விழிப்புணர்வுடன் வாழ்தல்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்புவது எதையும் உருவாக்குவதற்கு என்ன தேவைப்படுகிறது?

உங்களுடைய விபரீதமான கனவுகள் நிஜமானால் என்னவாகும்? பெரும்பாலான மக்கள், அறியாமல் தங்களையே நாசம் செய்துகொள்வது எப்படி என்பதையும், நீங்கள் விரும்புவதை உருவாக்குவதற்கு உங்கள் மனதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருக்கவும்

சத்குரு: நெடிய நடைப்பயணம் சென்ற ஒருவர், ஒரு கட்டத்தில் அவர் சொர்க்கத்திற்குள்தான் இருக்கிறார் என்பதைக்கூட அறிந்துகொள்ளாமல், தற்செயலாக அதற்குள் நடந்து சென்றார். “இந்த நீண்ட நடையானது உண்மையிலேயே என்னைக் களைப்படையச் செய்கிறது. எங்காவது ஓய்வெடுக்க மட்டும் முடிந்தால் நலமாக இருக்கும்”, என்று நினைத்தார். நினைத்தமாத்திரத்தில், அவர் ஒரு அழகிய மரத்தையும், அதன் நிழலில் மெத்தென்ற புல்தரையையும் கண்டார். அங்கே சென்றவர், புல்தரை மீது தலை சாய்த்து, சில மணி நேரங்கள் நன்றாக உறங்கிவிட்டார். உறக்கம் கலைந்து எழுந்து, “நல்ல ஓய்வு கிடைத்தது. இப்போது எனக்குப் பசிக்கிறது; சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்கும்”, என்று நினைத்தார்.

உடனே, அவர் நினைத்த மிகச் சிறந்த உணவுகள் அனைத்தும் அவருக்கு முன்பாகத் தோன்றின. பசித்த மக்கள் கேள்விகள் கேட்பதில்லை, உணவு வரும்போது அவர்கள் வெறுமனே சாப்பிடுகின்றனர். அவரது வயிறு நிறையும்வரை சாப்பிட்டார். பிறகு, “எனக்கு அருந்துவதற்கு ஏதாவது கிடைக்கவேண்டுகிறேன்”, என்று நினைத்தார். அவர் எப்போதும் விரும்பியிருந்த எல்லா அற்புதமான பானங்களையும் நினைவுகூர்ந்தார். சட்டென்று அவை அனைத்தும் அவருக்கு முன்பாகத் தோன்றின. போதையூட்டும் பானம் அருந்துபவர்களும்கூட கேள்விகள் கேட்பதில்லை, ஆகவே அவர் அருந்தினார்.

இப்போது அவருக்குள் சிறிது பானம் இறங்கியதும், அவரது மனம் செயல்பட்டு, “இங்கே என்னதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது? நான் உணவு கேட்டேன், உணவு வந்தது. நான் அருந்தக் கேட்டேன், அருந்துவதற்குக் கிடைத்தது. ஒருவேளை இங்கே என்னைச் சுற்றிலும் ஆவிகள் உள்ளதோ!” என்று நினைத்தார். திடீரென்று அங்கே ஆவிகள் தோன்றின. “ஓ, ஒரு ஆவி வந்துவிட்டது, ஒருவேளை இந்த ஆவி தனது நண்பர்களுடன் வந்து, என்னைச் சித்திரவதை செய்யுமோ!” இப்படி நினைத்த அந்தக் கணமே ஆவியின் நண்பர்கள் அனைவரும் வந்து, அவரை சித்திரவதை செய்யத் தொடங்கின. அவர் அலறினார், “உதவி, உதவி! இவை என்னைச் சித்தரவதை செய்கின்றன! இவை என்னைக் கொல்லப் போகின்றன!” பிறகு அவர் இறந்துவிட்டார். ஒருவேளை நீங்கள்கூட ஆரம்பத்தில், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதியிருக்கலாம்.

உங்களுக்குத் தேவைப்படும் விதமான மனம்

அவர் ஒரு கல்பவிருட்ச மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். கல்பவிருட்சம் என்பது வரமளிக்கும் மரம், இந்த மரத்தின் கீழே, நீங்கள் எதனைக் கேட்டாலும், அது நிஜமாகிறது. அவர் உணவு கேட்டார், உணவு வந்தது. அவர் ஆவி கேட்டார், ஒரு ஆவி வந்தது. அவர் மரணம் கேட்டார், மரணம் நிகழ்ந்தது. இன்றைக்கும்கூட, நாம் வாழும் உலகில் கல்பவிருட்சங்கள் இன்னமும் இருந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் அவற்றைத் தேடிக்கொண்டு காட்டுக்கு செல்லவேண்டாம், ஏனென்றால் அங்கே அவற்றை கண்டுபிடிப்பது கடினம். சம்யுக்தா நிலையிலிருக்கும், நன்றாக நிலைநிறுத்தப்பட்ட ஒரு மனம் கல்பவிருட்சம் என்று குறிக்கப்படுகிறது. உங்களது மனம் நன்றாக நிலைநிறுத்தப்படும்போது, நீங்கள் கேட்கும் அனைத்தும் கண்கூடான நிஜமாகும்.

உங்கள் மனதில் ஒரு சக்திவாய்ந்த எண்ணத்தை உருவாக்கி அதை வெளியே வியாபிக்கவிட்டால், அது எப்போதுமே நிஜமாகும்.

பெரும்பாலான மக்கள், 90% நேரம் அவர்களுக்கு விருப்பமில்லாத விஷயங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அதே விஷயங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன, அவர்களும் புகார் கூறிக்கொண்டே இருக்கின்றனர். இதில் பிரச்சனை என்னவென்றால், உங்களுக்கு எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. இன்றைக்கு நீங்கள் கேட்கும் பெருவாரியான விஷயங்கள் காலப்போக்கில் உங்களுக்கு முக்கியத்துவம் இல்லாததாகிவிடுகிறது. நாளைக்கு அந்த விஷயங்கள் கிடைத்தால், உங்களுக்கு அவை பெரிதாக இருக்காது. அதற்குள், உங்கள் விருப்பங்கள் ஏற்கனவே வேறு ஏதோவொரு விஷயத்திற்கு மாறிவிடுகிறது.

உங்களுக்கு கேட்பதற்கான ஆற்றல் இருந்தால்தான், நீங்கள் கேட்கும் எந்த விஷயமும் நிஜமாகமுடியும். இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரு அதிர்வாகத்தான் இருக்கிறது என்பதை இன்றைக்கு நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில், நீங்கள் ஒரு அதிர்வாக இருக்கிறீர்கள், மற்றும் உங்களது எண்ணமும்கூட ஒரு குறிப்பிட்ட அதிர்வாக இருக்கிறது. உங்கள் மனதில் ஒரு சக்திவாய்ந்த எண்ணத்தை உருவாக்கி அதை வெளியே வியாபிக்கவிட்டால், அது எப்போதுமே நிஜமாகும்.

எதிர்மறையான செய்திகளைத் தவிர்ப்பது

நீங்கள் ஏதோவொன்றைத் துவங்கும்போது, அது வெளிப்படுவதற்கு முன்பே, “சாத்தியம் இல்லை, அசாத்தியம்” என்பதைப்போன்று உங்களுக்கு நூறு எதிர்மறை எண்ணங்கள் இருப்பதுதான் பிரச்சனையாக உள்ளது. பிறகு அது வெளிப்படும்போது, அந்த எண்ணத்திற்கு சக்தியும், ஆற்றலும் இருப்பதில்லை என்பதுடன், எதுவும் நிகழ்வதுமில்லை. ஒரு நேரத்தில், “எனக்கு அது வேண்டும்,” என்று நீங்கள் கூறுகிறீர்கள். மற்றொரு நேரத்தில், “அது சாத்தியமில்லாதது”, என்று கூறுகிறீர்கள். “சாத்தியம் இல்லை” என்பதும் “அது எனக்கு வேண்டாம்” என்பதும் ஒரே விஷயம்தான். “அது சாத்தியமில்லாதது” என்று நீங்கள் கூறும்போது, “அது எனக்கு இனிமேல் வேண்டாம்”, என்று உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்கிறீர்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதே இப்போது உங்கள் மனதுக்குத் தெரிவதில்லை. இதுதான் குழப்பத்தை உருவாக்குகிறது.

எண்ணத்தின் ஆற்றலை வசப்படுத்திப் பயன்படுத்துதல்

உங்களுக்கு ஏதோவொன்று வேண்டுமென்றால், கண்கூடாக நிஜமாகக்கூடிய ஒரு ஆற்றல்வாய்ந்த எண்ணத்தை எப்படி உருவாக்குவது என்று உங்களுக்குத் தெரியவேண்டும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தில் விஷயங்களை நகர்த்தும் ஆற்றல் ஒரு எண்ணத்திற்கு உண்டு. உதாரணத்துக்கு, நீங்கள் வீதியில் நடந்துகொண்டிருக்கும்போது, உங்களுக்குப் பின்னால் இருந்து யாராவது உங்களை உற்றுப்பார்த்தால், அதை உங்களால் உணரமுடியும். உங்களுக்கு இது எப்படித் தெரிகிறது? ஆசைகொண்ட, கோபம் அல்லது வெறுப்பு நிரம்பிய மனங்கள் அனைத்தும் ஒருமுனைப்பான மனங்கள். உங்கள் மீதான அவர்களின் கவனமானது, உங்கள் உடலால் உணரக்கூடிய ஒரு அதிர்வை உருவாக்குகிறது.

பெரும்பாலான நேரம், உங்கள் வாழ்க்கையில் நிகழக்கூடாத விஷயங்களைப் பற்றியே நீங்கள் சிந்தித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

நீங்கள் பரிசோதிக்க விரும்பினால், ஒருவரது உடலின் உணர்ச்சி நிரம்பிய பகுதி மீது தீவிர கவனம் செலுத்தமுடியும். நீங்கள் அருகாமையில் இருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கும்போது, நீங்கள் அவர்களின் புறங்கழுத்து அல்லது நுனி மூக்கு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தமுடியும். உங்கள் மனதைத் தீவிரமாக அதில் செலுத்தினால், ஒரு நிமிடத்திற்குள், அவர்கள் தன்னிச்சையாக அந்தப் பகுதிகளை சொறிந்துகொள்வார்கள். ஏனென்றால் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஒருவித குறுகுறுப்பான உணர்ச்சி ஏற்படும். இது ஒரு நாய் அல்லது பூனை போன்ற விலங்குகளுக்கும்கூட பொருந்துகிறது. அதனுடைய உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மீது நீங்கள் தீவிரமாக கவனம் செலுத்தினால், அது உடனே அந்த இடத்தைச் சொறிந்துகொள்ளும். உங்களுடைய மனக்குவிப்பினால் மட்டுமே, வேறு ஒருவரது உடலில் நீங்கள் ஒரு உணர்ச்சியை உருவாக்கமுடியும்.

தற்போது பிரச்சனை என்னவென்றால், உங்கள் மனம் ஒருமுனைப்புடன் இல்லை. பெரும்பாலான நேரம், உங்கள் வாழ்க்கையில் நிகழக்கூடாத விஷயங்களைப் பற்றியே நீங்கள் சிந்தித்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களது மனதை ஒழுங்காக ஒருமுனைப்படுத்துவதன் மூலம், நிச்சயமாக உலகத்தில் உங்களால் விஷயங்களை நகர்த்தமுடியும்.