கான்சியஸ் ப்ளானட்

சாதனா மற்றும் விழிப்புணர்வு: நாங்கள் வேறொரு தளத்துக்கு உயர்வதற்கான நம்பிக்கை இருக்கிறதா?

அடிப்படையில் நாம் ஒரு உயிரினமாக இன்னமும் முழுமையாக பரிணாமம் அடையவில்லை என்பதை சத்குரு வெளிப்படுத்துகிறார். மாற்றமடைவதற்கான நெருக்கடியில் உலகம் இருக்கிறது, அதனால்தான் ஒரு விழிப்புணர்வான உலகை உருவாக்குவது மிகவும் அவசரத்தேவையாக உள்ளது. இங்குதான் சாதனா முக்கியத்துவம் பெறுகிறது: அது எவ்வாறு உங்களுக்கும், உலகத்துக்கும் ஒரு மகத்தான மாற்றத்துக்கான தூண்டுகோலாக இருக்கமுடியும் என்பதை சத்குரு வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

கேள்வியாளர்: சத்குரு, ஒரு விழிப்புணர்வான உலகை உருவாக்குவது பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மனிதர்களாக முதலில் நாம் எப்படி விழிப்புணர்வற்றுப் போனோம் என்பதை அறிந்துகொள்ள நான் ஆவலுடன் இருக்கிறேன்.

சத்குரு: நீங்கள் விழிப்புணர்வை ஒரு நிலையான இருப்பு அல்லது ஒரு தகுதியாக புரிந்துகொள்வதுதான் பிரச்சனை. விழிப்புணர்வு ஒரு நுட்பமான விஷயம். ஒரு கணம் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கலாம்; அடுத்த கணமே நீங்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். அது மின்விளக்கின் மின்னழுத்தம் போன்றது. என் மீது பாய்ச்சப்படும் விளக்குகள் மின்னழுத்த கட்டுப்பாட்டில் இயங்குபவை. அவர்கள் தரமான வீடியோவை விரும்பும்போது, விளக்கின் வோல்டேஜை ஒரு குறிப்பிட்ட அளவில் அமைக்கிறார்கள். இன்னும் சற்று அதிகமாக என்னைக் கொடுமைப்படுத்த வேண்டுமென்றால், அவர்கள் அதை அதிகரிக்கின்றனர். நான் போதுமான அளவுக்கு அழகாகத் தோன்றவில்லை என்று அவர்கள் எண்ணும்போது, அதை ஸ்பெஷல் எஃபெக்டிற்காக குறைக்கின்றனர். மின்னழுத்தம் தான் ஒளியின் அளவைத் தீர்மானிக்கிறது. ஆகவே, வோல்டேஜை அதிகரிப்பதுதான் அவசியமானது.

சாதனா செய்து உங்கள் வோல்டேஜை அதிகரிப்பது

நீங்கள் செய்யும் சாதனா - சூரிய கிரியா, ஷாம்பவி, ஷக்தி சலன கிரியா மற்றும் சூன்ய தியானம் - உடலமைப்பின் திறனை அதிகரிப்பதைக் குறித்தது. அது கடின உழைப்பாகத் தோன்றுகிறது, ஆனால் அது சக்தி அமைப்பை உறுதியாக்கி, மிகக்கூடுதல் வோல்டேஜ்களை தாங்கும் திறனை உருவாக்குகிறது. உங்களுக்கு ஒரு மேம்படுத்தப்பட்ட சக்தி அமைப்பு இல்லையென்றால், மற்ற விஷயங்கள் தற்காலிகமாக மட்டும் இருப்பதுடன், நீடித்திருக்க முடியாது. இதனால்தான் உங்களை சம்யமாவுக்குள் அழைத்துவருவதற்கு, 4ல் இருந்து 5 சாதனா வகுப்புகள் தேவையாக உள்ளன. அந்தத் தயார்நிலை இல்லையென்றால், உங்கள் சக்திநிலையின் அமைப்பு, சம்யமா என்ற இந்த சாத்தியத்தை வீணாக்கிவிடும்.

அந்தக் குறிப்பிட்ட வகுப்பின்போது ஒரு கண நேரத்துக்கு, நீங்கள் ஏதோவொன்றை உணரக்கூடும், ஆனால் அதற்குப் பிறகு, சக்தி அமைப்பில் போதிய வலிமையான கட்டமைப்பு இல்லாமையால், அது சிதறிவிடும். உங்களில் பலரும் இதனை பாவ ஸ்பந்தனாவில் உணர்ந்து, உங்களுக்குள் அது பரந்த வெளியை ஏற்படுத்தியதால், நீங்கள் ஞானமடைந்துவிட்டதாக எண்ணிய கணங்கள் பல உண்டு. உலகெங்கும் தியான அன்பர்கள் பாவஸ்பந்தனாவிற்குப் பிறகுதான் அவர்களது சாதனாவை அளவில்லா ஆர்வத்துடன் செய்யத்தொடங்கியுள்ளனர். ஏனென்றால் இந்த அனுபவம் ஏதோவொன்றைத் தூண்டிவிட்டதால், இது ஒரு சாத்தியமாக இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

மிக அதிகமான சக்தியைத் தாங்குவதற்கேற்ப உங்கள் உடலமைப்பை நீங்கள் தயார்செய்தால், நீங்கள் சக்திரீதியான ஞானமடைதலை எட்டமுடியும்.

சாதனா உங்கள் உடலமைப்பை உறுதிப்படுத்துகிறது, ஏனென்றால் சரியான முன்னேற்பாடு இல்லாமல் மின்னழுத்தம் அதிகரிக்கப்பட்டால், ஏதோவொன்று எரிந்துவிடும். மிக அதிகமான சக்தியைத் தாங்குவதற்கேற்ப உங்கள் உடலமைப்பை நீங்கள் தயார்செய்தால், கைக்கெட்டும் தொலைவில் இருக்கும் பழமாக, நீங்கள் சக்திரீதியான ஞானமடைதலை எட்டமுடியும். சக்திரீதியாக நீங்கள் ஒருபோதும் குழப்பமடையாத அளவுக்கு, உங்கள் சக்திகளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நீங்கள் கொண்டுவர முடியும்.

உங்களுக்கு அப்போதும் மனரீதியான பிரச்சனைகள், உணர்ச்சிரீதியான சிக்கல்கள் மற்றும் கர்மவினை இருக்கலாம், ஆனால் நீங்கள் சக்திரீதியாக துடிப்புடன் இருக்கிறீர்கள். இது வாழ்வின் எந்த விதமான நிலப்பரப்பிலும் நீங்கள் சவாரி செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் அளிக்கும். அந்த நிலத்தின் தன்மை அப்போதும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும், ஆனால் அதனை நீங்கள் கடந்துசெல்ல முடியும், ஏனென்றால் உங்களிடம் ஒரு சக்திவாய்ந்த வாகனம் இருக்கிறது. இல்லையென்றால், நீங்கள் எதிர்கொள்ளும் முதலாவது சேற்றுக்குட்டையிலேயே நீங்கள் சிக்கிப்போவீர்கள். இதனால்தான் மக்களை ஒரு குறிப்பிட்ட சக்திநிலைக்குக் கொண்டுசெல்வது எப்போதும் முதன்மையான முயற்சியாக உள்ளது. அதனால் அவர்கள் பெரும் சாத்தியங்களுக்கு தகுதி பெறுகின்றனர்.

மனிதகுலம் இன்னமும் வளர்ச்சியின் பாதையில்தான் உள்ளது

ஒரு உயிரினம் என்ற வகையில், ஹோமோ சேப்பியன்கள், இன்னமும் முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில் பிரசவிக்கப்படவில்லை. இது, நாம் இன்னமும் படைப்பின் கருப்பையில் இருப்பதைப் போன்றது. இந்த வளிமண்டல குமிழி மற்றும் சூரிய மண்டலம் ஒருவிதமான கருப்பைப் போன்றது. நீங்கள் அதிலிருந்து வெளியேற முடியாததுடன், வான மண்டலத்தைச் சுற்றிவருவதும் முடியாது. கடந்த காலத்தில் எங்கிருந்தோ வந்த மனிதர்கள் இருந்துள்ளனர், மற்றும் சிலர் இங்கே பரிணாமம் அடைந்துள்ளனர் என்ற வகையில் அவர்களால் எங்கு விரும்பினாலும் செல்லமுடிந்தது. ஆதியோகியை எடுத்துக்கொண்டால், அவர் மனித இனத்தின் அடையாளம் இருப்பவராகத் தோன்றவில்லை. நவீன விண்வெளி தொழில்நுட்பம் இல்லாமல், அவர்களால் அகண்டவெளிக்குள் பயணிக்கமுடிந்ததாகத் தோன்றுகிறது, ஏனென்றால் அவர்கள் முழுமையான வளர்ச்சியுடன் பிரசவிக்கப்பட்டவர்கள்.

இப்போது இவ்வளவு பெருவல்லமை கொண்ட உயிரினமாக நாம் இருக்கும் நிலையில், நாம் விழிப்புணர்வாக செயல்படுவது முக்கியம்.

இது உங்களுக்கும்கூட சாத்தியமாகலாம், ஆனால் உங்களது பௌதிக உடல் அதற்குத் தயாராக இல்லாமல் இருக்கலாம். புராணக்கதைகள் என்று இன்றைக்கு மக்கள் அழைக்க விரும்பும் அப்படிப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தற்பெருமை பேசத் தேவையில்லாத அல்லது கட்டுக்கதைகள் கூறத் தேவையில்லாத மகத்தான உயிர்கள் பலவும், அவர்கள் தங்களது உடலை ஒரு குறிப்பிட்ட விதத்தில் எப்படிப் பாதுகாத்து, வேறு இடங்களுக்குப் பயணித்தனர் என்பதைப் பற்றி பேசியுள்ளனர். மனிதத்தன்மை என்று நாம் எண்ணியிருக்கும் கட்டுப்பாடுகளைக் கடந்து பயணித்த சங்கராச்சாரியார், சுக்ராச்சாரியார் மற்றும் எண்ணற்ற பல முனிவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்கள். இத்தகைய கட்டுப்பாடுகளுக்குள், நாம் ஒருவிதமான விழிப்பற்ற நிலையில்தான் இருக்கமுடிகிறது. ஆனால், மனிதர்களாக, விழிப்புணர்வுடன் இருக்கும் சாத்தியம் நமக்கு உண்டு. ஒரு குரங்கை முழு விழிப்புணர்வாக்குவது சாத்தியமில்லை. அதற்கு புத்திசாலித்தனம் உண்டு, ஆனால் எப்போதும் முழு விழிப்புணர்வடைவதற்கு அவசியமான ஒரு ஸ்திரத்தன்மை அதற்கு இல்லை. மனிதர்கள் சற்று, ஏறக்குறைய அந்தத் தன்மையில் உள்ளனர். அவர்கள் சிறிது முயற்சி செய்தால், அந்த நிலையை அடைவார்கள்.

“சத்குரு, ஏன் ஒரு விழிப்புணர்வான உலகை உருவாக்குவதற்கான இந்த எல்லா முயற்சியும் எடுக்கவேண்டும்? ஒரு பத்து இலட்சம் வருடங்கள் மட்டும் நாம் ஏன் காத்திருக்கக்கூடாது”, என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம். அது எந்த வழியிலாவது நிகழக்கூடும், ஆனால் நான் இங்கு இருக்கமாட்டேன்; ஆகவே நான் இப்போது முயற்சிக்கிறேன். அது உலகத்துக்கான மிக முக்கியமான ஒரு படி. அது முழுமையான மாற்றம் கொண்டுவராமல் இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும். இதுதான் சரியான நேரம், ஏனென்றால் இன்றைக்கு இருப்பதைப்போல் மனிதகுலம் முன்பு எப்போதும் வல்லமை பெற்றது கிடையாது. மனிதர்கள் அற்புதமான விஷயங்களைச் செய்துள்ளனர், மற்றும் அவர்கள் அதிபயங்கரமான விஷயங்களையும் செய்துள்ளனர். ஆனால் இப்போது இவ்வளவு பெருவல்லமை கொண்ட உயிரினமாக நாம் இருக்கும் நிலையில், நாம் விழிப்புணர்வாக செயல்படுவது முக்கியம்.

2023ல் இந்தியாவில் நடைபெறும் G20 மாநாட்டிற்கான தலைமை ஒருங்கிணைப்பாளரான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள், முக்கியமான ஒரு G20 கூட்டமாவது கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெறும் என்று 15 ஆகஸ்ட் 2022 அன்று அறிவித்தார்.

நமக்குப் பொதுவான எதிர்காலத்தை வடிவமைப்பதில் விழிப்புணர்வின் பங்கு

இந்த வருடம், G20 க்கு இந்தியா தலைமை ஏற்கிறது. G20, 19 பெரிய தேசங்களையும், ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கியதாக, ஏறக்குறைய உலகத்தின் 84% மொத்த உள்ளாட்டு உற்பத்தியுடன் (GDP), உலகத்தின் 75% க்கும் அதிகமான சர்வதேச வர்த்தகம், மற்றும் மூன்றில் இரண்டு பங்கு உலக மக்கள்தொகையுடன் உள்ளது. மேலும் G20 சந்திப்புகளுள் ஒன்று ஈஷா யோக மையம், கோயம்புத்தூரில் நடத்தப்படும். சாதாரணமாக, இத்தகைய நிகழ்வுகள் அரசாங்க சேவைகள் அல்லது 5-நட்சத்திர ஹோட்டல்களில், உணவும், பானமும் அபரிமிதமாக இருக்கும் இடங்களில் நடத்தப்படுகின்றன.

G20 சந்திப்புகளுள் ஒன்று கோவை ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும்.

ஒரு ஆன்மீக மையத்தில் அது நிகழ்வது அநேகமாக இதுதான் முதல்முறை. இது பெரும் முக்கியத்துவம் பெறுவது ஏனென்றால், நமது கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறை முக்கியமானது என்பதை இந்தியா அங்கீகரிக்கத் தொடங்குகிறது. இந்த வருட G20 க்காக அவர்கள் தேர்ந்தெடுத்த மையக்கருத்து, “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்”. ஒரு நன்னெறிக் கொள்கையாக அது விழிப்புணர்வை வழங்குகிறது, ஆனால் அது ஒரு நல்ல தொடக்கம். இந்த 20 தேசங்களின் எண்ணப்போக்கில் ஒரு சிறிய சதவிகிதம் மட்டுமேனும், ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற திசையில் செல்லத் தொடங்கினால், அவர்கள் கைவசமிருக்கும் ஆற்றலின் அளவைக் கருதும்பொழுது, அது பெருத்த மாற்றத்தினை ஏற்படுத்தும்.

மனித விழிப்புணர்வை உயர்த்துவது தொடர்பாக, அனைத்தும் வெற்றிகரமாக செல்லத் தொடங்கியுள்ளது. இந்த ஒரு தலைமுறையிலேயே மனிதர்கள் ஒருவரையொருவர் எப்படி அணுகி, உணர்கின்றனர் என்பதில் குறைந்தபட்சம் ஒருசில சதவிகித மாற்றத்தையாவது நாம் பார்க்கும்வகையில், நாம் தேவையான முயற்சியையும், உறுதியையும் தொடர்ந்து அந்தத் திசையில் செலுத்துவது அவசியம். இது நிகழ்த்தப்பட முடியும். ஏனென்றால், நமக்கு ஏற்கனவே 2022ல் 350 கோடி YouTube வீடியோ பார்வையாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்பது மட்டுமல்லாமல், பார்வையாளர்களாக உள்ள அந்த மக்களை ஆன்மீக செயல்முறைக்குள் இருப்பவர்களாக மாற்றுவது எப்படி என்றும் பார்க்கிறோம். ஒரு 100 கோடி மக்களாவது ஒரு குறிப்பிட்ட வழியில் வாழ்வை சிந்திக்கவும், உணரவும் தொடங்கிவிட்டால், உலகம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடையும்.