2023 மார்ச் 7ம் தேதி பௌர்ணமி இரவில், நேபாளத்தின் காத்மாண்டுவில், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பான லிங்கபைரவி பிரதிஷ்டையில், சத்குருவுடன் 3000க்கும் மேற்பட்ட அன்பர்கள் பங்கேற்று, நிகழ்வை அனுபவித்து திளைத்தனர்.
பசுந்தரா நகரத்தின் இதயத்தில் அன்று பிரகாசமாக உதித்த கதிரவன், நேபாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லிங்கபைரவி பிரதிஷ்டையில் பங்கேற்க வாயிலில் ஆவலுடன் வரிசையில் நின்றிருந்த பங்கேற்பாளர்களின் வெள்ளை மற்றும் சிவப்புநிற ஆடைகளுக்கு தனது ஜொலிக்கும் கதிர்களால் வண்ணம்கூட்டினார்.
பங்கேற்பாளர்கள் அங்கே அளவில் சிறிய, அதேசமயம் தனித்துவமான ஓர் இடத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது. அது ஒருகாலத்தில் பரந்த இதயமுள்ள ஒரு பெண்மணியின் இல்லமாக இருந்தது. அவர் தனது வீட்டை தேவி கோவிலாக மாற்றுவதற்காக நன்கொடை அளித்திருக்கிறார்.
அதன் நேபாளி-பாணி கட்டிட வடிவமைப்பின் நேர்த்தியான நுணுக்கங்கள் அந்த இடத்தை வசீகரிக்கும் அழகுடன் காட்சிப்படுத்துகிறது.
லிங்கபைரவி ஸ்துதி உச்சாடனம் காற்றில் நிறைந்திருந்த அவ்விடத்தில், உற்சாகமும் உயிரோட்டமும் சூழ்ந்திருந்ததால், ஆனந்தமும் பரவசமும் பொங்கிப்பெருகியது.
சரியாக மாலை 6:30 மணியளவில், மேளதாளங்களும் சங்குகளின் முழக்கமும் சத்குருவின் வருகையையும் தேவியின் நுழைவையும் அறிவித்தது.
நேபாள உபாசகர்களால் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்ட தேவியின் ஒரு பாதரச யந்திரத்துடன் கோவிலை நோக்கி நடந்தார் சத்குரு. பங்கேற்பாளர்களை சத்குரு கடந்து சென்றபோது, அங்கே தீவிரத்தின் ஓர் அலை அவர்களை மூழ்கடித்தது.
கோவிலின் பிரதான வாயிலுக்கு அவர் வந்தவுடன், திரைச்சீலைகள் திறக்கப்பட்டன, உட்புற கருவறை முதல்முறை காணக் கிடைத்தது. அங்கு தேவியின் உருவம் "ஜெய் பைரவி தேவி" என அச்சிடப்பட்ட சிவப்புநிறத் துணியால் மூடப்பட்டிருந்தது.
மேலும் குறிப்பிட்ட அறிமுகம் ஏதும் இன்றி, தேவிக்கு ஆரத்தி அர்ப்பணித்து, தேவியின் முன்பாக யாக நெருப்பை மூட்டி சத்குரு பிரதிஷ்டையைத் தொடங்கினார்.
கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு செயல்முறையை வழங்கி பங்கேற்பாளர்களை சத்குரு வழிநடத்தினார். குறிப்பிட்ட பீஜ மந்திரங்களை[1] உச்சரித்தபடி, கடிகார திசையிலும் எதிர்-கடிகார திசையிலும் கை அசைவுகளைச் செய்யக்கூடிய அந்த செயல்முறை, அந்த சூழலை சக்தியதிர்வுகளால் வெடிக்கச் செய்தது.
ஈஷா இசைக்குழுவான சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் துடிப்புமிக்க தாள வாத்தியங்களுடன், உயிரோட்டமிக்க தேவி உச்சாடனங்களும் பக்தி கீர்த்தனங்களும் அந்த சூழலுக்கு மேலும் அதிர்வூட்டியது.
சில பங்கேற்பாளர்கள் பிரதிஷ்டை செயல்முறையை கவனம்குவித்து உள்வாங்க, மற்றசிலர் கண்களை மூடியபடி, சக்தியதிர்வுகளில் பேரானந்தத்தில் திளைத்தனர்.
பாதரசம், புனித சாம்பல், மஞ்சள், குங்குமம், புற்று மண், வேம்பு, வில்வ இலைகள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி சத்குரு பிரதிஷ்டை செயல்முறையைத் தொடர்ந்தார். கோவிலின் மேல் வைக்கப்படும் ஐந்து கலசங்களுக்கான சக்திமிக்க ஒரு பாதரச அடிப்படையை அவர் உருவாக்கும் செயலில் ஈடுபட்டார்.தேவி உருவத்தின் உள்ளே வைக்கக்கூடிய பிரதான பாதரச யந்திரத்தையும், மூன்றாவது கண்ணையும் சத்குரு நிலைநிறுத்தினார்.
ஏறக்குறைய 3½ மணிநேர முழுமையான தீவிர செயல்முறைக்குப் பிறகு, சத்குரு ஒரு இடைவேளையை அறிவித்தார். செயல்முறை இன்னும் முடிவடையாததால், அந்த இடைவேளையில் மௌனத்தைக் கடைப்பிடித்து, சக்தியதிர்வுகளோடு தேவையான சூழலை பராமரிக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார். 'லிங்கபைரவி லம் வம்' உச்சாடனம் இடைவேளை முழுவதும் எதிரொலித்தது. அதேசமயம், பீடத்தின் மீது தேவி நிலைநிறுத்தப்பட்டு திரைச்சீலையால் மூடப்பட்டாள்.
இடைவேளை முடிந்ததும், சத்குரு உட்புற கருவறைக்குச் சென்று, தேவியின் திரையை விலக்கியபோது மேள தாளங்களும் உச்சாடனங்களும் அந்த சூழலை நிறைத்திருந்தன.
பங்கேற்பாளர்கள் பேரானந்தத்திலும் அற்புத உணர்விலும் திளைத்தனர். சிலர் பக்தியின் பரவச கண்ணீரில் நனைந்தனர்; சிலர் ஆனந்தப் பெருக்கில் கூச்சலிட்டனர்; சிலர் பேரானந்தத்தில் நடனமாடினர். அந்நிகழ்வு பரவசத்தின் கொண்டாட்டமாக இருந்தது.
சத்குரு தேவிக்கு முதன்முதலாக குங்குமம் இட்டு, வண்ண மலர்மாலையை அணிவித்ததோடு, பாரம்பரிய நேபாளி கழுத்தணி ஆபரணத்தாலும் தேவியை அலங்கரித்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்வில், கோவிலில் வழங்கப்படவுள்ள பல்வேறு அர்ப்பணங்கள் மற்றும் சடங்குகள் பற்றி சத்குரு பேசினார்.
வெளிப்புறத்தில் அமர்ந்திருந்த பங்கேற்பாளர்களுடன் சத்குரு இணைந்திருந்த வேளையில், முதல் பௌர்ணமி அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.
பௌர்ணமி அபிஷேகத்தில் நவநீதம் (வெண்ணெய்), ஹரித்ரம் (மஞ்சள்), சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தேவி அலங்கரிக்கப்படுவதை கோவிலின் நுழைவாயிலில் அமர்ந்தபடி சத்குரு கண்டுகளித்தார். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் அழகான ஒரு நாட்டியத்துடன் தேவிக்கு அர்ப்பணங்கள் வழங்கப்பட்டன.
அர்ப்பணம் முடிந்ததும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஆரத்தி காட்டப்பட்டது.
பிரதிஷ்டையின் நிறைவில், ஒரு சிற்றுரையை சத்குரு நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த கோவிலின் முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். மேலும் தேவியை கவனத்துடன் பராமரிக்க உள்ளூர் தியான அன்பர்களை கேட்டுக்கொண்டார். நேபாளத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கையான குங்குமத்தை விடுத்து, இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட சக்திமிக்க தேவி குங்குமத்தைப் பயன்படுத்துமாறு நேபாள மக்களுக்கு அவர் பரிந்துரைத்தார்.
சத்குரு நிகழ்விடத்தைவிட்டு விடைபெற்றதும், தேவியின் தரிசனம் பெறுவதற்காகவும், பிரசாதம் வாங்குவதற்காகவும் பக்தர்கள் ஆர்வம்கொண்டனர்.