வங்கி ஒன்றில் கவனத்தைக் கொள்ளையிட்ட போது
சத்குரு: குறிப்பாக, 1983 இல் ஹைதராபாத்தில் நடந்த இந்த முதல் வகுப்பு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாத நிலையில் நகரில் கால் பதித்தேன். “அங்குள்ள ஒரு வங்கி மேலாளர் உங்களுக்கு உதவக்கூடும்” என்று ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். ஆகவே அவரை நான் சந்திக்கச் சென்றேன். அது வாரத்தின் வேலை நாளாக இருந்ததால், அவரை சந்திக்க நான் இரண்டு மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பிறகு அவரது அறைக்குள் சென்றேன். நான் யோகா வகுப்புக்கான அறிமுக உரையை வழங்க வந்திருப்பதாக அவரிடம் கூறினேன். “ஆஹா, அவர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். சற்று அமருங்கள்” என்று வரவேற்றார். “சரி” என்று கூறிவிட்டு, நான் அமர்ந்திருந்தேன்.
அப்படியே அவர் தன் வேலையில் மூழ்கிவிட்டார். பின்னர், ஒரு சிறிய இரண்டு நிமிட இடைவேளை கிடைத்தபொழுது, நான் என் இருக்கையிலிருந்து எழுந்தேன். அன்றைக்கு நான் டெனிம் பேண்ட் மற்றும் சாயம் வெளுத்த ஒரு சட்டை அணிந்திருந்தேன். மேற்கொண்டு அவரது எந்த அனுமதிக்கும் காத்திராமல், அந்த வங்கி மேலாளரின் அலுவலகத்தில், நான் எனது அறிமுக உரையைத் தொடங்கிவிட்டேன். அவர் அதிர்ச்சியடைந்தவராகக் காணப்பட்டார். நான் அப்படியே உரையை தொடர்ந்தேன். பதினைந்து நிமிடங்கள் அறிமுக உரை வழங்கினேன். அப்போது, யாரோ ஒருவர் கையில் கோப்புடன் உள்ளே வந்தார். அவரிடம் நான், “சற்றே காத்திருங்கள்” என்றேன். ஆகவே அந்த மனிதரும் அங்கேயே நின்றபடி அறிமுக உரையை கவனிக்கத் தொடங்கினார்.