பஞ்ச பிராணன்கள் குறித்த இந்தத் தொடரின் இறுதிப் பகுதியில், கிரியா யோகத்தில் வியான பிராணனின் முக்கியத்துவம், அதைத் தூண்டுவதற்கான வழிகள் மற்றும் அதிலிருந்து நீங்கள் எப்படி பலனடைய முடியும் என்பதை உள்ளிட்ட வியான பிராணனின் பல்வேறு அம்சங்களை சத்குரு வெளிப்படுத்துகிறார்.
சத்குரு: வருடத்தின் இந்த நேரத்தில், பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனிலிருந்து விலகி எதிர்முகமாக இருக்கும்பொழுது, சூரியனின் தாக்கம் குறைந்தபட்சமாக இருக்கிறது, அதனால் சந்திரன் வலிமையாகிறது. சூரியன் ஒரு விதமாக சப்தத்துடன் ததும்பும் நுரையாக இருக்கும்பொழுது, சந்திரன் உங்களை பூமி அல்லது மண்ணுடன் தொடர்புபடுத்துகிறது. நீங்கள் அதிகம் பூமியைப் போல் ஆகிறீர்கள் – சற்று வேகம் குறைந்து, ஆனால் ஸ்திரமாக இருக்கிறீர்கள். ஏதோ ஒன்று சமநிலை தவறுகிறது என்றால், அதன் விளைவாக முதலில் நீங்கள் வேகம் குறைகிறீர்கள். வேகம் குறைவது என்பது உங்களது செயல்பாட்டைக் குறித்தது மட்டுமல்ல, உயிரின் செயல்முறையே அப்படித்தான் வெளிப்படுகிறது.
பூமியின் மீது நிகழ்ந்துகொண்டிருக்கும் அழுத்தமான சூழல் உங்களைத் தாக்கத்துக்கு உள்ளாக்காமல் இருப்பதற்காக, பாரம்பரியமாக, இந்தியாவில் இந்தக் காலகட்டம், இசை, நாட்டியம், ஒளி, களியாட்டம் மற்றும் வண்ணமயமாக இருக்கிறது. இது வியான பிராணனைத் தூண்டும் நேரமாகவும் இருக்கிறது, ஏனென்றால் உயிரின் செயல்முறை மந்தமடையும்பொழுது, அதிலிருந்து மீள்வதற்கும், புத்துணர்வுக்கும் வாய்ப்பிருக்கிறது.
வியான பிராணன், மனித உடலமைப்பைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்புடையது. வியான பிராண சக்தியானது, கோடிக்கணக்கான தனிப்பட்ட செல்களைப் பின்னிப்பிணைத்து ஒரு உயிரியாக உருவாக்குகிறது. நீங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உறுதியாக இருக்க வேண்டுமென்றால், வியான பிராணன் வலிமையாக இருப்பது முக்கியம்.
உடலின் செயல்முறையிலோ அல்லது மனதின் செயல்முறையிலோ நீங்கள் தேங்கிப்போகாமல் இருந்துவிட்டால், உங்கள் உயிரின் இயல்பை அறிந்துகொள்வது ஒரு இயற்கையான விளைவாக இருக்கும். வியான பிராணன், ஒருவர் ஆன்மீகப் பாதையில் வளர்ச்சியடைவதற்கும், கிரியா யோகத்தின் மிக முக்கியமான அம்சமாகவும் இருக்கிறது. கிரியா யோகத்தில், வியான பிராணனைத் தூண்டுவதற்கான ஆற்றல் வாய்ந்த வழிகள் இருக்கின்றன.
மக்கள் என்னிடம், “சத்குரு, நீங்கள் எந்தப் பயிற்சியும் செய்வதில்லை, ஆனால் நீங்கள் எப்போதும் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது,” என்று கூறுகின்றனர். உங்களுடைய வியான பிராணன் நன்றாக இருந்தால், உங்கள் உடலின் புறத்தோலின் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். தோல் ஒரு குறிப்பிட்ட விதமாக இருந்தால், தோலின் துளைகள் மூலம் நடக்கும் சுவாசம் சிறப்பாக இருக்கிறது. அது நீர் மற்றும் காற்றை எளிதாக உள்ளிழுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த உடலும் சக்தி நிரம்பியிருப்பதாக உணர்கிறது. நீங்கள் வியான பிராணனைத் தூண்டும்பொழுது, உடலின் பொதுவான ஒத்திசைவு மிகவும் நன்றாக இருக்கும். வியான பிராணன் வெளியேறத் தொடங்கினால், உடல் சீர்கெடுவது இயற்கையாகவே நிகழும்.
உங்களுக்கு வேறு எந்த சாதனாவும் இல்லையென்றால், பூமியுடன் அல்லது மண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்வது, வியான பிராணனைத் தூண்டுவதற்கு எளிமையான ஒரு வழி, ஏனென்றால் மண்ணின் வளமும், உடலின் வளமும் தொடர்புடையது. மேலும், வெறும்கால்களுடனும், வெறும்கைகளுடனும் தோட்டவேலை செய்யலாம் அல்லது தோட்டத்தில் காலணிகள் இல்லாமல் நடக்கலாம். அது சாத்தியமில்லை என்றால், குறைந்தபட்சம் உங்களுக்கு ஒரு மண் குளியல் கொடுக்கலாம். சிறிது மண்ணைக் குழைத்து, உங்கள் உடலெங்கும் பூசி, அது காயும் வரை காத்திருக்கவும். முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்கள் கழித்து அதைக் கழுவிவிடுங்கள். இதைச் சில மாதங்களுக்கு ஒருமுறை செய்யலாம்.
மண்ணும், நீங்களும் தொடர்பில் இல்லையென்றால், அப்போது உங்கள் வியானா மிகவும் பலவீனமடைகிறது. உங்கள் வியானா வலிமையாக இல்லையென்றால், உங்களால் சக்திவாய்ந்த கிரியாக்களை செய்யமுடியாது. சக்திவாய்ந்த கிரியாக்களைச் செய்வது நன்றாக வாழ்வதற்கு மட்டுமல்ல, உங்கள் சக்தியை உபயோகித்து செயல்படும் திறனும் கிடைக்கப்பெறும். இந்த அறையை சக்தியால் வெடித்தெழச் செய்யவேண்டும் என்றால், அப்போது உங்கள் சக்திகளை வெளியேற்றி, ஆனாலும் உங்களையே கொன்றுவிடாதவாறு, ஒருவிதமான சூழ்நிலைக்கேற்ப செயல்படும் தன்மை உங்களுக்குத் தேவை. இதற்கு, உங்களுக்கு மிக வலிமையான வியான பிராணன் தேவை. இயல்பாக ஒளிவீசக்கூடிய சக்திகளை, ஒரு உறுதியான தளம் இல்லாமல் தூண்டுவது நல்லதல்ல.
வியானா, யோகாசனாவின் மிக இன்றியமையாத ஒரு பகுதியாக இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, மிகச் சிலரே அதிக சாதனாவுக்கு தகுதியாக இருக்கின்றனர். சாதனாவும், மண்ணுடன் தொடர்பும் இணைந்து நிகழத் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்வதற்கு நீங்கள் விரும்பினால், உடலமைப்பை உறுதியாக்குவது முக்கியம். சமநிலையுடன் இல்லையென்றால், நீங்கள் வேகமாக செல்லத் துணியமாட்டீர்கள். வேகம் என்பது காலம் மற்றும் இடத்தை நெருக்குவதற்கான ஒரு வழி. இது முக்கியமானது, ஏனெனில் வாழ்வு என்பது ஒரு குறிப்பிட்ட அளவு காலம் என்பதுடன் அது உங்களுக்கு சிறிதளவு இடம் மட்டுமே கொடுக்கிறது. நீங்கள் காலம் மற்றும் இடத்தை நெருக்காவிட்டால், குறைந்தபட்ச உயிராக நீங்கள் முடிந்துபோகக்கூடும்.
உங்களுக்கு கணிசமான வியான பிராணன் இருந்தால், உடலுக்குள் நீங்கள் தளர்வாகிறீர்கள். எது உடல் மற்றும் எது உடல் அல்லாதது, நீங்கள் என்பது என்ன மற்றும் நீங்கள் அல்லாதது என்ன என்று பிரித்து உணர்தல் இருந்துவிட்டால், அப்போது விரும்பும்பொழுது அல்லது அதற்கான நேரம் வரும்போது, உடலை விடுவது அதிக முயற்சியின்றி எளிதாகிவிடும். நிச்சயமாக நன்றாக வாழமுடியும், மற்றும் நன்றாக இறப்பதும் சாத்தியமாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, நன்றாக வாழும் பலரும், நன்றாக இறப்பதில்லை.
பரமஹம்ச யோகானந்தர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவுக்கு சென்று, ஒரு எழுச்சியை உருவாக்கிய முதல் யோகிகளுள் ஒருவராக இருந்தார். சுவாமி விவேகானந்தர் நிலத்தை உழுதார், ஆனால் யோகாவின் விதைகளை ஊன்றியவர் யோகானந்தர் என்றே நான் கூறுவேன். லாஸ் ஏஞ்சல்ஸ்-ல், ஒரு கூட்டத்தில் 1952 மார்ச் 7 ஆம் தேதி, அவர் தனது உடலைவிட்டு நீங்கினார். அவர் தனது மக்களிடம், அவரது உடலை 21 நாட்களுக்கு வைத்திருக்க முடியும் என்றும், அது நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். மூன்று வாரங்களுக்கு, எந்த காப்புகள் அல்லது குளிரூட்டுதலும் இல்லாமல், அவரது உடல் சீர்கெடும் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்ததாக, பிணவறை இயக்குனர் கூறும் ஒரு சான்றிதழ் இன்றைக்கும் இருக்கிறது. அவரது உடல் மாற்றம் அடையாமல் இருந்தது. இது ஏனென்றால், போதிய வியான பிராணன் இருந்தால், உடலில் அழுகும் தன்மை இருப்பதில்லை.
அதன் பொருள் என்னவென்றால், தற்பொழுது உங்களுக்கு பதினெட்டு வயதாகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது நீங்கள் உங்கள் வியான பிராணனை மேம்படுத்துகிறீர்கள் என்றால், அணுக்களின் அளவில் உங்கள் வயது பதினெட்டிலேயே நிலைத்து நின்றுவிடக்கூடும். நீங்கள் வேறு விதங்களில் மூப்படைவீர்கள், ஆனால் அடிப்படையான சக்திநிலையில் மற்றும் உங்களுக்குள்ளேயே உடல் எப்படி இயங்குகிறது, உணர்கிறது என்பது அதே பதினெட்டு வயதில் நிலைத்துவிடும். இதனால் நீங்கள் அழிவற்றவராக இருப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள் என்பது அல்ல. அது என்னவென்றால், வாழ்வை ஆழமாக உணர்ந்து, செயல்பாட்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பயனுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிறீர்கள்.
உங்களது வியான பிராணன் நன்றாக இல்லையென்றால், உங்கள் வாழ்வின் உணர்தல் ஆழமாக இருக்காது, ஏனென்றால் உங்கள் உடல் ஒரு தடையாக இருந்துவிடும். உணவு, பாலுறவு மற்றும் சிறிய சந்தோஷங்கள் மட்டுமே மக்களை ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் அவர்களை பிஸியாக வைத்துள்ளது. மிக ஆழமான ஏதோ ஒன்றைச் செய்வதைப் போல உணரக்கூடிய அளவுக்கு, தங்கள் பிழைப்பையே அவர்கள் சிக்கலாக்கிக் கொள்கின்றனர். உங்கள் வாழ்வின் மீது குறைந்த அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தும் உடலை உருவாக்குவது என்றால், உடல் ஒரு தடையாக இல்லை என்பது பொருள். உடல் ஒரு தடையாக இல்லை என்றால், நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருப்பது மட்டுமல்ல, ஆன்மீகத்தின் நெடுஞ்சாலைப் பயணத்தில் இருக்கிறீர்கள்.
இந்த உயிர் அதனை வழிநடத்திக்கொள்வதற்கு, புத்திசாலித்தனத்தின் இரண்டு பரிமாணங்கள் உள்ளன. புத்திசாலித்தனத்தின் ஒரு பரிமாணம் முழுக்கமுழுக்க ஞாபகத்தைச் சார்ந்திருக்கிறது. வெவ்வேறு விதமான ஞாபகம் இருக்கிறது: பரிணாமவியல் ஞாபகம், மரபியல் ஞாபகம், கர்மவியல் ஞாபகம் மற்றும் மற்ற பலவும் உள்ளன. நீங்கள் சுமந்திருக்கும் ஞாபகத்தின் காரணமாகத்தான், உங்கள் உடல் மற்றும் மனதில் அனைத்தும் நிகழ்கின்றன. நாம் ஞாபக அட்டையை உருவிவிட்டால், இந்த ஒட்டுமொத்த உடல்ரீதியான, மனரீதியான செயல்முறைகளும் உடைந்துவிடும்.
ஆனால், ஞாபகத்தைச் சார்ந்திராத புத்திசாலித்தனத்தின் மற்றொரு பரிமாணம் இருக்கிறது. அதுதான் உங்களுக்குள் இருக்கும் உயிரின் செயல்முறையைத் தூண்டுவதாக இருக்கிறது. ஞாபகத்தில் வேறூன்றி இயங்கும் புத்திசாலித்தனத்தின் போக்கில் மட்டும் நீங்கள் சென்றால், நீங்கள் மிகவும் எல்லைக்குட்பட்டவராக இருப்பீர்கள். ஆனால் வழக்கமாக, உலகெங்கும் இருக்கும் கல்வி முறையில், நிறைய விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருப்பதுதான் புத்திசாலித்தனம் என்று வரையறுக்கப்படுகிறது. பிழைத்திருத்தல் மற்றும் ஞாபகப்பதிவுக்கு என்றே நியமிக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனத்தால், உங்கள் புத்திசாலித்தனத்தை விரிவடையச் செய்வதற்கான பேராவல் அல்லது ஏக்கம் முடக்கப்பட்டுள்ளது.
உங்கள் பௌதிக உடல் இப்படி இருப்பதற்கும், ஒரு தனிமனிதராக நீங்கள் இருக்கும் விதத்துக்கும், நீங்கள் சுமந்திருக்கும் ஞாபகம்தான் காரணமாக இருக்கிறது. உங்களது ஞாபகம் உங்களை எவ்வளவு தூரம் ஆட்சி செய்வதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். இந்த விருப்பத்தைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு வியான பிராணன் தேவை. அதை அணுகுவதற்கு, சக்தி சலன கிரியா ஒரு உயர்ந்த வழியாக இருக்கிறது. சக்தி சலன கிரியா பயிற்சி செய்பவர்களுக்கு, வியான பிராணனுடன் உடலமைப்பை ஸ்திரப்படுத்துவதற்கு, நாக கிரியா மிகவும் முக்கியமாக இருக்கிறது.