ஆரோக்கியம் & யோகா

ஆன்மீக செயல்முறையில் சரணாகதியின் உண்மையான அர்த்தம் என்ன?

தெய்வீகத்திடம் சரணாகதி அடைவது என்பது நமது கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தின் ஒரு பரிச்சயமான கருத்தியல், ஆனால் சரணாகதியின் உண்மையான முக்கியத்துவத்தை எப்போதாவது நீங்கள் எண்ணியதுண்டா? சரணாகதி பற்றிய தவறான கருத்துகளைத் தெளிவுபடுத்தும் சத்குரு, இந்தப் பதிவில் நீங்கள் உண்மையாக எதன் மீது கவனம் செலுத்தவேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. பல வருடங்களாக எனக்கு ஒரு தகிக்கும் கேள்வி இருந்துகொண்டிருக்கிறது. சரணாகதி செய்யும் முயற்சியில் நான் இருக்கிறேன், ஆனால் அது மிகவும் கடினமாக உள்ளது.

ஆன்மீக கோஷங்கள் versus ஆன்மீக செயல்முறை

சத்குரு: சரணாகதி குறித்த உங்கள் கருத்து என்ன? எதனை நீங்கள் ஒப்புக்கொடுப்பதற்கு விரும்புகிறீர்கள்? இது ஒரு இந்திய பிரச்சனை, ஏனென்றால் இந்த தேசம் உயிரோட்டமான ஆன்மீகத்திலும், ஏறக்குறைய ஒட்டுமொத்த மக்கள்தொகையும் ஏதோவொரு வழியில் ஒரு ஆன்மீக பயிற்சியிலும் ஈடுபட்டிருந்த காலம் ஒன்று இருந்தது. மக்கள் “கர்மவினை, பிராரப்தம், முக்தி, மோக்ஷம், ஆத்மா, பரமாத்மா” என்ற எல்லா வாசகங்களையும் இன்றைக்கும் அறிந்துவைத்துள்ளனர், ஆனால் ஆன்மீக செயல்முறை மட்டும் இல்லை.

ஆன்மீக செயல்முறை என்பது மேலே பார்ப்பது அல்லது கீழே பார்ப்பது, பிரார்த்திப்பது அல்லது கோவிலுக்குச் செல்வது பற்றியல்ல. ஆன்மீகம் என்றால் ஒருவரது உடலளவிலான மற்றும் மனதளவிலான எல்லைகளைத் தாண்டி ஏதோ ஒன்றை உணரத்தொடங்குவது. பெரும்பாலான மக்களின் வாழ்வு, அவர்களது உடல் மற்றும் மனதின் எல்லைகளுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தாண்டி ஒருவர் உணரும்போது, அப்போது அது ஆன்மீகம் என்று அழைக்கப்படுகிறது.

விடுதலையின் செயல்முறை: முடிச்சுகளை அவிழ்ப்பது

"நான் சரணாகதியை விரும்புகிறேன்", என்று இப்போது நீங்கள் கூறுகிறீர்கள். நான் உங்களை ஒரு நாற்காலியுடன் ஒரு கயிற்றால் கட்டுவதாக வைத்துக்கொள்வோம். இப்போது, “வானத்தில் ஒரு பறவையைப்போல் நான் சுதந்திரமாக இருக்கவேண்டும்”, என்று நீங்கள் கூறினால், அது நிகழப்போவது கிடையாது. உங்களைப் பிணைத்திருக்கும் முடிச்சுகளை எப்படி அவிழ்ப்பது அல்லது கயிற்றை எப்படி அறுப்பது என்று உங்களுக்குத் தெரியவேண்டும். சுதந்திரம் என்பது உங்களை எந்த இடத்துக்கும் அழைத்துச் செல்லாத ஒரு தெளிவில்லாத, அற்புதமான கருத்து. உங்களை எது பிணைத்திருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் மட்டுமே, நீங்கள் ஒரு மேலான நிலைக்கு வர இயலும். உங்களைப் பிணைத்திருக்கும் பல்வேறு விஷயங்களையும் நீங்கள் விடுவித்துக்கொண்டே இருந்தால், ஒருநாள், அவை எதுவும் இல்லாமல் போகலாம். உங்களைப் பிணைத்திருக்க எந்த வழியும் இல்லாதபோது, நீங்கள் விடுதலை அடைந்துவிட்டீர்கள் என்று நாம் கூறுகிறோம்.

விருப்பத்தினால் உங்களால் சரணடைய முடியாது. உங்களுக்கு ஒரு விருப்பம் இருந்தால், எப்படி நீங்கள் சரணடைய முடியும்?

ஆன்மீகத்தின் பாரம்பரிய சொல்லாக்கங்கள் சாமான்ய மொழியாக இருந்த காரணத்தால், சரணாகதியின் இந்தக் கருத்துகள் உங்களுக்குக் கிடைத்துள்ளன. ஆனால் இப்போது, ஆன்மீகத்தின் அனுபவபூர்வமான அம்சம் மறைந்துபோய், வார்த்தை மட்டும் எஞ்சியிருக்கிறது. வார்த்தையை வைத்துக்கொண்டு, நீங்கள் மற்றவர்களை ஏமாற்ற அல்லது கட்டுப்படுத்த முடியும், ஆனால் அது உங்கள் வாழ்க்கைக்கான ஒரு தீர்வாக இருக்காது. வார்த்தை சமூகரீதியாக மட்டுமே உபயோகமானது. உங்களுக்குள், அதற்கான எந்த பயனுமில்லை.

இறைத்தன்மையை மீண்டும் பூமிக்கு அழைத்தல்

"நான் சரணடைய விரும்புகிறேன்; நான் ஞானமடைதலை விரும்புகிறேன்", என்பதைப் போன்ற கருத்துகளுடன் இருக்காதீர்கள். இந்தக் கருத்துகளை தீவிரமாக எடுத்துக்கொள்ளும் மக்கள் வழக்கமாக வாழ்க்கையில் மிகவும் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்கின்றனர். அதைச் செய்யாதீர்கள். உங்கள் புத்திசாலித்தனம்தான் உங்கள் வாழ்வின் உயரிய அம்சம். மக்கள் “அன்பு” என்று கூறும்போது, அவர்கள் “அன்பே கடவுள்” என்று கூறுவது உலகத்தின் ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கிறது. அன்பு, உங்களுக்குத் தேவைப்படுகிறது. கடவுளுக்கு அன்பு தேவைப்படுகிறது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை அவர் அதிலிருந்து விடுபட்டிருக்கலாம்.

அதைப்போலவே, “பரவசம்” என்று மக்கள் கூறும்போது, அவர்கள் “தெய்வீகப் பரவசம்” என்று கூறுகின்றனர். மேலும், “அமைதி” என்று கூறும்போது, அவர்கள் “பரலோக அமைதி” என்று கூறுகின்றனர். மக்கள் தங்களுக்குத் தாங்களே என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளாமலேயே, இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் திறனுக்கு உட்பட்ட அனைத்தும், சொர்க்கத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக கோஷங்களுக்குள் உங்கள் மனதைச் செலுத்தாமல் இருப்பதும், உங்களையே நீங்கள் தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளாமல் இருப்பதும் மிகவும் முக்கியமானது.

படைப்பின் பிரம்மாண்டத்திடம் சரணடைவது

“நான் எப்படி சரணடைவது?” என்று உங்களையே கேட்காதீர்கள். சரணாகதி என்றால் என்ன அர்த்தம் என்பது உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால், விருப்பத்தினால் உங்களால் சரணடைய முடியாது. உங்களுக்கு ஒரு விருப்பம் இருந்தால், எப்படி நீங்கள் சரணடைய முடியும்? நீங்கள் வெறுமனே இங்கு அமர்ந்து, எதுவும் செய்யவில்லை என்றால், நீங்கள் சரணடைந்துவிட்டீர்கள். நீங்கள் சுவாசிக்கிறீர்களா? பல வழிகளிலும், இந்த சூழலின் குமிழிக்கு நீங்கள் சரணடைந்துள்ளீர்கள். “இல்லை, நான் சுவாசிக்கப்போவது கிடையாது. காற்றின் போக்குக்கு நான் சரணடைய விரும்பவில்லை. நான் இங்கே வெறுமனே அமர்ந்திருப்பேன்”, என்று நீங்கள் கூறமுடியுமா? அது சாத்தியம்தானா?

உங்கள் படைப்பின் இயல்புக்கு நீங்கள் கவனம் செலுத்தினால், அது ஒரு ஆழமான சரணாகதியாக இருக்கிறது. படைப்பின் இந்த அனைத்து விஷயங்களும் இல்லாமல், நீங்கள் ஒரு கணம் கூட வாழ்ந்திருப்பதற்கான வழியே இல்லை. அவை எப்படி செயல்படுகின்றன என்பது நமக்குத் தெரியாது, ஆனால் அவை அனைத்தும் நமக்காக செயல்படுகின்றன. கிரகங்களும், சூரியனும், சந்திரனும், பால்வெளிகளும் மற்றும் வெட்டவெளியும், அனைத்தும் நமக்காக செயல்படுகின்றன. இவை எல்லாவற்றையும் நீங்கள் புரிந்துகொண்டு, அதைச் செயல்படச் செய்யமுடியுமா? இவையெல்லாம் தானாகவே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

பிழைப்புதான் ஒரே பிரச்சனை, மற்றும் அதைக் கையாள்வதற்கும் அதிக புத்திசாலித்தனம் தேவையில்லை. ஒவ்வொரு புழுவும் பூச்சியும், பறவையும், மற்றுமுள்ள விலங்குகளும் அவரவர் பிழைப்பைக் கையாளும் திறன் பெற்றுள்ளன. உங்களுக்கு இவ்வளவு பெரிய மூளை இருக்கிறது; அதைக் கையாளும் திறன் உங்களுக்கு இருக்கவேண்டும். உங்களால் பிழைக்கமுடியாது என்பது பிரச்சனை அல்ல; யாரோ ஒருவரைவிட நீங்கள் நன்றாகப் பிழைக்கவேண்டும் என்பதுதான் பிரச்சனை. வாழ்வு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் வாழ்வின் பிரம்மாண்டத்தை உள்வாங்குவதற்குத் தகுதியான வழியில் உங்களை வைத்துக்கொள்வதுதான் அவசியமானது.