தன்னைக் கடந்த ஒரு அர்ப்பணிப்பு
பளீரென்று, ஆனால் மென்மையாக, சுள்ளென்று அடித்த மதிய நேரத்து சூரிய வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டிருந்த சாயுஜாவும், ஸ்ரீமல்லியும், அப்போதுதான் வேகம் எடுத்திருந்த ஒரு பிரம்மாண்ட அலை குறித்து மெல்லிய குரலில் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்பது, பத்து வயதாக இருந்தபோது ஈஷா சம்ஸ்கிருதியில் இணைந்தது முதல், இந்திய சாஸ்திரீய நடன வடிவங்களுள் மிகவும் சிக்கலான பரத நாட்டியக் கலையை, கற்றுத் தேர்ந்திருந்தனர். இப்பொழுது, புராஜெக்ட் சம்ஸ்கிருதி மூலம், அதனை அவர்கள் உலகத்துக்கு அர்ப்பணித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இத்துணை அர்ப்பணிப்பும், திறமையும் கொண்ட நடனமணிகள் இருவரில், எவரும், கலைகளைக் கற்பதில் மிகுந்த ஆர்வமில்லாதவர்களாகவே ஆரம்பத்தில் இருந்தனர். “பலரும் நடனத்தைத் தேர்ந்தெடுத்தனர், அதனால் நானும் இணைந்துகொண்டேன்,” என்று ஸ்ரீமல்லி ஒரு சிரிப்புடன் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் அவர்கள் ஏறக்குறைய எட்டு வருடங்கள் நடனம் மற்றும் இசையில் கூர்மையாக கவனம் செலுத்தியதால், அவர்களது உணர்தல் வளர்ந்து, மாற்றமடைந்தது. ஸ்ரீமல்லி தொடர்ந்து, “ஆரம்பத்தில், அது எளிதாக இல்லை. அதற்கு அதிகமான வலிமையும், பலமும் தேவைப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு, நடனம் என்ற கலையைக் கடந்தும் அதிகமான ஏதோ ஒன்று அதில் உள்ளீடாக இருப்பதை உணர்ந்தேன். அது இல்லாத நிலையில் என்னால் எட்ட முடியாத ஏதோ ஒரு நிலையை உணரமுடிந்தது என்பதுடன், அது ஒருவிதமான ஆனந்தத்தையும் அளிக்கிறது. அதன் மிக சவாலான பகுதி என்னவென்றால், ஒவ்வொன்றையும் எப்பொழுதும் புதிதுபோல் பார்க்கவேண்டும் – அப்போதுதான், சிறந்ததைக் கொடுக்க முடிகிறது,” என்று கூறுகிறார்.
சாயுஜா, தனது பரத நாட்டிய அனுபவம் பற்றி பேசுகையில், “முதலில், எனக்குக் காட்சிகளும், வண்ணங்களும்தான் முக்கியமாக இருந்தது. ஆனால் நான் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்பொழுதும், நடனமாடும்பொழுதும் உண்மையிலேயே ஏதோ ஒன்றிலிருந்து விடுபட்டதுபோல் உணர்கிறேன். அது எனக்கு வெளிப்பாடாக இருப்பதுடன், உண்மையாகவே அழகாகவும், ஊக்கமளிப்பதாகவும் உணர்கிறேன்,” என்கிறார். நடனத்தின் இந்த உயிர்ப்பு, ஆனந்தம் மற்றும் ஆழமான வாழ்வின் அனுபவத்தைத்தான், புராஜெக்ட் சம்ஸ்கிருதி என்ற ஒரு புதுமையான தளத்தின் மூலமாக உலகத்துடன் பகிர்ந்துகொள்ள அவர்கள் விழைகின்றனர்.