ஞானமடைந்தவர்கள் அவர்களது வாழ்வை எப்படி நடத்திச் செல்கின்றனர்? இந்த ஆழமான பதிலில் சத்குரு, அவருக்கு இருக்கும் கர்மவினையின் அளவை வெளிப்படுத்தி, நமது வாழ்க்கையை வடிவமைக்கும் பல்வேறு விதமான கர்மவினைகள், மற்றும் நமது கர்மவினையின் சுமையை நமது நன்மைக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்குகிறார்.
கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. எனக்குப் புரிந்தவரையில், நமது வாழ்க்கை நம்முடைய கர்மவினையைப் பொறுத்து வெளிப்படுகிறது. ஆனால் கர்மவினை இல்லாத ஒரு ஞானமடைந்த உயிருக்கு அது எப்படி செயல்படுகிறது? மற்றும் நீங்கள் எதிர்கொண்ட சவாலான சூழ்நிலைகள் அனைத்தும் எப்படி வந்தன?
சத்குரு: கேள்வி உங்களைக் குறித்ததாக இருக்கவேண்டும். ஒரு ஞானமடைந்த மனிதருக்கு கர்மவினை இருப்பதில்லை என்று உங்களுக்குக் கூறியது யாராக இருந்தாலும், அது தவறு. ஒரு ஞானமடைந்த மனிதர் அளவற்ற கர்மவினையைக் கொண்டிருக்கிறார் – மற்றவர்களைக் காட்டிலும் மிக அதிகமானது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட சக்திநிலையில் இருந்தால், தேவையான கர்மவினையின் பாரம் இல்லாமல், நீங்கள் இங்கே இருக்கமுடியாது. இதனால்தான் 90% நேரங்களில், ஞானமடைதலும், உடலை விடுவதும் ஒரே தருணத்தில் நிகழ்கிறது, ஏனென்றால் கணிசமான மற்றும் கனமான கர்மவினையுடன் உங்களையே விழிப்புடன் நிலைப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், நீங்கள் உடலில் தங்கியிருப்பதற்கு சாத்தியமில்லை.
கர்மவினை என்பது ஒரு எதிர்மறை சக்தி அல்ல என்று புரிந்துகொள்வது முக்கியமானது. கர்மவினையின் காரணமாகத்தான் நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்களோ அப்படி இருக்கிறீர்கள். கர்மாவைப் பற்றி நாம் பேசும்போது, நீங்கள் யார் என்பதை உருவாக்கும் ஞாபகத்தின் அடுக்குகளைக் குறிப்பிடுகிறோம். உங்களை ஒரு மனிதராக உருவாக்கும் பரிணாம வளர்ச்சியின் ஞாபகம் இருக்கிறது. ஒருவேளை உங்களது உடல் அந்த பரிணாம வளர்ச்சியின் ஞாபகத்தை இழந்துவிட்டால், நீங்கள் ஊர்ந்துசெல்லத் தொடங்கிவிடுவீர்கள். ஏனெனில், அறிதலின் வழியாக நீங்கள் ஒரு மனிதராக இல்லை. உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பெருமளவுக்கான பரிணாம வளர்ச்சி ஞாபகத்தின் காரணமாகத்தான் நீங்கள் ஒரு மனிதராக இருக்கிறீர்கள்.
சம்யமா போன்ற குறிப்பிட்ட வகுப்புகளின்போது, சில பங்கேற்பாளர்கள் ஊர்ந்து செல்லவோ அல்லது மற்ற விஷயங்களையோ செய்யத் தொடங்கக்கூடும். இது பொதுவாக ஏனென்றால், அந்தச் செயல்முறையானது, அவர்களுடைய பரிணாம வளர்ச்சி கர்மவினையைத் தொடுகிறது. பரிணாம வளர்ச்சி கர்மவினை, அதற்கும் முன்னதாக, ஐந்து மூலக்கூறு நிலையிலான கர்மவினையிலிருந்து தொடங்கி அளவற்ற கர்மவினை இருக்கிறது.
உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பரிணாம வளர்ச்சி கர்மவினையானது, உங்களுக்கு ஒரு மனித வடிவத்தையும், மனிதராக இருக்கும் உணர்வையும் தருகிறது. அடிப்படையாகவே, உங்களின் வடிவமும், உருவாக்கமும் கர்மா அல்லது ஞாபகமாகத்தான் இருக்கிறது. இதைப்போலவே, கர்மாவின் பல அடுக்குகள் உள்ளன, ஆனால் நான் அவை அனைத்துக்குள்ளும் செல்லமாட்டேன். மரபியல் கர்மா இருக்கும் காரணத்தால், உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான மூக்கு, தோல் மற்றும் நடத்தை, திறன்கள் மற்றும் திறனின்மைகள் போன்றவற்றில் குறிப்பிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் கூடுதலாக, புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் புரிந்துகொள்ள முடியாத உங்களுக்கே உரிய விஷயங்கள் இருக்கின்றன, மற்றும் இப்போது விழிப்புணர்வான கர்மாவும் இணைந்துள்ளது.
கர்மவினையை எப்படிப் பயன்படுத்துவது என்று நீங்கள் தெரிந்துகொண்டால், அது எதிர்மறையான விஷயம் அல்ல. ஆனால் அதனைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் போதுமான விழிப்புணர்வுடன் இருக்கவில்லை என்றால், அப்போது அது ஒரு மென்பொருள் போன்று செயல்படுகிறது. பல மனிதர்கள் பிணைத்துக் கொள்வதற்காகவே தங்களை வழிநடத்துகின்றனர். தங்களையே எதனுடனாவது அல்லது யாருடனாவது முடிச்சிட்டுக் கொள்வதில்தான், அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று எண்ணிக்கொண்டு, அவர்கள் எதனுடனாவது அல்லது யாருடனாவது பிணைப்பைக் கட்டமைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
ஒரு நங்கூரத்தை வீசிக் கப்பலை நிலைநாட்டும் மாலுமி போல, ஒரே இடத்தில் தங்கியிருக்க நீங்கள் விரும்பினால், பிணைப்புகளை உருவாக்குவது நன்மையாக இருக்கக்கூடும். நீங்கள் நகர்ந்து செல்லவேண்டும் என்றால், நீங்கள் நகர்வதை நங்கூரங்கள் தடுத்துவிடக்கூடும். நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது பயணிக்க விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும்.
என்னைச் சுற்றி நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள், நான் எதிர்கொள்ளும் எல்லாவிதமான சூழ்நிலைகள், எல்லாவிதமான முட்டாள்தனங்கள் மற்றும் முற்றிலும் அற்புதமான அனைத்து விஷயங்களும் எனது பாதையில் வருவதைப் பார்த்திருப்பார்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை மற்றும் பெறுவதற்கு எதுவுமில்லை என்னும்போது, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனைச் செய்யமுடியும். ஒரு மலைக்குகைக்குள் சென்று முழு பேரானந்தத்தில் அமர்ந்துகொள்ள முடியும் அல்லது நீங்கள் தேர்வுசெய்யும் அளவுக்கு உலகத்தில் மும்முரமாக ஈடுபட முடியும்.
எனது தேர்வு என்னுடைய விருப்பத்தினால் அல்ல, அது உலகத்தின் தேவைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தியானலிங்கத்தை நான் பிரதிஷ்டை செய்யும்வரை, எனக்கு வேறு விருப்பம் இருந்ததில்லை. என்னை, தனது பாதத்தால்கூடத் தொட விரும்பாமல், ஒரு பிரம்பால் தொட்ட ஒருவருக்கு மூன்று பிறவிகள் நான் சேவை செய்தேன். அது ஒரு அச்சமூட்டும் கதை, ஆனால் அது அற்புதமான பலன்களை வழங்கியது. நான் விளைவுக்கு முக்கியத்துவம் தருவதால், பிரம்பைக்கொண்டு தொட்டதில் எனக்கு வருத்தமில்லை. நான் இதனைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சத்குரு என் பக்கம் பார்க்கக்கூட இல்லை,” என்பதைப்போன்ற பிரச்சனைகள் உங்களில் பலருக்கு இருக்கிறது. அவர் பார்ப்பதில்லை.
தியானலிங்கத்தை நான் பிரதிஷ்டை செய்யும்வரை, வேறு எதைப்பற்றியும் நான் பொருட்படுத்தவில்லை. அது மட்டும்தான் எனக்கு என்றும், அதனுடன் நான் முழுமையும் அடைந்துவிடுவேன் என்றும் எண்ணினேன். அந்த செயல்முறையில், ஏறக்குறைய நான் முடங்கிவிடும் அளவுக்கு எனது அடிப்படை கட்டமைப்பு மோசமாக பாதிப்படைந்தபோது, அதிலிருந்து நான் மீண்டுவர முடியுமா என்று பார்ப்பது ஒரு சவாலாகவே இருந்தது. தேவைப்பட்டால் தங்களது உயிரையே தருவதற்கு விருப்பமாக இருந்த அற்புதமான, அர்ப்பணிப்பான மக்கள் என்னைச் சுற்றிலும் இருந்தனர். அவர்களுக்காகவும், ஒரு சவாலாகவும்கூட, நான் சில விஷயங்களை மேற்கொண்டு, செயல்படத் தொடங்கினேன். அது மற்றொரு விதமான கர்மவினை.
1999-ல் நீங்கள் என்னைப் பார்த்திருந்தால், அப்போது இருந்ததைவிட இன்றைக்கு என் உடல் நலம் குறிப்பிடத்தக்கவாறு முன்னேற்றமடைந்துள்ளது. சாதாரணமாக இருந்தால், அந்த இடைப்பட்ட காலத்தில் உடல் நலன் வீழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். என்னை நம்பிக்கையுடன் பார்த்திருந்த மக்கள் என்னைச் சுற்றிலும் இல்லையென்றால், உடலமைப்பை திரும்பக் கட்டமைப்பதற்கு சுமார் மூன்றரை ஆண்டுகள் பெருமுயற்சி செய்யும் விருப்பம் எனக்கு இருந்திருக்காது.
அதன்பிறகு இயல்பாகவே, நான் மக்களின் ஆன்மீக செயல்முறையில் ஈடுபாடு கொண்டேன். ஆன்மீக செயல்முறையை நான் கற்றுக்கொடுக்கச் சென்றபோது, சிலர் வயிற்றுப் பசியுடன் இருந்ததைக் கண்டேன்; சிலர் நோயுற்று இருந்தனர்; அவர்களுக்கு எதுவும் நிகழவில்லை. அதனால்தான் நாம் சமூக செயல்முறைகளில் ஈடுபாடு கொண்டோம். மேலும் யாரோ ஒருவர் ஞானமடையும் தருவாயில் இருந்தாலும், கிராமத்தில் மரத்தின் கீழ் அமருவதற்கு ஒரு மரம்கூட இல்லை. ஆகவே மக்கள் என்னை ஒரு “மரம் நடுபவர்” என்று அழைக்குமளவுக்கு, நாம் மரங்களை நடுவதற்கு ஆரம்பித்தோம். இது எல்லாமே கர்மாதான்.
ஆனால் இந்த கர்மவினை என்னைப் பாதிப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா? சில நேரங்களில், நான் சரியாக உறங்காமல் இருந்திருக்கலாம், நான் சிறிது களைப்பாகத் தோன்றியிருக்கலாம், ஆனால் அது என்னைப் பாதிப்பது போல் தோன்றுகிறதா? உங்களுக்கு அபரிமிதமான கர்மவினையின் மலைகள் இருந்தால், அது மகத்தானது. இதற்கு அர்த்தம், உங்களுக்கு ஒரு சிக்கலான கட்டமைப்பு இருக்கிறது.
ஆனால் இந்த சிக்கலான கட்டமைப்பு உங்களைச் சித்திரவதை செய்தால், மற்றும் உங்களது அந்த சித்திரவதையின் துன்பத்தைப் பயன்படுத்தி உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் துன்பத்தை உண்டாக்கினால், அப்போது அது ஒரு பேரழிவாக இருக்கிறது. மாறாக, குறிப்பிடத்தக்க தீர்வுகள் எழுவதற்கு சிக்கல் தேவைப்படுகிறது. இந்த சிக்கலை நீங்கள் பயன்படுத்தினால், அது வாழ்வதற்கான ஒரு மகத்தான வழியாக இருக்கிறது. உங்களுக்கு சிக்கல் இல்லையென்றால், மக்கள் உங்களை ஒரு எளிய மனிதன் அல்லது ஒரு வெகுளி என்று அழைக்கக்கூடும். உங்களிடம் அவர்கள் கருணை காட்டலாம், ஆனால் அதீத ஆர்வம் கொள்வதில்லை. இது வாழ்வதற்கான ஒரு சோகமான வழி.
உங்களது கர்மவினையை கையாள நீங்கள் விரும்பினால், எளிமையான விஷயம் என்னவென்றால், உங்களைப் பற்றி முற்றிலும் ஆர்வமின்றி இருந்துகொண்டு, மற்ற அனைத்திலும் முழுமையான பேரார்வம் கொள்வது. பிரச்சனை என்னவென்றால், மக்கள் அவர்களது சொந்த வாழ்க்கையின்பால் அளவற்ற பேரார்வம் கொள்கின்றனர், ஆனால் சுற்றிலுமிருக்கும் மக்களின் நல்வாழ்வு மற்றும் துன்பம் குறித்து அக்கறையின்மை கொள்கின்றனர். மற்ற உயிர்களுக்காக பேரார்வம் காண்பித்து, உங்களின் மேல் ஆர்வமின்றி இருப்பது தான், விடுபடுவதற்கான ஒரு நிச்சயமான வழியாக இருக்கிறது.
உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு உயிருடனும் நீங்கள் முழுமையான ஆர்வம் கொண்டு, உங்களைப் பற்றிய ஆர்வம் முற்றிலும் இல்லாமல் இருந்தால், கர்மபாரம் குறித்து நீங்கள் வருந்தவேண்டிய அவசியம் இல்லை – நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள்.