கேள்வி: சத்குரு, நீங்கள் சிவனைக் குறித்து, அவரை அழிப்பவராகவே அடிக்கடி பேசியுள்ளீர்கள். அது என்னை பயமுறுத்துகிறது. காப்பவராக இருக்கும் சிவனின் ரூபம் ஏதாவது இருக்கிறதா?
சத்குரு: இதை இப்படி பார்ப்போம்: உங்களிடம், மிகவும் மெலிதான, உடையக்கூடிய அல்லது அழிந்துபோகக்கூடிய ஏதோ ஒன்று இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதனோடு வாழ்ந்தால், நீங்கள் எப்பொழுதும் பயத்திலும், பதற்றத்திலும் இருப்பீர்கள். எவையெல்லாம் உடையக்கூடியதோ, அவை அனைத்தும் உடைந்துவிட்டால், உடைக்கவே முடியாத ஒன்று இங்கே இருப்பதுடன், வாழ்க்கை முழு சுதந்திரமானதாகவும், அற்புதமானதாகவும் மாறிவிடுகிறது. அதுதான் சிவனின் வழி, அதனால்தான் அவர் அழிப்பவர் எனப்படுகிறார். அவர் காப்பவராக இருக்கமுடியும், ஆனால் உங்களால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு, மிகவும் வித்தியாசமான விதத்தில், அவர் காப்பவராக இருக்கிறார். மக்கள் எப்பொழுதும் முட்டாள்தனமாக ஏதோ ஒன்று நிகழவேண்டும் என்று நம்புகிறார்கள். அதாவது, நீங்கள் கீழே விழுவதாக இருக்கும்போது, வானத்திலிருந்து ஒரு கை வந்து உங்களை தாங்கவேண்டும் என்பதைப்போல எதிர்பார்க்கிறீர்கள். அப்படி ஒரு விஷயம் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. ஆனால் வாழ்வின் மூலத்தின் அருளை நீங்கள் சம்பாதித்தால், வாழ்க்கை சுமூகமாகிறது. எங்கும் சிக்கிக்கொள்ளாத, நன்றாக எண்ணையிட்ட ஒரு இயந்திரமாகிறீர்கள். அப்போது நீங்கள் சுமூகமாக வாழ்வைக் கடக்கிறீர்கள்.
சிவனின் மறைபொருளான வாக்குறுதி
சிவனின் முதல் ஏழு சீடர்களாக இருந்தவர்கள் சப்தரிஷிகள். ஒரு மனிதர் உயர்ந்த நிலையை அடைவதற்கான 112 வழிகளை சிவன் வழங்கி அருளினார். இந்த 112 வழிகளையும் பிரித்து, சப்தரிஷிகள் ஒவ்வொருவருக்கும் 16 வழிகளைக் கற்றுக்கொடுத்தார். ஏனென்றால் 112 வழிகளையும் ஒருவர் கற்றுக்கொண்டு, உள்வாங்க சற்று அதிக காலம் எடுத்திருக்கும். சப்தரிஷிகளும் மிக நீண்ட காலம் சிவனுடன் கழித்ததாகக் கூறப்படுகிறது – அது 84 ஆண்டுகளுக்கும் அதிகம் என்று புராணம் கூறுகிறது. 84 என்பது ஒரு குறியீடாக இருக்கலாம், ஏனென்றால் யோகாவில் 84 ஆசனங்களும், வாழ்வின் 84 பரிமாணங்களும் உள்ளன. 84 ஆண்டுகள் நிறைவடைகையில், சிவன் மட்டும்தான் அவர்கள் அறிந்திருந்த ஒரே உலகமாக இருந்தது.
ஆனால் சிவன் அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் 16 வழிகளை உள்வாங்கியிருக்கும் நிலையில், இப்பொழுது நீங்கள் அவற்றை உலக மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். ஏழு வெவ்வேறு திசைகளில் சென்று, உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இதை எடுத்துச் செல்லுங்கள்; இந்த நிலப்பரப்பை சேர்ந்த ஒருவரும் இதுவரை பார்த்திராத உலகின் பகுதிகளுக்குச் செல்லுங்கள்,” என்றார். சப்தரிஷிகளுக்கு சற்றே பயம் இருந்தது. அவர்கள் அங்கிருந்து புறப்படத் தயாராகும்போது, சிவனிடம் கேட்டனர், “நாங்கள் எங்கு செல்லப்போகிறோம், எந்த விதமான மக்களை சந்திப்போம், இந்த ஆழமான உண்மைகளை நாங்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் ஏதும் தொந்தரவுக்கு உள்ளாக நேர்ந்தால், எங்களுக்காக நீங்கள் அங்கே இருப்பீர்களா?” சிவன் ஆச்சரியமும், நம்பவியலாத் தன்மையிலும் அவர்களைப் பார்த்து, “நல்லது, நீங்கள் தொல்லைக்கு உள்ளானால் நான் தூங்குவேன்,” என்றார். இதுவே மறைஞானியின் வழி.
நீங்கள் தூங்கும்பொழுது, பூமியின் ஒரு பாகமாகிறீர்கள்; நீங்கள் அனைத்துடனும் ஒரு பாகமாக ஆகிறீர்கள். எப்பொழுதும் நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள், ஆனால் உங்களை நீங்களே ஒரு தனிப்பட்ட நபராக செய்துகொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் தூங்கும்பொழுது, உங்கள் ஆளுமை, பாலினம், செல்வம், தகுதிகள் மற்றும் எல்லா வினோதங்களும் மறைந்து, நீங்கள் அனைத்துடனும் ஒன்றியிருக்கிறீர்கள். “நீங்கள் துன்பத்தில் இருந்தால், நான் தூங்குவேன்” என்று சிவன் கூறும்பொழுது, அதன் பொருளாவது, “நான் உங்களோடு ஒன்றியிருப்பேன். வருந்தாதீர்கள்.” ஆகவே நீங்கள் இதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. சிவன், அழிப்பவர் என்பதால் அவர் வந்து உங்களை அழித்தொழிப்பார் என்பது பொருளல்ல. நீங்கள் அவரைத் தேடும்பொழுது, அவர் உங்களோடு ஒன்றியிருப்பார்.
காப்பவரா, அழிப்பவரா? சிவனின் வித்தியாசமான பரிமாணங்கள்
வாழ்வின் வித்தியாசமான பரிமாணங்களுக்கு தேவையான விதத்தில், சிவனின் வெவ்வேறு பரிமாணங்கள் அல்லது சக்தியின் வெவ்வேறு அம்சங்கள் இருக்கின்றன. ஈஷா யோக மையத்தில்கூட, சிவனின் பல ரூபங்கள் உள்ளன. யோகேஷ்வர லிங்கம் இருக்கிறது; ஆதியோகி ஆலயத்தில் மற்றொரு லிங்கம் உள்ளது மற்றும் தியானலிங்கம் இருக்கிறது. இது ஏனென்றால், “ஷிவா” என்று நீங்கள் அழைப்பது எதுவோ அதற்கு பல பரிமாணங்கள் உண்டு. இந்தப் பரிமாணங்களுள் ஒன்று காலபைரவர் அல்லது காலத்தை ஆள்பவர். ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலில் காலபைரவர் ஆலயத்தை நாம் பிரதிஷ்டை செய்ய உள்ளோம். இந்த பிரதிஷ்டை மிகவும் தனித்தன்மையான, சிக்கலான செயல்முறையாக இருக்கும், ஏனென்றால் இந்தப் புனிதவெளி, வாழ்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் இரண்டு சாராருக்கும் உதவியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்படும்.
நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தாலும், உங்கள் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். காலத்தை நிர்வகிப்பராக இருக்கும் சிவனின் இந்த காலப்பரிணாம ரூபம் வாழ்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் இரு சாராருக்கும் பொருந்தும்.
சிவனுக்கு அர்ப்பணிக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம்
கேள்வி: சத்குரு, மஹாசிவராத்திரி அன்று சிவனுக்கு நாம் அர்ப்பணம் செய்யக்கூடிய சிறப்பான விஷயம் என்ன?
சத்குரு: சிவனுக்கு அர்ப்பணிக்கக்கூடிய மிகச் சிறப்பான ஒன்று என்றால், அது நீங்கள்தான். உண்மையில் உங்களிடத்தில் வேறென்ன இருக்கிறது? உங்களிடம் இருக்கும் அனைத்துமே இந்த உலகத்தில் இருந்து சேகரித்ததுதான். உங்கள் வீடு, உங்கள் உறவுகள், செல்வம், நீங்கள் சேகரித்திருக்கும் பொருட்கள், அவைகள் எதுவும் உங்களுடையது அல்ல; சிறிது காலம் மட்டும் உங்கள் பயன்பாட்டுக்கு அவைகள் இருக்கின்றன. அத்தகைய விஷயங்களை அர்ப்பணிப்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? உங்களது உடலே இந்த பூமியிலிருந்து சேகரித்ததுதான்; அதைக் கொடுப்பதிலும் எந்த அர்த்தமுமில்லை. நீங்கள் செய்யக்கூடிய சிறப்பான விஷயம் உங்களையே கொடுப்பதுதான். ஆனால் அர்ப்பணிப்பதற்கு குறியீடாக ஏதோ ஒன்று உங்களுக்குத் தேவை, ஏனென்றால் ஏதோ ஒன்றை அர்ப்பணிக்க நீங்கள் விரும்புகிறீர்கள்.
பாரம்பரியமாக, மஹாசிவராத்திரி நாளில் சிவனுக்கு விருப்பமான ஒரே ஒரு வில்வ இலையை நீங்கள் அர்ப்பணித்தால், அதுவே போதுமானது என்று கூறப்படுகிறது. உங்களையே அர்ப்பணிப்பது எப்படி என்பது உங்களுக்கு தெரியாத காரணத்தால், உங்கள் இதயத்தில் தீயாக எரியும் பக்தியுடன் ஒரு இலையை நீங்கள் அர்ப்பணிக்கிறீர்கள். நீங்கள் என்ன அர்ப்பணிக்கிறீர்கள் என்பதல்ல, எப்படி அர்ப்பணிக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. ஏனென்றால், நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்வின் தரத்தைத் தீர்மானிக்கிறதே தவிர, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதல்ல. “என்ன” என்பதை முடிவு செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக, “எப்படி” என்பதை மட்டும் நீங்கள் முடிவு செய்தால், உங்களது வாழ்க்கை சீராக இருக்கும்.
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், இப்போதைவிட இன்னும் சற்று முன்னேற்றமாக இருக்கவேண்டும் என்பதே மனிதரின் இயல்பாக இருக்கிறது. இன்னும் முன்னேற்றமாக இருக்க நீங்கள் விரும்பும்பொழுது, நீங்கள் அபகரிக்கலாம், வெற்றி கொள்ளலாம் அல்லது யாரையாவது அடிமைப்படுத்தலாம் அல்லது நீங்கள் யாரையேனும் நேசித்து, அரவணைக்கலாம். ஏதோ ஒன்றை வாங்குவதால், அடிமைப்படுத்துவதால், வெற்றி கொள்வதால் அது உங்களுடையதாகிறது. அல்லது வெறுமனே அதை நேசித்து, உங்களின் ஒரு பாகமாக இணைத்துக்கொண்டு, அரவணைப்பதால் அது உங்களுடையதாகிறது. அதை எப்படி செய்கிறீர்கள் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. உங்களது செயல்கள் நேசம், அனுதாபம் மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்குமா அல்லது உங்கள் செயல்கள் வெற்றி கொள்ளுதல், அடிமைப்படுத்துதல் மற்றும் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்குமா?
இந்த மஹாசிவராத்திரி அன்று, ஒரு இலையை பறிப்பதற்குகூட முயற்சி செய்யவேண்டாம். உங்களை மட்டும் அர்ப்பணியுங்கள். சிவன் உங்களை எடுத்து சென்றுவிட மாட்டார் – எப்படி இருப்பினும் நீங்கள் அவருடையதுதான். சிவன் ஒரு துறவி. அவருக்கு நீங்கள் தங்கம், வெள்ளி மற்றும் வைரங்களை அர்ப்பணித்தால், அவற்றை வைத்துக்கொண்டு அவர் என்ன செய்வார்? உங்களையே நீங்கள் அர்ப்பணித்தீர்கள் என்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டீர்கள். அது நிகழவேண்டும். உலகத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் உங்கள் வாழ்வில் நீங்கள் ஒருபோதும் பிரச்சனையாக இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். உலகத்தில் நீங்கள் எந்த அளவுக்கு அதிகமாக செயல்படுவதற்கு முயற்சி மேற்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள், ஆனால் உங்கள் வாழ்வில் ஒருபோதும் நீங்கள் ஒரு தடையாக இருக்கக்கூடாது. உங்களையே அர்ப்பணிப்பது என்றால், நீங்கள் உங்களையே கொடுத்துள்ளீர்கள் – ஆகவே நீங்கள் எப்படி இடையூறாக இருக்கமுடியும்.