சத்குரு எக்ஸ்க்ளூசிவ்

மூலாதாரம் –

உங்கள் உணர்தல் மற்றும் ஆயுளை நீட்டிப்பதற்கான இரகசிய அடித்தளம்

சத்குரு எக்ஸ்க்ளூசிவ்-ன் சக்ரா தொடரில், மூலாதார சக்கரத்தின் முக்கியத்துவம் குறித்தும், பெரிதாக வெளிச்சத்திற்கு வராத காயகல்பத்தின் விஞ்ஞானம் பற்றியும், மூலாதாரத்தின் மீது ஆளுமை பெறும்போது அதிசய மனிதனாக செயல்படக்கூடிய ஆற்றலை ஒருவர் பெறுவது பற்றியும் பேசுகிறார் சத்குரு. சக்கரங்கள் மற்றும் அதன் ஆச்சரியமூட்டும் சாத்தியங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள சத்குரு எக்ஸ்க்ளூசிவ் வாருங்கள்.

மூலாதாரம் மற்றும் காயகல்பம் 

சத்குரு: மூல-ஆதாரம் என்றால் அடித்தளம் அல்லது அடிப்படையானது என்று அர்த்தம். நமது உடலின் கட்டமைப்பிற்கு மூலாதாரம் அடித்தளமாக இருக்கிறது. இந்த அடித்தளம் உறுதியாக நிலைபெறாவிட்டால், ஒருவரால் ஆரோக்கியம், நல்வாழ்வு, சமநிலை மற்றும் முழுமை நிலையை உணரமுடியாது. இந்தத் தன்மைகள் அனைத்தும், ஒரு மனிதர் மேலுயர்ந்து செல்ல முயற்சிப்பதற்கு அத்தியாவசியமாக இருக்கின்றன. கால்களில் நடுக்கம் உள்ள ஒருவரை உங்களால் ஏணி மீது ஏறச்செய்ய முடியாது, அவரும் மேலே ஏறுவதை விரும்பமாட்டார். வாழ்க்கையினூடே திறமைகரமாகவும் ஆற்றலுடனும் நடந்துசெல்ல, ஒருவரின் உடலிலும் மனதிலும் ஒருவித உத்தரவாதம் தேவைப்படுகிறது.

யோகா முழுவதுமே, உடலை வைத்து செய்யக்கூடிய விஷயங்கள் முதல், ஒருவர் தன் உச்சநிலையை எட்டுவது வரை, மூலாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்தது. மூலாதாரத்துடன் தொடர்புடைய ஒரு பரிமாணம் காயகல்பம் என்று அழைக்கப்படுகிறது. காயா என்றால் உடல், கல்பா என்றால் நீண்டகாலம் - அதை “யுகம்” என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். காயகல்பம் என்பது, உடலை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவதைக் குறிக்க முடியும், அல்லது அதன் வாழ்நாளை நீட்டிப்பதைக் குறிக்க முடியும். காயகல்பப் பயிற்சி செய்து, பலர் உடலின் மிக அடிப்படையான மூலப் பொருளான பூமித் தத்துவத்தை ஆளுமைக்குள் எடுத்துக் கொண்டமையால், நூற்றுக்கணக்கான வருடங்கள் உயிர் வாழ்ந்தனர். பஞ்சபூதங்களில், பூமித் தத்துவம்தான் நமக்கு ஆதாரம் தருகிறது.

பூதசுத்தி பயிற்சி

காயகல்பம் மற்றும் பூமித் தத்துவம்

பூமித் தத்துவத்தை ஆளுமைக்குள் எடுப்பது, பூதசுத்தியின் ஒரு அம்சமாகும். அது உங்களுக்கு வேறு சில ஆற்றல்களையும் தருகிறது- பூமியும் மண்ணும் நமக்கு வழங்கக்கூடிய விஷயங்களை கிரகித்துக்கொள்ளும் திறமை படைத்தவராய் மாறுகிறீர்கள். வாழ்வின் ரசத்தை மனித உடலமைப்பிற்குள் எடுத்துக்கொள்ள திடப்படுத்தப்பட்ட பாதரசத்தைப் பயன்படுத்துவது ஒரு வழி. பாதரசம், இந்த பூமியினுடைய ‘ரசம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இயற்கையில், சாதாரண வெப்ப நிலைகளில் திரவமாக இருக்கும் பாதரசத்தை திடப்படுத்தும் வழிமுறை, காயகல்பத்தின் அத்தியாவசியமான அங்கமாகும்.

காயகல்பம் என்பது, காலப்போக்கில் இயற்கையாகவே தேய்ந்து சீர்குலையக் கூடிய உடலின் அம்சங்களை உறுதிப்படுத்துவதன் மூலம், இந்த தேய்மானத்தின் வேகத்தை மிகவும் குறைத்து, உங்களை காலத்தையும் வயதையும் கடந்தவரைப் போல தோன்றச் செய்வது. ஏனென்றால், உங்களது காயம் ஒரு கல்பம் நீடிக்குமளவு உறுதியாக இருக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு யுகத்திற்கு வாழக்கூடிய அளவு உங்கள் உடல் உறுதியாக இருக்கிறது. இதை செய்தவர்கள் பலர், ஆனால் அதற்கு அதிகப்படியாக உழைப்பை வழங்க வேண்டும்.

அமிர்தமும் பீனியல் சுரப்பியும்

இத்திறமைகள் பல்வேறு விதங்களில் வருகின்றன. சிவன் தென்திசை நோக்கித் திரும்பும் கதை, அவனுடைய மூன்றாவது கண் ‘தெற்கு’ நோக்கித் திரும்புவதையும் குறிக்கிறது. அவனுடைய மூன்றாவது கண் இரு கண்களுக்கிடையே கீழே நோக்கிய மறுகணம், வேறு எவரும் பார்த்திராத விஷயங்களை சிவன் பார்த்தார். இது காயகல்பத்தில் ஒரு அம்சம். நான் சொல்லப்போவது ஒருவிதத்தில் சரியாக இருக்காது என்ற போதும், இன்றைய காரண அறிவு சார்ந்த மனங்களுக்குப் புரிவதற்காக இப்படிச் சொல்கிறேன். பீனியல் சுரப்பியை, சற்று கீழே அல்லது ‘தெற்கு’ நோக்கி நகர்த்த, ஆன்மீக சாதனாவில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இது ஒரு குறிப்பிட்ட விதத்தில் நிகழ்ந்தால், யோகமரபில் அமிர்தம் என்று குறிப்பிடப்படும் பீனியல் சுரப்பியின் சுரப்புகளை, உடலமைப்பை பலப்படுத்தி ஆயுள்காலத்தை நீட்டிக்க அல்லது பரவச உணர்வை உருவாக்க, பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு போதை மருந்தைப் போல, அது உங்களை விண்ணில் மிதப்பதுபோல் செய்யவல்லது. அல்லது இந்த அமிர்தத்தை, உங்கள் கிரகிப்புத் தன்மையை மேம்படுத்தவோ அல்லது மற்ற அனைத்தும் உங்களை ஊடுருவிச் செல்லும் வகையில் காற்றைப் போல லேசாக ஆகவோ பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போது காற்று உங்கள் நாசிகள் வழியாக மட்டுமே உடலிற்குள் செல்கிறது. அது செல்லாவிட்டால், நீங்கள் சென்றுவிடுவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் ஆனந்தமாக இருக்கும் ஒரு கணப்பொழுதில் இதை அனுபவித்திருக்க முடியும். தென்றல் வீசுகையில் இப்படி நின்றிருந்தால், காற்று உங்கள் வழியாக ஊடுருவிச் செல்வதுபோல ஒரு உணர்வு இருந்திருக்கும். உங்கள் உடலமைப்புக்கு நுண்ணுணர்வு கொண்டு வருவதற்கு இந்த அமிர்தத்தை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் நூறு சதவிகிதம் இவ்வாறு காற்றைப்போல லேசாக ஆகிவிட முடியும்.

அமிர்தம் ஒன்றே, தாக்கங்கள் பல

பீனியல் சுரப்பியின் சுரப்புகளை மூன்று அடிப்படையான விதங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒன்று, உடலுக்கு வலுவூட்டி பாறையைப் போல செய்துகொள்ள முடியும், இதனால் பெரும்பாலான மனிதர்கள் அமானுஷ்யம் என்று எண்ணும் அளவு நீங்கள் நீண்டகாலம் வாழமுடியும். இன்னொரு வழி, மிகவும் போதையிலும் பரவசத்திலும் திளைக்கும் ஒரு நிலையை உங்களுக்குள் கொண்டு வந்தால், நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பது உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. மூன்றாவது வழியானது, உங்களை காற்றைப்போல செய்துகொள்வதன் மூலம், உங்கள் கிரகிப்புத்திறன் உச்சத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஏனெனில் அப்போது உங்களுக்குள் எவ்வித தடையும் இருக்காது. பொதுவாக காயகல்பம், உடலை பலப்படுத்தி அதன் ஆயுளை நீட்டிக்கவே இந்த அமிர்தத்தைப் பயன்படுத்துகிறது.

அமிர்தம் அல்லது பீனியல் சுரப்பியின் சுரப்புகள், உங்கள் கிரகிப்புத் திறனையும் மேம்படுத்த முடியும். உங்கள் கிரகிப்புத் திறனை நீங்கள் மேம்படுத்தாவிடில், உங்கள் வாழ்க்கை எவ்விதத்திலும் மேம்படாது.

பதங்காசனா

மூலாதாரம் - இன்னும் அதிகமானதற்கோர் அடித்தளம்

மூலாதாரம் மற்றும் அதன் மீதான உங்கள் சாதனா நீங்கள் இங்கே வாழ்வதற்கு மிக முக்கியம். ஏனெனில் ஒரு மனிதனால் மட்டுமே இங்கே வெறுமனே வாழ்வது மட்டும் போதாது என்பதை உணர முடியும். மற்ற எந்த உயிரினங்களும், அமீபாவிலிருந்து யானை வரை, எதுவும் இதை உணரவில்லை. ஏனெனில், அது அவற்றின் இயல்பிலேயே இல்லை. உயிர்வாழ்வதே போதுமானது என்பதே அவற்றின் உணர்வு. ஒரு மனித உயிரால் மட்டுமே இதை உணர முடியும். எனினும் ஒவ்வொருவருமே உண்மையில் உணர்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது.