்பின் ‘டார்ட்லெட்’களை, அவை திடமாவதற்காக, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, டார்ட்லெட்டுகளை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.