சத்குரு எக்ஸ்குளூசிவ்

ராதா கிருஷ்ணன்: காதல், பக்தி மற்றும் உச்சபட்ச இணைத்துக்கொள்தலின் கதை

கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்திலிருந்து, கிருஷ்ணனும் ராதையும் எப்படி சந்தித்துக்கொண்டனர், அவனது வாழ்க்கையின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகவும், புராண நாயகியாகவும் அவள் எப்படி ஆனாள் என்பதைப்போன்ற வசீகரமான நிகழ்வுகளை சத்குரு சுவைபட விவரிக்கிறார்.

சத்குரு: கிருஷ்ணன் மிகுந்த ஆனந்தத்துடனும், பெருமிதமுடனும் கூறினான், "நான் வெண்ணெய் திருடினேன். நான் வெண்ணெய் திருடவில்லை என்றால், அங்கே கிராமத்தில் ஆர்வக்கிளர்ச்சியோ அல்லது சுவாரஸ்ய உணர்வோ இருந்திருக்காது. கிராமத்தினர் என் தாயிடத்தில் புகார் கூறுவதற்காக வீட்டிற்கு வரும்பொழுது, நான் அவள் பின்னால் ஒளிந்துகொண்டு, அன்பு வழியும் விழிகளால் அவர்களைப் பார்ப்பேன், அவர்களும் புன்னகைப்பார்கள்."

காட்டினுள் கிருஷ்ணனின் மையலூட்டும் துணிகரச் செயல்

கிருஷ்ணன் ஐந்து அல்லது ஆறு வயதை எட்டுகையில், அவனது சாகசங்களை அவன் அதிக திறமையுடன் அரங்கேற்றியதால், வெண்ணெயைப் பறிகொடுத்த மக்கள் மேலும் அதிகமான மன உளைச்சல் அடைந்தனர். அவனது தாயிடம் புகார்கள் குவியத் தொடங்கின. அது சற்றே அளவுக்கு மீறியது. அவனது தாய் யசோதா அவனை வசைபாடியபொழுது, அவன் தனது எல்லா தந்திரங்களையும் எப்படி செயல்படுத்துவது என்று நன்கு அறிந்திருந்தான். அவன் உடனடியாக அழத்தொடங்கி, தரையில் குப்புறப்படுத்துக்கொண்டு, உரத்த குரலில் கத்தியவாறு, அவனது தாய் அருகில் வந்து சமாதானம் செய்வதற்காகக் காத்திருப்பான்.

ஒருநாள், கிருஷ்ணனுக்கு உண்மையிலேயே நல்ல வசவு கிடைத்தது. அவன் ஒரு மர உரலின்மீது அமர்ந்திருந்தான். அவனது தாய் ஒரு கயிற்றுடன் வந்து கூறினாள், “நீ அளவுக்கு மீறிச் செல்கிறாய். நீ எப்போதுதான் மாறுவாயோ? இப்போது நான் செய்யப்போவது உனக்கு ஒரு பாடமாக இருக்கும்”, என்று அவனை அந்த மர உரலுடனேயே கட்டிப்போட்டாள். சிறிது நேரத்துக்கு, அவன் அழுது, கூச்சலிட்டு அவளது கவனத்தைப் பெறுவதற்கு முயற்சித்தான், ஆனால் அவள் மனம் இரங்கவில்லை. அதனால் அவன் கோபமடைந்தவனாக, அந்த உரலின் மீது தனது முழு பலத்தையும் பிரயோகித்தான்.

இது சாதாரணமாக அவன் வயதுடைய ஒரு குழந்தைக்கு சாத்தியமில்லை, ஆனால் அவன் கனமான மர உரலை இழுத்துக்கொண்டு வீதிவெளியில் சென்றான். அது மதியத்துக்கும், மாலைக்கும் இடைப்பட்ட ஒரு பொழுது. கிராமத்தினர் எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்ததால், அவனைப் பார்ப்பதற்கு அங்கே யாருமில்லை. ஆகவே அவன் தொடர்ந்து உரலை இழுத்துக்கொண்டு, காட்டை நோக்கிச் சென்றான், ஏனெனில் எல்லா மாடு மேய்ப்பவர்களும், அவனது நண்பர்களும் மற்றும் வயதில் மூத்தவர்களும் அங்குதான் இருப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேல், கிருஷ்ணன் அவனது தாய்க்கு ஒரு பாடம் கற்றுத்தர விரும்பினான், ஏனென்றால் அவள் அநியாயமாக கோபப்பட்டதாக அவன் எண்ணினான்.

அவன் காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபொழுது, அவன் வழியில் குறுக்கிட்ட இரண்டு மரங்களுக்கு இடையில் கடந்து சென்றான், ஆனால் மர உரல் மரங்களுக்கிடையே சிக்கிக்கொண்டது. அவன் தன் முழு பலத்துடன் அதை இழுத்ததில், இரண்டு மரங்களும் வேரோடு கீழே சாய்ந்துவிட்டன. அவன் களைப்பும், சிராய்ப்பும் அடைந்ததால், அங்கேயே உட்கார்ந்து, காத்திருந்தான். அவனது தாய் வரவில்லை. அவள் இன்னமும் கோபமாக இருக்கிறாளா அல்லது அவன் காட்டுக்குச் சென்றதை அவள் கவனித்திருக்கவில்லையா என்று தெரியாத நிலையில், அவன் அழத் தொடங்கிவிட்டான்.

கிருஷ்ணன் எப்படி ராதையைச் சந்தித்தான்

பிறகு, அவன் இரண்டு பெண் குரல்களைக் கேட்டான். அவன் தனது கண்களில் கண்ணீருடன் அவர்களிடம் அகப்படுவதற்கு விரும்பவில்லை. அவனுக்கு எதுவும் நடவாதது போலவும், அவனது தாய்க்குத்தான் பிரச்சனையே தவிர, அவனுக்கு ஏதுமில்லை என்பதைப் போலவும் தோன்றுமாறு செய்வதற்கு விரும்பினான். ஆகவே, அவன் முகத்தில் அழகான புன்னகையைத் தவழவிட்டுக்கொண்டு, அங்கேயே அமர்ந்தான். ஒரு சிறிய பெண்ணும், அவளுடன் சற்று பெரிய பெண்ணும் வந்தனர். சிறியவள் அவனுடைய விளையாட்டுத் தோழி லலிதா என்பதை கிருஷ்ணன் கண்டுகொண்டான். சுமார் 12 வயதான சற்று பெரிய பெண்ணை அவனுக்குத் தெரியவில்லை, ஆனாலும் அவளிடம் அவன் ஈர்ப்பு கொண்டான்.

அவர்கள் இருவரும் நெருங்கி வந்து, “உனக்கு என்ன நிகழ்ந்தது? இந்த மாதிரி யார் உன்னைக் கட்டிப்போட்டது? என்ன கொடுமை இது”, என்று கேட்டனர். அந்த 12 வயது பெண்தான் ராதை. கிருஷ்ணன் மீது ராதை அவளது பார்வையைப் பதித்த கணம் முதல், ஒரு 7 வயது சிறுவன், அவன் உடல்தன்மையில் அருகில் இருந்தாலும், இல்லையென்றாலும், அவளது கண்களில் நிரந்தரமாக வாழ்ந்திருந்தான். அவ்வளவுதான், பல வருடங்களுக்குப் பிறகு, இன்றைக்கும்கூட அவர்களை இரண்டு தனி நபர்களாக நம்மால் நினைக்கமுடியவில்லை. கிருஷ்ணனின் 16 வயதிற்குப் பிறகு, அவனது வாழ்க்கை முழுதும், அவன் மீண்டும் ஒருபோதும் ராதையைப் பார்க்கவில்லை.

கிருஷ்ணன் அவனது வாழ்க்கையில் பல மக்களைச் சந்தித்து, பல விஷயங்களைச் செய்தான், ஆனால் 7 வயது முதல் 16 வயது வரை ராதையுடன் அவன் கழித்த அந்த ஒன்பது வருடங்கள், அவளை அவனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கியது. அதை அவளது வார்த்தைகளிலேயே கூறவேண்டுமென்றால், அவள் கூறினாள், “நான் அவனில் வாழ்கிறேன். அவன் என்னில் வாழ்கிறான், அவ்வளவுதான். அவன் எங்கே இருக்கிறான், யாருடன் இருக்கிறான் என்பது பொருட்டல்ல, அவன் என்னுடன் மட்டுமே இருக்கிறான். அவன் வேறெங்கும் இருக்கமுடியாது.” இந்த 7 வயது சிறுவனை அவள் கண்ட கணம் முதல், அவர்கள் பிரிக்கமுடியாதவர்களாக இருந்தனர். 3000 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, இன்னமும் அவர்கள் இருவரையும் உங்களால் பிரிக்கமுடியாது.

ஆகவே, ராதை அவனை மர உரலிலிருந்து விடுவிக்க முயற்சித்தாள். அப்போது கிருஷ்ணன் கூறினான், “வேண்டாம், அதைச் செய்யாதே. எனது தாய் வந்து விடுவிப்பதையே நான் விரும்புகிறேன், அதனால் அவளது கோபத்திலிருந்து அவளே வெளிவரமுடியும். நீங்கள் விடுவித்தால் அவள் தொடர்ந்து கோபமாகவே இருக்கலாம். அவள் என்னை தேடிவந்து என்னை விடுவித்தால் அவள் கோபத்தைத் தாண்டி வெளிவர அது உதவும்.” ஆகவே இரு பெண்களும் கேட்டனர், “உனக்காக நாங்கள் செய்யக்கூடியது ஏதாவது இருக்கிறதா?” அவன் 7 வயதுப் பெண் லலிதாவிடம் கூறினான், “எனக்கு சிறிது தண்ணீர் எடுத்து வா.” அவளை அங்கிருந்து விலக்குவது அவனது விருப்பமாக இருந்தது.

ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாக அமர்ந்தனர்; ஒரு 7 வயது பையன் மற்றும் 12 வயது பெண். இந்த இரண்டு உயிர்களும் அந்த ஒரு சந்திப்பில், பல வழிகளிலும் ஒன்றிணைந்தனர். அதற்குப் பிறகு அவர்களை ஒருவராலும் பிரிக்க முடிந்ததில்லை. 16 வயதுக்குப் பிறகு, அவன் அவளை மீண்டும் ஒருபோதும் பார்க்காத வகையில், வாழ்க்கை அவர்களை வெவ்வேறு திசைகளில் நடத்திச் சென்றது, ஆனால் அப்போதும், அவர்கள் ஒன்றாகவே இருந்தனர்.

ராதை இல்லாமல் கிருஷ்ணன் இல்லை

கிருஷ்ணன் முற்றிலும் கிறங்கடிக்கின்ற அவனது புல்லாங்குழல் குறித்து மிகவும் கர்வம் கொண்டிருந்தான். அவன் அனைவரையும் கவர்ந்திழுத்தான். அவன் தனது குழலை இசைத்தபோது, மக்கள், பசுக்கள், மற்றுமுள்ள விலங்குகளும் கூடின. ஆனால் அவன் உடலளவில் ராதையிடமிருந்து பிரிந்து சென்றதிலிருந்து, அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் அவனது குழலை இசைக்கவில்லை. அவன் தனது புல்லாங்குழலை அவளுக்குக் கொடுத்துவிட்டான், அவள் அதை இசைக்கத் தொடங்கிவிட்டாள்.

ராதை மற்றும் கிருஷ்ணனின் இந்த குழந்தைப்பருவ சந்திப்பு, ஒரு முழுமையான புதிய ஆன்மீகப் பாதையின் தொடக்கமாக இருந்தது. ராதை மீது ஆழ்ந்த பக்தியுடையவர்கள் ராதையைத்தான் வழிபடுகின்றனர், கிருஷ்ணனை அல்ல. “ராதை இல்லாமல் கிருஷ்ணன் இல்லை” என்று அவர்கள் கூறுகின்றனர், ஏனென்றால் தன் காதலிலும், இணைத்துக்கொள்ளும் உணர்விலும், அவள் அவனை அவளுடைய ஒரு பாகமாக இணைத்துக்கொண்டாள். இது எதிர்முறையாக நிகழவில்லை. கிருஷ்ணன் இல்லாமல் ராதை இல்லை என்பது கிடையாது. ராதை இல்லாமல் கிருஷ்ணன் இல்லை.

இது சத்குரு எக்ஸ்க்ளூசிவ்-ன் “லீலா – கிருஷ்ணனின் குழந்தைப்பருவம்” தொடரிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. முழுமையான தொடரைக் காண்பதற்கு, சத்குரு எக்ஸ்க்ளூசிவ் - க்கு பதிவு செய்யுங்கள்.