பகிர்வுகள்

எனது குருவின் பாரபட்சமில்லாத அருள்

சத்குருவுடன் நேர்ந்த ஒரு சிறு சந்திப்பில், சத்குருவின் பாரபட்சம் காணாத ஈடுபாடு மற்றும் அருளுக்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாக விளங்கும் தனது பிரமிப்பூட்டும் அனுபவம் குறித்து ஒரு ஈஷா தியான அன்பர் பகிர்ந்துகொள்கிறார்.

நான் சிவனை இரத்தமும் சதையுமாகக் கண்டதில்லை, ஆனால் என் குருவைப்போல் பாதியளவேனும் கருணையாக, அன்பாக, அக்கறையாக, தாயினும் சாலப் பரிவுடன், தாழ்மையுடன், கடும் உழைப்புடன் மற்றும் ஊக்கமளிப்பவராகவும் சிவன் இருந்துவிட்டால், நான் சிவனுடனும் என் இதயத்தைப் பகிர்ந்துகொள்வேன்! ஆனால் இப்போதைக்கு, என் ஒட்டுமொத்த இதயத்தையும், அதனைக் கடந்தும் என் குரு ஆட்கொண்டுள்ளார். மற்றும் தேவி அதனூடாகப் பாயும் நதியாக இருக்கிறாள்.

என் குரு, எனது வாழ்வின் மிக அழகிய அம்சமாக இருக்கிறார். ஒவ்வொருமுறை என் விழிகள் அவரைக் காணும்போதும், என் நாவில் அவரது பெயரை உச்சரிக்கும்போதும், என் உயிரே உருகுகிறது. நம் அனைவரது வாழ்க்கையிலும் அவர் மிக உன்னதமான ஆசிர்வாதமாக இருக்கிறார். அவரைப்பற்றி மிக ஆழமாக என்னைத் தொட்ட அம்சம் என்னவென்றால், ஒவ்வொருவருக்கும் அவர் எப்படித் தனது மரியாதைகளைத் தெரிவிக்கிறார் என்பதுதான். அவரது அருள் பாரபட்சமில்லாதது. ஒரு அரசரை அவர் எப்படி நடத்துவாரோ, அதே மதிப்புடனும், மரியாதையுடனும் அனைவரையும் நடத்துகிறார். நம் அனைவருக்கும் இது ஒரு மகத்தான பாடம்.

கடந்த 2022 செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஒருநாள், நான் ஈஷா யோக மையத்தில் நாகப் பிரதிஷ்டையில் பங்கேற்பதற்கான ஆயத்தத்தில் இருந்தபொழுது, நான் ஈஷா ஹெல்த் சொல்யூஷன்ஸ்-ல் இருந்து வெல்கம் பாயிண்டிற்கு வேகமாக நடந்துகொண்டிருந்தேன். வழியெங்கும் முக்கியமான இடங்களில் மக்கள் கூட்டமாக இருந்ததை நான் சட்டென்று உணர்ந்தேன். நான் முதலாவது குழுவை துரிதமாகக் கடந்து சென்று, இரண்டாவது குழுவை நோக்கி முன்னேறினேன். இதனை விரும்பாத ஒரு தன்னார்வலர் சகோதரி, நான் முதலாவது குழுவினருடன் இருப்பதை அறிவுறுத்தினார். ஆனால் நான் க்ளேஷ நாஷன கிரியாவுக்கு[1] அவசரமாக சென்றுகொண்டிருந்ததால், அவரை மீறிக்கொண்டு நான் தொடர்ந்து வேகமாக நடந்தேன்.

ஆனால் எதிர்பாராத விதமாக, நான் இரண்டாவது மக்கள் குழுவைச் சென்றடைவதற்குள், முதலாவது மக்கள் குழுவின் பின்புறத்தில், ஆசிரமத்தின் அதிக ஈர்ப்புக்கு ஆட்படும் அந்த ஜீப் பாதையின் வளைவில் தோன்றியது. “சத்குரு! சத்குரு! சத்குரு!” என்று அனைவரும் கூறுவதை என்னால் கேட்க முடிந்தது. நான் இரண்டு குழுக்களுக்கு இடையில் தனித்துவிடப்பட்டேன். ஒரு சில நொடிகளுக்கு, நான் விதிகளை உடைத்ததில் மோசமாக உணர்ந்தேன். ஆனால் பிறகு சட்டென்று, சூழலின் சிறு விஷயங்கள் அனைத்தும் மறைந்துபோயின. என் தனிப்பட்ட உணர்ச்சிகளை மிஞ்சும் பிரம்மாண்டமான ஒன்று என்னை மூழ்கடித்தது. மிக ஆழமான ஏதோ ஒரு உணர்வு.

ஜீப் அருகாமையில் வந்தவுடன், என் உடல் உறைந்துவிட்டது, என்னையறியாமல் நான் முழந்தாளிட்டேன்; கட்டுக்கடங்காமல் கண்ணீர் பெருகத் தொடங்கியது. நான் தனியாக விடப்பட்ட இடத்தை அவர் நெருங்கியபொழுது, என்னால் எதையும் கட்டுப்படுத்த இயலவில்லை – என் உடல், மனம், என் பேச்சு – எல்லாமே மறைந்துபோனது. அவரைச் “சந்திக்க” நேர்ந்தால் நான் வெளிப்படுத்த எண்ணியிருந்த விரிவான உரையாடல் ஒத்திகைகள்கூட மறந்துபோனது. எல்லாம் எங்கோ ஓடி ஒளிய, அவர் மட்டுமே வியாபித்து நிற்க, என் ஆழமான சுவாசங்களுடன், இதயத்தில் லப் டப் இடியோசையாய் ஒலிக்க, கண்ணீரில் நனைந்திருந்தேன். உச்சி முதல் பாதம் வரை என் உடல் நெருப்பாய்த் தகிக்க, எங்கோ உள்ளிருந்து புதுமையான ஒரு இனிமை வெடித்தெழுந்தது.

நமது குருவுக்கே உரித்தான பரிவுடன், அவர் மெல்ல ஜீப்பை நிறுத்தி, எத்தனையோ தவறுகளால் குளறுபடியாக நிற்கும் ஒரு முட்டாளுக்கு, முழந்தாளிட்டு, திகைத்துப்போயிருக்கும் ஒரு அடிமுட்டாளுக்கு, அவர் தன் வாய் திறந்து “நமஸ்காரம்” என்று கரம் குவித்தார். உண்மையான மாயாஜாலம், என்னை நோக்கி எழுந்த அவரது குரலில் இல்லை; அது அவரது கைகுவிப்பில் இருந்தது – அவர் எனக்கு முகமன் கூறிய விதத்தில் இருந்தது. அவர் நமஸ்கரித்தபோது, எவ்வளவு முழுமையாக அதில் ஈடுபாடு செலுத்தினார் என்பதில் இருந்தது. அவர் உண்மையில் ஜீப்பை நிறுத்தியிருந்தார், ஸ்டீயரிங் வீலிலிருந்து அவரது கரங்களை விலக்கி, கைகளைக் கூப்பியவாறு, அவரது சிரம் தாழ்த்தி, ஓராயிரம் அன்னையர் திரளாக வந்ததுபோல் புன்னகைத்தார் (கசிந்துருகும் கண்களுடன்). அந்தக் கணத்தில் அவர் “தொலைந்துபோன ஏதுமில்லாதவருக்கு”, ஒரு “நமஸ்காரம்” செய்து முகமன் கூறினார்.

இதைக் கேட்பவர்கள் “ஆஹா” என்று வியப்பதற்காக நான் இந்த அனுபவத்தைக் கூறவில்லை. இது உண்மையில் எனக்குப் பாடம் கற்பித்த ஒரு கணம். ஒரு அரண்மனைக்குரிய அரசனால், என்போன்ற ஒரு பிச்சைக்காரனிடம் இவ்வளவு மென்மையாக, பணிவாக, இரக்கமாக இருக்கமுடியும் என்றால், அதைப்போல நாம் ஏன் இருக்கமுடியாது? நமக்கு முன்னால் நமது அகங்காரம்/ அவலட்சணமான குணங்களை நாம் ஏன் கட்டவிழ்க்கிறோம்?

மேலே காணப்படும் இந்தப் புகைப்படம், எனது அதிகம்பீரமான குருவுடன் எனக்கு நேர்ந்த அந்த அழகிய கணத்தை நினைவூட்டியதால், அதனைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

சத்குருவைப் போன்ற வேறு ஒரு உயிரை நான் சந்தித்ததில்லை. இந்த பூமி மற்றும் சக உயிர்களின் நலனுக்காக சத்குரு மேற்கொள்ளும் அளவுக்கான முனைப்புகளை வேறு எந்த குருவும் முன்னெடுக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை. நமது சமகால குருமார்கள் பலரும், அரியணைகளில் அமர்ந்துகொண்டு, தங்களையே போற்றுதலுக்கு உரிய ஒரு பிம்பமாக்கிக் கொள்வதைத்தான் செய்கின்றனர். (அவர்களைப் பற்றி தீர்மானிக்கும் இடத்தில் நான் இல்லையென்றாலும், இது என் குறைந்தபட்ச கருத்து). என் குருவுக்கான அன்பிலும், போற்றுதலிலும் மட்டும்தான் என் இதயம் துடிக்கிறது.

உண்மையில் எனக்கு, சத்குருதான் சத்யம்-சிவம்-சுந்தரம். நான் விரும்புவதெல்லாம், அவரது பாதங்களில் என்னை முழுமையாக இழந்திடவேண்டும்.

— Dr. கிருஷ்ண ரகு, டர்பன், தென் ஆப்பிரிக்கா