பகிர்வுகள்

புராஜெக்ட் சமஸ்கிருதி: ஈஷா சமஸ்கிருதி எனும் வியப்பூட்டும் உலகிற்கு ஓர் அறிமுகம்

முழுமையான பரதநாட்டிய கலைஞராக பரிணமித்துள்ள ராதே ஜகி, ஈஷா சமஸ்கிருதி மாணவர்களால் புதிதாக ஆன்லைனில் வழங்கப்படவுள்ள புராஜெக்ட் சமஸ்கிருதி பற்றிய ஒன்பது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

ராதே ஜகி

புராஜெக்ட் சமஸ்கிருதி என்றால் என்ன?

ராதே: ஈஷா சமஸ்கிருதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு வழியாக புராஜெக்ட் சமஸ்கிருதி இருக்கப்போகிறது. நாட்டிய கலைஞர்கள், யோகா பயிற்சியாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் களரிப்பயட்டு¹ மாணவர்கள் என தங்கள் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனம் கவரும் திறனுள்ள ஒரு பட்டாளமே இங்கே நம்மிடம் இருக்கிறது. தங்களின் ஆறு அல்லது ஏழு வயதில் இந்த குழந்தைகள் ஈஷா சமஸ்கிருதியில் இணைவதிலிருந்து அவர்களின் மொத்த வாழ்க்கை முறையுமே முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. இவர்கள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சந்திக்கும் சூழ்நிலைகள் மற்ற சாதாரண பள்ளிகளில் பயிலும் குழந்தைகளிடமிருந்து வித்தியாசப்படுகிறது. எனவே, அவர்கள் கற்றுக் கொண்டுள்ள அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக புராஜெக்ட் சமஸ்கிருதி இருக்கும்.

[1] களரிப்பயட்டு, ஒரு தொன்மையான தென்னிந்திய தற்காப்பு கலை வடிவம்

புராஜெக்ட் சமஸ்கிருதி முதலில் என்ன வழங்க இருக்கிறது?

ராதே: இப்போது நாம் முதலில் ஆன்லைன் வழியாக துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். முதல் தொகுதியாக உச்சாடனங்கள் வழங்கப்பட இருக்கிறது, இதில் சமஸ்கிருதி மாணவர்கள் உச்சாடனங்களை கற்றுக்கொடுக்க இருக்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொடுக்கும் முறை நாம் ஈஷாவில் மற்ற வகுப்புகளை வழங்குவதைப் போலவே இருக்கப்போகிறது. இது வெறுமே வார்த்தைகளை கற்றுக்கொள்வது பற்றியது மட்டுமல்ல. வெளியே மக்கள் பலரும் உச்சாடனம் அல்லது பஜனை வகுப்புகளுக்கு செல்கிறார்கள், வெறுமே பஜனை மட்டும் கற்றுத் திரும்புகிறார்கள். ஆனால் நமது உச்சாடன வகுப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ள விதம் எப்படி இருக்கிறது என்றால், ஒலியின் தாக்கத்தைப் பற்றி, உச்சாடனத்தின் தரம் பற்றி மற்றும் வெவ்வேறு விதங்களில் உங்கள் தேடலில் ஒரு உச்சாடனம் எப்படி தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என்பது பற்றி சத்குரு சற்று பேசுவதும் இடம்பெற இருக்கிறது.

சமஸ்கிருதி குழந்தைகள் அவர்களின் மிக இளம் வயதிலிருந்தே உச்சாடனம் செய்து வருகிறார்கள். அவர்களது வகுப்புகளில் ஒரு பகுதியாக மட்டும் அவர்கள் உச்சாடனம் செய்வதில்லை, சில குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் போதும் அவர்கள் உச்சாடனம் செய்கிறார்கள். எனவே இது அவர்களது அமைப்பிலேயே ஒரு பாகமாகவும், அவர்கள் இயல்பாக செய்யும் ஒன்றாகவும் இருக்கிறது.

கற்றுக் கொடுப்பதில் ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள் எந்த வகையில் தனித்துவமாக தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்?

ராதே: அவர்களை கற்றுக்கொடுப்பவர்களாக நாம் பார்ப்பதற்கு, அவர்களது அனுபவம் மற்றும் அவர்கள் சமஸ்கிருதத்தை புரிந்து கொண்டிருப்பதும் காரணமாக இருக்கிறது. உச்சரிப்பில் உள்ள வேறுபாடுகளை அவர்களால் அடையாளம் காண முடிகிறது. இது என்ன என்பது பற்றிய புரிதல் அவர்களிடம் கல்வியறிவு மற்றும் அனுபவப்பூர்வமாக என இரண்டு வகையிலும் இருக்கிறது. எனவே நாம் இப்போது உச்சாடனம் தொகுதியை முதலில் துவங்கி இருக்கிறோம். அதன் பிறகு சிறிய பக்தி பாடல்களை வழங்கத் துவங்குவோம். இவை பொதுவான, ஏற்கனவே ஈஷா தியான அன்பர்கள் அறிந்திருக்கும் பாடல்களாக இருக்கலாம். அதன் பிறகு மெதுவாக பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வாய்ப்பிருப்பின் பாரம்பரிய களரி வகுப்பும் கூட வழங்கப்படும்.

எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டுவிட்ட ஈஷா சமஸ்கிருதியின் சில நிகழ்ச்சிகளைக் காணவும் வாய்ப்பு இருக்குமா?

ராதே: புராஜெக்ட் சமஸ்கிருதியில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான தனிப்பிரிவும் இருக்கிறது. இதுவரை அவர்கள் மஹாசிவராத்திரி மற்றும் யக்ஷாவில் நிகழ்த்தி வந்துள்ள கண் கவர் நிகழ்ச்சிகள் இதன் ஒரு பகுதியாக இருக்கும். இந்த திறன்மிக்க கலைப் பிரிவினருக்கு ஆதரவாக பல விஷயங்கள் தேவைப்படுகிறது, உதாரணத்திற்கு சமஸ்கிருதி வளாகத்திற்குள்ளேயே அவர்களுக்கான இடம் போன்றவை தேவைப்படுகிறது. அவர்கள் பல விஷயங்களை உருவாக்க இருக்கிறார்கள் - தங்கள் திறனை வெளிப்படுத்தும் விதமாக சிறிது களரி, இசை, நடனம் மற்றும் சில மேடை நாடக பாணி தயாரிப்புகளும் வரவிருக்கிறது. அவர்கள் என்ன செய்தாலும், அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு களம் இருக்கிறது என்பதை நாம் உறுதிசெய்ய விரும்புகிறோம்.

நாம் ஒரு விதமான பாதுகாக்கும் உணர்வுடனேயே ஈஷா சமஸ்கிருதி மாணவர்களை கையாள இருக்கிறோம். ஏனென்றால் அவர்கள் சற்று வேறு விதமாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை யார் அணுக முடியும் என்பதில் நாம் சற்று எச்சரிக்கையாகவே இருக்க விரும்புகிறோம். அற்புதமான இசைக்கலைஞர்களும், நாட்டிய கலைஞர்களும் இங்கே வந்து கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு அவர்களை அணுகும் வாய்ப்பில்லாமல் இருக்கிறது, இது சரியானதும்கூட, ஏனென்றால் அவர்கள் மிக இளையவர்களாக இருக்கிறார்கள். எனவே பொதுமக்கள், நமது ஈஷா தியான அன்பர்கள் மற்றும் அவர்களது வாழ்வின் சில அம்சங்களில் பங்கேற்க விரும்பும் அனைவரையும் இணைத்துக்கொள்ளும் ஒரு வழியாக இது இருக்கிறது.

ஈஷா சமஸ்கிருதியில் என்ன நடக்கிறது என்பது பற்றி நாங்கள் வேறு எப்படி அறிந்துகொள்ள முடியும்?

ராதே: ஈஷா சமஸ்கிருதியை நிறைவு செய்துள்ள முன்னாள் மாணவர்கள் அவர்கள் வளர்ந்த சூழ்நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள். அவர்களது பகிர்வுகள் தனித்தன்மையானவை. ஏனென்றால் அவர்களுக்கு பதினெட்டு வயதே பூர்த்தி அடைந்திருந்தாலும், அவர்கள் பகிர்ந்து கொள்வதைப் பார்த்தால் நீண்ட நாட்களாக தேடலில் இருப்பவர்கள் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவார்கள், கேட்பதற்கே அற்புதமாக இருக்கும். இதற்கான காரணம், அவர்களது சாதனா அன்றாட செயல்முறையாக இருக்கிறது என்பதுதான். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்கள் சாதனாவைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள், கிட்டத்தட்ட அவர்களில் ஒரு பாகமாகவே அவர்களது சாதனா மாறியிருக்கிறது.

ஈஷா சமஸ்கிருதியுடன் உங்கள் ஈடுபாடு என்ன?

ராதே: சமஸ்கிருதி குழந்தைகளுடன் இணைந்து வேலை செய்ய எப்போதுமே எனக்கு விருப்பம் இருந்தாலும், சமீப காலம் வரை பல்வேறு காரணங்களால் அது முடியாமலேயே இருந்தது. என்னுடைய தனிப்பட்ட நடன வாழ்விலும் கூட, பயணங்கள் மேற்கொண்டு நடனமாடுவதாகவே இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் காவேரி கூக்குரல் இயக்கத்துடன் ஈடுபாட்டுடன் இணைந்தேன். எனவே தொடர்ந்து சமஸ்கிருதிக்கு போதுமான நேரம் வழங்க என்னால் முடியாமலே இருந்தது. கடந்த வருடம் ஊரடங்கு அமலான போது, சில மாதங்கள் சமஸ்கிருதி மாணவர்களில் ஒரு பிரிவினருக்கு நான் நடனம் கற்றுத் தருவதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது முதல், ஆசிரமத்தில் உள்ள அனைவரைப் போலவும் மெதுவாக என் ஈடுபாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உலகளாவிய இந்த தளம் மாணவர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது?

ராதே: மக்கள் இந்த வகுப்புகளில் பங்கேற்கும் போது, சமஸ்கிருதி குழந்தைகள் எத்தகைய திறன் மிக்கவர்கள் என்பதை பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன், அவர்கள் இன்னும் பலவற்றை சாதிக்க வல்லவர்கள். மக்கள் அவர்களிடம் இன்னும் திறந்த நிலையில் இருப்பதற்கு இது ஒரு வழியாக இருக்கும். ஏனென்றால் இப்போது ஈஷா சமஸ்கிருதியில் அவர்களது காலம் பூர்த்தி அடைகையில், அவர்களது வாழ்வின் அடுத்த பகுதியை கட்டமைத்துக்கொள்ள அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி தேவைப்படுகிறது.

உதாரணத்திற்கு, சிலர் தனித்துவமான நடன கலைஞராக விரும்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களது திறனை வெளிப்படுத்த போதுமான ஒரு களம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், அதே சமயத்தில் அவர்கள் சிறிது பொறுப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் குறிப்பாக சிலரிடம் கற்றுக்கொள்ள விரும்பினால், சமஸ்கிருதி ஒரு குறிப்பிட்ட ஆசிரியரை அடையாளம் காண உதவும். அவர்கள் ஆசிரியராக விரும்பினால், புராஜெக்ட் சமஸ்கிருதி அவர்கள் ஆசிரியர்களாக இருக்க ஒரு தளமாக விளங்கும். நம்மோடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பினால், இந்த புராஜெக்ட் சமஸ்கிருதியின் ஒரு அங்கமாக உருவாக்கப்படும் தனித்திறன் வெளிப்படுத்தும் குழுவில் இடம் பெறுவார்கள்.

எனவே புராஜெக்ட் சமஸ்கிருதியானது, சமஸ்கிருதி மாணவர்களுக்கு அந்த இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கப் போகிறது. ஏனென்றால் அவர்கள் வெளியே சென்று சுயமாக தங்களுக்கு தேவையானதை நடத்தும் வரை அவர்களுக்கான பக்கபலமாக இருக்கும்.

புராஜெக்ட் சமஸ்கிருதி வழங்கும் இந்த அர்ப்பணிப்புகள் மக்களின் வாழ்வை எப்படி மேம்படுத்தும்?

ராதே: பாரம்பரிய இசை, நடனம் மட்டுமின்றி உச்சாடனங்கள் கூட இதற்குமுன் இப்படிப்பட்ட ஒரு அமைப்பில் வழங்கப்பட்டது இல்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் ஒரு பாரம்பரிய இசைக் கலைஞராக விரும்பினால், அடிப்படைகளில் வல்லவர் என்று உங்களை அழைத்துக்கொள்ளவே பலப்பல வருடங்கள் தேவைப்படுகிறது. நாம் இதை எப்படி வழங்க விரும்புகிறோம் என்றால், நீங்கள் பெரிய இசைக் கலைஞராக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உங்களுக்கு இல்லாவிட்டாலும், சில அடிப்படையான பக்தி பாடல்கள் அல்லது ஒரு ஸ்ருதியைப் பாடுவது போன்ற அடிப்படையான முதல் சில படிகளை எடுப்பதற்கு ஈஷா சமஸ்கிருதி உங்களுக்கு உதவும்.

இப்போது, தங்களின் அன்றாட வாழ்வில் அழகான ஒன்று நிகழ வாய்ப்பு இருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். கலை என்பது ஒரு கலாச்சாரமாக ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் இடம் பெறவேண்டும். இன்று மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்கள்தான் இந்த பாரம்பரிய கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்; ஒரு சிறு மக்கள் குழு மட்டுமே இதை கேட்பதற்கும், கவனம் செலுத்தக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். நமது பாரம்பரிய கலைகளின் இயல்பே, நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இந்த மாணவர்களால் கவனம் செலுத்த முடியும். அவர்கள் அமர்வது அல்லது நிற்பதும் கூட மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசப்படுகிறது. ஏனென்றால் அவர்களது இளம் வயதிலிருந்தே அவர்கள் இப்படி பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள், இதை மற்றவர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் திறனும் அவர்களிடம் இருக்கிறது. எனவே மிக இளம் வயதிலிருந்து அவர்களின் தினசரி வாழ்வாகவே மாறிவிட்ட இந்த அனைத்து கலாச்சார அம்சங்களையும் ஒவ்வொருவரின் தினசரி வாழ்விலும் எடுத்து வருவதற்கான ஒரு வாய்ப்பாகவே புராஜெக்ட் சமஸ்கிருதி இருக்கும்.

நாங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

ராதே: இந்த குழந்தைகளின் திறமை அளவிட முடியாதது. இப்போது அவர்கள் திறமைக்கு தக்கவாறு ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதை நமது பொறுப்பாக நான் பார்க்கிறேன். அதோடு, இந்த குழந்தைகள் எந்த தரத்தில் தங்களை வெளிப்படுத்துவார்களோ, அதே தரத்தில் அவர்களுக்கு உதவும் குழுவினரான நாங்களும் எங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறோம். அற்புதமான நடன கலைஞர்களாக, அற்புதமான இசைக்கலைஞர்களாக, அசத்தும் களரி பயிற்சியாளர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களது திறனை உலகிற்கு நாம் அர்ப்பணிக்கும்போது, அவர்கள் பிரகாசிப்பதை நீங்கள் உண்மையிலேயே காணும் விதத்தில் இது நிகழ வேண்டும் என்றுவிரும்புகிறோம்.