காத்மண்டுவில் லிங்கபைரவி பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, "பைரவி உத்சவம் - தெய்வீக நடனம்" நிகழ்ச்சி, நேபாளத்திற்கு லிங்கபைரவி தேவியை வரவேற்கும் விதமாக ஒரு பெரிய கொண்டாட்டமாக நிகழ்ந்தேறியது. நேபாள மக்களுக்கு தேவியை அறிமுகப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு முன்னாள் பிரதமர் திரு. K.P.ஷர்மா ஒலி மற்றும் மாண்புமிகு துணைப் பிரதமர் திரு.நாராயண் காஜி ஷ்ரேஸ்தா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பக்தி கீர்த்தனங்களையும் நேபாளி பாடல்களையும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழு வழங்க, பக்தியதிர்வுகள் சூழ நிகழ்வு தொடங்கியது. அதைத்தொடர்ந்து, பிரதிஷ்டையின்போது நடைபெற்ற தேவி அபிஷேகத்தின் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. பின்னர், தேவியின் திருவுருவப்படத்திற்கு நேர்த்தியான அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சக்திவாய்ந்த ஆரத்தியுடன் பிரம்மச்சாரிகளும் தன்னார்வலர்களும் நெருப்பு நடனத்தை அர்ப்பணித்தனர்.
இதைத் தொடர்ந்து மாலை நிகழ்வுகளின் சிறப்பம்சங்களில் ஒன்றான "நிறைவே பைரவி"[1] எனும் நாட்டிய நிகழ்ச்சி, தேவி மஹாத்மயத்தின் கீர்த்தனங்களாலும் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களாலும், சம்ஸ்கிருதி மாணவர்களால் ஒரு நடன அர்ப்பணமாக வழங்கப்பட்டது. எங்கும் நிறைந்தவளாக, அறியாமையையும் தீமைகளையும் அழிப்பவளாக மற்றும் பிரபஞ்சத்தை ஒன்றாகப் பிணைக்கும் சக்தியாக உள்ள தேவியின் பல்வேறு அம்சங்களைக் கொண்டாடும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
இந்நிகழ்வில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக ‘சத்குரு சத்சங்கம்' இருந்தது. சத்சங்கத்தின்போது நேபாள மக்களுக்கு லிங்கபைரவியை சத்குரு அர்ப்பணித்தார். அப்போது, ஒருவரின் முழுத்திறனையும் ஆராய்ந்தறிவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்: "நீங்கள் யார் என்பதையும், உங்கள் முழுத்திறன் என்னவென்பதையும் நீங்கள் ஆராய்ந்து அறியாதபோது, அதுவே மிகப்பெரிய இழப்பாகிறது. நீங்கள் அதை இழந்துவிட்டீர்கள் என்பதுகூட உங்களுக்குத் தெரியாது. சாத்தியமாகும் விஷயங்கள் ஒருபோதும் ஆராய்ந்து அறியப்படவில்லை என்றால், இது ஒரு மோசமான இழப்பு."
கோவிலின் கருவறை முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படுவது பற்றியும் சத்குரு பேசினார். இதற்காக முன்வந்து இந்த பொறுப்பை ஏற்குமாறு நேபாளப் பெண்களை அவர் உத்வேகப்படுத்தினார். மேலும், அடுத்த 6-8 மாதங்களுக்குள் நேபாளப் பெண்கள், கோயிலை முழுமையாக தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். "அதற்கு நிறைய பயிற்சியும், அர்ப்பணிப்பும், முயற்சியும் தேவை. அதற்கு நிறைய செயல் செய்யவேண்டும். அதைச் செய்ய நீங்கள் விருப்பமாக இருக்கவேண்டும். மேலும், இது கடினமான வேலை அல்ல. உங்கள் இதயத்தில் பக்தி இருந்தால், எதுவும் கடினமான வேலை அல்ல."
பார்வையாளர்களிடம் இருந்து வந்த பல கேள்விகளுக்கு சத்குரு பதில் வழங்கியதுடன் சத்சங்கம் நிறைவடைந்தது. சனாதன தர்மத்தை[1] பல்லாயிரம் ஆண்டுகளுக்கு எவ்வாறு உயிர்ப்புடன் வைத்திருப்பது என்ற கேள்விக்கு பதிலளித்த சத்குரு நிறம், சாதி, மதம் அல்லது தேசம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து மனிதனுக்குமான பொதுவான புனிதத் தலங்களாக கோவில்களைத் திறந்துவைக்குமாறு, சட்டமியற்றும் தலைவர்களை அவர் வலியுறுத்தினார். வெளிநாட்டினர் கோவில்களுக்குள் நுழைவதை தடுக்கும் நடைமுறை பழங்காலத்தியது என்பதை விளக்கிய சத்குரு, கோவிலின் புனிதத்தை உண்மையாகவே உணர்ந்திட விரும்பும் வெளிநாட்டவர்களை வரவேற்குமாறு அனைத்து கோவில்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.