ஈஷா யோக மையத்தின் ஸ்பந்தா ஹால் சுவர்களை அலங்கரிக்கும் நேர்த்தியான சுவர் சித்திரங்கள், 140 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டதாக, உலகிலேயே மிகப் பெரிய வண்ண ஓவியம் என்ற பெருமைக்குரியதாக இருக்கிறது. கேரளாவின் கோவில் நகரமாகிய குருவாயூரில் தோன்றியது, இந்த பாணியிலான பாரம்பரிய ஓவியக்கலை வடிவம். சித்திரங்களின் வளமான, பல வர்ணக் கலவைகளும் காய்கனி வண்ணங்கள் மற்றும் மண்ணின் சாறுகளிலிருந்து மட்டுமே பெறப்பட்டன.
சத்குரு: ஸ்பந்தா ஹாலின் பக்கவாட்டுச் சுவர் பதஞ்சலி மகரிஷியை சித்தரிக்கிறது. இந்த சுவர் சித்திரங்களை வரையும் கலைஞர்கள் ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், அவர்களது பாரம்பரிய பாணியைத் தவிர்த்து வேறு எதையும் எடுத்தாளும் வழக்கமில்லாதவர்கள். பதஞ்சலி எப்படி இருக்கவேண்டும் என்பதை நான் கற்பனையில் பார்த்து, என் மனதில் இருந்ததை அவர்களிடம் கூறினேன். அவர்கள் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
நம் கோவில்களிலும், யோகா மற்றும் தந்த்ராவிலும், சக்திகளின் மேல்நோக்கிய நகர்தலுக்கு சர்ப்பங்கள் அடிப்படையான குறியீடாக இருக்கின்றன. எவ்வளவு தூரத்துக்கு நீங்கள் சக்திகளை உயர்த்துகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கை நிகழ்கிறது. சிவன் அவரது தலைக்கு மேல் சர்ப்பத்தை வைத்திருக்கிறார். இவரது சக்திகள், அதன் உச்சத்தை எட்டியிருப்பதை அது குறிக்கிறது.
பதஞ்சலி அவரைச் சுற்றிலுமிருந்த மக்களுக்கு தெய்வீகத்தைப் பொழிபவராக இருக்குமளவுக்கு பிரம்மாண்டமான ஒரு மனிதராக இருந்தார். அவரை கௌரவிப்பதற்காக, சர்ப்பங்கள் மேலேறிச் செல்வதற்கு பதில், அவரது சிரசிலிருந்து கீழிறங்கி வருவதாக இருக்குமாறு முடிவு செய்தேன். அதனால் அவரது உருவம் மிகநேர்த்தியாக வெளிப்பட்டிருப்பதாக நான் எண்ணுகிறேன். இந்த சுவர் சித்திரங்கள் இயற்கை வண்ணங்களால் வரையப்பட்டுள்ளன. இதனை மக்கள் நன்றாக கவனித்துக்கொண்டால், இதே நிலையில் 5000 ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். இதில் எந்த இரசாயன வண்ணமும் பயன்படுத்தப்படவில்லை.
இங்கிருந்து, சிவனின் வாழ்க்கையை இந்த சுவர் சித்தரிக்கிறது. யோகக் கலாச்சாரத்தில் சிவனை நாம் ஒரு கடவுளாக பார்க்காமல், ஆதியோகி அல்லது முதலாவது யோகி என்றும், ஆதி குரு அல்லது முதலாவது குரு என்றும் பார்க்கிறோம். அவரே முதன்முதலாக யோகாவைக் கற்பித்தவர்.
இங்கே, ஒரு மயான பூமியில் சிவன் துயரத்திலும் தொலைந்துபோனவராகவும் அமர்ந்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
நீங்கள் மரணத்தை எதிர்கொள்ளும்போதுதான் உண்மையான ஆன்மீகம் துவங்குகிறது. கடவுளைப் பற்றி பேசுவது ஆன்மீகம் அல்ல, ஏனென்றால் பொதுவாக, நீங்கள் நல்லபடியாக வாழ்வதற்குத்தான் கடவுள் பற்றி பேசுகிறீர்கள். அது வெறுமனே பிழைப்புக்கானது. உங்களது மரணத்தைப் பற்றி நீங்கள் முழுமையான விழிப்புணர்வு அடையும்பொழுதுதான், உங்களது இருத்தல் என்பது என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள்.
மரணத்தைப் பார்த்துக்கொண்டே சிவன் நெடுங்காலம் மயான பூமியில் கழித்தார். தீவிரமாக ஆன்மீக செயல்முறையைத் தேடும் ஏறக்குறைய ஒவ்வொருவருக்கும் இது வழக்கமாக எந்த விதத்திலாவது நிகழ்கிறது. என் சிறுவயது நாட்களில், மரணித்த உடல்களை வெறுமனே பார்த்துக்கொண்டு மயான பூமியில் நிறைய நேரம் கழித்தேன். எனக்கு ஆன்மீகம் குறித்து எதுவும் தெரியாது; ஆனால் என்னை அது அங்கே ஈர்த்ததோடு, அங்கே என்ன நிகழ்கிறது என்று அறிந்துகொள்ள நான் விரும்பினேன்.
“உயிருடன் வாழ்ந்திருந்து திடீரென்று இறந்துவிட்ட இந்த மக்கள், எங்கே சென்றுவிட்டனர்? மரணத்துக்குப் பிறகு என்ன நிகழ்கிறது?” அந்த மர்மம் குறித்த ஆழமான யோசனைதான் உங்களது ஆன்மீகப் பயணத்தைத் துவக்கி வைக்கிறது. சுவர் சித்திரத்தின் முதல் ஓவியத்தில் சிவன் அந்த நிலையில் இருக்கிறார். அவர் அலங்கோலமாகவும், தொலைந்து போனவராகவும் காணப்படுகிறார். அவர் அப்படித்தான் இருக்கிறார்.
பிறகு, சிவன் தனது பாதையைக் கண்டுபிடித்து, யோகாவைத் துவங்குகிறார். யோகாவின் மிக அடிப்படையான வடிவமாகிய பூதசுத்தி என்று அழைக்கப்படுவது என்னவென்றால், பஞ்சபூதங்கள் அல்லது இயற்கையின் ஐந்து மூலக்கூறுகளிலிருந்து விடுபடுவது என்பது பொருள். ஐந்து மூலக்கூறுகளும் உங்களை உடல்தன்மைக்குள் வரையறைப்படுத்துகிறது. நீங்கள் அவற்றிலிருந்து விடுபடும்போது, உடல்தன்மையில் இருந்து நீங்கள் விடுபட்டு, படைப்பின் ஆன்மீகப் பரிமாணத்துக்கு வெளிப்படுத்தப்படுகிறீர்கள்.
சிவன் தனது எல்லா சாதனாவையும் செய்தபிறகு, பின்னிப்பிணையும் இரண்டு சர்ப்பங்கள் சந்திக்கும் சமாதி நிலையை, அதாவது அவரது சக்திகள் அவற்றின் உச்சத்தைத் தொடுகின்ற நிலையை அடைந்தார். அவர் வாழ்வின் இருமைகளைக் கடந்திருக்கிறார். அவர் வாழ்வின் செயல்முறையிலிருந்து விடுபட்டவராக இருக்கிறார், ஆனால் இன்னமும் வாழ்வுக்குள் இருக்கிறார். எல்லா விண்ணுலக உயிர்களும் கொண்டாடிக் களிக்கும் அளவுக்கு அது ஒரு அரிய நிகழ்வாக இருக்கிறது.
அவரது ஞானமடைதலுக்குப் பிறகு, உடலை உதறி, கரைந்துவிடுவது அவர் செய்திருக்கக்கூடிய மிக எளிமையான விஷயமாக இருந்திருக்கும். தன்னையுணர்ந்த தொண்ணூறு சதவீத உயிர்களுக்கு, அவர்கள் உணர்ந்த கணமும், உடலை உதறும் கணமும் ஒன்றாகவே இருக்கிறது. இங்கே, அவர் தன் உடலில் தங்கியிருந்து உலகுக்கு ஏதாவது செய்வதா, இல்லை உடலை உதறி பிரபஞ்ச இருப்பின் ஒரு பகுதியாகிவிடுவதா என்ற ஒரு சங்கடத்தில் இருக்கிறார்.
அவரது வாழ்வின் இந்தப் பகுதிக்கும், இதற்கு முந்தைய பகுதிக்கும் இடையில் இருக்கும் ஒட்டுமொத்த கதையையும் ஓவியத்தில் சித்தரிக்க முடியாத நிலையில், நாம் அதனைக் கடந்து மேலே நகர்ந்து விட்டோம். சிவனை இங்கேயே தங்கவைத்து, உலகத்துக்கு யோகாவைக் கற்பிக்கும் எண்ணத்தில் கடவுளர்கள் எப்படி ஆலோசனை செய்தனர் என்பதை விவரிக்கும் ஒரு கதை அது. சதிக்கு அவரை மணம் முடித்து வைப்பதற்காக அவர்கள் ஒரு விரிவான திட்டம் வகுத்தனர். அவர் சதியை மனைவியாக ஏற்றுக்கொண்டு, அந்த உறவில் ஈடுபாடு கொண்டார். இந்த ஓவியத்தில், அவர் சதியுடன் அமர்ந்திருக்கிறார்.
சில விதிமுறைகளை மீறிய காரணங்களுக்காக, சதி ஒரு துயரமான மரணத்தைச் சந்தித்தாள். அவள் இறந்தபோது, சிவன் துக்கம் மேலிட தன் நிலை மறந்தார். அவர் சதியின் உடலைச் சுமந்துகொண்டு, துணைக்கண்டம் முழுக்க நடந்து அலைந்தார். அவளது உடல் அழுகத் தொடங்கி, அதன் வெவ்வேறு பாகங்களும் வெவ்வேறு இடங்களில் விழுந்தன. அவை ஒவ்வொன்றும் சக்தி ஸ்தலங்களாக அல்லது உடலின் ஒவ்வொரு பாகத்துக்கான கோவில்களாக அமைந்தன. அதன் பிறகு சிவன் மீண்டும் துறவு மேற்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கண்களைத் திறக்காமலேயே இருந்தார்.
கடவுளர்கள் மீண்டும் ஆலோசனை தீட்டி திட்டமிட்டதில், சதியை பார்வதியாக மறு அவதாரம் எடுக்கச் செய்து, இருவரையும் மீண்டும் இணைத்தனர். இந்த முறை, சிவன் சற்றே விலகியிருக்கும் கணவராக இருந்தார். அவர் அவ்வப்போது மட்டும் பார்வதியுடன் இருந்தார்; மற்ற நேரங்களில், அவர் ஒரு துறவியாக மலைகளுக்குள் தனித்திருந்தார். அவர் மீண்டும் ஈடுபாடு கொள்ள விரும்பவில்லை, ஆனால் ஏதோ ஒரு வழியில் உலகத்துக்கு உபயோகமாக அவளது இருப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார். இந்த இரண்டு அம்சங்களும் இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு ஓவியத்தில், அவர் பார்வதியுடன் இருக்கிறார், ஆனால் அவர்களுக்கிடையே ஒரு இடைவெளி இருக்கிறது. அடுத்த ஓவியத்தில், அவர் தனிமையில் புகைத்தபடி அவருடைய காளையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இறுதியாக, சிவன் தன் இயல்பான பரவசத்திலும், கரைதலிலும் நடனமாடும், தாண்டவமாடும், கரைதலின் நடனம், ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
உண்மையில், இதுதான் ஒவ்வொரு மனிதரின் பயணமாகவும் இருக்கிறது. ஆனால் முதன்முதலில் ஆன்மீகப் பாதையில் நடந்தவராக சிவன் இருப்பதால், இது அவரது வாழ்க்கையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.