நேபாளத்தில் இருக்கும் லிங்கபைரவி ஏன் தனிச்சிறப்பு வாய்ந்தவள் என்பதை அவளது பிரதிஷ்டையின்போது சத்குரு வெளிப்படுத்தினார். தெய்வீகப் பெண்தன்மையில் காரண அறிவு கடந்த ஒரு பரிமாணத்தின் ஆற்றலைக் குறித்தும், மற்றும் வாழ்வை மேம்படுத்தவும், அதன் மாயவித்தையை உணரவும் இன்றைக்கு உலகத்தில் ஏன் இது தேவை என்பதைக் குறித்தும் அறிந்துகொள்வோம்.
சத்குரு: இந்தக் கோவில் காத்மண்டூவில் உள்ளது. தேவி கோவில்களுக்கு இந்தப் பகுதி புதிதல்ல; பல தேவி கோவில்கள் உண்டு, ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை நீண்ட காலத்துக்கு முன்னால் நிறுவப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட வழியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்தப் பழமையான கோவில்களுக்கு, தினசரி அர்ப்பணங்களும், பராமரிப்பும் தேவையாக உள்ளது. அந்த வகையில், லிங்கபைரவி ஒரு நவீனப் பெண்மணி; அவளுக்குக் குறைவான பராமரிப்புதான் தேவைப்படுகிறது, ஏனெனில் அவள் அப்படித்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறாள்.
அவள் பாதரசத்தால் கட்டமைக்கப்பட்டு இருக்கிறாள். பாதரசமானது ஒருவிதத்தில் இந்த பூமியிலேயே மிகுதியான நெகிழ்வுத்திறன் உடையது. அவள் குதித்தோடிவிடாமல் இருப்பதற்காக நாம் பாதரசத்தை திடப்படுத்தியுள்ளோம். அது தற்போதைய நிலையை அடைவதற்காக, கடந்த மூன்று மாதங்களாக, மிகுந்த தீவிரமான செயல்முறைக்கு உட்பட்டது; முக்கியமாக என்னுடன், இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து சில பெண்களும்கூட, அதனை நிகழச் செய்வதற்கு பங்களித்துள்ளனர்.
முக்கியமான யந்திரம் ஒரு முக்கோண வடிவத்தில், திடப்படுத்தப்பட்ட பாதரசத்தால் நிரம்பியுள்ளது.
இதற்கு மற்றொரு அம்சம் உள்ளது: நாம் நிர்மாணித்துள்ள மற்ற பைரவிகளைப்போல இல்லாமல், மூன்றாவது கண் சிறப்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால், அவள் கருணையுடன் இருப்பதைக்காட்டிலும், மிக அதிகமான தீவிரத்துடன் இருக்கிறாள். ஏனென்றால் நேபாளத்தில் இருக்கும் மக்கள் ஏற்கனவே தேவி அம்சமுடையவர்கள் – இந்தக் கலாச்சாரத்தில் பக்தி மிகவும் எளிதாக வருகிறது. நேபாளத்தில் நீங்கள் அன்பிலும், கருணையிலும் சற்று அதிகமாகவே மூழ்கியிருப்பவர்கள்; ஆகவே தீப்பற்ற வைக்கும் ஒரு வித்தியாசமான நிலையிலான தீவிரம் அவர்களுக்கு தேவை என்றே நான் உணர்கிறேன்.
அழகு பொருந்திய, கவித்துவமான மற்றும் அற்புதமான அதற்கே உரிய வழியில், தூய்மையான உணர்ச்சியினால் தேவியை இயக்கமுடியும். ஒரு கவிதை மயக்கமுடியும், பரவசப்படுத்த முடியும் மற்றும் உங்களை மகிழச் செய்யவும் முடியும், ஆனால் அது உங்களை எங்கும் அழைத்துச் செல்வதில்லை. ஆகவே, தேவியின் இந்தக் குறிப்பிட்ட வடிவத்துக்கு மற்றொரு பரிமாணம் உண்டு – மூன்றாவது கண்ணை மகத்தான முறையில் நாம் வலிமைப்படுத்தியுள்ளோம். பொருள்நிலையிலான நல்வாழ்வு மட்டுமில்லாமல், அதையும் கடந்து முக்தியை நோக்கி அவள் செலுத்துகிறாள். இரண்டு அம்சங்களுமே, திடப்படுத்தப்பட்ட பாதரசத்துடன் செய்யப்படுகின்றன. நிறைய செயல்பாடுகள் அதற்குள் பொதிந்துள்ளது; ஈஷா யோக மையத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சந்நிதியில் அது செய்யப்பட்டது.
நிறைய செயல்பாடுகள் அதற்குள் பொதிந்துள்ளது; ஈஷா யோக மையத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சந்நிதியில் அது செய்யப்பட்டது.
மேலும் ஒரு சிறப்பம்சம், உச்சியிலிருக்கும் ஐந்து கலசங்களும் திடப்படுத்தப்பட்ட பாதரசத்தால் செறிவூட்டப்பட்டவை.
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் மற்றும் ஒரு பாதி அனாகதத்துடன் தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறாள். ஆதலால், அவள் மூன்றரை சக்கரங்கள் உடையவள். அன்பு இல்லை; கருணை மட்டும்தான்.
“பெண்தன்மை” என்று நான் கூறும்பொழுது, நான் பெண்ணைப் பற்றி பேசுவதில்லை. பெண் என்பது ஒரு பாலினம்; பெண்தன்மை என்பது ஒரு பரிமாணம். ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை ஆகிய இந்த இரண்டு பரிமாணங்கள் இல்லாமல் வாழ்வு இல்லை; பிரபஞ்சத்தில் பருப்பொருளாக இருக்கும் அனைத்தும், துருவமுனைகளுக்கு இடைப்பட்ட ஒரு நடனம்.
பெண்தன்மையைத் திரும்பக்கொண்டு வருவதற்கு இதுதான் சிறந்த நேரம், ஏனென்றால் இனிமேல் ஆணின் உடல்பலத்துக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதையும்விட இப்போது நமது பிழைத்திருத்தல் நன்றாக பராமரிக்கப்படுகிறது. முன்பு எப்போதும் இருந்ததைவிட, நமது உணவு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. ஒரு உண்மையான நாகரிகத்தைக் கட்டமைப்பதற்கு இதுதான் நேரம். இது பெண்தன்மையின் எழுச்சி இல்லாமல் நிகழாது. ஆண்தன்மை வெற்றிகொள்வதைப் பற்றி மட்டும்தான் சிந்திக்கிறது. பெண்தன்மை ஒரு அரவணைப்பாக இருக்கிறது.
பெண்தன்மையை, ரி என்ற அடிப்படையான ஒலி விவரிப்பதாக இருக்கிறது. ரி என்பது அசைவு, இணைத்துக்கொள்ளுதல் மற்றும் அரவணைத்தல். இது பெண்தன்மையின் இயல்பு. நீங்கள் படைப்பை, ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை என்ற வகையில் பார்க்கவேண்டும் என்றால், பருப்பொருளாக இருக்கும் அனைத்தும் ஆண்தன்மையாக இருக்கிறது. இந்தப் பருப்பொருளை அதன் இடத்தில் பிடித்து நிறுத்துவது பெண்தன்மை. ஆண்தன்மையும் இல்லாமல் பெண்தன்மையும் இல்லாமல், ஆனால் இரண்டையும் கடந்தது எதுவோ அதனை நாம் “ஷிவா” என்று குறிப்பிடுகிறோம்.
“தேவி” என்ற சொல் திவ் என்பதிலிருந்து வருகிறது. திவ் என்றால் அண்டவெளி. அண்டவெளிதான் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பருப்பொருளையும் பிடித்திருக்கிறது. அண்டவெளியில் கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளிகள் உள்ளன, ஆனால் அவை இன்னமும் சின்னஞ்சிறு நிகழ்வுகள்தான். இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய விஷயம், அண்டவெளி. ஆனால் பெரும்பாலான மக்கள் அதைத் தவறவிடுவது ஏனென்றால், நமது காட்சி சாதனங்கள் எந்த விதமாக அமைந்துள்ளன என்றால், ஒளி ஊடுறுவலைத் தடுப்பவற்றை மட்டும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் உங்கள் கண்களால் காணமுடியாத காற்று இல்லாமல் போனால், ஒரு கணம்கூட உங்களால் வாழ இயலாமல் போய்விடும்.
ஆகவே, தற்போது உங்களால் பார்க்கமுடியாதது எதுவோ, அதுதான் உங்கள் வாழ்வை நீடித்திருக்கச் செய்கிறது. மேலும் உங்களால் பார்க்கமுடியாத அண்டவெளி அனைத்தையும் இணைத்துப் பிடித்திருக்கிறது. ஆண்தன்மையும், பெண்தன்மையும் இரண்டு எதிர்த்தன்மைகள் அல்ல. ஒன்றையொன்று நிறைவுசெய்யும் இரண்டு பரிமாணங்களாக அவை இருக்கின்றன. ஒன்று இல்லாமல் மற்றொன்று இருப்பதற்கு வழியே இல்லை. ஆண்தன்மை இல்லாமல், பெண்தன்மை இருக்காது. பெண்தன்மை இல்லாமல், ஆண்தன்மை இருக்காது.
இப்போது 21ஆம் நூற்றாண்டில், தெய்வீகப் பெண்தன்மையை நிர்மாணிப்பதும் அல்லது ஒரு சந்நிதியில் போற்றிப் பதிக்கப்படுவதும் மிகவும் முக்கியம். ஏனென்றால் முன்பு எப்போதும் இருந்ததைவிட நமது பிழைப்பு செயல்முறை தற்போது நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தாலும், நாம் பிழைப்பின் வரையறையை அதிகரித்துக்கொண்டே இருக்கிறோம். இது ஆண்தன்மையின் இயல்பு.
ஒவ்வொருவரும் இதைச் செய்யவேண்டும்: உங்களுக்கே உரித்தான வரைமுறைப்படி, வாழ்க்கையில் பிழைப்புச் செயல்முறைக்கான உங்கள் எல்லையை முடிவு செய்துகொள்ளுங்கள். அதை அடைந்தபிறகு, நீங்கள் உண்மையிலேயே அக்கறைகொள்ளும் ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்யுங்கள். உங்களுக்கேயான தரக்கட்டுப்பாட்டின்படி, நீங்கள் பிழைப்பு செயல்முறையை வரையறுக்கவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையின் எஞ்சியுள்ள காலத்திலும்கூட முடிவில்லாமல் இதன் பின்னாலும், அதன் பின்னாலும் ஓடிக்கொண்டு, நீங்கள் ஒரு அடிமையாக இருப்பீர்கள்.
எனது கருத்தில், நமது கல்வி அமைப்பில் கணிதம், அறிவியல், மற்றுமுள்ள படிப்புகளுக்கு நாம் வழங்கும் அதே முக்கியத்துவம், இசை, அழகியல் முறைகள் மற்றும் பல்வேறு கலை வடிவங்களுக்கும் அளிக்கப்படல் வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு சமநிலையிலான நாகரிகத்துக்கு உரியவர்களாக இருப்போம். இல்லையென்றால், ஒவ்வொருவரும் ஒரு வெறித்தனத்தில் இருப்பார்கள். அதை நீங்கள் தொழில் திட்டம் அல்லது வியாபாரம் என்று அழைக்கிறீர்கள் – நான் அதனை வெறிச்செயல் என்று அழைக்கிறேன், ஏனென்றால் இறுதியில் அதுதான் நிகழ்கிறது.
நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், மற்ற எல்லா உயிரினங்களையும் கேளுங்கள். கடந்த 25 வருடங்களின் பொருளாதார வளர்ச்சியில், அவர்களது வாழ்வுக்கு என்ன நிகழ்ந்துள்ளது? அது வெறித்தனம் மட்டுமல்ல, இனப்படுகொலை என்று அவை கூறும். “நாம் எறும்புகளை, சிட்டுக்குருவிகளை, வெட்டுக்கிளிகளை, புழுக்களை மற்றும் பூச்சிகளைக் கொல்லலாம். அவை இல்லாமல் நாம் வாழமுடியும்”, என்று மக்கள் நினைக்கின்றனர். இது உண்மை இல்லை, அதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மற்ற உயிரினங்கள் இல்லாமல் உங்களால் வாழமுடியாது என்பதைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பெண்தன்மை தேவைப்படுகிறது. நீங்கள் இல்லாமல் அவற்றால் மிக நன்றாக வாழமுடியும். அவை இல்லாமல் நீங்கள் வாழமுடியாது, ஏனென்றால் அருவெறுப்பான புழு என்று நீங்கள் நினைப்பது எதுவோ அது உங்கள் நல்வாழ்வுக்காக செயல்படுகிறது. ஆகவே, காரணரீதியாக நாம் தீர்மானம் செய்வதும், வாழ்வு இயங்கும் விதமும் இரண்டு வித்தியாசமான விஷயங்களாக உள்ளன.
பெண்தன்மையின் முக்கியத்துவம் என்னவென்றால், உங்களது வாழ்வின் அனுபவம், காரண அறிவின் எல்லைகளைக் கடக்கமுடியும். காரணஅறிவு பிழைப்புக்கு மட்டும்தான் பயன்படுகிறது. இந்த பூமியில் ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து, இந்த எல்லா அறிவியல் மேதைமை மற்றும் பொருள்தன்மையான யதார்த்தத்தினை அடைந்து, நூறு வருடங்களாக நாம் கற்பனை செய்துகூடப் பார்த்திராத பல விஷயங்களையும் இந்த உலகத்தில் செய்யும் தகுதி பெற்றதற்குப் பிறகு, அப்படி இருந்தாலும், மக்கள் முன்பு எப்போதும் இருந்ததைவிட அதிகமான விரக்தியில் உள்ளனர். இது ஏனென்றால் பிழைப்பின் வரையறை நிறுத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
உங்களது பிழைத்தலின் உள்ளுணர்வை நீங்கள் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டால், உங்களுக்குள் பெண்தன்மை ஆதிக்கம் செலுத்தும். “நான் ஒரு ஆண்; பெண்தன்மை ஆதிக்கம் செலுத்தினால், நான் பெண்தன்மையுள்ள ஒருவராகிவிடுவேனா?” இல்லை, நீங்கள் அற்புதமாகிவிடுவீர்கள்.
ஒரு சூப்பர் மேன் ஆதியோகியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவரது ஒரு பாதியாக, பெண் இருக்கிறாள். அவர் ஒரு சார்பான ஆண் அல்ல, ஆனால் முழுமையான சமத்தன்மையில் இருப்பவர். ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை இரண்டுமே உங்களுக்குள் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் ஒன்றைக் கொன்றுவிட்டு, மற்றதை வைத்திருந்தால், நீங்கள் ஒரு சார்புடைய மனிதராக இருப்பீர்கள். அப்போது, உங்கள் வாழ்க்கையில் எது நிகழ்ந்தாலும், நீங்கள் எப்போதும் சமநிலையில் இல்லாதவராகவே தோன்றுவீர்கள்.
உங்களுக்குள் இருக்கும் பெண்தன்மையை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் விரும்பினால், உங்களைக் கவர்வதற்காக இல்லாமல், அது தன்னியல்பிலேயே, காரணம் ஏதுமின்றி மாயாஜாலமாக இருக்கும் ஒன்று; காரணஅறிவைக் கடந்த அந்தப் பரிமாணத்தை உங்களுக்குள் நீங்கள் விரும்பினால், உங்களுக்கான பிழைப்பு செயல்முறையை நீங்கள் வரையறுக்க வேண்டும். அதற்குப் பிறகு, வாழ்வின் மாயாஜாலத்தில் நீங்களே முதலீடாக இருக்கிறீர்கள். மாயாஜாலம் இல்லாத எதுவும் இங்கு இல்லை.
இங்கே பைரவியுடன் இருந்துகொண்டு, நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் மற்றும் உங்கள் வாழ்வை எப்படி உணர்கிறீர்கள் என்பது உங்கள் வம்சாவளி, சமூகத் தாக்கங்கள், மற்றும் தத்துவங்களால் முடிவு செய்யப்படாமல், வாழ்வின் செயல்முறையினால் தீர்மானிக்கப்படல் வேண்டும். நீங்கள் வாழ்வில் உயிரோட்டத்துடன் இருந்தால், அது ஒருவிதமாக நிகழும். வாழ்வு குறித்து நீங்கள் கருத்துகளை மட்டும் வைத்திருந்தால், அது மற்றொரு விதமாக நிகழும்; வாழ்வு நிகழாது; மனதளவிலான நிதர்சனங்கள், வாழ்வென்பதாக தவறாகப் புரிந்துகொள்ளப்படும்.
உயிருக்கு உணர்வுடையவராக இருப்பதுதான் தேவியின் நோக்கமாக இருக்கிறதேயன்றி, சமூகத்துக்கோ, கருத்தாக்கங்களுக்கோ அல்லது வேதங்களுக்கோ அல்ல. உயிர் ஒவ்வொரு கணமும் பேசிக்கொண்டிருக்கிறது, ஆனால் ஒருவரும் கவனம் கொடுப்பதில்லை, ஏனென்றால் இங்கே இரைச்சல் மிக அதிகமாக இருப்பதுடன், உங்கள் கைப்பேசிகளின் அழைப்புமணியும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கே உரித்தான உயிரின் இயல்பை உணராமலேயே உடலைவிட்டுச் செல்வது மிக மோசமான குற்றம். இப்படி உங்களுடன் பெரும்பான்மை மக்களும் இருக்கின்றனர், ஆனால் அதற்காக அது சரியானது என்பதல்ல.
உங்கள் மனதை நீங்கள் சீரமைக்கவேண்டும்: வாழ்வை உணர்வதற்காக நீங்கள் இங்கே இருக்கிறீர்களா, அல்லது உங்களைச் சுற்றியிருக்கும் யாரோ ஒருவருக்கு, ஏதோ ஒரு முட்டாள்தனத்தை நிரூபிப்பதற்காக இருக்கிறீர்களா? நீங்கள் உயிர்த்திருக்கும் காரணத்தினால்தான், உங்கள் வாழ்வில் அனைத்தும் மதிப்புமிக்கதாக இருக்கிறது. தேவியை நிர்மாணிப்பது அதன் முக்கியமான பகுதியாக உள்ளது: கருத்தரிப்பது முதற்கொண்டு மரணம் மற்றும் அதையும் கடந்த வாழ்வின் ஒவ்வொரு அம்சத்துக்காகவும் இங்கே அறிவியல்பூர்வமாக கட்டமைக்கப்பட்ட செயல்முறைகள் இருக்கும்.
இது ஆரோக்கியமாக, அமைதியாக மற்றும் ஆனந்தமாக இருப்பதைப்பற்றி மட்டும் அல்ல – இது வாழ்வை மேம்படுத்துவதைக் குறித்தது. முக்கியத்துவம் பொருந்தியவராக இருப்பதற்கு நீங்கள் எதுவும் செய்யவேண்டியது கிடையாது. உங்களைப் பற்றியே நீங்கள் என்ன நினைத்துக்கொள்கிறீர்கள் என்பதனால் அல்ல, ஆனால் அது மேம்படுத்தப்படுவதால், நீங்கள் ஒரு உயிராக இங்கு இருக்கின்ற விதமே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அது இதைப் பற்றியதுதான்: உயிரின் தன்மையை நீங்கள் எவ்வளவு கிரகித்துள்ளீர்கள்?
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, உங்கள் மனதை அமைதியாக, ஆனந்தமாக மற்றும் பரவசமாக வைத்திருப்பது என்றால், வாழ்வை எளிதாக்கும் விதத்தில், உங்களுக்கு உடல்தன்மையும், மனநலனும் இருப்பதாக அர்த்தம், ஆனால் வாழ்க்கை இன்னமும் நிகழத் தேவையுள்ளது. அது மக்களின் உணர்வுக்குள் ஒருபோதும் வருவதில்லை, ஏனென்றால் அவர்கள் தங்களுக்கே உரித்தான உடல்ரீதியான மற்றும் மனரீதியான செயல்முறைகளில் சிக்கிப்போய்விடுகின்றனர். இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் கடந்துசெல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் வாழ்வை உணரத் தொடங்குகிறீர்கள்.
உங்களது மனரீதியான மற்றும் உடல்ரீதியான செயல்முறைகளைக் கடந்து நீங்கள் வாழ்வை உணரும்பொழுது, அப்போது வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகள் உள்ளன. தேவி அதற்கானவள். நீங்கள் அமைதியாகவோ அல்லது ஆனந்தமாகவோ இருப்பதற்கானவள் அவள் அல்ல. தேவி இந்த நோக்கங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறாள், ஆனால் அவள் செல்வவளம், பணம் அல்லது வெற்றிக்கானவள் அல்ல. துரதிருஷ்டவசமாக, அவை அனைத்தையும் அவள் நிறைவேற்றுகிறாள்; இல்லையென்றால், ஒரு பூவுக்காகக்கூட நீங்கள் ஒரு ரூபாய் செலவு செய்யமாட்டீர்கள். என்னைப்போல், அவள் அந்த விஷயங்களை எல்லாம் செய்யவேண்டியுள்ளது. பயிற்சி செய்வதால் உங்கள் முதுகு வலி, தலைவலி மறைந்துவிடும் என்று நான் கூறவேண்டியுள்ளது, ஆனால் நான் அதற்காக அல்ல. இது வேறொன்றைப் பற்றியது.
முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உயிரின் ஒரு பெரும் குமிழியாக வேண்டும். எப்படியும், ஒருநாள், நீங்கள் வெடித்துவிடுவீர்கள். அந்தக் குமிழியைப் பெரிதாக்குவதனால், உங்கள் படைப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். ஒவ்வொரு மனிதரும் அதை உணரவேண்டும், ஏனென்றால் இது மற்ற வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத, மனிதருக்கு மட்டுமே உரிமையானது. அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.