பொறுப்பு ஏற்றல்: ஒரு மகத்தான இயக்கத்துக்கான துவக்கம்
1990-களில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் தன்னை உணர்வதற்கான அமைதிப் புரட்சி ஒன்று மெல்ல மலர்ந்து கொண்டிருந்தது. சத்குருவால் வடிவமைக்கப்பட்ட சுய மாற்றத்துக்கான சக்திவாய்ந்த ஈஷா யோகா பயிற்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும், கிட்டத்தட்ட மாநிலத்தின் ஒவ்வொரு ஊரிலும் வழங்கப்பட்டது. பெரும்பான்மையான கிராமங்களையும் கூட இந்த வகுப்புகள் தொட்டு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில், 12000 வருட விவசாய பாரம்பரியம் உள்ள தமிழ்நாட்டில், பூமியிலேயே மிகச்சிறந்த வளமான நிலப்பரப்புகளில் ஒன்றான இந்த பகுதி மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தையும், விவசாயத்தில் இடர்பாட்டையும் சந்தித்துக் கொண்டிருந்தது. விவசாயிகள் எதிர்கொள்ள இருந்த பேரிடரின் மையமாக இன்னும் ஆழமான ஒரு பிரச்சனை உருவாகியிருந்தது - அதிவிரைவாக அழிந்துகொண்டிருக்கும் மண்ணின் வளம்.
1998-ஆம் ஆண்டு சில சுற்றுச்சூழல் அமைப்புகள் 2025-ஆம் ஆண்டில் தமிழகத்தின் 60 சதவிகித நிலங்கள் தரிசாகிவிடும் என்று கணித்தனர். இத்தகைய கணிப்புகளையெல்லாம் ஏற்பவர் அல்லவே சத்குரு! இத்தகைய கணிப்புகள் மனித இதயங்களில் துடிக்கும் உணர்வை கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை என்று கூறுவார் சத்குரு. ஆனால் அந்த கணிப்பு கூறும் சூழலைப் பற்றி தானே மதிப்பீடு செய்ய அவர் பயணித்தபோது, ஐ.நா. அமைப்புகள் கணித்ததை விட நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது என்பதை காண நேர்ந்ததுடன், அவரது அனுபவமும் எதிர்வரவிருக்கும் அபாயத்தை காட்டியது. சிற்றாறுகள் மட்டும் வறண்டு போகவில்லை, ஆற்றுப்படுகைகளில் வீடுகளும் கட்டப்பட்டிருந்தன. பொதுவாக வறண்ட சூழ்நிலைகளில் கூட பிழைத்துக் கொள்ளும் பனை மரங்களுக்கு தேவையான ஈரப்பதம் கூட மண்ணில் இல்லை.
மாநிலத்தில் மிகக்கடுமையாக வளங்குன்றி வரும் மண், நீர் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு புத்துயிர் அளித்திட ஒரு இயக்கத்தை சத்குரு தோற்றுவிக்க இது வழிவகுத்தது. அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் சராசரி பசுமைப்பரப்பு 16.5% தான் இருந்தது. ஆனால் தேசத்தின் எதிர்பார்ப்போ 33% ஆக இருந்தது. ஒரு சிறிய தன்னார்வலர்கள் குழுவை அமைத்த சத்குரு, வரவிருக்கும் இந்த பேரிடரை தவர்க்க ஒரே வழி, நிலத்தில் பசுமைப்பரப்பை அதிகரிப்பது தான் என்று விளக்கினார். சத்குருவின் கணிப்பின்படி, 11.40 கோடி மரங்கள் மாநிலம் முழுவதும் நடப்பட்டால் இந்த சூழலை ஓரளவு மாற்றியமைக்க முடியும். எனவே இதன் துவக்கமாக, "மக்களின் மனங்களில் மரங்களை விதைத்தார்" சத்குரு - அனைத்திலும் மிகக்கடினமான நிலப்பரப்பாயிற்றே இது! அனுபவரீதியான செயல்முறை மூலம் எவ்வாறு நம் வாழ்வும் சுவாசமும் மரங்களோடு பிணைந்துள்ளது என்று மக்கள் உணரும்படி செய்த சத்குரு, மறுசீரமைப்பின் அத்தியாவசிய தேவைக்கு மக்கள் தங்களின் இதயங்களை திறக்கச் செய்தார்.
அந்த நேரத்தில் சத்குருவோடு நெருக்கமான செயல்களில் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர்கள் கூட இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மரம் நடும் பணியை துவங்கிய இந்த ஒரு இயக்கம், அடுத்த 20 ஆண்டுகளில் உலகளாவிய மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாக வளரும் என்று கற்பனை கூட செய்து பார்த்திருந்திருக்க மாட்டார்கள்.
ஆறு வருடங்கள் கழித்து, 2004-ஆம் ஆண்டு, சத்குரு அதிகாரப்பூர்வமாக ஈஷா பசுமைக்கரங்கள் இயக்கத்தைத் துவக்கினார். பல வழிகளில் இது ஒரு முன்மாதிரி திட்டமாக இருந்தது. இன்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் பகுதியாக நிகழும் மாபெரும் செயலுக்கான முன்மாதிரியாக ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் விளங்கியது.