
நமது வாழ்க்கைப் பயணத்தின் போக்கில், சுயமதிப்பீடு மற்றும் அதீத சிந்தனையால் நமது மனங்கள் திக்குமுக்காடி, மனரீதியான மற்றும் உணர்ச்சிரீதியான போராட்டங்களை எதிர்கொள்ளக்கூடும். ஆனால் நமது உண்மையான ஆற்றலைக் கண்டுபிடிக்கவும், வாழ்க்கையில் தெளிவைக் காணவும் ஒரு எளிமையான தீர்வு இருந்தால் என்ன நிகழும்?
கேள்வியாளர்: சத்குரு, எனது சுயமதிப்பீடு, என் வாழ்க்கையில் பல்வேறு திடமான முடிவுகளுக்கு என்னை வழிநடத்தியுள்ளது, ஆனால் அது அதீத சிந்தனை அல்லது காலம் கடத்துதலை நோக்கி நகரத் தொடங்குவதை நான் எப்படி அறிந்துகொள்வது?
சத்குரு: உங்களுடைய முடிவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை, ஏனென்றால் உங்கள் எண்ணவோட்டங்கள் வாழ்க்கை அல்ல – அது உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் ஏதோவொரு விஷயம். நீங்கள் கார் ஓட்டுவதாக வைத்துக்கொள்வோம். முன்புறக் கண்ணாடியைப் பார்ப்பதற்கு பதில், நீங்கள் பின்பக்க rear-view கண்ணாடியையே பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் டாப் கியரில் இல்லாமல், ரிவர்ஸ் கியரில்தான் இருக்கவேண்டும். அதுபோலத்தான், இந்த நாட்டில், நாம் சுயமதிப்பீட்டில் நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் சொந்த குளறுபடியையே ஆராய முற்படுவது பலனளிக்கப்போவது கிடையாது. அதனை நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நிறுத்தினால், அது என்ன என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்வதுடன், அதைப்பற்றி நீங்கள் சிந்திக்கவும் வேண்டியிருக்காது.
நீங்கள் இன்றிரவு டெல்லி விமான நிலையத்திலிருந்து விமானத்தில் பயணிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். விமான நிலையம் நோக்கி நீங்கள் சென்றுகொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கான விமானப்பயண நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது, ஆனால் பாதை நெடுகிலும் பெரும் வாகன நெரிசலாக இருக்கிறது. இப்போது இந்த வாகன நெரிசலை நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நீங்கள் உங்களது சொகுசுக்காரில் அமர்ந்திருக்கலாம், ஆனாலும் அது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. பிறகு எப்படியோ, நீங்கள் விமான நிலையம் சென்று, விமானத்தில் அமர்ந்துவிடுகிறீர்கள், அது பறக்கவும் தொடங்கிவிடுகிறது. நீங்கள் வான்பரப்பைத் தொட்டவுடன், கீழே பார்க்கிறீர்கள். சாலையில் அப்போதும் வாகன நெரிசல் இருக்கிறது, ஆனால் சட்டென்று அது, ஒரு நூலில் கோர்த்துவிடப்பட்ட வெண்மையும், சிவப்பும் ஒளிரும் விளக்குகளுடன் மிக அழகாகத் தோன்றுகிறது. ஏனென்றால், உங்களுக்கும் அதற்கும் ஒரு இடைவெளி ஏற்பட்டவுடன், அது ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை.
அல்லது இதனை இப்படிப் பார்க்கலாம், அதாவது நான் உங்களை மேடையின் மேலும் கீழும் நடந்து, இந்த கிரகம் உருண்டையா அல்லது தட்டையா என்று தீர்மானிக்குமாறு கேட்டால், நீங்கள் அதனைத் தட்டையானதாகவே உணர்வீர்கள். பூமி உருண்டையா அல்லது தட்டையா என்ற விவாதம் முடிவுக்கு வந்தது எதனாலென்றால், நாம் சமுத்திரங்களைக் கடந்து செல்லத் தொடங்கியதில், பூமி உருண்டையாக இருப்பதை நம்மால் காணமுடிந்தது. பிறகு நாம் பறக்கத் தொடங்கியதும், பூமியின் வடிவம் தெளிவாகத் தெரிந்தது.
பிறகு, நாம் சந்திரனின் மீது கால்பதித்து நின்று, கீழே பார்த்தபொழுது, அது 100% தெளிவாகியது. மிக எளிமையான ஒரு விஷயத்தை, நாம் பூமிமீதே நடந்து கொண்டிருந்தபோது நம்மால் பார்க்க முடியவில்லை. உடலுக்கும், மனதுக்கும்கூட இது பொருந்தக்கூடியதாக இருக்கிறது. யோகாவில், உடலையும், மனதையும் நாம் தனித்தனியாகப் பார்ப்பதில்லை. முக்கியமாக, “மனம்” என்று நாம் அழைப்பதில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு புத்திசாலித்தனமும், ஞாபகமும் இருக்கிறது. உங்கள் மூளை எப்போதும் செயல்படுத்துவதைவிட அதிகமான ஞாபகத்தை உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் சுமந்திருக்கிறது. ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு உங்கள் பாட்டிக்கும் பாட்டியாக இருந்தவர் எப்படித் தோற்றமளித்தார் என்பது உங்களுக்கு நினைவில் இருப்பதில்லை, ஆனால் அவரது மூக்கு இன்னமும் உங்கள் முகத்தில் இருந்துகொண்டிருக்கிறது. ஒரு ஐந்து இலட்சம் வருடங்களுக்கு முன்பு, உங்கள் முன்னோர்கள் எப்படி இருந்தனர் என்பது உங்களுக்கு நினைவில் இல்லை, ஆனால் அவர்களது தோலின் நிறம் என்ன என்பதை உங்களது எபிதிலியல் செல்கள் நினைவில் வைத்துள்ளன. இந்த புத்திசாலித்தனமும், ஞாபகமும் உங்களது உடலெங்கும் பரவியிருக்கிறது.
குறைந்தபட்சம், உங்கள் நரம்பியல் அமைப்பு உடலெங்கும் பரவியிருப்பதை நீங்கள் பார்க்கமுடியும். ஆகவே, மனம் ஒரு இடத்தில் இல்லை. அங்கே மனம், ஞாபகம், பொருள்தன்மை, மற்றும் சக்தி உடல் இருக்கிறது. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன் ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு, மற்ற விஷயங்களை செயல்படுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்ளாமல், அதனுடன் இடையறாமல் குறுக்கீடு செய்ய முனைந்தால், அது handbrake ஐ on செய்துகொண்டு காரை ஓட்டுவதற்கு முயற்சிப்பதைப் போன்றது. பலரும் இதை உணர்வதில்லை; அவர்கள் throttle ஐ அழுத்தினால், கார் வேகமெடுத்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், brake ஐ on ல் வைத்து நீங்கள் ஓட்டினால், அதனால் நெருப்புப் பற்றிவிடக்கூடும்.
தற்போது, பலரும் இதைப்போன்று இருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் பள்ளி அல்லது கல்லூரிக்குச் சென்று, எல்லாவிதமான வெளியுலகத் தகவல்களால் சிறிதளவு காரண அறிவைப் பெற்றுவிடுகின்றனர். இந்த அறிவுடனேயே, அவர்கள் சுயமதிப்பீடு போன்ற எல்லாவிதமான விஷயங்களையும் செய்கின்றனர். இந்த யோசனைகள், மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
மனரீதியான செயல்பாடு என்பது, நீங்கள் சேகரித்துள்ள தரவுகளின் விதம் மற்றும் அதை நீங்கள் எப்படிப் பரிசீலனை செய்கிறீர்கள் என்பதன் விளைவாக இருக்கிறது. அதை நீங்கள் ஒரு பக்கமாக வைத்துவிட்டால், உங்கள் மீது அதன் தாக்கம் எதுவுமில்லை. நீங்கள் விரும்பும்போது அதை பயன்படுத்தவேண்டும். விரும்பாதபோது, அதை ஒரு பக்கமாக நீங்கள் வைக்கவேண்டும். தற்போது, எல்லா நேரமும் மக்கள் யோசனை செய்துகொண்டே இருக்கின்றனர். உங்களை அவமதிப்பது என் நோக்கமல்ல, ஆனால் சுயமதிப்பீடு என்று நீங்கள் அழைப்பது, முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கும் ஒருவிதமான மனபேதியாக உள்ளது. முக்கியமாக, ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு உங்களது எண்ணப்போக்கை நீங்கள் விழிப்புணர்வுடன் பயன்படுத்துவதுதான் சிந்தனை செய்வதற்கான அர்த்தமாக இருக்கவேண்டும். ஆனால், எல்லா நேரமும் எண்ணவோட்டமானது வெறுமனே ஓடிக்கொண்டிருந்தால், அது மனபேதி.
இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் காணவேண்டியது முக்கியமானது: இது விழிப்புணர்வான எண்ணவோட்டமா, அல்லது கட்டுக்கடங்காமல் ஓடுகிறதா? சுயமதிப்பீடு என்பது வாழ்வின் ஒரு ரியர் வியூ ஆகத்தான் இருக்கிறது. நீங்கள் இளமையானவராக இருந்துகொண்டு, சுயமதிப்பீடு செய்தால், ஏற்கனவே நீங்கள் ஒரு நீண்டகாலம் வாழ்ந்துவிட்டதைப்போல உணர்வீர்கள். ஷேக்ஸ்பியருக்குள், "இருப்பதா அல்லது இல்லாமல் போவதா" என்று எழுந்தது, அதிக காரணரீதியான மனதின் கேள்வியாகத்தான் இருக்கவேண்டும். நீங்கள் பரவசத்தில் மிதந்தால், “இருப்பதா அல்லது இல்லாமல் போவதா”, என்று சிந்திப்பீர்களா? நீங்கள் துன்பமயமாக இருந்துகொண்டு, வாழ்வை சுமையானதாகக் கருதினால்தான் இவ்விதம் சிந்தனை செய்வீர்கள்.
சுயமதிப்பீடு என்பது சிறிய அளவில் அல்லது பெரிய அளவில் இருந்தாலும், அது மனநோயின் அடித்தளமாக இருக்கக்கூடும். உங்களது ஐம்புலன்கள் மூலமாக நீங்கள் சேகரித்ததை மட்டுமே உங்கள் மனம் வைத்திருக்கிறது. அந்த மனம் என்ற குப்பைக்கூடையில், தீர்வுகள் தேடுவதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள். நீங்கள் உள்ளீடாக அளித்திருக்கும் தரவுகளைத் தாண்டி உங்கள் கணினியால் செயல்படமுடியாது. உங்கள் மனதுக்கும் இதுவே பொருந்துகிறது. நீங்கள் தரவுகளை அறிந்து, மென்பொருளை எழுதியுள்ளீர்கள் என்றால், கணினியால் என்ன செய்யமுடியும், என்ன செய்யமுடியாது என்பது உங்களுக்குத் தெரியும். அதிகம் யோசிக்கவோ அல்லது சுயமதிப்பீடு செய்யவோ தேவையில்லை. உங்களுக்கு புரிந்துணர்தலின் தெளிவு தேவை. எல்லாவற்றையும் அது உள்ளபடியே தெளிவாக உங்களால் பார்க்கமுடிந்தால், அப்போது சுயமதிப்பீட்டுக்கு அவசியமில்லை.
சுயமதிப்பீடு, நல்லொழுக்கம், நீதிநெறிகள், கருத்தாக்கங்கள், தத்துவங்கள், கருத்துகள், உதாரண மனிதர்கள் மற்றும் பலவற்றுடன், நாம் வாழ்வைத் தீர்மானிக்க முனைகிறோம். தேவைப்படுவது அது அல்ல. இந்த வாழ்க்கை உயர்ந்தபட்சமாக, மட்டில்லா உற்சாகமான விதத்தில் நிகழ்வதுதான் தேவைப்படுகிறது. நீங்கள் எப்போதும் மகிழ்வுடன் இருந்தால், நீங்கள் உடலளவில் நலமுடன் இருப்பீர்கள், உங்கள் மேதைமை பிரகாசிக்கும்; எல்லாமே நிகழும். அப்படியென்றால், உலகத்தில் அனைத்தும் நீங்கள் விரும்பியவாறு நிகழும் என்று அர்த்தமா? இல்லை. உலகம் நீங்கள் விரும்பும்படி 100% ஒருபோதும் நிகழாது.
நீங்கள் இளவயதினராக இருக்கும் காரணத்தால், உங்கள் வாழ்வில் தகுதியான, பொருத்தமான நபரை நீங்கள் காண்பீர்கள் என்ற இந்தக் கனவு உங்களில் பலருக்கு உள்ளது. காதலின் சுவாரஸ்யத்தை நான் அழிக்க முற்படவில்லை; நீங்கள் ஆழமாக ஏமாற்றமடைவீர்கள் என்றுதான் நான் கூறுகிறேன். படைப்பின் இயல்பிலேயே, இந்த உலகத்தில் ஒருவர்கூட நீங்கள் விரும்பும் விதமாகவே அவர்கள் இருப்பது என்பது நிகழாது. ஆனால் ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும்: நீங்கள் விரும்பும் விதமாக உங்களை நீங்கள் உருவாக்கிக்கொள்ள முடியும். நீங்கள் செய்யவேண்டியது அதுதான்.