பகிர்வுகள்

புதிய உயரங்களை நோக்கி: முன்னாள் RAF விமானி, ஈஷாவில் தன் உள்நிலை வளர்ச்சியை வேகப்படுத்துகிறார்

பாரம்பரிய ஹடயோகாவின் உள்நிலை அனுபவத்தில் மூழ்கித் திளைப்பதற்காக, போயிங் 777 விமானத்தில், உலகைச் சுற்றிப் பறக்கும் தொழிலை மறுத்துவிட்டு, 2022ல் ஈஷா ஹடயோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் பட்டதாரியாவதற்குத் தீர்மானித்த முன்னாள் ராஜாங்க விமானப்படை விமானி மாத்யூ ஜூவர்ஸ்-ஐ சந்தியுங்கள்.


கனவை நனவாக்குவதா?

எனக்கு 14 வயதாக இருந்தபோது, எனது தந்தை என் விருப்பத்துக்கு மாறாக, என்னை ஒரு மாணவ விமானப்படை சந்திப்புக்கு அழைத்துச் சென்றார். என் வாழ்வில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதை நான் சிறிதும் அறிந்திருக்கவில்லை. ஒரு விமானியாகும் முதல் படியாக, இங்கிலாந்தின் விமான மற்றும் விண்வெளிப் படை, அதாவது ராஜாங்க விமானப்படையில் (RAF) இணைந்தேன். இந்த விமானப்படை பயிற்சியின்போது, ஒருங்கிணைந்து பறத்தல், வான்பரப்பில் சாகசங்கள், தாழப்பறத்தல், ஆயுதப்பயிற்சி, மற்றும் உருமாற்றும் திறன்கள் போன்றவற்றை நான் பயின்றேன்.

RAF-ல் ஒரு போர் விமானியாகும் என் இளம்பருவத்துக் கனவுடன், இருபதுகளின் முன்பகுதியில் நான் இருக்கும்போதே, அந்தக் கனவை நனவாக்கும் பாதையில் இருந்ததால், இனி வாழ்வு என் பக்கம் என்று எண்ணினேன். இருப்பினும், விதிவசத்தால், நிரந்தரமாக நான் ஹாங்காங் செல்லவேண்டி வந்தது. அடுத்த ஒன்பது வருடங்களுக்கு காத்தே பசிபிக் சார்பாக போயிங் 777 விமானியாக இருந்தேன். எனது புதிய பணியின் காரணமாக, ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்கக்கூடிய அரிய வாய்ப்பாக, உலகையே நான் சுற்றி வந்தேன்.

விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய, நமது கிரகத்தின் கழுகுப்பார்வைக் காட்சியை நான் காண நேர்ந்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஹாங்காங்கில் இருந்து அமெரிக்கா செல்லும்போது, நாங்கள் வடதுருவத்தின் மீது பறப்பதுண்டு. மணிக்கணக்கான சூரிய உதய மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சிகளையும், வடதுருவத்தின் மின்னும் ஒளிச்சிதறல்களையும்கூட காணமுடிந்தது. மற்ற விமானங்களில், எரிமலைகள் மற்றும் பனிமலைக் காட்சிகளும் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைத்தன.

என் வாழ்வில், இன்பத்திற்காக மீண்டும் ஒரு நாள் பறக்க நான் விரும்புகிறேன், ஆனால் இப்போதைக்கு, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் என் கைகளில் உள்ளது.

உள்நோக்கிய பயணத்தின் முதல் பெரிய படி

வாழ்க்கையில் என் பங்குக்கு நான் துன்பங்களை எதிர்கொண்டு, சில காலம் அதற்கான தீர்வைத் தேடிக்கொண்டிருந்தேன். நான்தான் துன்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறேன் என்பது எனக்கு தெளிவாகப் புரிந்தாலும், அது நிகழ்வதை என்னால் நிறுத்த இயலவில்லை. அப்போது, விதிவசத்தால் 2018ல், எனது நெருங்கிய நண்பர் ஒருவர், சத்குருவின் Youtube வீடியோவை எனக்குப் பகிர்ந்தார். எப்படியோ அது எனக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தது. தொடர்ச்சியாக சத்குருவின் வீடியோக்களைப் பார்த்தபிறகு, எனது அடுத்த அடி தெளிவாகத் தெரிந்தது. ஹாங்காங்கில் புதிதாகத் திறக்கப்பட்ட ஈஷா யோக மையம் எனது வசிப்பிடத்தில் இருந்து ஐந்து நிமிட நடையில் அடையக்கூடிய தொலைவில் இருந்ததால், இது தற்செயலானது என்று என்னால் எண்ண முடியவில்லை. இதில் என்ன ஒரு சுவாரஸ்யம் என்றால், 2018 டிசம்பர் 8 – 9 தேதிகளில் நான் ஈஷா யோகா வகுப்பு முடித்தேன், மேலும் இப்போது, நான்கு வருடங்கள் கழித்து 2022 டிசம்பர் 8 அன்று இந்த அனுபவத்தை நான் எழுதுகையில், ஒரு நாள் முன்னதாகத்தான் ஹடயோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் பட்டமேற்றேன். ஒரு வீடியோ இவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஒருபோதும் நான் கற்பனை செய்தும் பார்த்ததில்லை.

நம்பிக்கையின் பாய்ச்சல்

சிறிது காலம், வாழ்வின் பல்வேறு பாதைகளை வெளிப்படுத்தும் புதிய வாய்ப்புகளுக்காகவும், என் வாழ்வின் போக்கை மாற்றுவதற்காகவும் என் கண்கள் தேடலில் ஈடுபட்டிருந்தன. அப்போதுதான், லண்டனில் மண் காப்போம் இயக்கத்தின்போது சத்குருவை நான் சந்திக்க நேர்ந்தது. அதுதான் நான் முக்கியமான ஒரு முடிவெடுத்த கணம். ஒரு தொழில்முறை விமானியாக, எனது சிறகுகளுக்கு நான் சற்று ஓய்வளிக்க வேண்டியிருந்தது. அதனால் வாழ்க்கையில் என்னால் வேறொரு கதவைத் திறக்கமுடியும் என்பதையும் அறிந்தேன். நம்பிக்கையின் பாய்ச்சலில் துள்ளி எழும்பி, சாதனா பாதைக்கும், ஹடயோகா ஆசிரியர் பயிற்சிக்கும் விண்ணப்பித்தேன். நான் செல்லவேண்டிய அந்தத் திசையில், வழிநடத்தப்படுவேன் என்று எனக்குள் உறுதியாக அறிந்துகொண்டு, சத்குருவின் அருளுக்கு என் முடிவை விட்டுவிட்டேன்.

எனது அழைப்பைக் கண்டுகொண்டேன்

நான் ஒரு யோகா ஆசிரியராக இருக்கிறேனா என்ற கேள்வியை நான் எப்போதும் எதிர்கொண்டதுண்டு. தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களை நீங்கள் யோகப்பயிற்சியில் செலவழிப்பதை மற்றவர்கள் கண்டால், அது இயல்பான கேள்விதான் என்று நானே யூகித்தேன். உண்மை என்னவென்றால், கற்றுக்கொடுப்பது என்ற எண்ணத்தையே என் மனம் ஒரு சில வருடங்களுக்கு முன் ஏற்றுக்கொள்ளாமல்தான் இருந்தது. சாதனா பாதைக்கு நான் நிராகரிக்கப்பட்ட பிறகு, ஈஷா ஹடயோகா பள்ளியால் ஏற்றுக்கொள்ளப்பட்டேன். ஹடயோகாவில் எனக்காக ஏதோவொன்று காத்திருப்பது எனக்குத் தெரிந்தது, ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்றோ அல்லது என் எதிர்காலம் என்னவாக இருக்கப்போகிறது என்பதோ எனக்குத் தெரியவில்லை. அவையனைத்தையும் நான் அவரது அருளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டேன். ஹடயோகா ஆசிரியர் பயிற்சிக்கு நான் வந்தடைந்து, முதல் நாளன்று ஆதியோகி ஆலயத்திற்குள் நடந்து சென்று, முழந்தாளிட்டு அமர்ந்தபோது, என் கன்னங்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. நான் நிச்சயமாக இங்கே இருக்கவேண்டி வந்தது கடவுளின் பேரருள் போலத் தோன்றியது.

சாகசப் பயணம்

ஹடயோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பு ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போன்றது - கண்களைக்கட்டி விட்ட ஒரு நிலையில் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். முன்னறிவுப்புகள் எதுவும் இல்லை; விஷயங்கள் நிகழ்கின்றன, அதன்போக்கில் நீங்கள் விழிப்புணர்வுடன் இணைந்து செல்லும் திறனுடன் இருக்கவேண்டும். ஆரம்பத்திலேயே உங்கள் திட்டங்கள் கண்காணாமல் ஒளிந்துகொள்கின்றன. ஒவ்வொரு முறையும், “ஆஹா, இது நல்ல நேரம், இன்றைக்கு என் துணி துவைத்து அடுக்கிவிடலாம்”, என்று நினைக்கும்போதெல்லாம், அன்றைக்குத்தான் வகுப்பு மேலும் இரண்டு மணி நேரங்கள் நீடிக்கும், நீங்கள் எண்ணியிருந்த அந்த வாய்ப்பு இல்லாமல் போகும்.

வகுப்பின் தொடக்கத்தில், அது பயிற்சிகளைக் கற்றுக்கொள்வதைப் பற்றியது என்றுதான் உணர்ந்தேன்; ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, ஈஷாவில் இருக்கும் அனைத்து வகுப்புகளையும் போல, ஹடயோகா ஆசிரியர் பயிற்சியும்கூட, சத்குரு கூறுவதற்கிணங்க, “கவனமாக வடிவமைக்கப்பட்ட குழப்பங்கள்”, உலகளவுக்கு இருக்கிறது என்று தெளிவானது. ஈஷாவின் தாளலயத்தையும், விஷயங்களின் போக்கையும் உள்வாங்கிவிட்டதாக நீங்கள் உணரும் கணமே – பூம்! எல்லாமே மாறிவிடுகிறது, மற்றும் நீங்கள் முற்றிலும் ஒரு புதிய சூழ்நிலைக்குள் இருப்பதையும் காண்கிறீர்கள். “நான் எதனால் துன்பப்படுகிறேன்? இந்த மாதிரி நான் ஏன் உணர்கிறேன்?”, என்று கூர்மையாக கவனம் செலுத்தி, உங்களையே கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டிய நேரம் இது என்பதை நான் உணர்ந்தேன்.

ஈஷா என்பது ஒரு sandpaper போன்றது என்று என்னிடம் கூறப்பட்டிருந்தது. நீங்கள் எங்கிருந்தாலும், அது உங்களைப் பிடித்து, கடினமான மேற்பரப்பைத் தேய்த்தெடுக்கும். நீங்கள் வழவழப்பாக மாறுவதற்கு எவ்வளவு காலமாகிறது என்பதுதான் கேள்வி. பாதையெங்கும் என் பங்குக்கான வலிகளும், காயங்களும் நிறையவே கிடைத்தன.

பக்தியின் மாயவித்தை

என் அனுபவத்தில், ஹடயோகா ஆசிரியர் பயிற்சி ஒரு உயிரோட்டமான செயல்முறை. ஒவ்வொரு தனிமனிதரும் பெறும் பின்னூட்டமும், ஆன்மீகரீதியாக அவர்கள் அடையும் வளர்ச்சியும், அவர்களது திறந்ததன்மை மற்றும் செயல்முறையுடனான ஈடுபாட்டைப் பெரிதும் சார்ந்துள்ளது. முக்கியமாக, பக்தி நிலையில் இருக்கும்வண்ணம், “என் சுயத்தையே ஒதுக்கிவைப்பது” என்ற மிகப் பெரிய பாடத்தை இந்தப் பயிற்சி எனக்கு கற்றுத்தந்தது. பக்தி என்பது பயிற்சியின் பெரும்பகுதியாக இருந்தது. முதலில், எப்படி பக்தியாக இருப்பது என்று புரிந்துகொள்வதே எனக்குக் கடினமாக இருந்தது. மெல்லமெல்ல அது எனக்குப் புரிந்தது, பக்தி என்பது நாம் செய்யக்கூடிய ஒன்றல்ல; நான் அதுவாகவே மாறவேண்டும்.

என்னையே நான் ஒதுக்கிவைக்கும் அந்த மகத்தான வாய்ப்பு பாவ ஸ்பந்தனா வகுப்பு தன்னார்வத்தொண்டின் வடிவில் வந்தது. நான் பல வருடங்களாக இதற்காகக் காத்திருந்துள்ளேன். சரியான தருணத்தில் வந்த வாய்ப்பினால், என் தினசரி வாழ்விலிருந்து எனக்கு ஒரு இடைவெளி அளித்து, வகுப்பில் என்னை முழுமையாக ஈடுபடச் செய்தது. பாவ ஸ்பந்தனா ஆரம்பிக்கும் முன்பு, நாங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட வேண்டும் என்றும், பங்கேற்பாளர்களுக்கு அதனை நிகழச்செய்யுமாறு மட்டும் கேட்டுக்கொள்ளப்பட்டோம். தேவைப்படுவது என்னவாக இருந்தாலும் நான் முழுமையாக என்னையே வழங்குவதுடன், எல்லாவற்றுக்கும் “ஆம்” என்று மட்டும் கூறுவேன் என்று நான் எனக்குள் முடிவு செய்துகொண்டேன்.

இந்த முறையில் என்னையே ஒதுக்கிவைப்பது மிகவும் ஆற்றல்மிக்கதாக இருந்ததுடன், வகுப்பு எங்களின் தன்னார்வப்பணியைப் பெரிதும் சார்ந்திருந்ததை நான் அறிந்ததால், அளவில்லாமல் என்னைச் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டேன். ஒட்டுமொத்த செயல்முறையும், பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருடனும் நான் அதிகமாக தொடர்பில் இருந்ததை உணரச்செய்தது. மேலும், ஒவ்வொருவருடனும் அதிக கருணை மற்றும் அன்புணர்வை எனக்குள் ஏற்படுத்தியது.

மறைஞானி சத்குரு

“குரு” என்ற வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் கலாச்சாரப் புரிதல் இல்லாதது, என் வாழ்வில் ஒரு ஆசிர்வாதமாகவே இருந்தது. ஒரு குரு என்பவரை எண்ணற்ற வழிகளில் புரிந்துணர முடியும் என்பதைக் கண்டுகொண்டேன். ஆன்மீகத்துக்குள் நான் ஒரேயடியாகப் பாய்ந்து, பல்வேறு வகுப்புகளில் பங்குபெறும் வாய்ப்பையும் வழங்கியது. சத்குரு குறித்த எனது முதல் எண்ணம்? அவரது தெளிவும், நகைச்சுவையும் என்னை பிரமிக்கச் செய்தது. இந்த விதமாக, உலகத்திற்கு இவ்வளவு ஆழமான ஞானத்தை எப்படி ஒருவரால் கொண்டுவர முடியும் என்று வியந்துபோனேன்.

மனிதரிலிருந்து குருவாக, தனித்தன்மையில் இருந்து உச்சபட்ச சாத்தியமாக – சத்குருவுடன் எனது ஈடுபாடு வளர்கையில், நான் அவரை எப்படி உணர்ந்தேன் என்பதும் மாறத் தொடங்கியது. பின்னாளில், நான் தவறான தீர்மானங்களுக்குள்தான் தள்ளப்படுவேன் என்று அறிந்துகொண்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதை நான் நிறுத்திவிட்டேன். அவர் அனைத்திலும் மேலானவர் மற்றும் நான் முன்பு எப்போதும் உணர்ந்திராத அளவுக்கு, வேறு எதைக்காட்டிலும் மிக மிக அதிகமாக, இணைத்துக்கொள்ளும் தன்மையை உடையவர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

உலகத்துக்கு அர்ப்பணிப்பாக இருப்பது

அதனால், ஈஷா ஹடயோகா ஆசிரியராக இருப்பதைக் குறித்து நான் எப்படி உணர்கிறேன்? இந்தக் கட்டத்தில் நான் யோகா கற்றுக்கொடுக்கும் தயார்நிலையில் இல்லை என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது. சத்குரு அவர்களால் என்ன வழங்கப்பட்டதோ, அதன் ஆழம் என்னைக் காட்டிலும் மிகப் பெரிது. எனக்குத் தெரிந்ததெல்லாம், ஒரு அர்ப்பணிப்பாக இருந்து, என் மூலமாக யோகா பரிமாறப்படுவதை அனுமதிப்பதால், மற்றவர்கள் ஆழமான ஒன்றை உணரமுடியும் என்பது தான். இறுதியாக, ஒட்டுமொத்த உலகத்துக்கே யோகாவைப் பரிமாறும் சத்குருவின் அர்ப்பணிப்பில் ஒரு பாகமாக விளங்குங்கள். அவரது கனவை நிகழச் செய்வோம்!

ஈஷா ஹடயோகா ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சி குறித்து மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமா? isha.sadhguru.org/HYTT