ஈஷா யோக மையத்தில் ஆசிரமவாசிகள் மற்றும் தன்னார்வலர்களோடு நடந்த ஒரு சந்திப்பில் சத்குரு, நீங்கள் இந்தத் தலத்தை சிறந்த முறையில் உபயோகித்து, உங்களை அருளில் மூழ்குவித்துக் கொண்டு, உங்களின் உச்சபட்ச சாத்தியத்தில் எவ்வாறு மலர முடியும் என்பது குறித்து விளக்கினார். மேலும் அவர், பொதுவாக இந்தப் பாதையில் தடைக்கற்களாக விளங்கும் சிலவற்றை சுட்டிக்காட்டி, அவற்றை எவ்வாறு கையாள்வது என்றும் எடுத்துரைத்தார்.
சத்குரு: குரு என்றால், அது ஒரு மனிதர் குறித்தது அல்ல. உண்மையில், அவரின் ஆளுமையே அவரை நெருங்குவதற்கு உங்களுக்கு ஒரு தடையாக இருக்கும். நீங்கள் ஒருவரின் ஆளுமையைப் பார்த்தால், அதில் சிலவற்றை நீங்கள் விரும்பக்கூடும், மேலும் சில விஷயங்கள் உங்களுக்கு விருப்பமில்லாததாக இருக்கக்கூடும், சிலவற்றை நீங்கள் விரும்பக்கூடும், சிலவற்றை நீங்கள் வெறுக்கக்கூடும். இங்கே முக்கியமான அம்சம் என்னவென்றால், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாதனா மற்றும் அதற்கும் மேலாக, தனிமனிதர்கள் தங்கள் வரையறைகளைக் கடந்து மலர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சக்தி தலம். நீங்கள் உங்கள் சாதனாவை சரிவர செய்யாமல் இருந்தாலோ அல்லது உங்களைச் சூழ்ந்துள்ள அந்த வெளிக்கு உங்களையோ, உங்கள் செயல்பாடுகளையோ அர்ப்பணிக்காவிட்டாலோ நீங்கள் குழம்பி தவிப்படைவீர்கள்.
நீங்கள் இங்குள்ள சக்திகளின் அருளுக்கு திறந்த நிலையில் இருந்தால், பின்னர் உயிரின் அடிப்படையான செயல்முறை - பொருள் உடலால் நடக்கும் வாழ்க்கை, வயோதிகம் மற்றும் நோய் போன்ற உடல் சார்ந்த செயல்முறைகளும்கூட - பலவகைகளில் மீளுருவாக்கம் செய்யப்படும். நோய், வயோதிகம் மற்றும் மரணம் ஆகியவை வாழ்வின் அடுத்தடுத்த நிலைகள். எவராலும் அவற்றை முழுவதுமாக தவிர்க்க முடியாது. நீங்கள் மரணிப்பது என்பது உறுதியானது, மேலும் அது நல்லதும் கூட. யார் முழுமையாக வாழவில்லையோ, அவர்களுக்கு அது எல்லா நேரங்களிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் பயம், பதற்றம், பொறாமை மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் செத்துக்கொண்டே இருப்பார்கள். வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தால், நீங்கள் முழுமையாக வாழ்ந்திருக்கிறீர்கள் என்று பொருள்.
ஒவ்வொரு நாளும் இந்தத் தலத்தை சுவாசித்துக் கொண்டு, இதன் ஒரு அங்கமாக மாறுவதற்கு, அன்றாடம் உங்களையே நீங்கள் வேறு ஒரு சாத்தியமாக மலர அனுமதிப்பதற்கு தடைக்கல்லாக இருக்கக்கூடிய ஒரே விஷயம் யாதெனில், எல்லா நேரங்களிலும் உங்களை நீங்கள் மறைத்துக்கொள்ள முயற்சிப்பதுதான். நீங்கள் ஒருவிதமாக இருக்கிறீர்கள், ஆனால் மற்றொரு விதமாக உங்களை வெளிக்காட்ட விருப்பப்படும்போது, அதற்கு மிக அதிகப்படியான உயிர்சக்தி தேவைப்படுகிறது. நீங்கள் மெனக்கெடும் அளவுக்கு அதில் மதிப்பில்லை.
நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான ஒரு விஷயம் யாதெனில், நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு மரம், புல், மேகம், கல், சுவர், ஆண், பெண், குழந்தை மற்றும் உங்கள் கண்ணில் படும் ஒவ்வொரு உயிரினத்தையும் சத்குருவாக பார்ப்பது தான். அனைத்துமே நல்ல அதிர்வை வெளிப்படுத்துகின்றன. வெறுமனே அனைத்தையும் ஒரே விதமாக பாருங்கள். நீங்கள் ஒரு மரத்தைப் பார்த்தால், சத்குரு அங்கே நின்று கொண்டிருப்பதாக பாருங்கள். நீங்கள் ஒரு கல்லை பார்த்தால், சத்குரு அங்கே நின்று கொண்டிருப்பதாக பாருங்கள். அதன் பிறகு நீங்கள் அந்த சக்தியை உள்வாங்குவீர்கள். இல்லையெனில், எதுவும் உங்களை தொடமுடியாதவாறு நீங்கள் எல்லாவற்றுக்கும் எதிர்ப்போடு இருப்பீர்கள். நீங்கள் உங்களையே மறைத்துக்கொள்ள ஓய்வில்லாமல் முயன்று கொண்டிருக்கும்போது, அனைத்தையும் தவற விட்டுவிடுவீர்கள்.
ஒரு வயதான விவசாயியிடம் ஒரு வயதான கழுதை இருந்தது. ஒருநாள் அந்தக் கழுதை தண்ணீரின்றி வறண்டு கிடந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. முப்பது அடி ஆழத்தில் விழுந்த அந்தக் கழுதை வெளியே வர விரும்பி தீனமான குரலில் பரிதாபமாக கனைத்துக்கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு அங்கு சென்ற விவசாயி கிணற்றுக்குள் பார்த்தார். அந்த முட்டாள் கழுதை கிணற்றில் விழுந்து கிடந்தது, இப்போது அதை வெளியே எடுப்பதற்கு விவசாயிக்கு பணம் செலவாகும் போல் இருந்தது. "இந்தக் கழுதையை வெளியே கொண்டு வருவதில் என்ன லாபம்? எப்படி இருந்தாலும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அது இறந்துவிடும். இப்போது அது எந்த வேலையும் செய்வதுமில்லை. எனவே இதை வெளியே எடுப்பதில் எந்த உபயோகமும் இல்லை" என நினைத்தார். எனவே அவர் தன் அக்கம்பக்கத்தாரிடம், "நாம் இந்த கிணற்றை மூடிவிடலாம், ஏனெனில் இது வறண்டும் விட்டது" என்றார். அனைவரும் தங்கள் மண்வெட்டி மற்றும் மண் அள்ளும் கூடைகளை எடுத்து வந்து கிணற்றுக்குள் மண்ணை அள்ளிப்போட்டு நிரப்பத் தொடங்கினார்கள். பீதியடைந்த கழுதை வெளியே வரும் விருப்பத்தோடு இன்னும் பரிதாபமாக கதறியது. ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் கிணற்றை மூடுவதைத் தொடர்ந்தார்கள்.
சிறிது நேரம் கழித்து கழுதை கனைப்பதை திடீரென நிறுத்திவிட்டது. வித்தியாசமான, அதேசமயம் புத்திசாலித்தனமான ஒரு செயலை அது செய்யத் துவங்கியது. ஒவ்வொரு முறையும் ஒரு கூடை மண் அதன் முதுகின் மீது விழுந்ததும், தன்னை உதறி மண்ணை கீழே தள்ளிவிட்டு, அதன் மேலே ஏறி நின்று கொண்டது. இப்படியாக கழுதை கிணற்றை விட்டு வெளியே வந்தது. இப்போது அனைவரும் மிக ஆச்சரியத்தோடும், வியப்போடும் அந்த கழுதையை பார்த்தார்கள். வயதான அந்த விவசாயி திடீரென தன் கழுதையைப் பற்றி பெருமிதம் அடைந்தார், "பாருங்கள் என் கழுதை மிக புத்திசாலி!" என்றபடியே அவர் கழுதையை தடவிக்கொடுக்க எத்தனித்தார். சட்டென பின்னால் திரும்பிய கழுதை, அவர் முகத்தில் எட்டி உதைத்தது. இந்தக் கதை கூறும் நீதி யாதெனில்: ஒருபோதும் உங்கள் குணங்களை மறைக்க முயலாதீர்கள்; என்றாவது ஒருநாள் அது உங்களை உங்கள் முகத்திலேயே எட்டி உதைக்கும்.
உங்களின் உள்நோக்கிச் செல்லும் பயணத்தில் எவராலும் உடன் வர முடியாது, நீங்கள் வெளியே ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்பினால், யாரோ ஒருவர் உங்களோடு நடந்து வர முடியும், உங்கள் கைகளை பற்றிக்கொள்ள முடியும் அல்லது உங்களை சுமந்து செல்ல முடியும். ஆனால் நீங்கள் உள்முகமாக பயணிக்க விருப்பம் கொண்டால், ஒரே ஒருவருக்கு தான் அங்கு நுழைய அனுமதி உண்டு - உங்களுக்கு மட்டும் தான். நீங்கள் உள்நோக்கிய பயணத்தை துவங்கும்போது, உங்களால் முடிந்ததை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டியது மிக முக்கியமானது. உங்கள் கவனத்திற்கே வராத குறிப்பிட்ட சில விஷயங்கள் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன - அவற்றை நான் கவனித்துக் கொள்வேன். நீங்கள் அறிந்திராத குறிப்பிட்ட தடைகற்கள் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் அறிந்திராத ஒன்றை உங்களால் கையாள முடியாது. ஆனால், நீங்கள் எதையெல்லாம் அறிந்திருக்கிறீர்களோ, அவற்றை நீங்கள் தான் கையாளவேண்டும் - வேறு எவராலும் அதை கையாள முடியாது.
நீங்கள் நோயுற்று இருப்பதாக பாசாங்கு செய்து உங்கள் வேலையை வேறு யார் மீதாவது சுமத்திவிட முடியும். ஆனால் நீங்கள் செய்யவேண்டிய எத்தகைய ஒரு சாதனாவையும் வேறு ஒருவரிடம் கொடுத்தால், நீங்கள் நோயுறுவீர்கள். ஒரு தனிமனிதர் முற்றிலும் வேறுபட்ட ஒரு சாத்தியமாக மலர்வதற்கு தேவையான அனைத்தும் இங்கே இருக்கிறது. அதற்கு தேவைப்படும் குறிப்புகள், வழிமுறைகள், சக்தி, ஊக்கம் மற்றும் சூழல் அனைத்தும் இங்கு இருக்கிறது. அது நிகழ தேவைப்படும் ஒரே ஒரு விஷயம் நீங்கள் மட்டும்தான்.