விழிப்புணர்வான உலகம்

விழிப்புணர்வான உலகம்: பூமியைக் காக்க நம்மிடம் அதிக ஆற்றல் இருப்பது ஏன்?

பருவ நிலை நெருக்கடி பிரம்மாண்டமாக நம் முன் அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் நிலையில், தனிமனிதர்களாக நாம் ஆற்றல் இழந்தவர்களாக இருக்கிறோமா? உலகத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்தவல்ல செயல்வடிவத்தைத் தட்டியெழுப்ப உதவுவதற்காக, வழக்கமாக நம் பார்வையில் தென்படாத ஒரு வாய்ப்பைப் பற்றி சத்குரு சுட்டிக்காட்டுகிறார்.

கேள்வியாளர்: உலகளாவிய பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டிருக்கும் முறையை பார்க்கையில், நம் உயிர்களுக்கு மிக அடிப்படையானதையே நாம் அழிக்கும் அளவுக்கு, பூமியின் சூழலியலை அது பாதிக்கிறது. இது உண்மையில் எனக்கு வருத்தமாக இருப்பதுடன், என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்றும் உணர்கிறேன். நமக்கும், பூமியின் எல்லா உயிர்களுக்கும் நிகழவிருக்கும் ஒரு ஒட்டுமொத்த அழிவைத் தவிர்ப்பதற்கு தனிமனிதர்களாக நாம் செய்யக்கூடியது ஏதேனும் இருக்கிறதா?

சத்குரு: பாருங்கள், நான் என் கண்களை மூடிக்கொண்டால், நான் மரணிக்கும் வரையில் என்னால் இங்கேயே அமர்ந்திருக்க முடியும். சுற்றுச்சூழலுக்காகவோ, மக்களுக்காகவோ, குடும்பத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவும் எந்த செயலும் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால் நான் பல விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறேன், வாரத்தின் ஏழு நாட்களும், ஒரு நாளின் இருபது மணி நேரங்களும், நான் எத்தனையோ பல விஷயங்கள் செய்கிறேன், ஏனென்றால் அது தேவைப்படுகிறது. என் திருப்திக்காகவோ அல்லது மன நிறைவுக்காகவோ நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை – எதுவும் செய்யாதபோதும், நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் இப்போதெல்லாம் எதுவும் செய்யாமலிருக்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை.

என்னைப் பொறுத்தவரையில், செயல் என்பது ஒரு தீர்வைப் பற்றியது, திருப்தி அடைவதைக் குறித்தது அல்ல. நாம் சில விஷயங்களைச் செய்யவில்லை என்றால், பெருமளவில் துன்பம் நிகழும். தற்போது, பங்குச் சந்தைகள் விண்ணைத் தொடுகின்றன, உண்மையில், இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டால், எல்லாமே இறங்குமுகத்தில் இருக்கவேண்டும். அது எப்படி ஏறுமுகமாக நிகழ்கிறது என்பது விந்தையாக இருக்கிறது, ஆனால் அதற்கு எதிராக பேசுவதால், அதை நீங்கள் நிறுத்த முடியாது. அறிந்தோ அல்லது அறியாமலோ, நாம் அனைவரும் அதன் ஒரு பாகமாக இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரையில், செயல் என்பது ஒரு தீர்வைப் பற்றியது, திருப்தி அடைவதைக் குறித்தது அல்ல. நாம் சில விஷயங்களைச் செய்யவில்லை என்றால், பெருமளவில் துன்பம் நிகழும்

உலகப் பொருளாதாரம் என்பது 780 கோடி மக்களின் மிகப்பெரும் சக்தி. இந்தத் திரளான குவியலின் உச்சியில் ஒரு சிலர் அமர்ந்திருக்கின்றனர், ஆனால் அப்போதும், அவர்களால் திசையை முடிவு செய்ய இயலவில்லை. நீங்கள் ஒரு கணினி வாங்கினாலோ, ஒரு தீப்பெட்டி அல்லது கோடி டாலர் வாங்கினாலோ – நாம் அனைவருமே பொருளாதார இயந்திரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அதன் வேகத்தை நாம் குறைக்க வேண்டுமா?

ஒரு சராசரி அமெரிக்கப் பிரஜைக்கு இருக்கும் வசதிகளை, பூமியின் 780 கோடி மக்களுக்கும் நீங்கள் வழங்கவேண்டும் என்றால், நமக்கு இருக்கும் பூமியைப் போன்று 4.5 கிரகங்கள் தேவைப்படும். ஆனால் நமக்கு ஒரு பாதி கிரகம் மட்டுமே உள்ளது. மற்ற 4 கிரகம் நமக்கு எங்கே கிடைக்கும்? பிரச்சனை பெரிதாக இருப்பதைப் போலவே, பொருளாதார சக்தியும் அபரிமிதமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சக்தியை திடீரென்று வேறு பக்கமாக திருப்பமுடியாது.

ஒரு மிகப் பெரிய கப்பலை சட்டென்று நீங்கள் வேறு திசையில் திருப்ப முயன்றால், அது கவிழ்ந்துவிடும். திடீரென்று பொருளாதார கட்டமைப்பை மாற்றுவதற்கு நீங்கள் ஏதாவது செய்தால், மக்கள் இறக்க நேரிடும். கோவிட் பெருந்தொற்று சூழலைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான மரணங்களை உலக பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்தும். அபரிமிதமான வளர்ச்சி தவறு என்பது உங்களுக்கு தெரிந்தாலும், அதை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டியுள்ளது. தற்போது, அது செல்லும் திசையிலிருந்து ஒரு டிகிரி அளவிலான மாற்றத்தை மட்டுமே நாம் கேட்கிறோம். ஒரு டிகிரி அளவு மாற்றத்தை, போதுமான நீண்ட காலத்திற்கு தொடர்ந்து நீங்கள் பின்பற்றினால், அது ஒரு கட்டத்தில் 180 டிகிரி கோணத்தில் அரை வட்டமாக திரும்பியிருக்கும்.

ஒரு டிகிரி அளவு மாற்றத்தை, போதுமான நீண்ட காலத்திற்கு நீங்கள் தொடர்ந்து பின்பற்றினால், அது ஒரு கட்டத்தில் 180 டிகிரி கோணத்தில் அரை வட்டமாக திரும்பியிருக்கும்.

இப்பொழுது அது தவறான திசையில் சென்று கொண்டிருந்தாலும், சட்டென்று அதை வேறு திசையில் திருப்ப நீங்கள் முயற்சித்தால், தவறான திசையில் செல்வதால் என்ன நிகழுமோ, அதைக்காட்டிலும் மோசமான விளைவுகள் ஏற்படும். உலகின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை நேர்மையற்றவர்கள் மற்றும் கறைபடிந்தவர்கள் – ஒருவேளை அது உண்மையாகவும் இருக்கலாம் - என்றும் போகிறபோக்கில் குற்றம் சுமத்தும் அனைவருக்கும் தலைமைப் பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு இருந்தால், நீங்கள் மட்டும் சிறப்பாக என்ன செய்வீர்கள்.

மக்களிடம் சற்று குறைந்த எண்ணிக்கையில் ஆடைகள் வாங்குமாறு நீங்கள் கூறினால், சற்று குறைவாக உண்ணுமாறும், மின்விளக்குகளை சற்று குறைவாக பயன்படுத்துமாறும் மற்றும் அந்த நோக்கில் எதையும் சற்றே குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினால், அவர்கள் அதைச் செய்வார்களா? அதையெல்லாம் வேறொருவர் பின்பற்றுவார், தாங்கள் அப்படி செய்ய வேண்டியதில்லை என்றுதான் அனைவரும் எண்ணுகின்றனர். இதனால்தான் நாம், "மனித ஆசைகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. குறைந்தபட்சம் மனித ஜனத்தொகையையாவது கட்டுப்படுத்துங்கள்," என்று கூறுகிறோம்.

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்ததைப்போல், நாம் 16 கோடி மக்களாக மட்டும் இருந்திருந்தால், நீங்கள் விரும்பும் எதையும் உங்களால் செய்துகொள்ள முடியும், நீங்கள் விரும்பும் எந்த வாகனத்தையும் ஓட்டலாம், அது ஒரு பிரச்சனையாக இருக்காது. தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதற்கு பூமிக்கு போதுமான அவகாசம் இருந்திருக்கும். ஆனால் தற்போது, நாம் அளவுகடந்து இருக்கிறோம் – அதுதான் மோசமான குற்றம். ஆகவே, நான் கேட்பதெல்லாம் ஒரு சிறு மாற்றம்தான்: மண்ணில் மூன்று சதவிகித கரிமச் சத்து.

நான் கேட்பதெல்லாம் ஒரு சிறு மாற்றம்தான்: மண்ணில் மூன்று சதவிகித கரிமச் சத்து.

அதன் பொருட்டு நான் ஏற்கனவே பல அரசியல் தலைவர்களை அணுகியுள்ளேன், அவர்களும் அதைச் செய்வதற்கு சம்மதித்துள்ளனர். ஏனென்றால், அது அரசியல் அதிகாரத்தை அச்சுறுத்துவது அல்ல; அது செல்வாக்கை தொந்தரவு செய்வதில்லை, எண்ணெய் தொழிற்சாலை அல்லது ஆட்டோமொபைல் தொழிற்சாலை எதையும் தொந்தரவு செய்வதில்லை. அந்த சிறிய மாற்றத்தைச் செய்யுங்கள், பிறகு எத்தனை மாற்றங்கள் உலகில் நிகழும் என்பதைப் பாருங்கள்.

அதுதான் அதைச் செய்வதற்கான வழி. ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் 526 கோடி மக்களுக்கு இருக்கிறது. விழிப்புணர்வான உலகை உருவாக்கும் இயக்கத்துக்கு குறைந்தபட்சமாக 300 கோடி மக்களாவது ஆதரவளிக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை சேகரிப்பதற்கு நமக்கு ஒரு வழி உள்ளது. ஒரு 100 நாட்களில் 300 கோடி மக்கள் ஆதரவு தந்தால், எவராலும், எந்த அரசியல் தலைவராலும் அதை அலட்சியம் செய்யமுடியாது. ஒரு ஜனநாயக நாட்டில், எந்தவொரு விஷயத்துக்கும், ஆதரவளிக்கும் மக்களின் எண்ணிக்கையே முக்கியத்துவம் பெறுகிறது.

இப்போது உங்கள் ஆதரவு அவசியம் தேவை. தயவுசெய்து இது நிகழ எங்களோடு இருங்கள்.