சத்குரு எக்ஸ்குளூசிவ்

கனவுகளைத் துரிதப்படுத்துதல்: கனவு யந்திரத்தை சத்குரு எப்போது, எதற்காக அமைத்தார்

கனவுகள், எதார்த்தம் மற்றும் ஞாபகம் இவற்றுக்கு இடையில் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்தும் சத்குரு, அனாதி[1] நிகழ்ச்சிக்காக அவர் உருவாக்கிய “கனவு இயந்திரம்”, அதன் நோக்கம் மற்றும் இந்தப் பிறவியே உங்களுக்கு இறுதியானதாக இருப்பதற்காக எந்த அளவுக்கான கர்மா தீர்க்கப்பட வேண்டியுள்ளது என்பதை விளக்குகிறார்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. மக்களின் கனவு செயல்முறையை துரிதப்படுத்துவதற்காக, அனாதி நிகழ்வில் நீங்கள் ஒரு கனவு யந்திரத்தை உருவாக்கியதாகக் கூறினீர்கள். இது அவர்களுக்கான ஆன்மீக வளர்ச்சிக்கானதா? ஒருவர் தூக்கத்தில்கூட ஆன்மீக சாதனா செய்யமுடியும் என்பது இதன் அர்த்தமா?

சத்குரு: ஒரு கனவு என்பது என்ன? உங்களது மனரீதியான வரம்புக்கு உட்பட்டு நிகழும் அனைத்துமே, உண்மையில் ஒரு கனவுதான். இருத்தலில் இல்லாத ஆனால் எதார்த்தம் போலவே – அல்லது எதார்த்தத்தைவிட அதிகமாக - உங்கள் அனுபவத்தில் உணர்வது, ஒரு கனவு என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்ச்சியும் ஒரு கனவாக இருக்கிறது. அந்த விதத்தில், உங்கள் வாழ்வின் ஒட்டுமொத்த அனுபவமும் ஒரு வகையான கனவுதான். ஏனென்றால் நீங்கள் யாரையாவது பார்த்தால், உங்கள் மன என்னும் வட்டத்தில் அவர்கள் பிரதிபலிக்கப்படும் விதமாகத்தான் நீங்கள் பார்க்கிறீர்களே தவிர, அவர்கள் இருக்கும் விதமாக நீங்கள் அவர்களைப் பார்ப்பதில்லை. நீங்கள் பார்ப்பது பெருமளவுக்கு ஒரு உளவியல் செயல்முறையாகவே இருக்கிறது, அதனால் அது ஒரு கனவுதான்.

நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்ச்சியும் ஒரு கனவாக இருக்கிறது. அந்த விதத்தில், உங்கள் வாழ்வின் ஒட்டுமொத்த அனுபவமும் ஒரு வகையான கனவுதான்.

கனவுகள் பலவிதமாக இருப்பதுடன், வெவ்வேறு நிலைகளில் நினைவுகளை மீண்டும் காட்சிப்படுத்துவதற்கான ஒரு வழியாக உள்ளன. இந்தக் கனவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்வரை, உங்களது தினசரிநாள் ஒரு ஏமாற்றுதலாக இருக்கிறது. ஏனெனில் உங்கள் அனுபவத்தில், கனவு உண்மையான விஷயமாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் புதியது என்று நம்புவதில் உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்கிறீர்கள், ஆனால் உங்கள் கனவுகள் கடந்தகால ஞாபகத்தை அடிப்படையாகக் கொண்டவை, ஆகவே நீங்கள் கடந்த காலத்தைத்தான் மீண்டும் வாழ்கிறீர்கள்.

கனவுகள், ஞாபகம் மற்றும் எதார்த்தத்தின் மாயை

உங்கள் மனரீதியான வரம்புக்கு உட்பட்டு நிகழ்கின்ற எந்த விஷயமும் ஒரு கனவுதான். பலருக்கும், எதார்த்தத்தைவிட கனவுகள் அதிக ஆற்றலுடன் இருப்பது எதனாலென்றால் அவர்கள் நிஜமாகவே ஒருபோதும் எதார்த்தத்தைத் தொட்டது கிடையாது. அவர்கள் “வாழ்க்கை” என்று அழைப்பது எதுவோ, அது அவர்களது சிந்தனையில் உணர்வதுதான். ஒட்டுமொத்த பிரபஞ்ச பிரம்மாண்டத்தைவிட, நீங்கள் சிந்திப்பது, உணர்வது அதிக முக்கியமாகிவிட்டது. இவ்வளவு பரந்ததும், புரிந்துகொள்ள முடியாததுமான ஒன்று உங்களை மேம்படுத்த இயலாமல், ஆனால் உங்களது சொந்த உருவாக்கமான ஒரே ஒரு எண்ணம் உங்களை சாய்த்துவிட முடிந்தால், பிறகு இது கனவுதானே? தவிர, இதில் மேலும் மோசமானது என்னவென்றால், இந்தக் கனவுகூட உங்களுடையது இல்லை.

இவை, உங்களது சமூகம் சார்ந்த சூழல்களில் இருந்தும், மரபியல் சார்ந்த விஷயங்களின் வடிவிலும், நீங்கள் கிரகித்த பதிவுகளின் அடிப்படையில் எழுகின்ற நிர்பந்த நிகழ்வுகளாக இருக்கின்றன. மரபியல் சார்ந்தது என்று நான் கூறும்பொழுது, அது உங்கள் பெற்றோரிடமிருந்து வருபவை மட்டுமல்ல - உங்கள் மரபியல் என்பது உங்களது முன்னோர்கள் வரைக்கும் மட்டும் செல்லாமல், அது மேலும் தாண்டி, விலங்கு இயல்புக்குள் செல்கிறது. இன்று, இதனை நாம் அறிவியல்பூர்வமாக அறிகிறோம், ஆனால் ஒருசெல் உயிரியானது பல்வேறு சிக்கலான நுட்பங்களுக்குள் பரிணாமம் அடைந்து, இன்று நாம் மனிதவடிவில் இங்கே அமர்ந்திருக்கிறோம் என்பதை எப்போதும் நாம் அறிந்து வந்துள்ளோம்.

மனித ஞாபகத்தின் பரிணாம வரலாறு

உயிர் செயல்முறையின் ஞாபகமும், அந்த ஒருசெல் உயிரினத்திலிருந்து, மனிதன் என்ற இந்தச் சிக்கலான இயங்குநுட்பம் வரைக்கும் இது எப்படி நிகழ்ந்துள்ளது என்பதும், இன்னமும் உங்கள் உடலுக்குள் பதிவாகி இருக்கிறது. விலங்கு இயல்பின் உச்சத்தில் நீங்கள் இருக்கிறீர்கள், அதாவது இவை அனைத்தின் தொகுப்பான வெளிப்பாடாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது இதன் பொருள். நீங்கள் ஒரு புழுவைப் பார்த்தால், அது வெறும் ஒரு புழுவாக மட்டும் இருக்கிறது; ஒரு பூச்சியானது, ஒரு பூச்சியாக மட்டும் இருக்கிறது; பறவையானது, ஒரு பறவையாக மட்டும் இருக்கிறது; ஒரு விலங்கு, விலங்காக மட்டும் இருக்கிறது; ஒரு நாயானது, ஒரு நாயாக மட்டும் இருக்கிறது; மற்றும் ஒரு யானை, யானையாக மட்டும் இருக்கிறது. ஆனால் மனிதன் என்று குறிக்கப்படும் உயிரினம் மட்டும்தான், இந்த எல்லா விஷயங்களின் ஒட்டுமொத்தமான திறனுடன் இருக்கிறது.

உயிர் செயல்முறையின் ஞாபகமும், அந்த ஒருசெல் உயிரினத்திலிருந்து, மனிதன் என்ற இந்தச் சிக்கலான இயங்குநுட்பம் வரைக்கும் இது எப்படி நிகழ்ந்துள்ளது என்பதும், இன்னமும் உங்கள் உடலுக்குள் பதிவாகி இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நாளன்று, நீங்கள் ஒரு எறும்பைப்போல் கடிக்கும் திறன் கொள்கிறீர்கள் – ஒரு சிறிதளவுதான். வேறொரு நாளில், நீங்கள் ஒரு நாயைப்போல் உறுமக்கூடியவராக இருக்கிறீர்கள். மற்றொரு நாளில், ஒரு யானையைப்போல் உங்களால் மக்களை அடித்துத் தூளாக்கமுடிகிறது. மற்றொரு நாள், ஒரு பறவையைப்போல் உங்களால் கூவ முடிகிறது. அந்த எல்லாவற்றையும் உங்களால் செய்யமுடிகிறது. இந்த எல்லா விஷயங்களையும் மனிதர்களால் செய்யமுடிகிறது; விழிப்புணர்வின் வெவ்வேறு நிலைகளில், அவர்கள் வெவ்வேறு விஷயங்களாக மாறுகின்றனர். அவை அனைத்தும் உயிர்ப்பான ஞாபகத்தின் வடிவில் இல்லையென்றாலும், இந்த எல்லா ஞாபகமும் உங்கள் உடலமைப்புக்குள் இருந்துகொண்டிருக்கிறது.

உங்கள் ஆன்மீக சாத்தியத்தை பூதசுத்தி எவ்வாறு மேம்படுத்துகிறது

உங்களது பெற்றோரை, உங்கள் தாத்தா பாட்டியை மற்றும் உங்கள் பாட்டன் பூட்டியை, நீங்கள் அவர்களைப் பார்த்ததில்லை, அவர்களை அறிந்திருக்கவில்லை என்றாலும், உங்களுக்குள் எங்கோ உங்களது உடல், அவர்களை நினைவில் வைத்திருக்கிறது. இந்த ஞாபகம், உங்களின் தற்போதைய புரிதலின் தளங்களுக்கும் அப்பால் செல்கிறது. அது மனித வடிவையும், விலங்கு இயல்பையும் கடந்து, அடிப்படையான மூலக்கூறுகளுக்கு செல்கிறது. இதன் காரணமாகவே, யோகாவில் பூதசுத்தி மிக அடிப்படையான சாதனா வடிவமாக இருக்கிறது. உங்கள் தந்தை, தாய், தாத்தாபாட்டி, முன்னோர்கள், மனிதக்குரங்கு, மற்றும் அந்த ஒருசெல் விலங்கு ஆகிய எல்லா ஞாபகத்திலிருந்தும், பஞ்ச பூதங்களையும் நீங்கள் தூய்மைப்படுத்துகிறீர்கள். இந்த ஞாபகத்தை நீங்கள் அழித்துவிட்டால், பிறகு நீங்கள் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒன்றாக இல்லாமல், உங்களுக்கே உரித்தான சாத்தியமாக இருக்கிறீர்கள்.

ஆன்மீக செயல்முறை என்பது இந்த ஞாபகத்தை அழிப்பது குறித்தது அல்ல, ஆனால் அதிலிருந்து உங்களையே தொலைவில் நிறுத்துவதற்கானது.

நீங்கள் நினைத்திருப்பதைவிட, ஞாபகம் மிகமிக முக்கியமானது. உங்கள் இதயம் துடிப்பது ஏனென்றால் உங்கள் உடலைப்புக்குள் ஏதோவொன்று, எப்படித் துடிப்பது என்பதை நினைவில் வைத்துள்ளது. இரசாயன எதிர்செயல்களின் நுட்பங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதன் காரணம், அதைச் செய்வதற்கு இதுதான் வழி என்பதை, ஏதோவொன்று நினைவில் வைத்துள்ளது. இது இலட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சிதோறும் கற்றுக்கொண்ட ஒரு செயல்முறை. உயிர் தனக்குத்தானே செய்யக் கற்றுக்கொண்டதுடன், அதை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறது; அது மறந்துவிட்டால், நீங்கள் இந்தக்கணமே இறந்துவிடுவீர்கள். ஆன்மீக செயல்முறை என்பது இந்த ஞாபகத்தை அழிப்பது குறித்தது அல்ல, ஆனால் அதிலிருந்து உங்களையே தொலைவில் நிறுத்துவதற்கானது. அதனால் இந்த ஞாபகம் ஒரு பிணைப்பாக இல்லாமல், ஒருவருக்கு ஆதாரவளமாகி, அவரைக் கட்டிப்போடாமல், முன்னோக்கிச் செலுத்தும் பரிமாணமாக இருக்கிறது.

கனவு யந்திரம் உண்மையில் என்ன செய்தது

அனாதியில், ஒரு கனவு யந்திரத்தை நாம் உருவாக்கி, அதன் இருப்பில் மக்கள் உறங்குவதற்காக அமைத்திருந்தோம். லிங்கசரீரம் என்று யோகாவில் அழைக்கப்படும், கனவின் அந்த ஒரு பகுதியை விரைவுபடுத்துவதற்காக, கனவு யந்திரம் ஒரு கருவியாக இருந்தது. இந்த மரபியல் உடல் அதற்கென்று ஒரு ஞாபகத்தைக் கொண்டிருப்பதுடன், இந்த ஞாபகமானது தொடர்ச்சியாக நிகழ்கிறது. லிங்கசரீரத்தை மிகச்சிறிய அளவில் சுருக்குவது அனாதியின் முயற்சியாக இருந்தது. அது சுருக்கப்படும்பொழுது, செறிவூட்டமடைவதால், அது மக்களுக்கு அதீதமான மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கமுடியும்.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளை பலரால் தாங்கிக்கொள்ள இயலாமல் போகலாம் என்பதால், ஒரு பாதுகாக்கப்பட்ட சூழலில் இருக்கத் தேவைப்படும். அப்போதுகூட, கனவுகள் துரிதமாக செல்வதால், அது மிகவும் திணறச்செய்வதாக இருக்கக்கூடும். சாதாரண நிலையைவிட, நாம் கனவுகளை நூறு மடங்கு விரைவுபடுத்தினோம். அவர்களுக்குள் எல்லாமே பனிமூட்டமாக ஓடிக்கொண்டிருந்தன. இதன் நோக்கம் லிங்கசரீரம் அல்லது ஞாபகத்தின் பொருளடக்கத்தை சற்றே குறைப்பது. அதனால் சுருக்கமடைவது அளவுக்குமீறி மூழ்கித்திளைப்பதாக இருக்காது. இதைச் செய்வதற்காக, கனவின் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான ஒரு கனவு யந்திரத்தை நான் அமைத்தேன்.

பகல்பொழுதில், அவர்கள் அதிகளவுக்கு சாதனா செய்வதுடன், தூய்மைப்பணியுடன் அவர்களுக்கான சமையலையும் செய்து, இரவில் நல்ல உறக்கமும் கொண்டனர். இருப்பினும், அவர்கள் காலையில் களைப்புடனே எழுந்திருப்பார்கள், ஏனென்றால் அவர்களின் ஓய்வு நேரத்தில், மிகவும் களைப்படையும் அளவுக்கு கனவுகள் அதிவிரைவான வேகத்தில் இருந்தன. அவர்கள் மிகப்பலமாக கனவு கண்டுகொண்டிருந்தனர். அவர்களது லிங்கசரீரத்தின் கொள்ளளவைக் குறைப்பதற்கு இந்த செயல்முறையைச் செய்யவேண்டியிருந்தது; இல்லையென்றால், அதைச் சுருங்கச்செய்வது மிகவும் கடினமாகவும், திணறவைப்பதாகவும் இருந்திருக்கும்.

தீர்ப்பதற்கான கர்மாவின் வெவ்வேறு நிலைகள்

இவையனைத்தும் லிங்க சஞ்சலனா என்றழைக்கப்படும் ஒரு சாதனாவிற்கான முன்னேற்பாடாக இருந்தது. இது உங்களுக்குள் இருக்கும் மூல லிங்கத்தைத் தூண்டிவிடுவதற்கானது. லிங்கசரீரத்தை சுருக்குவதற்கும், அதன் கொள்ளளவைக் குறைப்பதற்கும் இந்த கனவு யந்திரத்தை நாம் அமைக்கிறோம். இது சஞ்சிதகர்மா என்ற கர்ம கிடங்கிற்கு மட்டும் சென்று செயல்படும் வகையில் இருக்கிறது. இதுவே கடைசி பிறவியாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கும் மக்களுக்கு மட்டும் இதைச் செய்யமுடியும். உங்களுக்கு இன்னமும் உணவு, அதிக இன்பம், அல்லது 22ம் நூற்றாண்டில் தயாரிக்கப்படும் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தால், நீங்கள் இதனை முயற்சிக்கக்கூடாது. சஞ்சிதகர்மா விலக்கப்பட்டுவிட்டால், இந்த உயிர் விரும்பினால்கூட, இன்னொரு உடலை எடுக்கும் திறனற்றுப்போய்விடும்.

மாறும் மனப்பான்மைகள், மென்மையாக மாறுவது, அதிகமான அன்பும், கருணையாகவும் மாறுவது ஆன்மீக செயல்முறை அல்ல; அது ஒரு மனரீதியான, சமூகரீதியான செயல்முறை.

பிராரப்த கர்மா அல்லது இந்தப் பிறவிக்கென ஒதுக்கப்பட்ட கர்மா, கனவு யந்திரத்தால் தொடப்படுவதில்லை. அந்தக் காரணத்தினால், ஒரு நபரிடம் எந்த உடனடி மாற்றத்தையும் நீங்கள் பார்ப்பதில்லை. மாறும் மனப்பான்மைகள், மென்மையாக மாறுவது, அதிகமான அன்பும், கருணையாகவும் மாறுவது ஆன்மீக செயல்முறை அல்ல; அது ஒரு மனரீதியான, சமூகரீதியான செயல்முறை. துரதிருஷ்டவசமாக, உலகத்தில் இந்த விஷயங்கள் ஆன்மீக செயல்முறையாக தவறாகக் குறிக்கப்படுகின்றன.

ஆன்மீக செயல்முறை என்றால், ஆரோக்கியக் குறைவோ அல்லது மரணமோ ஏற்படாதவகையில் உடல்தன்மையான இயல்பைத் தகர்ப்பது. ஒரு கனவு யந்திரம் என்பது இதைக் குறித்ததாகவே இருக்கிறது. மற்றொரு உடலை உருவாக்கி, மற்றொரு கருவைக் கண்டுபிடிக்கத் தேவையான அம்சத்தை அது அகற்றிவிடுகிறது, ஆனால் இந்த உடல் நல்லமுறையில் இருக்கிறது. பிராரப்த கர்மாவை நீங்கள் தொட்டால், பிறகு இந்த உடலே கரைதலை நோக்கி செயல்படத் தொடங்கிவிடும். நாம் பிராரப்த கர்மாவைத் தொடுவதில்லை; நாம் சஞ்சித கர்மாவை மட்டும் அகற்றிவிடுகிறோம், அதாவது நீங்கள் மீண்டும் பிறக்கமாட்டீர்கள்.

[1]அனாதி - 2010 கோடை காலத்தில் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெக்மின்வில்லிலுள்ள ஈஷா இன்னர் சயன்சஸ் மையத்தில் சத்குருவால் நடத்தப்பட்ட 90-நாள் நிகழ்ச்சி.