வாழ்வின் மர்மங்கள்

ஒரு திடமான குணநலனைக் கட்டமைப்பது: இது செய்வதற்கு உகந்த ஒரு முதலீடுதானா?

குணநலன் என்பது எப்போதும் ஒரு நற்பண்பாக முத்திரை குத்தப்படுகிறது. “கடின உழைப்பு நற்குணத்தை வளர்க்கிறது” என்பதைப் போன்ற பேச்சு வடிவங்களுடன், அதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும் சத்குரு, அவருக்கே உரித்தான ஒப்பற்ற பாணியில், அந்தக் கருத்துக்கு ஒரு குட்டு வைக்கிறார். குணநலன் என்பது என்ன, மற்றும் அதனை முதலில் வலிமையாக நிலைநிறுத்துவதற்கு நாம் பாடுபடவேண்டுமா என்பதை ஒரு அடி பின்னோக்கிச் சென்று பரிசீலிப்பதற்கு, அவர் நமக்கு உதவுகிறார்.

கேள்வியாளர்: நான் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிறேன். மக்கள் அவர்களது உண்மையான திறனைக் கண்டுகொண்டு, அவர்கள் மனநிலையில் மேம்பட்டு, அவர்களுடைய ஆர்வத்தைப் பின்பற்றி அதனைச்சுற்றி ஒரு வணிகத்தை உருவாக்குவதற்கு நான் உதவி செய்து வருகிறேன். நம்மை எது இயக்குகிறது என்று அறிந்துகொள்ளாமல், திசையறியாமல் தடுமாறிய என்னைப்போன்ற எல்லா மக்களுக்கும் நான் உதவி செய்ய விரும்புகிறேன். மக்களுக்கும் சேவை செய்துகொண்டு, அதனால் நானும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, முழுமையான என் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஏற்றபடி என்ன விதமான குணநலனை நான் கட்டமைக்க வேண்டும்?

நவீன வாழ்க்கையின் போக்கில் பயணிப்பது

சத்குரு: நம்மையே நாம் மேலோட்டமாகப் பார்த்தால், மிகச்சரியாக ஒரே விஷயங்களை விரும்பும் இரண்டு மனிதர்கள் இல்லை என்பது புரியும். ஏன் ஒரு நபரின் விருப்பமும், மற்றொரு நபரின் விருப்பமும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது? அதற்குக் காரணம், நமக்கு வெளிப்பட்ட விஷயங்கள் மற்றும் பழக்கப்படுத்துதல். பெரும்பாலான வடிவமைத்தலும் தன்னுணர்வு இல்லாமல்தான் நிகழ்கிறது. இந்த விதமான தாக்கத்தினை உங்கள் மீது ஏற்படுத்துவது யார்?

பெற்றோர்கள் எல்லா விதமான முயற்சியும் செய்தனர். ஆனால் கடந்த 20-25 வருட காலங்களில் பெற்றோரின் தாக்கம் வெகுவாகக் குறைந்துகொண்டுள்ளது. பாட்டிமார்கள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய காலம் ஒன்று இருந்தது. இப்போது தங்கள் பாட்டிமார்களை யார் கேட்கின்றனர்? அவர்கள் கூகுளை ஆலோசனை கேட்கின்றனர். ஆகவே, உங்கள் மீது பெருமளவு கவனம் செலுத்தும் நெருக்கமான மக்கள், அவர்கள் சரியாக இருந்தாலும் அல்லது தவறாக இருந்தாலும், அவர்களின் தாக்கம் குறைந்துகொண்டுள்ளது.

இன்றைக்கு குழந்தைகள் மீது, அது வீதியாக இருந்தாலும், இணையதளமாக இருந்தாலும், பள்ளிக்கூடமாக இருந்தாலும் அல்லது அவர்கள் எங்கு சென்றாலும், அவர்களுக்குத் தெரியாத மற்றவர்களால் தாக்கம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த மாபெரும் மாற்றத்தை நாம் கவனமுடனும், பொறுப்புடனும் கையாளவில்லையென்றால், அது ஒரு பேரழிவாக இருக்கக்கூடும். ஏனென்றால், உங்கள் மீது நியாயமான அக்கறை இல்லாத மக்கள் உங்களை வார்த்தெடுக்க முயற்சிக்கின்றனர்.

நம்மை நோக்கி என்ன வருகிறது என்பது, பெரிதும் நாம் வாழும் காலகட்டத்தின் விளைவாகவே இருக்கிறது. அதிலிருந்து நாம் என்ன உருவாக்குகிறோம் என்பது நூறு சதவிகிதம் நம்மிடம் உள்ளது.

நிச்சயமாக உங்கள் மீது அக்கறை கொள்ளும் மக்களுக்கு வாழ்க்கை குறித்த ஒரு கண்ணோட்டம் இருக்கிறதா? அப்படி எதுவும் தேவையில்லை. பெற்றோர்கள் ஏறக்குறைய எப்போதும், உங்கள் மீது அளவற்ற அக்கறை செலுத்தினர். நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது அவர்களது கவனிப்பு நன்றாக இருந்தது. நீங்கள் ஒரு பச்சிளம் குழந்தையாக இருந்தபோது, உங்கள் தாய் மிகவும் நன்றாக இருந்தார். நீங்கள் அங்குமிங்கும் ஓடத்தொடங்கியபோது, எப்படிக் குதிப்பது, ஏறுவது, தாவுவது என்றெல்லாம் உங்கள் தந்தை கற்றுக்கொடுத்தது நன்றாக இருந்தது. உங்களுக்கு 12 அல்லது 13 வயதாவதற்குள், பெற்றோர் உங்களைக் குழந்தையாக கருதியபோதிலும், அவர்கள் பேசியது உங்களுக்கு குழந்தைத்தனமாகத் தோன்றியது. மேலும் இன்றைக்கு இந்த மனப்பாங்கு குழந்தைகளிடையே இன்னமும் கூடுதலாக இருப்பது ஏனென்றால், மிகச் சிறிய வயதிலிருந்தே குழந்தைகள் மீதான வெளிப்புறத் தாக்கத்தின் அளவு அதிகமாக உள்ளது.

இது நல்லதா, கெட்டதா? நான் வாழ்க்கையை நல்லது மற்றும் கெட்டது என்ற ரீதியில் ஒருபோதும் பார்ப்பதில்லை. நம்மை நோக்கி என்ன வருகிறது என்பது, பெரிதும் நாம் வாழும் காலகட்டத்தின் விளைவாகவே இருக்கிறது. அதிலிருந்து நாம் என்ன உருவாக்குகிறோம் என்பது நூறு சதவிகிதம் நம்மிடம் உள்ளது. “குணநலன்” என்று நீங்கள் குறிப்பிடுவது, உங்களை வழிநடத்தவேண்டிய தன்மைகளாக இருக்கின்றன.

குணச்சித்திரமா, கேலிச்சித்திரமா விவேகமானவரா?

நீங்கள் நியாயமாக எந்த மனிதரைக் கேட்டாலும், அவர்கள் உயர்ந்த நிலையிலான இனிமையை விரும்புகின்றனர். உங்களுக்கு நான்கு அம்சங்கள் உள்ளன – உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திநிலைகள். இந்த நான்கு அம்சங்களும் இனிமையாக இருக்கவேண்டும். உடல் இனிமை அடைந்தால், நாம் அதனை ஆரோக்கியம் என்று அழைக்கிறோம்; அது மிகவும் இனிமையானால், அதனை நாம் இன்பம் என்று அழைக்கிறோம். மனம் இனிமை அடைந்தால், நாம் அதனை அமைதி என்று அழைக்கிறோம்; அது மிகவும் இனிமையானால், அதனை ஆனந்தம் என்று அழைக்கிறோம்.

உங்களுடைய உணர்ச்சிகள் இனிமையானால், அதனை அன்பு என்றும், உணர்ச்சிகள் மிகவும் இனிமையானால், நாம் அதனை கருணை என்றும் அழைக்கிறோம். உங்கள் சக்திநிலைகள் இனிமையானால், அதனை பேரின்பம் என்று அழைக்கிறோம்; அவை மிகவும் இனிமையானால், நாம் அதனை பரவசம் என்று அழைக்கிறோம். உங்களைச் சுற்றிலும் இனிமையை உருவாக்குவது என்பது பல்வேறு மக்களையும், விஷயங்களையும் சார்ந்தது, ஆனால் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தியின் இனிமைக்கு நூறு சதவிகிதம் நீங்கள்தான் பொறுப்பு.

ஒரு குணத்தைக் கட்டமைக்க முயற்சிக்க வேண்டாம். நீங்கள் வலிமையான ஒரு குணம் கொண்டவரானால், பிறகு கேலிச்சித்திரமாக ஆகிவிடுவீர்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்களுக்கு அருகில் அசைக்கமுடியாத ஒரு குணத்துடன் இருந்த ஒருவரை நீங்கள் ஒரு கேலிச்சித்திரமாகவோ அல்லது ஒரு விசித்திரமான படைப்பாகவோதான் நினைத்தீர்கள். அவர்கள் ஒரு வித்தியாசமான வளர்ச்சி நிலையில் இருந்தனர். யாராவது அப்படிப்பட்ட அசைக்கமுடியாத குணத்தை வெளிக்காட்டும்போது, அந்த முட்டாள்தனத்தை ஒருவராலும் தாங்கிக்கொள்ள முடியாது.

உங்களைச் சுற்றிலும் இனிமையை உருவாக்குவது என்பது பல்வேறு மக்களையும், விஷயங்களையும் சார்ந்தது, ஆனால் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தியின் இனிமைக்கு நூறு சதவிகிதம் நீங்கள்தான் பொறுப்பு.

உங்கள் குணத்தை ஒரு குறிப்பிட்ட விதமாக நீங்கள் வடிவமைத்தால், அடுத்த நபருடைய குணமும் ஒரு குறிப்பிட்ட விதமாக இருப்பதை நீங்கள் எதிர்பார்ப்பது தவிர்க்க இயலாதது. உங்களுடைய குணத்தின் வார்ப்புருவத்துக்குள் அவர்கள் பொருந்துவதற்கு நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்; இல்லையென்றால், அவர்கள் தேர்ச்சிபெற மாட்டார்கள். இந்த அணுமுறையை உங்களுக்கோ அல்லது வேறு யாரோ ஒருவருக்கோ மேற்கொள்ளாதீர்கள்.

ஒரு குணச்சித்திரம் ஆகிவிடாதீர்கள். நீங்கள் ஆனந்தம் நிரம்பிய, விவேகமான ஒரு மனிதராக இருந்தால், உங்களால் முடிந்த அளவுக்கு சிறந்ததைச் செய்வீர்கள். நம்மில் யாரும் ஒரே வழியில் வரவில்லை; நமது தகுதியும், திறன்களும் வேறுபடுகின்றன. யாரோ ஒருவரால் செய்யமுடிந்ததை நீங்கள் செய்யமுடியாமல் இருக்கலாம், ஆனால் அது பொருட்டில்லை. உங்களால் முடிந்தவரைக்கும் சிறந்ததை நீங்கள் செய்திடுங்கள்.

உயிர் - அனைத்து குணச்சித்திரங்களுக்கும் இயக்குனர்

உங்களது இயல்பிலேயே நீங்கள் ஆனந்தம் நிரம்பியவராக இருக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு தடையாக இருப்பதில்லை; நீங்கள் ஒருபோதும் பிரச்சனையாக இருப்பதில்லை. இந்த ஒரு விஷயம் நிச்சயம் செய்யப்பட வேண்டும்: அதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பிரச்சனையாக இருக்கக்கூடாது. ஆயிரக்கணக்கான மற்ற பிரச்சனைகள் உள்ளன. உங்களுக்கு அதிகமான பிரச்சனைகள் ஏற்பட்டால், அது மேலானது. ஏனென்றால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றால், நீங்கள் உலகத்தில் நன்றாக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்றால், ஒருவேளை நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் அழுத்தம் நிரம்பியவராக, இறுக்கமானவராக, துன்பம் அல்லது கோபம் கொள்ளும் அந்தக் கணமே, நீங்கள் பிரச்சனையாகிவிடுகிறீர்கள். இந்த ஒன்றை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்; பிறகு உங்களுக்கென ஒரு குணம் தேவையில்லை - நீங்கள் வாழ்க்கையைப் போலவே இருக்க முடியும். நீங்கள்தான் வாழ்க்கை. வாழ்க்கையே அனைத்து கதாபாத்திரங்களின் இயக்குனர்.

உங்கள் உடல் இப்போது இருப்பதற்கான பரிணாம வளர்ச்சியை அடைந்தது. ஆனால் இந்த மாதிரி நீங்கள் பிறக்கவில்லை. நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், அது நீங்களாகவே மாறுகிறது, ஏன்? ஏனென்றால், உயிர்சக்தி உங்களுக்குள் துடித்துக்கொண்டிருக்கிறது. சிறிதளவு மரபியல் மற்றும் பரிணாமத்தின் வரையறை இருக்கிறது, ஆனால் மற்றவை, உயிர்சக்தி என்று நீங்கள் அழைக்கும் புத்திசாலித்தனத்தால் செய்யப்படுகிறது. இந்த உயிர்சக்தியை முழு ஆற்றலில் வைத்திருப்பது நீங்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. மற்றபடி, குணநலன்களைக் கட்டமைக்காதீர்கள்.

உங்களது இயல்பிலேயே நீங்கள் ஆனந்தம் நிரம்பியவராக இருக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு தடையாக இருப்பதில்லை

உங்களது உடல் முழு வீச்சில் இருந்தால், அது ஒருவிதமாக நடந்துகொள்ளும். உங்கள் காரண அறிவு மட்டும் முழு வீச்சில் இருந்தால், நீங்கள் வேறொரு விதமாக நடந்துகொள்வீர்கள். உங்கள் உணர்ச்சிகள் மட்டும் முழுமையான செயல்பாட்டில் இருந்தால், மேலும் வேறொரு விதமாக நீங்கள் நடந்துகொள்வீர்கள். ஆனால் இந்த உயிர் முழு வீச்சில் இருந்தால், வாழ்வுக்கு எதிர்மறையான எதையும் அது செய்யாது. உயிர் மட்டும்தான் உங்களுக்கு இருக்கும் ஒரே காப்பீடு. நீங்கள் இறந்துவிட்டால், உங்களுடைய நூறு கோடி காப்பீட்டினால் என்ன பயன் இருக்கிறது? காப்பீடு செய்வதால் நீங்கள் வேறு யாரோ ஒருவரின் சொத்தாக இருக்கிறீர்கள். நான் எந்தக் காப்பீடும் செய்யவில்லை, ஆகவே "சத்குரு எப்பொழுது செல்வார்? நமக்கு ஒரு ஆயிரம் கோடி கிடைக்குமே," என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அப்படிப்பட்ட எதிர்பார்ப்பே இல்லை, ஏனென்றால் அங்கே காப்பீடு இல்லை.

நாம் ஏதோ ஒன்றை உருவாக்கவேண்டும் என்று நினைத்திருப்பதுதான் மனிதகுலத்தின் பெரும் சதவிகிதத்தினர் செய்துள்ள மிகப்பெரிய தவறு. இங்கே ஏற்கனவே அனைத்தும் இருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு மாமரமானது தேங்காய்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்வதில்லை; அதனுடைய ஒரே நோக்கம், ஒரு முழுமையான மாமரமாக வேண்டும் என்பதுதான். அங்கே பல தடைகள் இருக்கலாம் – அதற்குத் தேவையான நீர் இல்லாமல் இருக்கலாம், அல்லது அங்கே பசியாறக் காத்திருக்கும் பசு ஒன்று இருக்கலாம், அல்லது வேறு ஏதோ ஒன்று இருக்கலாம் – ஆனால் மரத்தின் ஒரே நோக்கம், முழுமையான ஒரு மாமரமாக வேண்டும் என்பது மட்டும்தான்.

உங்களுடைய நோக்கம், ஒரு முழுமையான உயிராக இருப்பது. ஒவ்வொருவரது உயிர்சக்தியும் அவர்களுக்கே உரிய வழியில் வெளிப்பாடு காணும். அவர்கள் இறுக்கமானவர்களாக இல்லாமல், முழு வீச்சிலான ஒரு உயிராக இருக்கும்வரை, அது நல்லதுதான்.