வாழ்க்கை கேள்விகள்

காதலைப் பற்றி பேசுவோம். ஏன் இவ்வளவு அதிகமான உறவுகள் தோல்வியடைகின்றன?

அலெக்சாண்டர் கார்மண்ட் மேற்கொள்ளும் இந்த உரையாடலில், காதல் மற்றும் உறவுநிலைகள் குறித்த பொதுவான கேள்விகளுக்கு, சத்குரு புதிய கண்ணோட்டத்தில் பதிலளிக்கிறார். அலெக்சாண்டர், பிரான்ஸ் நாட்டில் ஒரு பிரபலமான உறவுநிலை மேம்பாட்டுப் பயிற்சியாளராக இருக்கிறார்..

காதல் குறித்து கேட்கப்படும் முதல் கேள்வி

அலெக்சாண்டர்: காதல் பயிற்சியாளர் என்ற வகையில், என்னிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. காதல் முறிவு அல்லது விவாகரத்துக்குப் பிறகு ஏற்படும் சூழலை எப்படிக் கையாள்வது?

சத்குரு: காதல் என்பது இணைவதைக் குறித்ததுதானே தவிர, முறித்துக்கொள்வதைக் குறித்தது அல்ல என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்! ஆனால் எல்லா இடங்களிலும் காதல் முறிவு போன்ற விஷயங்கள் நிகழ்வது ஏனென்றால், நாம் வாழ்க்கையை வாழ்க்கையாகப் பார்ப்பதில்லை. நமது கல்வி முறைகளும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த நம் கருத்துகளும், எல்லாவற்றையும் நம்முடைய நன்மைக்காக எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றியே இருக்கின்றன. இதில் மனிதர்களையும் அடக்கிவிட்டது துரதிருஷ்டவசமானது. அதனாலேயே, காதல் என்று இன்றைக்கு மக்களால் அழைக்கப்படுவது உண்மையில் வெறுமனே ஒரு பரஸ்பர நன்மை பெறும் திட்டமாக – “நீ எனக்கு இதைக் கொடு; நான் உனக்கு அதைக் கொடுப்பேன். நீ எனக்கு அதை கொடுக்கவில்லை என்றால், நான் உனக்கு இதைக் கொடுக்கமாட்டேன்” என்பதாக இருக்கிறது

காதல் என்பது உங்களுக்கு வேண்டியதை அடைவதைப் பற்றி அல்ல. அது உங்களையே இழப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

உயிர் பற்றிய எனது புரிதலின்படி, காதல் என்பது இரண்டு உயிர்கள் ஒன்றாக நெய்யப்படுவதைக் குறித்தது. ஆனால் இன்றைக்கு, நாம் காதலைப் பற்றி் பேசும்பொழுது, அதற்குக் காலாவதியாகும் தேதி இருப்பதாக மக்கள் எண்ணுகின்றனர். வேறொரு நபருடன் தங்களது வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு ஆழமான தன்மையை மக்கள் அறிந்துகொள்ள முடியாதது துரதிருஷ்டவசமான ஒரு சூழ்நிலை. யாரோ ஒருவரை உங்கள் வாழ்வின் ஒரு பாகமாக இணைத்துக்கொள்வதற்கு உண்மையாகவே நீங்கள் விரும்பும்போது, உங்களின் சிறு பகுதியை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். உங்களின் ஏதோ சில விஷயங்கள் நொறுங்கி விழவேண்டும். “காதலில் வீழ்வது” என்ற ஆங்கிலப் பதம் மிகச் சரியாக இதை குறிக்கிறது. காதலில் நீங்கள் எழமுடியாது; காதலில் நீங்கள் பறக்கமுடியாது; காதலில் நீங்கள் மேலேற முடியாது – காதலில் நீங்கள் வீழ்வதுதான் நிகழமுடியும்.

காதல் என்பது உங்களுக்கு வேண்டியதை அடைவதைப் பற்றி அல்ல. அது உங்களையே இழப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கிறது. காதல் என்பது லாப நோக்கிலான ஒரு திட்டம் அல்ல. இலாபம் குறித்து நீங்கள் நினைக்கும் கணமே, அந்த முதல் நாளிலிருந்தே உரசல் தொடங்கிவிடும். மாறாக,  உங்களிடம் இருக்கும் சிறந்ததைப் பகிர்ந்துகொள்வதைக் குறித்ததாக உங்கள் வாழ்க்கை இருந்தால், அது வேலை செய்யும். ஆனால் வேறொருவரிடம் இருந்து ஆனந்தத்தைப் பிழிந்தெடுக்க நீங்கள் முயற்சித்தால், அதன்பிறகு, இயல்பாகவே முறிவு ஏற்பட்டுவிடும்.

தன்னை நேசிப்பது என்பது ஒரு கட்டுக்கதை

அலெக்சாண்டர்: நான் பயிற்சி அளிக்கும் பலருக்கு, தங்களைத்தாங்களே நேசிப்பது எப்படி என்று தெரியவில்லை. அவர்களுக்கான ஆலோசனை ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?

சத்குரு: நீங்கள் யாரையேனும் வெறுக்கவோ அல்லது நேசிக்கவோ வேண்டுமென்றால், உங்களுக்கு இன்னொரு நபர் தேவை. “நான் என்னையே நேசிக்கிறேன்; நான் என்னையே வெறுக்கிறேன்,” என்பதைப் போன்ற வெளிப்பாடுகள், நவீன அகராதியின் ஒரு பகுதியாகியுள்ளன. இதன் பொருள், உங்களுக்குள்ளேயே ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தால், அதன் பொருள் நீங்கள் மனப்பிறழ்வில் அல்லது ஆவியால் பீடிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு ஒரு மனநல மருத்துவர் அல்லது ஆவி விரட்டுபவர் தேவை. காதலுக்கு நம்பிக்கையோ அல்லது வேறெந்த தன்மையோ தேவையில்லை. ஒரு மனிதருக்குள் உணர்ச்சியின் இனிமையும், தியாக உணர்வும் இருப்பதே காதலுக்கு போதுமானது. இது நமக்குள் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது.

ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு உண்மையிலேயே முக்கியமாக இருக்கும்பொழுது, அதற்காக உங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய விரும்புகிறீர்கள். இது தனிப்பட்ட காதல் உறவாக இருக்கலாம், தேசத்துக்காக அல்லது மக்கள் எந்த ஒரு விஷயத்திற்காகவும் முன்நிற்கலாம். மக்கள் அவர்களது தேசத்திற்காக அல்லது அவர்களது காதலுக்காக இறக்கவும் தயாராக இருக்கின்றனர். யாரோ ஒருவர், ஏதோ ஒரு விஷயத்துக்காக இறந்துவிட வேண்டும் என்பதல்ல, ஆனால் உங்களைவிட வேறொன்று மிக முக்கியமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களைவிடவும் வேறொன்று அல்லது வேறொருவர் அதிமுக்கியமாக இருந்தால், அது ஒரு காதல் உறவுதான்.

பயம் ஏன் பயனற்றது

அலெக்சாண்டர்: நான் பயிற்சி அளிப்பவர்களுக்கு, அவர்கள் நல்லவிதமாக இல்லை என்றும், வாழ்க்கையில் வெற்றியடையவில்லை மற்றும் மற்றவர்கள் விரும்பும்படியும் இல்லை என்று பலவிதத்திலும் பயம் ஆட்டிப்படைக்கின்றது. நாம் எப்படி பயத்தை கடக்க முடியும்?

சத்குரு: உங்களுக்கு எதுவும் தெரிந்திராத பகுதிக்குள் உங்கள் எண்ணங்களை செலுத்துவதால் ஏற்படும் விளைவுதான் பயம் என்பது. நாளைக்கு என்ன நிகழுமோ என்றுதான் மக்கள் துன்பப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கையினால் துன்பம் அடையவில்லை, தங்கள் சொந்த கற்பனையினால் துன்பப்படுகின்றனர். மக்களுக்கு எப்போதுமே என்ன நிகழ்ந்துவிடுமோ என்றுதான் பயம். இல்லாத ஒன்றால் அவர்கள் துன்பப்படுகின்றனர்.

உங்களால் கடந்தகாலத்தை மாற்றமுடியாது. இந்தக் கணத்தை மட்டுமே நீங்கள் உணரமுடியும். எதிர்காலம் என்பது உங்களுக்கு வேண்டிய விதத்தில் வடிவமைக்கப்பட வேண்டும்.

அதாவது, நீங்கள் மனதுக்கு போதுமான பயிற்சி அளிக்கவில்லை என்பதுதான் பொருள். உங்களது கடந்தகால ஞாபகம், தற்போதைய அனுபவம் மற்றும் எதிர்கால கற்பனை எல்லாம் கலந்துவிட்டன. இந்த அளவுக்கு மூளையின் செயல்பாடு பரிணாம வளர்ச்சி அடைவதற்கு இலட்சக்கணக்கான வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு மண்புழுவின் மூளை உங்களுக்கு இருந்திருந்தால், நீங்கள் எளிதில் காதலில் விழுந்து, அந்த உறவைப் பராமரித்து, பிறகு ஒருநாள் இறந்து போயிருப்பீர்கள். ஆனால் மூளைக்கு திறன் இருக்கும் காரணத்தால், நீங்கள் இல்லாத விஷயங்களை கற்பனை செய்துகொண்டு, இப்போது உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்களால் கடந்தகாலத்தை மாற்றமுடியாது. இந்தக் கணத்தை மட்டுமே நீங்கள் உணரமுடியும்.  எதிர்காலம் என்பது உங்களுக்கு வேண்டிய விதத்தில் வடிவமைக்கப்பட வேண்டும். நம்பிக்கையோடு இருப்பதாலோ அல்லது யாரோ ஒருவரை எப்படி கெஞ்சுவது என்று அறிந்துகொள்வதாலோ, இந்தத் திறன் வந்துவிடாது. உங்களுக்கே உரிய புத்திசாலித்தனம், மனம், உடலின் இயல்பு மற்றும் அவை எப்படி செயல்படுகின்றன என்பதற்கு நீங்கள் போதிய கவனம் அளிக்கும்போது, இது நிகழும். நீங்கள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற இயங்கு நுட்பத்தை நீங்கள் புரிந்துகொண்டால், இந்த விஷயங்கள் எளிதாகின்றன.

காதல் நிலைத்திருக்க என்ன செய்வது?

அலெக்சாண்டர்: காலத்தை வென்ற காதல் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா அல்லது எல்லா காதலும் தோல்வியடையக் கூடுமா?

சத்குரு: நீங்கள் வளரவளர, பொதுவாக அது தற்செயலாக இருப்பினும், நீங்கள் சமூகத்தால் வழி நடத்தப்படுகிறீர்கள். உங்கள் தாய் ஒன்றைக் கூறுவார்; உங்கள் தந்தை வேறொன்றைக் கூறுவார்; உங்கள் ஆசிரியர் வேறு ஏதோ ஒன்றைக் கூறுவார், ஒரு திரைப்படமோ அல்லது ஒரு புத்தகமோ முற்றிலும் வேறெதையோ கூறும். இந்தக் குழப்பம், உங்கள் தனிப்பட்ட ஆளுமையை உருவாக்குகிறது.

தற்செயலாகவோ அல்லது விழிப்புணர்வில்லாமலோ உங்களை வழிநடத்த முடியுமென்றால், நீங்கள் உங்களையே விழிப்புணர்வோடும்கூட வழிநடத்திக்கொள்ள முடியும். உங்களையே விழிப்புணர்வுடன் வழிநடத்திக் கொண்டீர்கள் என்றால், நீங்கள் விரும்பும் விதத்தில்தான் நீங்கள் இருப்பீர்கள். தற்போது, உறவு நிலைகளுடன் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், நீங்கள் விரும்பும் விதமாக வேறொருவர் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள், ஆனால் நீங்களே நீங்கள் விரும்பும் விதத்தில் இருப்பதில்லை. நீங்கள் விரும்பும்படி உங்களை நீங்களே உருவாக்க முடியாதபொழுது, நீங்கள் விரும்பும் விதமாக வேறொரு நபரை உங்களால் உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பது நிதர்சனமில்லாதது. அது தோல்வியையே சந்திக்கும்.

முட்டாள்தனமா காதலில் இருக்கிறீர்களா? மீண்டும் யோசியுங்கள்!

அலெக்சாண்டர்: ஆனால் நல்ல நோக்கங்கள் இல்லாத யாரோ ஒருவர் மீது காதலில் வீழ்ந்தால் என்னவாகும்? நாம் அதை உணர்கிறோமா?

சத்குரு: காதல் வயப்படுவது என்றால் முட்டாளாவது என்பதா உங்களின் கருத்து? காதல் என்பது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு விஷயம், ஏனென்றால் நீங்கள் பார்க்கும் எல்லாவற்றின் மீதும் நீங்கள் காதல் வயப்பட்டால், உங்கள் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதலில் மற்ற எவருடனும் எதுவும் செய்வதற்கில்லை. காதல், வெறுப்பு மட்டுமல்ல, உண்மையில் எல்லா மனித உணர்வுகளும் உங்களுக்குள்ளேயே நிகழ்கின்றன. நீங்கள் காணும் எல்லாவற்றுடனும் அன்பை உணர்ந்தால், நீங்கள் அற்புதமாக உணர்கிறீர்கள்.

உங்கள் உணர்ச்சியில் எப்போதும் இனிமையும், இரம்மியமும் நிறைந்திருப்பதற்கு காதல் ஒரு வழியாக இருக்கிறது. இது புத்திசாலித்தனமாக வாழ ஒரு வழி.

நீங்கள் உண்மையிலேயே அற்புதமாக உணரும்போது, உங்கள் உடலும், மனமும் சிறப்பாக செயல்படுகின்றன என்பதற்கு போதுமான அறிவியல்பூர்வமான மற்றும் மருத்துவரீதியான சான்று இருக்கிறது. உங்கள் உணர்ச்சியில் எப்போதும் இனிமையும், இரம்மியமும் நிறைந்திருப்பதற்கு, காதல் ஒரு வழியாக இருக்கிறது. இது புத்திசாலித்தனமாக வாழ ஒரு வழி. ஆனால் பெரும்பாலான மக்கள், காதலில் இருப்பது என்றால் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்வது என்று எண்ணுகின்றனர். அது ஏனென்றால், அவர்கள் பரஸ்பர நன்மை திட்டம் ஒன்றை உருவாக்கிவிட்டு, ஒரு நபர் எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்க, மற்றொருவர் எதுவுமே செய்யவேண்டியதில்லை என்று நினைக்கின்றனர். அதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள்.

ஒரு உறவு என்பது பல விஷயங்களாக இருக்கக்கூடும். அது நமது பெற்றோருடன், குழந்தைகளுடன் அல்லது நண்பர்களுடன் இருக்கலாம். குருவுக்கும், சீடனுக்கும் இடையில் ஒரு உறவு இருக்கிறது. பலதரப்பட்ட உறவுநிலைகள் இருக்கின்றன. ஆனால் மேற்கு நாடுகளில், “உறவு நிலை” என்று நீங்கள் கூறினால், அது பொதுவாக உடல்ரீதியானதாக பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் ஒரு உறவை உருவாக்குவதற்கு உடல் தொடர்பு மட்டுமே வழியல்ல. உங்களுக்கு அறிவுரீதியான உறவுநிலை இருக்கலாம் மற்றும் உணர்ச்சிரீதியான உறவுநிலை இருக்கலாம். உடல்ரீதியிலான உறவு நிலையைவிட, உணர்ச்சிரீதியான உறவு நிலைகள் மிகுந்த மென்மையானவை. ஏதோ ஒன்றில் உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் முதலீடு செய்தால் மட்டுமே, வாழ்க்கை ஆற்றல் வாய்ந்ததாகவும், உண்மையிலேயே அர்த்தம் நிரம்பியதாகவும் இருக்கும்.