இசைப் பயணத்தில்
நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவை சேர்ந்த கலைக்குடும்பத்தில் பிறந்தவர் ராவ் சிரா. இசை, கால்பந்து, மீன் பிடித்தல் போன்றவை அவரது பள்ளிக்கால வாழ்வினை முழுமையாக்குவதாக இருந்தன. இசையின் மீது கொண்ட தீரா ஆர்வத்தால், முழுநேர இசைக்கலைஞராவதை தன் வாழ்க்கையாக அவர் தேர்வு செய்தார். 2014 ல், கொடார்ட்ஸ் ராட்டர்டாம் கலை பல்கலைக்கழகத்தில், உலக இசைத் துறையில் அவர் இணைந்து, ப்ரேசில் தேச இசையில் சிறப்புத்தகுதி பெற்றார். இசை மீது அவர் கொண்டிருந்த காதலும், அதன் பல்வேறு வடிவங்களை உள்வாங்குவதில் அவருக்கிருந்த சிரத்தையும், அவரை தொலைதூர தேசங்களுக்கு அழைத்துச் சென்றது.
அவரது பட்டப்படிப்பு நாட்களிலும், அதற்குப் பிறகும், ப்ரேசில், எல் சால்வடார், மொசாம்பி, ஸ்காட்லாந்த் மற்றும் நெதர்லாந்த் ஆகிய இடங்களுக்கு சென்று, பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டு, பெரும் இசை விழாக்களில் கச்சேரிகள் நடத்தினார். “வெறுமனே ஒரு பொழுதுபோக்குக்காக இல்லாமல், இசையை என் வாழ்வாதாரமாகவே கொண்டிருந்தேன். எனது உள்ளம் எதை நாடுகிறது எனபதை நான் கண்டுகொண்டேன் என்பதுடன், நான் செய்ய விரும்பியதும் இதுதான்,” என்று அவர் பகிர்ந்துகொள்கிறார்.
இசை மீது அவருக்கு இருந்த பேரார்வத்தினால், அவரது தாய் நாடான நார்வே மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடையிலான வரலாற்றுரீதியான தொடர்புகளை ஆராய முனைந்தார். 2019 ல், ஸ்காட்லாந்தின் இரண்டு இசைக்கலைஞர்களுடன், அவர் ஒரு இசைக் குழுவை உருவாக்கி, நாடெங்கிலும் பாப் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவற்றுள் குறிப்பாக, வரலாற்றுப் புகழ் மிகுந்த எடின்பரோ கோட்டையில் நிகழ்ந்த இசைக்கச்சேரி நினைவில் நிற்பதாக இருந்தது. ஈஷாவுக்கு வருவதற்கு முன்பு, பெருந்தொற்றுக் காலத்தில் 2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை நார்வேயின் சமி கிராமத்தில் ஒரு துணை இசை ஆசிரியராக இருந்ததுதான் இசையுடனான ராவின் கடைசி தொடர்பு எனலாம்.
மக்களின் கனிவும், மௌனமும் அந்த நாட்களை எளிதாக்கினாலும், குளிர் காற்றும், 24 மணி நேரங்கள் தொடர்ந்த இருளும் கைகோர்த்து, அவரது உடல்ரீதியான மற்றும் மனரீதியான வரம்புகளை சோதனைக்கு உட்படுத்தின. “ஹடயோகா பயிற்சிகள் ஒரு மாபெரும், விலைமதிப்பில்லா ஆதரவாகக் கைகொடுத்தது,” என்று ராவ் நினைவுகூர்கிறார்.