சத்குரு எக்ஸ்க்ளூசிவ்

ஷிவா: ஒரு எளிமையான ஒலி உங்களது உச்சபட்ச இயல்புக்கு எப்படி உங்களை அழைத்துச் செல்லமுடியும்

தேவி பார்வதி ஒரே ஒரு முறை “ஷிவா” என்று உச்சரித்து ஞானமடைந்தாள். பார்வதிக்கு சூத்திரங்களின் இரகசியத்தை சிவன் வெளிப்படுத்தியதைப்போல், நமது எல்லைகளை உடைத்தெறிந்து, உண்மையான தேடுதல் உடையவர்களாக பரிணமிக்கும் செயல்முறைக்குள் நம்மை சத்குரு
வழிநடத்திச் செல்கிறார்.

சத்குரு: சிவன், மிகவும் சூட்சுமமான சூத்திரங்களை பார்வதிக்கு வழங்கினார். அவர் கற்றுத்தந்து கொண்டிருக்கும்போதே, பார்வதி தனக்குள் கருத்துகளை உருவாக்கத் தொடங்கினாள். ஆகவே சிவன் அவளிடம், “இந்த கருத்துகளுடன் இருந்தால், நீ எதையும் கிரகிக்கமுடியாது. நான் கூறுவதில் புரிந்துகொள்வதற்கானது ஒன்றுமில்லை, தொடர்புபடுத்துவதற்கும், உணர்தலுக்குமான விஷயங்கள் மட்டுமே இருக்கின்றன. அப்போது பார்வதி சிவனைக் கேட்டாள், “நான் எவ்வாறு எனது முடிவுகள், கருத்துகள் மற்றும் தடையை உடைப்பது?” அவர் பதிலளித்தார், “உன் உடலின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் என் பெயரை உச்சரித்தால் போதும் – எல்லாத் தடைகளும் உடைந்துபோகும்.”

உள்நிலையின் எல்லாத் தடைகளையும் கரைப்பதற்கு - “ஷிவா”

உங்கள் மீது இருக்கும் கடந்தகால ஞாபகத்தின் கர்மப் பிடிப்பை உடைத்து, அதிகமான கிரகிப்புத் திறனுடைய ஒரு மனிதராவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. உடலின் ஒவ்வொரு அணு மூலமாகவும் ஷி-வா என்ற சொல்லை, ஒலியை, புனிதமான பதத்தை உச்சரிப்பதற்கு முயற்சியுங்கள். மூன்று வித்தியாசமான வழிகளில் இதனை உச்சரிக்கமுடியும். ஒன்று நாகரீகமான வழி, மற்றொன்று இடைநிலை தீவிரமான வழி, மூன்றாவது முழுமையான தீவிரத்துடன் உச்சரிப்பது. நீங்கள் நாகரீகமான முறையில் உச்சரித்தால், உங்களுக்கே உரிய வழியில் நீங்கள் இருக்கிறீர்கள். இடைநிலை வழியில் உச்சரித்தால், நான் உங்கள் கரத்தைப் பிடித்துக்கொள்வேன். அதீத தீவிரமான வழியில் உச்சரித்தால், அங்கே நீங்கள் இருக்கமாட்டீர்கள் – நான்தான் இருப்பேன். எந்த வழி என்று தேர்ந்தெடுப்பது உங்களைப் பொறுத்தது.

சாதனாவின் சூட்சுமமான பரிமாணங்களுக்குள் நாம் செல்வதற்கு முன்பு, உங்கள் சக்திகள் தங்குதடையின்றி பாயவேண்டியது முக்கியமானது. உங்களது பௌதிக உடலுடன் நீங்கள் அதிகமாக அடையாளம் கொண்டிருந்தால், வேறெதுவும் நகராது. இது ஒரு முழுமையான வாய்ப்பு. நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.


தேவி ஒரு உக்கிரமான வடிவெடுத்து, சிவனைக் கொல்கிறாள்

சத்குரு: தேவி பார்வதி, உணர்ச்சியின் ஒரு வெளிப்பாட்டிலிருந்து மற்றொன்றுக்கு இடம் பெயர்ந்தாள். உக்கிரமான ரூபம் எடுத்தபோது, பார்வதி கட்டுக்கடங்காதவளாகி, தொடர்ந்து அழித்தல் செயலில் ஈடுபட்டு அதன் விளிம்புக்கே சென்றாள். இந்த அழிவை தடுத்து நிறுத்துவதற்காக, பார்வதியின் பாதையில் குறுக்கிட்டு சிவன் தன்னைத்தானே மண்ணில் கிடத்திக்கொண்டார். அவளது உக்கிரவேகத்தில், பார்வதி அவரையும் கொன்றாள். சிவனைக் கொன்றபொழுதுதான், தான் செய்தது என்ன என்பதை அவள் உணர்ந்தாள், அதனால் தனது சக்தியைப் பயன்படுத்தி, மீண்டும் ஒருமுறை அவருக்கு உயிரூட்டினாள்.

சூத்திரத்தின் ஒரு பகுதியாக, சிவன் ஏற்கனவே, “இந்த எல்லா உணர்ச்சிகளும், நீ அல்ல. அவைகள் சக்தியின் ஒரு சிறு விளையாட்டு மட்டுமே,” என்று தேவியிடம் கூறியிருந்தார். ஆகவே, தேவி சிவனிடம், “இந்த உணர்ச்சிகள் எல்லாம் நான் அல்ல என்று கூறுகிறீர்கள், ஆனால் என் அனுபவத்தில், இந்த உணர்ச்சிகள் என் இயல்பாக இருப்பதுபோலவே தோன்றுகிறது. நீங்களே பார்த்ததுபோல், என்னை உக்கிரம் ஆட்கொண்டபொழுது, நான் உங்களையும் கொன்றுவிட்டேன்,” என்று கூறினாள். சிவன், “இந்த எல்லா விஷயங்களையும் கடந்தவள் நீ. தற்பொழுது நீ கடந்து வந்தது வெறுமே உன் சக்தியின் ஒரு விளையாட்டுதான். இது நீ அல்ல,” என்றார்.

தேவி கேட்டாள், “இது நான் அல்ல என்பதை நான் எவ்வாறு உணர்ந்துகொள்வது?” அப்போது சிவன் அவளுக்கு ஒரு எளிமையான செயல்முறையைக் கொடுத்தார். “எனது பெயரை ஆரோகண ஸ்தாயியில் (அடுத்தடுத்து ஏறுமுகமாக) உச்சரித்துப் பார். சற்று முன்னர் நீ அனுபவித்த உணர்ச்சி, நீ அல்ல என்பதை அறிந்துகொள்வாய். இந்த உணர்ச்சிகள் அனைத்துமே சக்தியின் ஒரு விளையாட்டு மட்டுமே,” என்றார்.

ஒரு உண்மையான சாதகர், தனக்குத் தெரியாது என்பதை அறிந்திருக்கிறார்!

சத்குரு: நீங்கள்கூட, “ஷிவா” என்ற ஒலியை இந்த விதமாக உச்சரிக்கலாம். உங்கள் கண்களை மூடிக்கொண்டு, நூறு சதவிகிதமும் உங்களை ஈடுபடுத்தி, உங்களால் முடிந்த அளவுக்கு காற்றை அதிகபட்சமாக உள்ளிழுத்துக்கொண்டு, பிறகு ஏறுமுகமான உச்ச சுருதியில் ஷிவா என்ற ஒலியை உச்சரியுங்கள்.

கேள்வியாளர்: ஷிவா என்று நான் உச்சரிக்கும்பொழுது, என் மனம் சிதறுகிறது. உச்சரிப்பின்போது என்ன நிகழ்கிறது மற்றும் என்ன நிகழவேண்டும் என்றெல்லாம் எனக்கு பல எண்ணங்கள் எழுகின்றன. என்ன செய்வது?

சத்குரு: ஒரு உண்மையான சாதகருக்கு, எதைப் பற்றியும், எந்தக் குறிப்பிட்ட மனோபாவமோ, எதிர்பார்ப்போ, கருத்தோ, நம்பிக்கையோ அல்லது தத்துவமோ இருப்பதில்லை. இந்த உலகில், தேடுதலில் இருப்பவர்கள் என்று அழைக்கப்படும் பெரும்பாலானவர்களும், கடவுளை, ஞானமடைதலை அல்லது சொர்க்கத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்; இந்த விஷயங்களைப் பற்றிய எல்லாவற்றையும் தாங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதாக அவர்கள் யூகித்துக்கொள்கின்றனர். இவர்கள் உண்மையான தேடுதலில் இருப்பவர்கள் அல்ல. தேடலில் இருக்கும் ஒருவர், தனக்குத் தெரியாது என்பதை அறிந்திருக்கிறார். அப்போதுதான் நீங்கள் ஒரு உண்மையான சாதகர்.

இந்த உலகில் எப்படி பிழைத்திருப்பது, பணம் சம்பாதிப்பது மற்றும் உங்களது நல்வாழ்வுக்காக மக்களையும், சூழ்நிலைகளையும் எப்படி திசை திருப்புவது என்று நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், வாழ்வு குறித்து ஒரு இம்மியளவும் உங்களுக்கு தெரியாது. நீங்கள் இந்த முடிவுக்கு வந்து, எதைப் பற்றியும் குறிப்பான மனோபாவம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை அல்லது முடிவு இல்லாமல் இருந்தால், அப்போது ஒரு எளிமையான வழிமுறையே போதுமானது.

உங்கள் எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஏன் எந்த முக்கியத்துவமும் இல்லை?

பார்வதி, 'ஷிவா' என்று ஒரே ஒரு முறை மட்டும் ஏறுமுக சுருதியில் உச்சரித்ததிலேயே தனது உச்சபட்ச இயல்பை உணர்ந்தாள். அவள் “ஷிவா” என்று திரும்பத் திரும்ப உச்சரிக்கவில்லை. அது ஏன் அவளுக்கு அப்படி செயல்பட்டது? நீங்கள் பெரிதாகக் கூக்குரலிட்டும், இன்னமும் அது ஏன் நிகழவில்லை? அது ஏனென்றால், வித்தியாசம் கிரகித்தலின் அளவில் இருக்கிறது. கிரகித்தல் என்றால், உங்களுடைய கருத்துகள், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களால் உங்களை குழப்பிக்கொள்ளாமல் இருப்பது. உண்மையிலேயே உங்களுக்கு தெரியாது என்ற புரிதலுக்கு நீங்கள் வரும்பொழுது, அதன்பிறகு வரும் எண்ணங்கள் என்னவாக இருப்பினும், அவைகளுக்கு முக்கியத்துவம் இல்லை.

உங்களுக்கு தெரியும் என்று நீங்கள் நினைக்கும்பொழுது, உங்கள் எண்ணங்களும், உணர்ச்சிகளும் மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. உங்களுக்கு தெரியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும்பொழுது, உங்களது எண்ணங்கள் கூறுவது எதுவாயிருந்தாலும், அதை நீங்கள் இயல்பாகவே புறக்கணிக்கிறீர்கள். ஒரு எளிமையான வழிமுறையை நீங்கள் இதற்குப் பயன்படுத்தலாம்: உங்களுடைய எல்லா மகத்தான கருத்துகள், உங்களது எல்லா மகத்தான உணர்ச்சிகள், உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் சற்று உற்று நோக்குங்கள், அவை அனைத்தும் மிகமிக முட்டாள்தனமானவை என்று பாருங்கள். அது அறிவும், புத்திசாலித்தனமும் பொருந்தியது என்று நீங்கள் நினைத்தால், அதை உங்களால் கைவிடமுடியாது. நீங்கள் படுமுட்டாள்தனமானவர் என்பதை நீங்கள் உணரும்பொழுதுதான், உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் அனைத்தையும் உங்களால் ஒதுக்கிவைக்க முடியும். இப்போது வெடித்தெழுதல் நிகழும்.