பிலிப் கோல்ட்பர்க்: கர்மாவைப் பற்றிய உங்கள் நூலில் கர்மா குறித்து பொதுவாக அறியப்படும் சில தவறான புரிதல்களை நீங்கள் களைந்துள்ளதைக் கண்டு நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அதில் ஒன்று, பெரும்பாலான மக்கள் கர்மாவை வெகுமதி மற்றும் தண்டனை அளிக்கும் ஒரு அமைப்பாக பார்க்கிறார்கள் - ஏதோ ஒரு வகையான நீதித்துறையைப் போல. மற்றொன்று, அனைத்தும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்ற நோக்கில் கர்மாவை ஒரு விதமான விதிக்கப்பட்டுவிட்ட ஒன்றாக பார்ப்பது. ஆனால் உண்மை இதற்கு முற்றிலும் நேர்மறையானது. இவற்றைக் குறித்து நீங்கள் விளக்க முடியுமா?
சத்குரு: நீங்கள் "நீதித்துறை" என்ற வார்த்தையை உபயோகித்தது வியப்பூட்டுகிறது. ஆம், மிகச் சரியாக மக்கள் அவ்வாறு தான் நினைக்கிறார்கள். பல நாடுகளின் நீதித்துறையில், நீங்கள் என்ன செய்திருந்தாலும், அது பற்றி வாதாடும் வாய்ப்பும், தன்னிலை விளக்கமளிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் நீங்கள் இப்போது கூறும் இந்த வகையான நீதித்துறையில் உங்களின் பங்கு என்று ஏதும் இல்லை - அவர்கள் உங்கள் தலையில் தட்டப் போகிறார்கள் அல்லது உங்களை தூக்கில் தொங்கவிடப் போகிறார்கள். இது ஒரு கட்டைப் பஞ்சாயத்து போன்றது, நீதித்துறை அல்ல. நீங்கள் செய்ததாக அவர்கள் நினைத்த செயல்களுக்கு உங்களை தூக்கில் தொங்கவிடும் கட்டைப் பஞ்சாயத்தை போன்றதா கர்மா? அப்படி ஏதும் இல்லை. நம்மில் உருவாகும் பல்வேறு விதமான நினைவுகளின் கலவையாக ஒரு மனிதர் இருக்கிறார். இது தொன்று தொட்டு வரும் பரிணாம பதிவுகளில் இருந்து துவங்குகிறது - அமீபாவில் தொடங்கி இன்று வரை நிகழ்ந்திருக்கும் எல்லா பரிணாம மாறுதல்களும் உங்கள் அமைப்பில் ஏதோ ஒரு வகையில் பதிவாகியுள்ளது.