சிறப்புக் கட்டுரை

காலத்தின் விளிம்பு: உங்கள் உயிரைத் தொடுவது ஏன் உங்களது வாழ்வை ஒரு கொண்டாட்டமாக்குகிறது

காலம் மதிப்பு மிகுந்தது, ஆனால் நமது வாழ்வில் எப்போதும் விரையும் ஒரு அம்சம். அதிலிருந்து அதிகபட்சமாகப் பலனடைவதற்கு, காலத்தின் இயல்பு குறித்தும், உயிர் என்ற உச்சபட்ச சாராம்சத்தை சுவைப்பதனால் ஏற்படும் உண்மையான கொண்டாட்டத்தை எப்படி உணர்வது என்பதைக் குறித்தும் அவரது ஞானத்தை சத்குரு வழங்குகிறார்.

காலத்திலிருந்து, காலமற்ற தன்மைக்கு

சத்குரு: காலம் ஒரு விசித்திரமான விஷயம். உங்களிடம் இருப்பது அது மட்டும்தான், உண்மையாக, ஆனால் அதை உங்களால் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. நீங்கள் என்ன செய்தாலும், உங்களால் காலத்தை இழக்கத்தான் இயலும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தாலும் - நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தாலும், விழித்திருந்தாலும், அல்லது உணர்வில்லாமல் இருந்தாலும் - காலத்தை நீங்கள் இழக்கிறீர்கள். அதை உங்களால் முன்னோக்கி துரிதப்படுத்தவோ, பின்னோக்கிச் செலுத்தவோ, அல்லது தாமதப்படுத்தவோ முடியாது. காலம் தன் போக்கில், உங்களைப் பற்றிய பொருட்டில்லாமல், அது சென்றுகொண்டிருக்கிறது.

உடல் என்ற வகையில், நீங்கள் காலத்தின் ஒரு உயிரினம்; ஆனால் ஒரு உயிராக, நீங்கள் காலமற்ற ஒரு இருப்பு. வாழ்வென்பது நமது இருப்பின் காலமற்ற தன்மையில் இருக்கிறது. காலமற்ற தன்மைக்குள் நீங்கள் அடியாழம்வரை சென்று, அதன் சுவையைக் காணவில்லை என்றால், என்றென்றைக்கும் நீங்கள் இழப்பவராகவே தான் இருக்கவேண்டும் - ஏனென்றால் உங்களிடம் இருக்கும் ஒரே பொருள், காலம் மட்டுமே என்பதுடன் அதனை நீங்கள் ஒவ்வொரு கணமும் இழந்துகொண்டும் இருக்கிறீர்கள். சுவையற்ற, உணர்வற்ற, இரக்கமற்ற காலத்தின் சுழற்சியானது, ஒரு அரவை ஆலை போல் சுழன்றுகொண்டே செல்கிறது. இந்த வாழ்வின் ஒரு சிறிதளவு சாரம் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது, அதைவிடச் சற்று அதிகமாக மனதிலும், மேலும் கூடுதலாக உங்கள் உணர்ச்சியிலும் உள்ளது. ஆனால் வாழ்வின் ஒட்டுமொத்த இனிப்பும் உங்கள் உயிரில் உள்ளது. ஆனால் இந்த மந்திரஜால உயிரை, ஒரு தர்க்கவாத முட்டாளால் அணுகமுடியாமல் இருக்கிறது.

காலமற்ற தன்மைக்குள் நீங்கள் அடியாழம்வரை சென்று, அதன் சுவையைக் காணவில்லை என்றால், என்றென்றைக்கும் நீங்கள் இழப்பவராகவே தான் இருக்கவேண்டும்

“காரண அறிவு இல்லாமல் எப்படி வாழ்வது, சத்குரு?” காரண அறிவு உங்கள் வாழ்வின் அடித்தளமாக இருக்கிறது. ஒரு நிலையான, உறுதியான அடித்தளம் இல்லையென்றால், ஒருவருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் வீட்டின் அடித்தளத்தில், பூமிக்குக் கீழே நீங்கள் வாழ்ந்தால், அது நீங்கள் ஒரு நிலவறையில் வாழ்வதைப் போன்றது. அப்போது நீங்கள், புத்துணர்வான காற்றின் இனிமையையும், சூரிய ஒளியின் கதகதப்பையும், வசந்தகால மலர்ச்சியையும், சூரிய உதயத்தின் அல்லது சூரிய அஸ்தமனத்தின் பிரம்மாண்டத்தையும் ஒருபோதும் சுவைக்கமாட்டீர்கள்.  நிலவறையின் ஈரம்தோய்ந்து, அங்கு பிழைத்திருத்தலின் செயல்முறையை மட்டும்தான் அறிவீர்கள்.

காலம் என்பது ஒரு சுழற்சியாக, சுற்றிச்சுற்றிச் செல்கிறது. காலம் குறித்த உணர்வு உங்களுக்கு உண்டு, ஏனென்றால் கடிகாரத்தின் கைகள் வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன. காலத்தின் உணர்வு உங்களுக்கு உண்டு, ஏனென்றால் பூமி ஒருமுறை சுழல்கிறது, அதனை நீங்கள் ஒரு நாள் என்று அழைக்கிறீர்கள். பூமியை, சந்திரன் சுற்றி வருகிறது, அதை நீங்கள் ஒரு மாதம் என்று அழைக்கிறீர்கள். பூமி, சூரியனைச் சுற்றுகிறது, அதை நீங்கள் ஒரு வருடம் என்று அழைக்கிறீர்கள். காலத்தின் இந்த அளவீடுகள் உங்கள் மனதில் கலாச்சாரரீதியாக அழுத்தமாகப் பதிக்கப்பட்டவை, ஆனால் இருத்தலின் அடிப்படையில் அவை அர்த்தமற்றவை.

கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தம்

“சத்குரு, புத்தாண்டை நாம் கொண்டாடக்கூடாது என்று எங்களுக்குக் கூற முயற்சிக்கிறீர்களா?” நீங்கள் எல்லாவற்றையும் கொண்டாடவேண்டும். கொண்டாடுவதற்கு ஒரு காரணம் தேவை என்று மக்கள் எண்ணுகின்றனர். நான் அதைப் பாராட்டுகிறேன், ஆனால் எனக்கு ஒரு காரணமும் தேவையில்லை. உங்களுக்குள் கொண்டாட்டம் நிகழ்வதற்கு நீங்கள் உற்சாகத்தில் வெடித்துக் கிளம்புவதுதான் காரணமே தவிர, ஒரு குறிப்பிட்ட சம்பவம் அதற்குக் காரணமல்ல. இந்த உயிர் உற்சாகத்தில் துள்ளும்போது, அனைத்துமே கொண்டாட்டமாகும்.

உங்களது இருத்தலில் எப்படி உற்சாகமாகவும், கொண்டாட்டத்துடனும் இருப்பது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், எல்லா கொண்டாட்டங்களும் எதையோ மறைக்க அல்லது மூடிவிடுவதற்கான நிர்பந்தமான முயற்சிகள் - ஏதோவொன்றைக் குறித்த உங்கள் பரபரப்பு அல்லது அச்சம், ஏதோவொன்றைக் குறித்த உங்கள் கோபம் மற்றும் வெறுப்பு, அல்லது எதன் மீதான பகையோ காரணமாக இருக்கலாம். இந்த உணர்ச்சிகளை மறைத்து மூழ்கடிப்பதற்காக, நீங்கள் கொண்டாடுவதுபோல் நடிப்பதற்கு முயற்சிக்கிறீர்கள்.

கொண்டாட்டம் ஒரு செயல் அல்ல. கொண்டாட்டம் என்பது நீங்கள் இருக்கும் விதம். கொண்டாட்டம் ஒரு குறிப்பிட்ட கணத்துடன் முடிந்துவிடுவதல்ல. அது எல்லா நேரமும் நிகழ்ந்துகொண்டிருப்பது. வாழ்க்கை ஒரு கொண்டாட்டம். கொண்டாட்டம் என்றால் நாம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யவேண்டும் என்பதல்ல. உங்கள் வாழ்க்கை ஆர்ப்பரிப்பும், குதூகலமுமாக இருக்கிறதா? இதுவே கேள்வி. அதனால் கேளிக்கை விருந்துக்குச் செல்ல விரும்பும் மக்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன், ஆனால் அடுத்த நாள் நீங்கள் அவர்களைச் சந்தித்தால், அவர்கள் நலமில்லாமல் இருப்பது வழக்கம்.

கொண்டாட்டம் ஒரு செயல் அல்ல. கொண்டாட்டம் என்பது நீங்கள் இருக்கும் விதம்.

அடுத்த நாளும், முந்தைய நாளைப்போல உற்சாகமாக இருப்பதற்கு நீங்கள் விரும்பினால், அப்போது என்னைப்போல் 24 மணிநேர போதையில் இருக்குமாறு நான் கூறுவேன், ஆனால் அப்படிப்பட்ட ஒரு பானம் வெளியில் கிடைப்பதற்கானது அல்ல. நீங்களே பானமாக இருக்கும்போது மட்டும்தான் இது நிகழமுடியும். உயிர் ஒன்றுதான் உச்சபட்ச போதை அல்லது பானமாக இருக்கிறது. உயிர், ஒரே நேரத்தில் உயர்நிலை போதையாகவும், விழிப்புணர்வாகவும் இருக்கிறது. அதை நீங்கள் தொடவில்லை என்றால், பிறகு நீங்கள் இந்த சிறிய அளவிலான, இறுக்கமான கொண்டாட்டங்களைத்தான் தேடவேண்டும்.

உதாரணத்திற்கு, நான் உங்களை ஊசியால் குத்துகிறேன் என்று வைத்துக்கொள்வோம் - அது உங்களுக்குள் ஆழமாக ஊடுருவும், ஏனென்றால் அதுதான் வலியின் இயல்பு. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மனிதர்கள் வலியை ஆழமிக்க தன்மை என்று தவறாக புரிந்துகொள்கின்றனர். இல்லை - ஆழமிக்க தன்மை ஆனந்தத்திலும் பேரின்பத்திலும் அன்பிலும் நிகழமுடியும், அனைத்துக்கும் மேல் அமைதியிலும் நிகழமுடியும். உங்களுக்குள் ஆழ்ந்த அமைதி வந்துவிட்டால் உங்களுக்கு வேறெதுவும் தேவைப்படாது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு, அவர்கள் ஆழமான அமைதியை எப்போது அனுபவிக்கிறார்கள் என்றால் இறந்தபிறகுதான்.

சங்கரன் பிள்ளையும், தன்னை ஏமாற்றும் தன்மையும் கணக்கீடுகளும்

சங்கரன் பிள்ளைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது; ஆகவே அவர் ஒரு மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் அவரிடம், “நீங்கள் அதிகபட்சம் மூன்று வருடங்கள் மட்டுமே வாழ்வீர்கள்”, என்றார்.

சங்கரன் பிள்ளை அவரது நண்பர்களிடம் சென்று, “மருத்துவர் நான் மூன்று வருடங்கள் மட்டுமே வாழ்வேன் என்று கூறிவிட்டார். நான் என்ன செய்வது?” என்றார்.

அவர்களும், “நீங்கள் ஏன் இரண்டாவது கருத்து ஒன்று கேட்கக்கூடாது?” என்றனர்.

ஆகவே அவர் வேறொரு மருத்துவரிடம் சென்றார். மேலும் அவர், “ஏன் இரண்டாவது மட்டும்? மூன்றாவது, நான்காவது கருத்து கேட்கக்கூடாதா?” என்று எண்ணியவாறு கூடுதலாக மேலும் இரண்டு மருத்துவர்களை ஆலோசித்தார். பிறகு அவர் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் திரும்பி வந்தார்.

அவரது நண்பர்கள் கேட்டனர், “என்ன நிகழ்ந்தது? இன்னொரு மருத்துவர் ஏதாவது வித்தியாசமாக உங்களிடம் கூறினாரா? உங்களுக்கு அதிக வருடங்கள் உள்ளனவா?”

“இல்லை, இல்லை. நான் நான்கு வெவ்வேறு மருத்துவரிடம் சென்றேன், அவர்கள் ஒவ்வொருவரும் மூன்று வருடங்கள் என்று கூறினர். அதனால், இப்போது எனக்கு பன்னிரண்டு வருடங்கள் உள்ளன!”

உலகத்தில் பரிவர்த்தனைகள் தேவைப்படுகின்றன. உங்களுக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், அல்லது நீங்கள் செய்யும் எந்தவொரு செயலுக்கும் உங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு பரிவர்த்தனைகள் செய்துகொள்ளலாம். ஆனால் உங்கள் இருப்பின் இயல்பையும், நீங்கள் இங்கே இருக்கும் காலத்தின் இயல்பையும் பரிவர்த்தனைகள் தீர்மானிப்பதில்லை.

முக்கியமாக, நீங்கள் காலத்தின் அடிமையாகிவிட்டால், பரிவர்த்தனை நிறைந்த உலகின் அடிமையாகிவிடுகிறீர்கள். பல விஷயங்களையும் நீங்கள் கொடுக்கிறீர்கள், எடுக்கிறீர்கள்; ஏதோவொன்றை நீங்கள் பெறுகிறீர்கள், மற்றும் ஏதோவொன்றை இழக்கிறீர்கள் என்று நம்பத் தொடங்குகிறீர்கள். அது அவ்வாறு இல்லை, உங்களிடம் இருப்பது காலம் மட்டும்தான், மற்றும் அதையும் நீங்கள் எல்லா நேரத்திலும் இழந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் உயிரின் காலமற்ற பரிமாணத்தை நீங்கள் தொட்டால்தவிர, பெறுவதற்கு இங்கு ஒன்றுமில்லை.

உங்கள் உயிரின் திரை அகற்றுதல்

இந்தப் படைப்பில், இன்றைக்கு நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள், உணர்கிறீர்கள், மற்றும் பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்பதற்கு எந்த அர்த்தமுமில்லை. இருத்தலியலின்படி, அது எந்த சுவடும் விட்டுச் செல்வதில்லை. இங்கே கேள்வி என்னவென்றால், உங்கள் உயிர் திரை அகற்றப்பட்டதா, அல்லது பரிவர்த்தனைகளால் அது திரை மூடப்பட்டு இருக்கிறதா? உங்கள் உயிர், திரை நீக்கப்பட்டிருந்தால், அப்போது படைப்பின் மீது அதற்கொரு தாக்கம் இருக்கிறது. இல்லையென்றால், நீங்கள் விரும்புவதை நீங்கள் அணியலாம், உங்கள் விருப்பப்படி அழகாக அல்லது கம்பீரமாகத் தோன்றலாம், உலகத்தில் நீங்கள் புத்திசாலித்தனமான விஷயங்களைக் கூறலாம் - இவையனைத்தும், உங்களது சமூக முட்டாள்தனங்களுக்குள் மட்டும் ஏதோ வித்தியாசத்தை உருவாக்குகிறது. அந்த அளவுக்கு மட்டுமே அது தகுதியானது. நீங்கள் ஒரு நபராக மற்றும் ஒரு சமூக அங்கமாக இருக்கிறீர்கள், ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் ஒரு உயிர், ஒரு இருப்பாக இருக்கிறீர்கள். அதற்குப் பின்னால்தான், களமாடுவதற்கான இந்த சமூக பாத்திரப்படைப்புகள் நமக்கு உள்ளன.

இந்தப் படைப்பில், இன்றைக்கு நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள், உணர்கிறீர்கள் மற்றும் பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்பதற்கு எந்த அர்த்தமுமில்லை. இருத்தலின் அளவில், அது எந்த சுவடும் விட்டுச் செல்வதில்லை.

ஆகவே, இந்த வருடத்தில் நமக்கென்று என்ன வரவிருக்கிறது? இந்த உடலின் உருவாக்கத்தில், மரபியலின் அடிப்படை மூலப்பொருள் உங்கள் பெற்றோரிடமிருந்து வந்தது என்றாலும், நீங்கள் சாப்பிட்ட உணவில் இருந்துதான் உடல்பொருள் வந்தது.  நீங்கள் ஒரு உயிராக இருக்கும் காரணத்தினால் மற்றும் நீங்கள் ஒரு இருப்பாக இருக்கும் காரணத்தினால் உடல் கட்டமைப்பு நிகழ்ந்தது. உங்களால் உயிரின் திரையகற்ற முடிந்தால், அதன்பிறகு உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சிகள் மற்றும் உலகத்தில் உங்கள் பரிவர்த்தனைகள் அனைத்தும் பெருமளவுக்கு நீங்கள் விரும்பும் திசை நோக்கிச் செல்லும்.